20 ஆண்டுகளில் கேரள சட்டசபையில் 6%-க்கும் மேல் பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்ததில்லை
கேரளாவில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த மனித மேம்பாட்டு குறிகாட்டிகள் உள்ளன, அத்துடன் உள்ளூர் நிர்வாக நிறுவனங்களில் 50% க்கும் அதிகமான பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆயினும்கூட, அங்குள்ள அரசியல் கட்சிகள், சட்டசபை மற்றும் அமைச்சரவை ஆகியன குறைந்த எண்ணிக்கையிலான பெண்களையே கொண்டுள்ளன.;
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஒரு பெண் ஆவார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1957 ஆம் ஆண்டில் கேரளா தனது முதலாவது சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டபோது, 44 வயது ரோசம்மா புன்னூஸ், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் எம்.எல்.ஏ.வாக அவர் பதவியேற்ற பின்னர் தற்காலிக சபாநாயகராகி ,ஏப்ரல் 10, 1957 அன்று மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 1957 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த முதலாவது சட்டசபைத் தேர்தலில், ஆறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது சட்டசபை மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 5.3% ஆகும். தற்போதைய சட்டசபையில் ஒன்பது பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் (மொத்த எம்.எல்.ஏ.க்களில் இது 6.4%) - கடந்த ஆறு தசாப்தங்களில் வெறும் 1.1 சதவீத புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. உண்மையில், கேரள சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களின் சதவீதம் ஒருபோதும் 10% ஐ தாண்டவில்லை. சில தேர்தல்களில், அதாவது 1967 மற்றும் 1977 தேர்தல்களில், ஒரு பெண் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகார பதவிகளில் பெண்களின் இந்த மோசமான பிரதிநிதித்துவம் கீழ்மட்ட ஆட்சியதிகாரத்தில் - அதாவது பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் - பெண்களின் பங்கேற்பை நிராகரிக்கிறது, அங்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். மனித வளர்ச்சியின் உயர் தரத்தையும் கேரளா அடைந்துள்ளது, இதன் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,121 பெண்கள், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 77% பெண்கள் 2019-20க்குள் முழுமையடைந்துள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய தரவு தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகள், மாநில அளவில் அரசியல் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து பெண்களை ஓரங்கட்டுவதில் ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்தியுள்ளதாக, சென்னையைச் சேர்ந்த அரசியல் பார்வையாளரும் விமர்சகருமான பி.ஆர்.பி பாஸ்கர் கூறுகிறார்.
ஏப்ரல் 6, 2021 அன்று கேரளா தனது 16வது சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளிலும் - இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்), ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதற்கு, பெண்கள் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) மகளிர் பிரிவான கேரள மஹிலா காங்கிரஸின் தலைவர் லத்திகா சுபாஷ், தனக்கு தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து, மார்ச் 14 அன்று பொதுவெளியில் தலையை மழித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டார்; அத்துடன் பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். "எனக்கு அரசியலில் முப்பது ஆண்டு அனுபவம் உள்ளது. கேரள அரசியலில் பாலின சமத்துவம் என்பது மோசமாக உள்ளதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்," என்று, ஏற்றமனூரில் இருந்து தொலைபேசியில் லத்திகா சுபாஷ் கூறினார், இப்போது அவர் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதில், லத்திகா சுபாஷ் மட்டும் தனியாக இல்லை. பாரதீய ஜனதா (பாஜக) மூத்த தலைவர்களில் ஒருவரான சோபா சுரேந்திரன், முதல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அவர் வெளிப்படையாக தனது அதிருப்தியை காட்டிய பிறகே, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் இருந்து வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
கோபத்தின் இத்தகைய பொது வெளிப்பாடுகள், கட்சிகளுக்கு சில ஆரம்ப திருத்தங்களை செய்ய வழிவகுத்தது. லத்திகா சுபாஷின் ஆச்சரியமான செயல் மற்றும் சுயேச்சையாக போட்டியிட அவர் எடுத்த முடிவுக்குப் பிறகு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டியூர்காவூ தொகுதியை எஸ். வீணாவுக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கவும், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியில் பெண் வேட்பாளர் கே.கே. ரெமாவை நிறுத்தவும் வழிவகுத்தது. "அரசியலில் பெண்களுக்கான நியாயமற்ற பிரதிநிதித்துவத்திற்கு எதிராக லத்திகா சுபாஷ் போன்றவர்கள் இத்தகைய வலுவான போராட்டத்தை முன்வைக்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகரையில் போட்டியிடும் ரெமா கூறினார். இவரது கணவர் டி.பி. சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஐ (எம்) கட்சியில் இருந்து வெளியேறி புதிய பிரிவைத் தொடங்கிய பின்னர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பெண்கள் பிரதிநிதித்துவம்
கடந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் கேரள சட்டமன்றத்தில் பெண்கள் எம்.எல்.ஏக்கள் 10% ஐ தாண்டவில்லை. கேரளா, 1996 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான பெண் எம்.எல்.ஏ.க்களாக 13 பேரை தேர்வு செய்தது. 2001ம் ஆண்டில் இருந்து இந்த சதவீதம் 5% ஆக உயர்ந்துள்ளது, ஆனால் 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் கேரள சட்டசபைக்கு ஒரு பெண் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு சில இடங்களைளே ஒதுக்குவதால், பெண் எம்.எல்.ஏ.க்கள் குறைவாக உள்ளனர். கேரளாவின் முக்கிய மூன்று கூட்டணிகளிலும் இடம் பெற்றுள்ள கட்சிகள், 2001 முதல் பெண்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளின் சதவீதத்தை அதிகரித்த போதும், போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் இந்த எண்ணிக்கை 16% ஐ தாண்டவில்லை.
கடந்த 2016 ல் நடைபெற்ற கடைசி சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது பெண்களுக்கு 16% இடங்களையும், சிபிஐ (எம்) 14% இடங்களையும் வழங்கின. பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே தங்களின் மொத்த இடங்களில் 10%ஐ பெண்களுக்கு வழங்கின.
பெண் வேட்பாளர்களுக்கு என்ன வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன என்பதும் முக்கியம். "மற்றவற்றைவிட இடதுசாரி கட்சிகள் கொஞ்சம் சிறந்தவை" என்று வழக்கறிஞரும் அரசியல் பார்வையாளருமான ஏ.ஜெயசங்கர் கூறினார். "அவர்கள் கொடுக்கும் இடங்களில் பாதிக்கும் மேலானவை வெல்லக்கூடியவை, இது சட்டமன்றத்தில் இடது கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏக்கள் அதிகமாக இருப்பதை விளக்குகிறது". இதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சி பொதுவாக பெண்களுக்கு வெல்ல முடியாத இடங்களையே வழங்குகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் களமிறங்கிய எட்டு பெண் வேட்பாளர்களும் தோற்றனர். 2019 இடைத்தேர்தலில் அரூர் தொகுதியை வென்ற ஷனிமால் உஸ்மான், அந்த சட்டமன்றத்தில் கட்சியின் பெருந்தன்மையால் இடம்பெற்றார். 2011 இல், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் பெரும்பான்மையை வென்றபோது கூட, பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்ட பி.கே. ஜெயலட்சுமி, தேர்வான ஒரே தனித்தொகுதி பெண். லத்திகா சுபாஷ், காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தபோதும் அவரது மூன்று தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே களமிறக்கப்பட்டார் - 2011 ல் அப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எதிராக நின்றார்.
"இந்தியன் யூனியன் முஸ்லீம் லீஜ் (ஐ.யூ.எம்.எல்), கேரள காங்கிரஸ் போன்ற மாநில அளவிலான கட்சிகள் மிக மோசமானவை" என்று ஜெயசங்கர் கூறினார். கட்சியின் நீண்டகால உறுப்பினரான நூர்பினா ரஷீத் என்பவரை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.யூ.எம்.எல் தனிஒருவராக களமிறக்கியது.
கேரளாவில் பெண்கள் சக்தி எவ்வாறு அரிக்கப்பட்டது
கேரள சட்டமன்ற அரசியலில் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில், பெண்கள் பெரும் உச்சத்தை தொட்டனர்.
கடந்த 1922 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சட்டமன்றக் குழுவின் உறுப்பினரான மேரி பூனென் லூகோஸ், இந்தியாவில் சட்டமன்றக் குழுவின் முதல் பெண் உறுப்பினராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவாவதற்கு முன்னர், திருவாங்கூர் மாநிலத்தில் பல்வேறு சட்டமன்ற சபைகளில் இருபத்தி மூன்று பெண்கள் மற்றும் 13 பேர் கொச்சியில் உறுப்பினர்களாக இருந்தனர் என்று மனோரமா தேர்தல் மலர் - 2006 கட்டுரை குறிப்பிட்டது.
திருவிதாங்கூரைச் சேர்ந்த அன்னி மஸ்கரீன், அக்கம்மா செரியன் மற்றும் அம்மு சுவாமிநாதன் மற்றும் மலபாரைச் சேர்ந்த ஏ.வி. குட்டிமோளு அம்மா ஆகியோர், சுதந்திரத்திற்கு முந்தைய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர். 1945 இல் கொச்சின் சட்டமன்றத்தில் இருந்து முதல் தலித் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்த தாக்ஷாயனி வேலாயுதம், சுதந்திர இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.
அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவது 1960 கள் மற்றும் 70 களில் தொடங்கியது என்று சென்னையைச் சேர்ந்த அரசியல் பகுப்பாய்ளர் பாஸ்கர் கூறுகிறார். சுதந்திரத்திற்கு பிறகு கேரளாவில், ஒரு காலத்தில் மாநில முதல்வராக ஆவதற்கு வலுவான போட்டியாளர்களாக இருந்த கே.ஆர். கவுரி (கவுரி அம்மா என்று அறியப்படுபவர்) மற்றும் சுசீலா கோபாலன் இருவரும் கேரள அரசியலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் தங்களது கட்சியால் சுருக்கமாக மாற்றப்பட்டனர் என்று கூறும் பாஸ்கர், "மிகவும் ஆணாதிக்க கேரள சமுதாயத்தை" கருத்தில் கொண்டு இது நடந்தது என்றார்.
கேரள அரசியல் துறையில் பெண்கள் தொடர்ந்து களத்தில் உள்ளனர் என்று, பாஸ்கர் மேலும் கூறினார். "ஆனால் அவர்கள் தங்களது முன்னோடிகளான அக்காமா செரியன் அல்லது கவுரி அம்மாவை போல் அல்லாமல் அடக்கி வைக்கப்பட்டவர்கள்" என்றார்.
மாநிலத்தின் பிரபலமாக இருந்த சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜாவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தனது முந்தைய கற்பித்தல் நிலையால அறியப்பட்டதால, 'ஷைலஜா டீச்சர்' என்று அழைக்கப்படும் அவர், 2018 ஆம் ஆண்டில் நிபா தொற்றுநோயைக் கையாண்டதற்காகவும், 2020 முதல் கோவிட்-19 தொற்றுநோய்க்காகவும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். தொற்றுநோயை திறம்பட மற்றும் விஞ்ஞான ரீதியாக கையாண்டதற்காக சர்வதேச ஊடகங்களால் அவர் ஒரு 'கொரோனா வைரசை கொன்றவர்' மற்றும் 'ராக்ஸ்டார் மந்திரி' என்று அழைக்கப்படுகிறார்.
உறுதிப்படுத்தப்பட்ட முதல் ஐந்து கோவிட்-19 வழக்குகள், 2020 மார்ச் 8 அன்று கண்டறியப்பட்டபோது, ஷைலாஜா தினசரி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தத் தொடங்கினார், இது மாநிலம் தழுவிய கவனத்தைப் பெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் அரசியல் தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் சுகாதார அமைச்சரின் சமீபத்திய தகவல்களை அறிய ஆவலுடன் காத்திருந்தனர். "சில நாட்களில் அவரிடம் இருந்து, பிரபலமான பத்திரிகையாளர் சந்திப்பை முதல்வர் பினராயி விஜயன் பறித்துக் கொண்டார்" என்று பாஸ்கர் கூறினார்.
பாஸ்கர் போன்ற அரசியல் பார்வையாளர்கள், தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகளை இந்த கையகப்படுத்தல் மிகவும் பிரபலமான சுகாதார அமைச்சரை அளவிற்குக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று நம்புகின்றனர். COVID-19 புள்ளிவிவரங்களை சுகாதார அதிகாரிகள் தினசரி அறிக்கை செய்த ஷைலாஜா, இந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு அமைதியான பார்வையாளராக தள்ளப்பட்டார்.
எல்.டி.எஃப் விளம்பர விளம்பரத்தில் முதலமைச்சர் விஜயன் அணியின் 'கேப்டனாக' சித்தரிக்கப்படுவதால், தற்போதைய பிரச்சாரத்தில் ஷைலாஜா இல்லை.
பிரபலமான பெண் தலைவர்களை முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவது கேரளாவில் புதிதல்ல. பிரபலமான மற்றும் வலுவான பெண் தலைவர்கள் இரண்டு முறை மாநிலத்தில் முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் அரசியல் வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு
கடந்த 1987 ஆம் ஆண்டில், இடதுசாரி ஜனநாயக முன்னணியை சேர்ந்த பிரபலமான சிபிஐ (எம்) தலைவர் கலதில்பரம்பில் ராமன் கவுரி அம்மாவை, அக்கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளராக முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஈழவா சமூகத்தைச் சேர்ந்த முதல் வக்கீல், ஒரு 'பின்தங்கிய' சாதியை சேர்ந்த கவுரி அம்மா, 1950 களின் முற்பகுதியில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக காவல்துறையின் சித்தரவதைகளுடன் கூடிய சிறைவாசத்தை எதிர்கொண்டார். 1957 இல் கேரளாவின் முதல் பெண் அமைச்சராகவும், முதல் வருவாய் அமைச்சராகவும் இருந்த அவர், நில சீர்திருத்த மசோதா போன்ற புரட்சிகர சட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
முதலமைச்சர் பதவிக்கு சிபிஐ (எம்) அதிகாரப்பூர்வமாக தனது பெயரை அறிவிக்கவில்லை என்றாலும், 1987 ஆம் ஆண்டு தேர்தல் சுவரொட்டிகளில் "கெரம் திங்கும் கேரள நாட்டில் கே.ஆர். கவுரி பாரிக்கட்டே" (தென்னை விளையும் கேரளாவை கே.ஆர். கவுரி ஆட்சி செய்யட்டும்) என்ற முழக்கத்தைக் கொண்டிருந்தது. "அரூர் தொகுதியின் கீழ் வரும் துரவூரில், கவுரி அம்மாவுக்கான தேர்தல் பிரசார மாநாட்டில் இந்த முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியது சிபிஐ தலைவர் பி.கே.வாசுதேவன் நாயர்தான். அப்போது கவுரி நாயர் குறுக்கிட்டு, இது கட்சியின் ஆட்சி மன்றக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறியதாக", விரைவில் வெளியாகும் பி.எஸ். கவுரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு நூலாக கனலோர்மைகள் என்ற நூலின் (Embers of Memory) ஆசிரியர் சதீஷ் குமார் தெரிவித்தார்.
எல்.டி.எஃப் 140 இடங்களில், 78 இடங்களை வென்றது. இருப்பினும், வருங்கால முதலமைச்சரை முடிவு செய்ய கட்சியின் மாநில குழு கூட்டத்தில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மூன்று முறை கேரள முதல்வராக பதவியேற்ற சிபிஐ மூத்த தலைவர் ஈ.கே. நாயனாரின் பெயரை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தார். "ஆட்சிமன்றக்குழுவில் யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை" என்று சதீஷ் குமார் கூறினார். பின்னர், நயனார் முதல்வரானார்.
சீனியாரிட்டி என்ற தகுதி இருந்தபோதும் கவுரி அம்மா ஒருபோதும் கேரள சிபிஐ (எம்) மாநில செயலர் அளவிலோ அல்லது அதன் மத்தியக்குழு அல்லது தேசிய பொலிட்பீரோவாகவோ கூட பதவி உயர்த்தப்படவில்லை. பல விஷயங்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில், சிபிஐ (எம்) அவரை 'கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக' கட்சியில் இருந்து நீக்கியது.
மேற்கு கேரளாவில் உள்ள தனது சொந்த மாவட்டமான ஆலப்புழாவில் தனக்கென செல்வாக்கை வைத்திருந்த கவுரி அம்மா, ஜனாதிபத்யா சமரக்ஷனா சமிதி (ஜே.எஸ்.எஸ்) என்ற கட்சியை நிறுவினார், இது பின்னர் யு.டி.எஃப் உடன் இணைந்தது. 1977 தவிர, 1960 க்கும் 2001 க்கும் இடையிலான ஒவ்வொரு தேர்தலிலும் கே.ஆர். கவுரி கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1996 ஆம் ஆண்டில் இதேபோன்ற நிலைமை, மூத்த எல்.டி.எஃப் தலைவர் சுஷீலா கோபாலனுக்கு ஏற்பட்டது. எல்.டி.எஃப் அந்த ஆண்டு தேர்தல்களில் பெரும்பான்மையை வென்றது மற்றும் முதல்வர் பதவிக்கு அவரது பெயரை முன்மொழிந்தது. கட்சியின் மாநிலக் குழுவிற்குள் நடந்த வாக்கெடுப்பில், அவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில், அந்த ஆண்டு தேர்தலில் கூட போட்டியிடாத ஈ.கே. நயனாரிடம் தோற்றார். நயனார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார், பின்னர் வட கேரளாவின் தலச்சேரி தொகுதி இடைத்தேர்தலில் நாயனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நயனார் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக சுசீலா கோபாலன் பொறுப்பேற்றார்.
"1987 இல் கவுரி அம்மாவின் பிளவால் ஏற்பட்ட அடியை சமாளிக்க, ஈழ சமுதாயத்தை சேர்ந்த ஒரு வேட்பாளராக சுஷீலா வெறுமனே களமிறக்கிவிடப்பட்டார்" என்று பாஸ்கர் கூறினார்.
"ஆணாதிக்க விதிமுறைகளை மீறும் பெண்களை கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது," என்று, கோட்டையத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் காந்திய சிந்தனை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் பள்ளியை சேர்ந்த உதவி பேராசிரியரும், தலித் பெண்ணியலாளருமான ரேகா ராஜ் கூறினார். "ஆண் பார்வை அல்லது ஆண் ஈகோவை பூர்த்தி செய்யாத பெண்களை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் விவாகரத்து செய்யப்பட்ட, ஒற்றையாக வசிக்கும் அல்லது பாலியல் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த பெண்களை அரசியல்வாதிகளாக நாம் அடிக்கடி பார்க்கவில்லை. பொதுத்துறையில் பெண்களின் அறநெறி எப்போதும் ஆய்வுக்கு உட்பட்டது" என்றார்.
சட்டமன்றத்தில் அவர்களின் மோசமான பிரதிநிதித்துவம் காரணமாக, மாநில அமைச்சரவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மோசமாக உள்ளது. 1957 ஆம் ஆண்டில் தொடங்கி, எட்டு பெண்கள் மட்டுமே கேரளாவில் அமைச்சரவை அமைச்சர்களாக பணியாற்றியுள்ளனர். இரண்டு மகளிர் அமைச்சர்களுடன், பினரி விஜயன் தலைமையிலான தற்போதைய எல்.டி.எஃப் அரசு, கேரள அமைச்சரவையில் அதிகபட்ச பெண்களை கொண்டது என்ற சாதனையை படைத்துள்ளது.
விளிம்புநிலை சமூகப் பெண்கள் கடினமாக உணர்கிறார்கள்
தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் நிலைமை மோசமாக உள்ளது.
பெண்கள் தலைமையிலான பொம்பிலாய் ஒருமாய் என்ற தொழிற்சங்க இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறுவதற்கான பாதையில் நன்றாக சென்றது. மூணாறு தேயிலைத் தோட்டங்களில் நியாயமான ஊதியம் மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் கோரி 2015 ஆம் ஆண்டில் 'பிற்படுத்தப்பட்ட' சாதி பெண் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால், பொம்பிலாய் ஒருமாய் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளான்டேஷன்ஸ் லிமிடெட் (கே.டி.எச்.பி) இல், ஒன்பது நாள் வேலைநிறுத்தமாகத் தொடங்கிய நிலையில், அது விரைவில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் கேரள அரசின் கவனத்தை ஈர்த்தது. தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.234 பெற்று வந்த நிலையில் அதை, ரூ.500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பொம்பிலாய் ஒருமாய் அமைப்பு, இரண்டு கிராம பஞ்சாயத்து இடங்களையும் ஒரு ஒன்றிய பஞ்சாயத்து இடத்தையும் வென்றது. ஆனால், தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான கட்சிகள் அதை சீர்குலைக்க தொடர்ச்சியான முயற்சிகள் செய்ததால், விரைவிலேயே அந்த இயக்கம் பிளவுபட்டு, இறுதியில் வீழ்ச்சியடைந்தது. அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜி.கோமதி, 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தோல்வியடைந்தார்.
ஆதிவாசி தலைவர் சி.கே. ஜானு மற்றொரு அரசியல் வேட்பாளர், அவர் தேர்தல் அரசியலில் இடம் பெறுவது கடினம். ஆதிவாசிகளுக்கு நிலம் ஒதுக்கக் கோரி ஆதிவாசி கோத்ரா மகாசபாவின் பதாகையின் கீழ் மாநிலத்தின் மிகப்பெரிய ஆதிவாசி எழுச்சியான, முத்தங்கா போராட்டத்திற்கு 2003 ல் ஜானு தலைமை தாங்கினார். ஜானு தனது கட்சியான ஜனதிபத்ய ராஷ்டிரிய சபையை 2016 இல் தொடங்கி, 2016 சட்டசபைத் தேர்தலில் சுல்தான் பத்தேரி தொகுதியில் இருந்து என்.டி.ஏ ஆதரவு வேட்பாளராக நின்று, தோல்வியுற்றார். அவர் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்ததற்காக ஜானுவைக் குறை கூற முடியாது என்று பொம்பிலாய் ஓருமாயின் ஜி.கோமதி கூறினார். "ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஒரு பிரதான அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் தாக்குப்பிடிப்பது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார். அவருக்கு சித்தாந்த அடிப்படையில் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை மறுத்த பிறகு இம்முடிவுக்கு வந்தார்.
"நான் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கான அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் இந்த குழுக்களில் பல ஆன்லைன் செயல்பாட்டில் மட்டுமே உள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண விரும்பும் என்னைப் போன்ற ஒருவருக்கு, ஒரு பிரதான கட்சியுடன் இணைவது தவிர்க்க முடியாதது. எவ்வாறாயினும், பிரதான கட்சிகளோ அல்லது முற்போக்கான அமைப்புகளோ என்னை தங்களிடம் வருமாறு அழைக்கவில்லை" என்று கோமதி கூறினார், இவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
"ஒவ்வொரு தொகுதியிலும் சாதியும் சமூகமும் முக்கிய காரணிகளாக உள்ளன. தேர்தலின் போது கேரளா தனது முற்போக்கான முகத்தை காட்டுவது வேடிக்கையாக உள்ளது," என்று மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ரேகா ராஜ் கூறினார், கேரளா பெண்களுக்கு கணிசமான அதிகாரமளித்த மாநிலமாக இருப்பது பற்றிய மக்கள் கருத்தை அவர் குறிப்பிடுகிறார். "சமூக நீதி என்பது ஒருபோதும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு கவலையாக இருக்காது. அதனால்தான் நம்மிடையே ஒரு பெண் முதல்வர் இல்லை அல்லது ஒரு தலித் முதல்வரின் சாத்தியம் பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண்களுக்கான பரந்த ஒதுக்கீட்டிற்குள் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களும், திருநங்கைகளும் குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்று ராஜ் கருதுகிறார். "நாம் சாதி பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அநீதி ஏற்படும். ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை பெரும்பான்மையின் தேர்வு என்பதால், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் திருநங்கைகள் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் இயற்கையாகவே ஓரங்கட்டப்படுகின்றன, "என்று அவர் கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் ஏன் உயரே செல்லவில்லை
நகர மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகள் என இரண்டிலுமே 50% இடங்களை பெண்களுக்காக கேரளா ஒதுக்கியுள்ளது. கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கடைசி இரண்டு உள்ளாட்சித் தேர்தல்களில், பெண்கள் 50% க்கும் அதிகமான இடங்களுக்கு போட்டியிட்டனர். முக்கிய கட்சிகள் இடஒதுக்கீடு அல்லாத தொகுதிகளில் பெண்களை நிறுத்தாத நிலையில், 'பொது' ஒதுக்கீட்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களாக பெண்கள் போட்டியிடத் தொடங்கியுள்ளனர்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் மாநிலம் தழுவிய குடும்பஸ்ரீ போன்ற பெண் கூட்டுறவு பணியாளர்கள், தங்கள் பிரதிநிதித்துவ எழுச்சியைக் கண்டனர். 2020 தேர்தலில், கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் 32% பேர் குடும்பஸ்ரீ அமைப்பை சேர்ந்தவர்கள்.
உள்ளூர் அரசியலில் பெண்களின் தலைமை இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு மாநில மற்றும் பொதுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பை தருவதில்லை.
"பெண்கள் இடஒதுக்கீட்டை ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தியதால், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் நியாயமான இடம் எங்களிடம் உள்ளது. ஆனால் அவை போன்சாய் தாவரங்களைப் போன்றவை - ஒரு கட்டத்திற்குப் பிறகு வளர அனுமதிக்கப்படவில்லை"என்று கோழிக்கோடு தெற்கில் இருந்து போட்டியிடும் ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் நூர்பினா ரஷீத் கூறினார்.
"கட்சிகள் குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் திறமையை நிரூபிக்கும் பெண்களை புறக்கணிக்கின்றன" என்று, திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரமணி பி. நாயர் கூறினார். பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தராததை எதிர்த்து அவர் சமீபத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். "இடஒதுக்கீடு காரணமாக மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் முக்கிய பதவிகளைப் பெறுகிறார்கள்," என்று அவர் கூறினார். "சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் ஆண்களால் எடுக்கப்படுகின்றன, அங்கு பெண்களுக்கு ஒரு சொல் கூட இல்லை. நான் பெண்களை பிரதமர், ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவராக்கிய ஒரு கட்சியைச் சேர்ந்தவள். ஆனால் அந்த உணர்வுகள், கட்சியின் கீழ் மட்டத்தில் பிரதிபலிக்கவில்லை" என்றார்.
கேரளாவின் இளைய மேயர் மற்றும் பஞ்சாயத்து தலைவராக உள்ளார் - திருவனந்தபுரத்தின் மேயரான ஆர்யா ராஜேந்திரன், அருவப்புளத்தின் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ரேஷ்மா மரியம் ராய், இருவரும் 21 வயதுடையவர்கள்.
தேர்தல் அரசியலில் பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு முன்னோக்கிய வழியாக பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் குறைந்தபட்சம் 33% இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பெண் தலைவர்கள் நீண்ட காலமாக கோரியுள்ளனர். "இடஒதுக்கீடு இல்லாமல், ஆண்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது" என்று ரஷீத் கூறினார்.
(இக்கட்டுரை, பாலின சமத்துவம் தொடர்பான டிஜிட்டல் மீடியாவான BehanBox உடன் இணைந்து எழுதப்பட்டது).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.