சமீபத்திய காலநிலை நிதித் திட்டம், வளரும் நாடுகளில் ஏன் மீண்டும் தோல்வியடையக்கூடும்

கடந்த 2020 முதல், வரும் 2050 வரை, ஏழை நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் டாலர்கள், தங்கள் எரிசக்தித் துறைகளை கார்பன் நீக்கம் செய்வதற்கு மட்டுமே தேவைப்படும் என்பதால், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வாக்குறுதி போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி என்பது உதவி என்று வர்ணம் பூசப்பட்டாலும், பெரும்பாலானவை கடன்களாக வழங்கப்படுகின்றன, மானியங்கள் அல்ல.;

Update: 2021-11-06 00:30 GMT

புதுடெல்லி: வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்க, பணக்கார நாடுகள் அறிவித்துள்ள சமீபத்திய திட்டம், பயனற்றதாக இருக்கும்; ஏனெனில் இந்த தொகை போதுமானதாக இல்லை மற்றும் காலநிலை நிதியத்தில் உள்ள நீண்டகால குறைபாடுகளை, இந்த திட்டம் நிவர்த்தி செய்யவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலகளாவிய காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட திட்டம், வளரும் நாடுகளின் குறிப்பிட்ட தேவைகளை-- காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு போன்றவை-- கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை மற்றும் பழைய, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை செயல்படுத்த மீண்டும் வலியுறுத்துகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டில், வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன், வருடாந்திர காலநிலை நிதியை வழங்குவதாக உறுதி அளித்தன. இந்த பணம் காலநிலை ஏற்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும். ஆனால் சமீபத்திய திட்டம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) ஆய்வின் அடிப்படையில், இலக்கை 2023 ஆம் ஆண்டுக்குள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறுகிறது.

கடந்த 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில், சராசரியாக வளர்ந்த நாடுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட 100 பில்லியன் டாலர்களில், சுமார் 65% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆவணங்களின் பகுப்பாய்வு காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட $100 பில்லியன் இலக்கே இப்போது போதுமானதாக இல்லை, ஏனெனில் வளரும் நாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு முதல், 2050 வரை, ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்கள் தங்கள் ஆற்றல் துறைகளை மட்டும் கார்பன் நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் காலநிலைக் கொள்கைக் கல்வியைக் கையாளும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான, கார்பன் முன்முயற்சி மன்றத்தின் (Carbon Initiative Forum) இயக்குனர் சந்தீப் ராய் சவுத்ரி, "இந்தத் திட்டம், புதிய பாட்டிலில் பழைய கள் போல் தெரிகிறது" என்றார். இந்த தொகுப்பை "கணக்கியல் சூனியம்" என்று விவரித்த அவர், "வளர்ந்த நாடுகள் மீண்டும் மீண்டும் நிதி குறித்து கேள்வி கேட்கப்படும் சங்கடத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இது ஒரு வழிமுறையாகத் தெரிகிறது" என்று கூறினார்.

காலநிலை நிதியைப் பாதித்த சில முக்கியமான சிக்கல்கள், புதிய ஆவணத்தில் கவனிக்கப்படவில்லை. உதாரணமாக, காலநிலை நிதியில் 80%, அதிக வட்டிக்குக் கடனாக வழங்கப்படுகிறதே தவிர, மானியங்கள் அல்ல, இது ஏழை நாடுகளுக்கு நிதி நெருக்கடியை உண்டாக்குகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. புதிய நிதித் திட்டமானது, ஏழை நாடுகளில் ஏற்படும் காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு பற்றிய கேள்விக்கு தீர்வு காணவில்லை அல்லது அவர்களின் காலநிலை நடவடிக்கை தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான மூலதனத்தை ஆராயவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது

புவி வெப்பமடைதல் மற்றும் அதன் வீழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மாதிரியைத் திட்டமிடுவதற்காக, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) 1992 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி வருகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள், பல்வேறு ஆதாரங்கள் மற்றும் துறைகளில் இருந்து கார்பன் உமிழ்வை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடவடிக்கைகள் குறித்து, இது விவாதித்து வருகின்றன.

கடந்த 2015 பாரிஸ் காலநிலை கூட்டத்தில், வெப்பமான காலநிலையின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, தொழில்துறைக்கு முந்தைய காலகட்ட அளவை விட, உலக வெப்பநிலையின் அதிகரிப்பு 1.5-2 டிகிரி செல்சியஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் நாங்கள் தெரிவித்தது போல, இந்த இலக்குகளை எவ்வாறு அடையலாம் என்பது குறித்து பாரிஸ் விதி புத்தகம், எந்த பொதுவான ஒருமித்த கருத்தையும் காணவில்லை. கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் நிகழ்வு, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) பங்கேற்பாளர்களின் 26வது மாநாடாக இருக்கும் - இதனை சுருக்கமாக COP26 என்பர் - மேலும் பல சிக்கல்களை, முக்கியமாக காலநிலை நிதி சிக்கல்களை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகள், தங்கள் கார்பன் உமிழ்வை ஈடுகட்ட மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) அங்கீகரிக்கிறது, மேலும் தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் வளரும் நாடுகளுக்கு, அவை உதவ வேண்டும். 2009 இல் கோபன்ஹேகன் COP உச்சி மாநாட்டில் காலநிலை நிதி பற்றிய யோசனை முதலில் விவாதிக்கப்பட்டது. இலக்குகள் எட்டப்படாததால், பாரிஸில் 2015இல் நடைபெற்ற COP மாநாட்டில் மீண்டும் விவாதிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகள் இறுதியாக, 2016 ஆம் ஆண்டில், 2020 ஆம் ஆண்டிற்குள் $100-பில்லியன் இலக்கை எவ்வாறு அடைவது என்பதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரித்தன.

இதுவும் தோல்வியடைந்தது.

'டிரில்லியன்கள் தேவை, பில்லியன் டாலர்கள் அல்ல'

ஆக்ஸ்பாமின் க்ளைமேட் ஃபைனான்ஸ் ஷேடோ ரிப்போர்ட்-2020ன் படி, இதுவரை வழங்கப்பட்ட காலநிலை நடவடிக்கைக்கான ஆதரவின் உண்மையான மதிப்பு ஆண்டுக்கு $19-22.5 பில்லியன் ஆகும்.

புதிய ஆவணம், காலநிலை ஏற்பு குறித்த செயல் திட்டத்தைக் குறிப்பிடுகிறது என்றாலும், தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு, வளரும் நாடுகள் எவ்வாறு ஈடுசெய்யும் என்பது பற்றி எதையும் குறிப்பிடப்படவில்லை, அதற்கான கோரிக்கை இன்னும் அதிகமாகி வருகிறது.

COP26 க்கு முன்னதாக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது வளர்ந்த நாடுகள் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் $100 பில்லியனை அடையும் இலக்கை அடைய ஒரு சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய இலக்குகள், ஏழை நாடுகளுக்கு மிகவும் போதுமானதாக இல்லை என்று காலநிலை நடவடிக்கை நெட்வொர்க்கின் ஹர்ஜீத் சிங் கூறினார், காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் கஷ்டங்களுடன் போராடும் போதும் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கு, வளங்கள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மே, 2020 இல் , இந்தியாவைத் தாக்கிய சூப்பர் சூறாவளி ஆம்பன் மற்றும் அதே ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நாட்டின் பல பகுதிகளை பாதித்த வெள்ளம், 2020 இல் உலகம் கண்ட 10 மிகவும் "அதிக சேதம் விளைவித்த" தீவிர காலநிலை நிகழ்வுகளில் இடம்பிடித்துள்ளன என்று, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுகள், இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வருடாந்திர பட்ஜெட்டை விட, 322 மடங்கு அதிகமாக ரூ.10 லட்சம் கோடி ($141 பில்லியன்) சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பல்வேறு பகுதிகள் மற்றும் துறைகள் தங்களின் வாழ்வாதாரத்தில், காலநிலை பேரழிவுகளின் தாக்கத்தை சமாளிக்க போராடி வருகின்றன என்று நாங்கள் தெரிவித்தோம்.

"வரும் 2050ஆம் ஆண்டுக்குள், கார்பன் நியூட்ரல் ஆக வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைய, நமக்கு பில்லியன்கள் கணக்கான டாலர்கள் தேவையில்லை; ஆனால், மக்களை இழப்பு மற்றும் சேதத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். 100 பில்லியன் டாலர்கள், அந்த டிரில்லியன்களைப் பயன்படுத்துவதற்காகவே இருந்தது" என்று சிங் கூறினார். "காலநிலை நெருக்கடி தொடர்கிறது மற்றும் காலநிலை நிதியில் 50%, ஏற்புக்கு செல்ல வேண்டும். ஆனால் அப்படி நடப்பதை நாங்கள் பார்க்கவில்லை" என்றார்.

வளரும் நாடுகளின் தேவைகள் இலக்காக கொள்ளப்படவில்லை

ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, காலநிலை நிதியாக வழங்கப்படும் பெரும்பாலான கடன்கள், எந்த சலுகைகளையும் கொண்டிருக்கவில்லை மற்றும் ஏழை நாடுகளிடம் இருந்து அதிக திருப்பிச் செலுத்த வேண்டிய தாராளமான விதிமுறைகளைக் கொண்டுள்ளன. பேரழிவுகள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பலவற்றால் ஏற்படும் இழப்புகளின் நிகழ்தகவு காரணமாக, வளரும் நாடுகள் அதிக இடர் மதிப்பீட்டைக் கொண்டிருப்பதால், பணக்கார நாடுகளால் காலநிலை நிதியாக வழங்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துகின்றன. "வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களை 'நன்கொடையாளர்கள்' என்று குறிப்பிடுகின்றன, நிதியை ஆதரவாக வழங்குகின்றன, ஒத்துழைப்பாக அல்ல, பெரும்பாலும் வணிக அடிப்படையில், மானியங்களாக அல்ல" என்று, சிவில் சமூக அமைப்பான க்ளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் இன்டர்நேஷனலின் மூத்த ஆலோசகர் ஹர்ஜீத் சிங் கூறினார்.

மாறாக சலுகை அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில் முதலீடு செய்வதற்கு, அபாயங்கள் அதிகம் மற்றும் வணிக நம்பகத்தன்மை இல்லாத இடங்களில், நிதியைத் திரட்ட மானியங்கள் மற்றும் மென்மையான கடன்கள் வடிவில் எங்களுக்கு சலுகை மூலதனம் தேவை" என்று, எனர்ஜி ஃபைனான்ஸ் (CEEW-CEF)க்கான ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர்-மத்திய கவுன்சிலின் திட்டத்தின் தலைவர் அர்ஜுன் தத் கூறினார். "அத்தகைய மூலதனம் நேரடியாகவோ அல்லது உத்தரவாத வடிவிலோ இந்த முதலீட்டு வாய்ப்புகளை ஆபத்தை நீக்கி, வணிக ரீதியில் மிகப் பெரிய ஓட்டங்களை ஈர்க்க முடியும்" என்றார்.

மாற்றம் கேள்விக்குறி

பசுமை இல்ல வாயு அளவுகள், 2020 ஆம் ஆண்டில், மற்றொரு சாதனையை முறியடித்தன, மேலும் CO2 இன் செறிவு தொழில்துறைக்கு முந்தைய அளவுகளில் 149% என்று உலக வானிலை அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாரிஸ் உடன்படிக்கை இலக்கை அடைய, பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் கார்பன் நீக்கம் செய்யப்பட வேண்டும். "வளரும் நாடுகளுக்கு நிதி கிடைக்காததற்கு ஒரு காரணம், வளர்ந்த நாடுகள் புதைபடிவ எரிபொருளில் இருந்து தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதால், [கிடைக்கும் நிதி] சொந்த செலவில் பெரும் பங்கை உண்பதுதான்," என்று, எனர்ஜி எகனாமிக்ஸ் அண்ட் ஃபைனான்சியல் அனாலிசிஸ் இன்ஸ்டிட்யூட்டில், இந்தியாவுக்கான ஆற்றல் பொருளாதார வல்லுநரும், முன்னணியாளருமான விபூதி கார்க் கூறினார்.

பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்களின் எதிர்காலம் குறித்து, நம்பிக்கையுடன் இருக்கும் கார்க், சுத்தமான எரிசக்திக்காக பெரிய அளவிலான முதலீடு இப்போது கிடைக்கும் என்று சுட்டிக்காட்டினார். "கடந்த ஆண்டு முதல், கொள்கை அபாயங்கள் குறைக்கப்படுவதால், பசுமைத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்கான வேகம் அதிகரித்துள்ளது மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல பசுமைத் திட்டங்களின் வணிக நம்பகத்தன்மை, குறைந்த கட்டணங்களுடன் அடையப்பட்டுள்ளது. பல முதலீட்டாளர்கள் புதைபடிவ எரிபொருட்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு புதிய முதலீடுகளையும் தடுக்க உறுதிபூண்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

ஆனால், திட்ட அமலாக்கம் மற்றும் மூலதன மீட்பு ஆகியவற்றில் உள்ள அபாயங்கள் காரணமாக, ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் காலநிலை கடன்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று, மற்ற காலநிலை நிபுணர்களின் கருத்தை கார்க் ஒப்புக்கொண்டார். "நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும், மேலும் பல நாடுகள் நியாயமான முறையில் பணத்தை அணுக முடியும்," என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News