தரவு இடைவெளிகள்: இந்தியா ஏன் அதன் மக்கள்தொகை கணக்கெடுப்பை மேலும் தாமதப்படுத்த முடியாது
மக்கள்தொகை கணக்கெடுப்பு- 2021 விரைவில் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய பணிகளை முடிக்க தேவையான நேரத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், நடப்பு 2022ஆம் ஆண்டில் அது செய்யப்பட வாய்ப்பில்லை.;
பெங்களூரு: மார்ச் 2020ல் நாடு தழுவிய கோவிட்-19 ஊரடங்கிற்கு பிறகு, இந்தியாவின் மக்கள்தொகையின் பிற அம்சங்களுக்கிடையில், கிராம மட்டம் வரை, மக்கள் தொகை, கல்வியறிவு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை நிர்ணயிக்கும் இந்தியாவின் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமானது. தொற்றுநோய் தாக்குதலுக்கு முன், அரசாங்கம், 1948 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை (இதற்கு முந்தையது 2011 இல்) இரண்டு கட்டங்களாக --முதலாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் 2020 வரை மற்றும் இரண்டாவது பிப்ரவரி 2021 இல் – என்று நடத்தத் திட்டமிட்டது.
ஏப்ரல் 2022 இல், தொற்றுநோய் காரணமாக 2021-மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான கள நடவடிக்கைகள் "அடுத்த உத்தரவு வரும் வரை" ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.
இந்தத் தாமதம், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை பாதிக்கிறது, மேலும் நுகர்வு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பிற ஆய்வுகளின் நம்பகத்தன்மையற்ற மதிப்பீடுகள், கொள்கை மற்றும் நலவாரிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க, அவை மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவைச் சார்ந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதைக் கவனியுங்கள்: 100 மில்லியன் மக்கள் அரசின் உணவு மானியத் திட்டத்தில் இருந்து --பொது விநியோக முறை (PDS) -- பயனாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து விலக்கப்பட்டு இருக்கலாம்.
மக்கள் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஒத்திவைத்த ஒரே நாடு இந்தியா அல்ல; 2020 இல், குறைந்தது 18 நாடுகள் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021 க்கு ஒத்திவைத்தன, நான்கு நாடுகள் அதை 2022 அல்லது அதற்கு அப்பால் ஒத்திவைத்தன, மார்ச்-ஏப்ரல் 2020 இல் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரப் பிரிவின் (UNSD) கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. டிசம்பர்-ஜனவரி 2021 இல் நடந்த மற்றொரு கணக்கெடுப்பில் குறைந்தது ஏழு நாடுகள் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை 2022 அல்லது அதற்குப் பிறகு ஒத்திவைத்துள்ளன.
இந்தியா முழுவதும் தேர்தல்கள் உட்பட பொருளாதார மற்றும் அரசு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாலும், தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளதாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளைத் தொடங்குவதற்கு முட்டுக்கட்டை போட எந்த காரணமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"சிவில் பதிவு அமைப்பு தரவு [பிறப்பு மற்றும் இறப்பு] மற்றும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் எல்லை சோதனைச்சாவடிகளில் சேகரிக்கப்பட்ட இடம்பெயர்வு பற்றிய தரவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, வேறு சில நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாமல் செய்ய முடியும், ஆனால் இவை சிறிய நாடுகளாக இருக்கும், [நாட்டிற்குள்] இடம்பெயர்வு குறைவாக இருக்கும்," என்று, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (NSC) முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதல் தலைமை புள்ளியியல் நிபுணருமான ப்ரோனாப் சென் கூறினார். "இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்படையாக வேறு எதுவும் இல்லை" என்றார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும்
இந்தியாவில், 1872 இல் நடந்த முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஒத்திசைவானதாக இல்லை; அதாவது காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நாளில் அல்லது வருடத்தில் இது தொடங்கவில்லை. 1872 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக, 1867 மற்றும் 1872 க்கு இடையில் தரவு சேகரிக்கப்பட்டது. 1881 ஆம் ஆண்டில், காலனித்துவ நிர்வாகம், முதல் ஒத்திசைவான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியது, இதில் நாடு முழுவதும் ஒரே தேதியில் வேலை தொடங்கியது, இது கோவிட்-19 தொற்றுநோய் வரை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் தொடர்ந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட வேண்டும் அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு எப்போது வெளியிடப்பட வேண்டும் என்பதை 1948 சட்டம் குறிப்பிடவில்லை. மத்திய அரசு "அது அவசியமானதாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ கருதும் போதெல்லாம்" அதன் நோக்கத்தை அறிவிக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மையின் காரணமாக, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்காலிக மக்கள்தொகைத் தரவு வெளியிடப்பட்ட சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2019 இல் ஓரளவு வெளியிடப்பட்டது.
பொதுவாக மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்க சுமார் 12 மாதங்கள் ஆகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (ORGI) அலுவலகம், 1949 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பொறுப்பாக உள்ளது.
பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒரு வருடத்திற்கு முன்பே வீடுகளின் பட்டியலை எடுக்கிறது, ஏனெனில் எந்த நபரும் தவறவிடப்படுவதையும், இரட்டை பதிவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்துவது அவசியம் என்று சென் விளக்கினார். "இதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டால் கூட, இந்த ஆண்டு உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது சாத்தியமில்லை" என்றார் அவர்.
"ஒட்டுமொத்த நாட்டிற்கும் சுருக்கப்பட்ட வீடுகளின் பட்டியலைத் தயாரிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும், அதை கணக்கீட்டாளர் ஒரு முகவரியைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துகிறார்" என்று, ஓய்வு பெற்ற இந்திய புள்ளியியல் சேவை அதிகாரியும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான கே.நாராயணன் உன்னி கூறினார்.
வீடுகளை பட்டியலிடுவதின் முக்கிய நோக்கம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு முன்பு, கணக்கெடுக்கப்பட வேண்டிய அனைத்து குடும்பங்களின் பட்டியலைத் தயாரிப்பதும், வீட்டு இருப்பு, வசதிகள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சொத்துக்கள் பற்றிய தரவை வழங்குவதும் ஆகும்.
"மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆரம்ப தாமதம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், வீடுகளை பட்டியலிடும் நடவடிக்கை 2022 இல் நடத்தப்படலாம், அதைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அரசால் தேர்தல் நடத்த முடியுமானால், ஏன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக்கூடாது?," என்று சமூக மக்கள்தொகை ஆய்வாளரும், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியருமான சோனால்டே தேசாய் கேட்டார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, வீடுகள் பட்டியலிடும் பணிக்கு ஓராண்டுக்கு பின், மார்ச் 1 ஐ குறிப்பு தேதியாகக் கொண்டுள்ளது. எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக, அரசு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2010- க்கு இடையில் வீடுகள் பட்டியலையும், பிப்ரவரி 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24, 2020 அன்று நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தபோது, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் பல மாநிலங்களில் வீடுகள் பட்டியலைத் தொடங்கத் தயாராக இருந்தது. 3.3 மில்லியன் கணக்கெடுப்பாளர்கள் தரவு சேகரிப்புக்காக திரட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பதிவாளர் ஜெனரல் இந்தியாவின் (ORGI) இணையதளத்தில் ஏப்ரல் 2019 பதிவுகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான குறிப்பு தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றின் பனிப்பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2020 ஆகவும், மற்ற மாநிலங்களுக்கு இது மார்ச் 1, 2021 ஆகவும் இருந்தது.
இந்தியா ஸ்பெண்ட், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து கணக்கெடுப்புக்கான பதிவாளர் ஜெனரல் இந்தியாவில் உள்ள அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது. மே 12 அன்று நாங்கள் கடிதம் எழுதிய உள்துறை அமைச்சகத்தின் டி.ஜி. (ஊடகம்) யை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். அங்கிருந்து பதிலைப் பெறும்போது, இக்கட்டுரையை புதுப்பிப்போம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது சவாலானது, நேரம் பிடிக்கும்
மாநிலங்கள் முழுவதும் புவியியல் மற்றும் தட்பவெப்ப மாறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசரப்படுத்த வேண்டாம் என்று உன்னி எச்சரித்தார். "2023 இல் வீடுகளின் பட்டியலை தயார் செய்ய முடிந்தால், 2024 இல் கணக்கெடுப்பைத் தொடங்குவது விரைவில் சாத்தியமாகும்" என்று உன்னி கூறினார்.
அவர் கூறும் காரணங்களில் ஒன்று, அமெரிக்காவைப் போல், இந்தியாவில் வலுவான தீர்வு அமைப்பு இல்லாததால், இந்தியாவிற்கு வீட்டுப் பட்டியல் மிகவும் முக்கியமானது. மற்றொரு சவாலானது, ஒரு மாநிலத்திற்குள் மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களின் எல்லைகளை தொடர்ந்து மாற்றுவது ஆகும், இது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே நிறுத்தப்பட வேண்டும், என்றார்.
"களப்பணிகளை மேற்கொள்வதில் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தவிர, மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறைகள் தொடங்கும் போது அல்லது அதற்குப் பிறகு நிர்வாக அலகுகளின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவின் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்படும்" என்று, டிசம்பர் 2009 கர்நாடக அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு சுற்றறிக்கை கூறியது.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் இயற்கை தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு வருவாய் கிராமம், ஒரு நதி அதன் போக்கை மாற்றி, புதிய பெயரைப் பெற்றதால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழைய பட்டியலில் உள்ள ஒரு கிராமம் தவறிவிடக்கூடும் என்று உன்னி விளக்கினார்.
நிர்வாக ஊழியர்கள் - மாவட்ட, தாலுகா அதிகாரிகள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் ஆசிரியர்கள் - தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் களத்தில் இருப்பவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் உடனடியாக வேலை செய்வது கடினமாக இருக்கும் என்று உன்னி மற்றும் சென் இருவரும் உணர்ந்தனர்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய தரவு
பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள், உணவு விநியோகம், கல்வி, நுகர்வு, வீட்டுவசதி மற்றும் உழைப்பு பற்றிய கணக்கெடுப்புகளுக்கான மாதிரித் தேர்வு, மேலும் பல, மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைச் சார்ந்தது.
உதாரணமாக, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு இல்லாத நிலையில், மத்திய ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று தேசாய் கூறினார். "மிக சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி அவற்றைப் புதுப்பிக்காதது, உத்தரப் பிரதேசம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் பல எண்ணிக்கையை இழக்கக்கூடும்" என்றார்.
ஒன்றரை நூற்றாண்டில் முதன்முறையாக, 2021 ஆம் ஆண்டில் பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இந்தியாவால் நடத்த முடியவில்லை, அது விரைவில் நடக்கும் என்பதற்கான அறிகுறியே இல்லை என்று பொருளாதார நிபுணரும் சமூக ஆர்வலருமான ஜீன் டிரேஸ் கூறினார். "உதாரணமாக, உணவு மானியங்கள், தொகுதிகளின் எல்லை நிர்ணயம் [தேர்தல் வாக்குப்பதிவு போன்றவை] மற்றும் ஆதாரப் பங்கீடு போன்றவற்றில் கடுமையான குழப்பம் மற்றும் மோதல்கள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது" என்றார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஊரடங்கால் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற தொற்றுநோய் தொடர்பான கேள்விகளைச் சேர்ப்பதன் மூலம் கேள்வித்தாளை மாற்றியமைக்க முடியும் என்று மோகனன் கூறினார்.
வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகளை உருவாக்கவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு, அனைத்து குடும்ப அடிப்படையிலான கணக்கெடுப்புகளுக்கும் மையமானது, ஏனெனில் இது கணக்கெடுப்புகளுக்கான பிரதிநிதி மாதிரியைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் சட்டமாகும் என்று, சென் கூறினார். "மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு மிகவும் பழையதாக இருந்தால், [பிற] கணக்கெடுப்பு மதிப்பீடுகள் இனி நம்பகமானவையாக இருக்காது" என்றார்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, வீட்டு ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் குறித்த இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் முதன்மை மாதிரி அலகுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மாதிரி சட்டமாக (ஒரு கணக்கெடுப்பு மாதிரி எடுக்கப்பட்ட பட்டியல்) செயல்பட்டது.
கடந்த 2011-12ல் நடத்தப்பட்ட வறுமை அளவை நிர்ணயிக்கும் நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு, ஜூலை மாதம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என, தி ஹிந்து, ஏப்ரல் 2022 இல் செய்தி வெளியிட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட 'பிரேம்' அல்லது பட்டியலை உருவாக்கவும் இது மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துகிறது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் தேர்வு சிறந்த தரமான நுகர்வு செலவினத் தரவை வழங்கும் என்று, என்.எஸ்.சி முன்னாள் செயல் தலைவர் பி.சி. மோகனன் தெரிவித்தார்.
இதேபோல், மாதிரி பதிவு அமைப்பு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கணக்கெடுப்பு தொகுதிகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துகிறது. "இப்போது, மாதிரியை மாற்ற முடியாது என்பதால், அது [பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு] மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை நீட்டிக்கப்படும். இரண்டு சந்தர்ப்பங்களிலும் முழுமை பெறாத சட்டமானது முடிவுகளை பாதிக்கும்" என்று உன்னி கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாமதம் ஏற்படுவதால், சமூக-பொருளாதார மற்றும் ஜாதி, மக்கள்தொகை கணக்கெடுப்பும் தடைபட வாய்ப்புள்ளது; இதனால் சமூக பாதுகாப்பு திட்டங்களில் விலக்களிப்பதைக் குறைப்பது கடினம் என்று டிரேஸ் கூறினார். "இது தயாரிப்பில் ஒரு முழு அளவிலான பேரழிவு" என்றார் அவர்.
உலகம் முழுவதும் தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு
பல நாடுகளில் தொற்றுநோய் இருந்தபோதிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன, ஆனால் இவை கணிசமான குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சிறுபான்மை குழுக்களுக்கு என்று, தேசாய் கூறினார். "உதாரணமாக, [அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம்] ஹிஸ்பானிக் அல்லது லத்தீன் மக்கள் தொகையில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 4.99% இருப்பதாக மதிப்பிட்டுள்ளது… எனவே [கணக்கெடுப்புக்கு] சரியான தீர்வுகள் இல்லை" என்று தேசாய் கூறினார்.
அதிக மக்கள்தொகை கொண்ட ஐந்து நாடுகளில் - சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் - இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் தொற்றுநோய்களின் சரிவையும் மீறி, 2022 க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்.
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரப் பிரிவின் (UNSD) கணக்கெடுப்பின்படி, குறைந்தது 14 நாடுகள், தங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பை, 2022 அல்லது அதற்கு மேல் ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இணைந்து இந்தியாவின் மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர்.
முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பான இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வேகமாக நடத்த முடியுமா?
"மேலும் காலதாமதமின்றி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,'' என்றார் மோகனன். மக்கள் தொகையில் மட்டுமல்ல, பொதுவாக தரவுகளுக்கு பற்றாக்குறை இருப்பதால், செயல்முறையை விரைவுபடுத்துவதே இப்போது சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான வழிகளில் ஒன்று. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாகும், மேலும் சுய-கணக்கெடுப்புக்கான ஏற்பாடும் இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் மார்ச் 2022 இல் திருத்தப்பட்டது, ஒரு நபர் "மக்கள்தொகை கணக்கெடுப்பு அட்டவணையை நிரப்பவும், முடிக்கவும் மற்றும் சமர்ப்பிக்கவும்" அனுமதிக்கிறது.
மொபைல் செயலி மூலம் தரவு சேகரிப்பு "மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைச் செயலாக்குவதற்கும் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கும் எடுக்கும் ஒட்டுமொத்த நேரத்தைக் குறைக்கும்" என்று, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 மொபைல் பயன்பாட்டிற்கான பயனர் கையேடு தெரிவிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, தரவுகளின் கணினிமயமாக்கல் வேகமாக இருப்பதால், இது தரவை செயலாக்குவதற்கான நேரத்தையும் குறைக்கும். இந்த முறை கணக்கெடுப்பு தொகுதி எல்லைகளை குறிக்க ஜிபிஎஸ் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்ப செயல்முறைகள் இந்தியாவில் மட்டுமே உருவாகி வருகின்றன, மேலும் அவை விலை உயர்ந்தவை என்று உன்னி கூறினார்.
ஸ்வச் பாரத் (100% கழிப்பறை அணுகல் உரிமைக்கான திட்டம்) போன்ற மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என, கணக்கீட்டை விரைவாகச் செய்வது என்னவென்றால், கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் அணுகல் போன்ற வீட்டு வசதிகள் போன்ற சில கேள்விகளை நீக்கிவிடலாம். வீட்டு குழாய் நீர் இணைப்பு ஏற்கனவே இந்த சிக்கல்களை உள்ளடக்கியிருக்கலாம்.
"குடும்பங்களை சுய-கணக்கெடுப்புக்கு அனுமதிப்பது ஒரு புதிய முயற்சி, ஆனால் தரவு தரம் மற்றும் திட்டத்தின் கீழ் முழுமையின் அடிப்படையில் இது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று உன்னி கூறினார்.
ஆன்லைன் மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துவதற்கு அதிக இணைய ஊடுருவல், பரவலான கணினி கல்வியறிவு, அதிகாரபூர்வ வணிகத்திற்காக இணையத்தை, பொதுமக்கள் ஏற்றுக்கொள்வது, சட்டப்பூர்வ அதிகாரம் மற்றும் தேசிய முகவரி அல்லது கட்டிடப் பதிவேட்டின் கிடைக்கும் தன்மை, 150 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கோவிட்-19 தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் மார்ச் 2020 தொழில்நுட்ப சுருக்க அறிக்கை கூறியது. "..பெரும்பாலான ஆன்லைன் மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகையின் விகிதாச்சாரத்தை மட்டுமே உள்ளடக்கியது, எனவே வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே துணையாக இருக்க முடியும்" என்றது.
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு சில நேரத்தை குறைக்கும், ஆனால் மோகனனின் கூற்றுப்படி, கடின நகல் மற்றும் டிஜிட்டல் தரவு முறைகள் இரண்டையும் பயன்படுத்துவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்திரங்கள் எவ்வளவு பயனுள்ளதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும் என்பதைப் பொறுத்தது. "அறிக்கைகளை விரைவாக தயாரிப்பதில் டிஜிட்டல் ஆய்வுகள் நல்லது. துல்லியத்தைப் பொறுத்தவரை, அது கேள்வித்தாள் மற்றும் அது நிர்வகிக்கப்படும் விதத்தைப் பொறுத்தது" என்றார் மோகனன்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.