ஒரு மாதம் கடந்து, கோவிட் தடுப்பூசி பயணத்தில் இந்தியா எவ்வளவு தூரம் சென்றுள்ளது

இந்தியா தனது இலக்கு குழுவில், 3.4% பேருக்கு ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு பூர்த்தி செய்ய -- மற்றும் இரண்டாவது டோஸை நிர்வகிக்கவும்-- ஜூலை மாதத்திற்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை எட்டவும், 5.5 மாதங்கள் உள்ளன.

Update: 2021-02-19 00:30 GMT

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்தில், 84 லட்சம் மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை இந்தியா வழங்கியுள்ளது. மாதம் ஒன்றுக்கு இந்த விகிதத்தில் சென்றால், ஜூலை மாதத்திற்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை, இந்தியா தவற நேரிடும்.

முதல் கட்டத்தில், இந்தியா இரண்டு வகை கோவிட்-19 தடுப்பூசிகளை - ஒன்று, புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு உருவாக்கிய கோவிஷீல்ட்; மற்றும் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு கோவாக்சின் -- சுகாதார ஊழியர்களுக்கு போடத் தொடங்கியது

உலகளவில், அதிக தடுப்பூசிகள் போடப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (52.8 மில்லியன்) உள்ளது, அதனை அடுத்து சீனா (40.5 மில்லியன்) மற்றும் இங்கிலாந்து (15.6 மில்லியன்) உள்ளன; இப்பட்டியலில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பிப்ரவரி 15 அன்று மாலை 6 மணி நிலவரப்படி, 8.4 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தின் முதல் மாதத்தை நிறைவு செய்யும் சூழலில், நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அது எவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்த முக்கியமான எண்ணிக்கைகளையும், தரவையும் ​​இந்தியாஸ்பெண்ட் மதிப்பீடு செய்கிறது.

முதல் மாதத்தில் எத்தனை பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்?

பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 84 லட்சம் பேர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்களில், 97,732 பேருக்கு மட்டுமே இரண்டாவது தடுப்பூசி கிடைத்துள்ளது. முதல் டோஸ் போடப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு, இது வழங்கப்பட வேண்டும். பிப்ரவரி 13 முதல், இந்தியா இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கத் தொடங்கியது.

தடுப்பூசி போட்டவர்களில் பெரும்பாலோர் சுகாதாரப் பணியாளர்கள், முன்களத் தொழிலாளர்கள் ஆவார்கள்.

முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோஸை மற்றொரு 24.1 கோடி மக்களுக்கு -- அத்துடன், இரண்டாவது டோஸையும் போட வேண்டும் - என ஜூலை மாதத்திற்குள் 25 கோடி என்ற இலக்கை அடைய, இந்தியாவுக்கு இன்னும் 150 நாட்களே உள்ளன. இதன் பொருள், இந்தியா தனது மொத்த இலக்கு குழுவில் 3.4% பேருக்கு மட்டுமே, இதுவரை தடுப்பூசியின் முதல் டோசை வழங்கியுள்ளது, 96.6% பேர் அடுத்த ஐந்தரை மாதங்களில் இரண்டு டோஸ்களையும் பெற்றாக வேண்டும்.

2020 டிசம்பரில், முதல் தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் 30 கோடி பேர் - ஒரு கோடி சுகாதார ஊழியர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்கள் , மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி மக்கள் மற்றும் நோய் பாதிப்புள்ளவர்கள் இருப்பதாக அரசு அறிவித்தது.

இருப்பினும், பிப்ரவரி 5 ம் தேதி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முதல் இரண்டு குழுக்களுக்கான அரசின் இலக்கில் 58% மட்டுமே அதாவது, 1.748 கோடி சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை கோவிட்-19 தடுப்பூசி பெற பதிவு செய்யப்பட்டுள்ளனர். 

Full View



Full View

தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது?

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ரூ.35,000 கோடி ( 4.7 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. இது தவிர, சுகாதார அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ .73,932 கோடி (10.12 பில்லியன் டாலர்), இதில் ரூ.360 கோடி ( 49.6 மில்லியன்) சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் (11 மில்லியன்) மற்றும் உள்நாட்டு கோவாக்சின் (5.5 மில்லியன்) 1.65 கோடி டோஸ் கொள்முதல் செய்ய அரசு ரூ .350 கோடி (48.2 மில்லியன்) செலவிட்டுள்ளது. தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளுக்காக இந்த மையம் ஏற்கனவே மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ .123 கோடி (16.9 மில்லியன் டாலர்) விடுவித்துள்ளது.

அரசு மதிப்பீட்டின்படி, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முழு நடவடிக்கைக்கு ரூ. 480 கோடி (66.8 மில்லியன் டாலர்) செலவாகும். தடுப்பூசிகளுக்கு மட்டும் 1,392 கோடி ரூபாய் ( 191.6 மில்லியன்) செலவாகும். ஒரு தனி மதிப்பீட்டில், 1.748 கோடி பதிவு செய்யப்பட்ட சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட ரூ.123.4 கோடி (17 மில்லியன் டாலர்) செலவாகும் என்று அரசு கூறியது.

தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுக்கு "அவசரகால சூழ்நிலையில் வரம்புக்குட்பட்ட பயன்பாட்டிற்கு" என்று, சிறப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. கோவாக்சின் அதன் மூன்றாம் கட்ட சோதனைகளை இன்னும் முடிக்கவில்லை என்றாலும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. கோவாக்சின் தற்போது "மருத்துவச் சோதனை முறையில்" கையாளப்படுகிறது.

எந்தவொரு தடுப்பூசியையும் போலவே, தடுப்பூசி சொட்டுகளை பெறுபவர்களில் சிலர், தடுப்பூசிக்கு உடல் ரீதியான எதிர்வினைகளைக் காட்டக்கூடும். எதிர்வினையாக காய்ச்சல் மற்றும் குமட்டல் முதல் தலைவலி மற்றும் சோர்வு வரை இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், எதிர்வினை மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இவை "நோய்த்தடுப்புக்குப் பின் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள்" என்று அழைக்கப்படுகின்றன.

நோய்த்தடுப்பு மருந்தைத் தொடர்ந்து, ஒரு பாதகமான நிகழ்வு தாமாகவே ஒருவர் தடுப்பூசிக்கு பின் மோசமானால், தடுப்பூசி மற்றவர்களிடமும் அந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பொருளல்ல. ஆனால் அனைத்து பாதகமான நிகழ்வுகளும் தடுப்பூசி திட்டத்தை நடத்துபவர்களால் பதிவு செய்யப்பட வேண்டும், பின்னர் பாதகமான நிகழ்வுகள், தடுப்பூசியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். இந்த நிகழ்வுகளைக் கண்காணிக்க, பாதகமான நிகழ்வுகள் கண்காணிக்கும் ஒரு அமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி 4 ஆம் தேதி வரை, இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தில் 8,483 பாதகமான நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் அரசு அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இவற்றில், கோவிஷீல்டில் மட்டும் 8,402 பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 15 நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து பாதகமான நிகழ்வுகளிலும், 35 பேர் அல்லது மொத்த தடுப்பூசி போடப்பட்டவர்களில் 0.0004% பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது; மேலும் 28 பேர் அல்லது, மொத்தத்தில் 0.0003% பேர் இறந்துவிட்டதாக, அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களில் 11% பேர் நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும், இதை மாநிலங்கள் மேம்படுத்த வேண்டும் என்றும் அரசு கூறியது.

இதுவரை, எந்தவொரு மோசமான நிகழ்வுகளும் கோவிட் -19 தடுப்பூசிகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று அரசு கருதுகிறது. இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அல்லது மரணத்திற்கு காரணமான மிகவும் மோசமான பாதகமான நிகழ்வுகள் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன

Full View
Full View


மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு

பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள், 2.15 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கோவிஷீல்ட் (88%), எஞ்சியவை, கோவாக்சின் ஆகும்.

பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் அதிக தடுப்பூசி அளவைப் பெற்ற மாநிலங்கள்: உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான்.

சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிகப்பெரிய இலக்குகளைக் கொண்ட ஐந்து மாநிலங்கள்: மகாராஷ்டிரா (9.3 லட்சம்), உத்தரபிரதேசம் (9 லட்சம்), கர்நாடகா (7.7 லட்சம்), மேற்கு வங்கம் (7 லட்சம்), தமிழ்நாடு (5.3 லட்சம்).

இந்தியா எந்த நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாகவோ, அல்லது விற்பனை செய்தது?

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பே, இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் உலகின் 40% தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வந்தன. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 230 கோடி அளவிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன, அவற்றில் 74% ஏற்றுமதிக்கானவை என்று, இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

இப்போது தொற்றுநோயால், கோவிட் -19 தடுப்பூசிகளின் லட்சக்கணக்கான குப்பிகளும் இந்தியாவில் உள்ள இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் 1.65 கோடி அளவுகள் வணிக ரீதியாக மற்ற நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்தியா மற்ற நாடுகளுக்கு 64.7 லட்சம் டோஸ் உதவியாக வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் வங்கதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சென்றுள்ளன.

(திருத்தியவர், ஷ்ரெனிக் அவ்லானி)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News