லாரிகள் ஏன் இந்திய சாலைகளில் பலரை காவு வாங்குகின்றன
மும்பை: 29 வயதான தேவிந்தர் சிங், 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் லாரிகளை ஓட்டிச் சென்று வருகிறார். கூடுதல் ஊதியம் ஈட்டுவதவற்காக, அடிக்கடி இடைவெளி இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்து லாரி ஓட்டுகிறார்.
தென்மேற்கு பஞ்சாபில் பதிந்தா பகுதியில் வசிக்கும் சிங், "எனது சிறந்த சாதனை, மூன்று நாட்களுக்கு ஓய்வில்லாமல் லாரியை ஓட்டுவதுதான்” என்றார். அவருடன் தொலைபேசியில்இந்தியா ஸ்பெண்ட் குழு பேசியபோது, வடக்கு குஜராத்தின் பெச்சாராஜி முதல் வடமேற்கு ஹரியானாவின் கைதால் வரை 1,000 கி.மீ தூரத்திற்கு லாரி ஓட்டுவதற்கு தயாராக இருந்தார். "தேவைப்படால் மட்டுமே நாங்கள் - வழக்கமாக இரவு 2 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை - தூங்குகிறோம்" என்றார்.
இந்தியாவின் முக்கியமான உள்நாட்டு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வலையமைப்பாக, நாடு முழுவதும் சரக்குகளை நகர்த்தும் ஒன்பது மில்லியன் லாரி போக்குவரத்து ஓட்டுனர்களில் சிங் ஒருவர். இந்தியாவின் சரக்கு போக்குவரத்தில் 69% லாரிகள் (டிரக்) உள்ளதாக,பொருளாதார கணக்கெடுப்பு 2018-19 தெரிவிக்கிறது. இது, மொத்த மதிப்பு கூட்டலுக்கு சுமார் 3.06% பங்களிப்பு செய்கிறது.
ஆனால் சிங் போன்ற பல லாரி ஓட்டுநர்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள். லூப்ரிகேண்ட் உற்பத்தியாளரான காஸ்ட்ரோல் நிறுவனம் நடத்திய 2018ஆய்வில் இடம்பெற்றுள்ள லாரி ஓட்டுநர்களில் கால் பகுதியினர், தூக்கமின்மை பிரச்சனை பற்றி பேசினர். சோர்வு, தூக்கமின்மை, உடல் பருமன், முதுகுவலி, மூட்டு மற்றும் கழுத்து வலி, மோசமான பார்வை, மூச்சுத் திணறல், மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளை 53% பேர் பதிவு செய்தனர்.
விபத்துக்களில் லாரிகள் ஏன் அடிக்கடி சிக்குகின்றன என்பதற்கு, நிபுணர்களின் கூற்றுப்படி, பணிக்கால நேரம் மற்றும் ஓட்டுநர்களின் மோசமான உடல்நலம் என்று தெரிய வருகிறது. சாலை விபத்துக்கள் (12.3%) மற்றும் சாலை விபத்து மரணங்கள் (15.8%) ஆகியவற்றிற்கு மூன்றாவது காரணமாக லாரிகள் உருவாகி இருக்கின்றன என்று, சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) வெளியிட்டுள்ள சாலை விபத்துகள்அறிக்கை2018 தெரிவிக்கிறது.
கடந்த 2018இல் பதிவான 1,51,417 சாலை விபத்து மரணங்களில், 10% (15,150) பாதிக்கப்பட்டவர்கள் லாரி ஓட்டுநர்கள் அல்லது அதில் பயணித்தவர்கள் என்று தரவு காட்டுகிறது. இது, 2017இல் 1,47,913 சாலை விபத்துகளில் 11.6% (17,158) மரணங்கள் என்பதைவிட குறைவாகும்.
ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில், லாரி ஓட்டுநர்கள் அதிகபட்சமாக 12 மணிநேரம் ஓட்டலாம்; அதுவும் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் அரை மணி நேர இடைவெளி மற்றும் குறைந்தது ஆறு தொடர்ச்சியான மணிநேர ஓய்வு இருக்க வேண்டும். கனடா 13 மணி நேர வரம்பை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 15 நிமிட இடைவெளி மற்றும் எட்டு தொடர்ச்சியான மணிநேர ஓய்வு என்று நிர்ணயித்துள்ளது என்று, டேனிஷ் பொது சுகாதார நிறுவனமான சிட்வெஸ்ட்ஜிக் சிக்ஹஸ் வெளியிட்டுள்ள இந்த 2018ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், வர்த்தக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு பயிற்சி, வேலை நேரம் அல்லது அவ்வப்போது கண் பார்வை சோதனைகள் தொடர்பான சில விதிமுறைகள் இந்தியாவில் உள்ளன.
கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்ட 19 நாடுகளில், சாலை போக்குவரத்து விபத்துக்களால் அதிகபட்ச தொகை இழப்பை ஜப்பான் - கிட்டத்தட்ட 64 பில்லியன் டாலர் -சந்தித்துள்ளது; அதைத் தொடர்ந்து இந்தியா சுமார் 58 பில்லியன் டாலர் என்று, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (யுனெஸ்காப்- UNESCAP) 2018ஆய்வு கூறுகிறது.
Source: Accidental Deaths and Suicides report for 2014, 2015, 2016, 2017 and 2018, National Crime Records Bureau
மேலே உள்ள அட்டவணையில், 2018 முதல் நான்கு ஆண்டுகளில் லாரிகளால் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையில் சுமார் 26% மற்றும் காயங்கள் கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளதை, தேசிய குற்ற பதிவு பணியகத்தின் தரவு காட்டுகிறது. (இந்த புள்ளிவிவரங்கள் MoRTH அறிக்கையில் உள்ள தரவுகளில் இருந்து சற்று வேறுபடுகின்றன). இருப்பினும், விபத்தில் இறந்த லாரி ஓட்டுநர்களின் எண்ணிக்கை 33% அதிகரித்துள்ளது; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17% உயர்ந்துள்ளது.
"லாரி ஓட்டுநர்கள் மோசமானவர்கள் என்று இழிவுபடுத்தப்படுகிறார்கள்" என்றுடிரக் டி இந்தியா: இந்துஸ்தானுக்கு ஹிட்சிகரின் வழிகாட்டி புத்தகத்தின் ஆசிரியர் ரஜத் உபய்கர் கூறினார்: - லாரி பயணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயணக் குறிப்பு நூல் இது. "ஆனால், நீங்கள் லாரியில் உயரமான இடத்தில் உட்கார்ந்திருக்கும்போது, சிறிய கார்களில் எல்லோரும் கிறுக்கத்தனமாக ஓட்டுவதை போல் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு லாரியின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ.க்கு தான் செல்கிறது; ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை அதிக சுமை கொண்டவை மற்றும் கண்மூடித்தனமானவை - எடுத்துக்காட்டாக, ஓட்டுநரின் இடது பக்கம்” என்றார்.
பெரும்பாலான லாரி ஓட்டுனர்களின் மோசமான ஆரோக்கியத்திற்கு காரணம், அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதுடன் தங்களின் குடும்ப உணவுத் தேவைக்காக நீண்ட தூரம் பயணிப்பதும் தான் என்று, மும்பையை சேர்ந்த அரசு சாரா அமைப்பானசைட் சேவர்ஸ் இந்தியாவின் தேசிய மேலாளர் ஜடின் திவாரி கூறினார். இந்த அமைப்பு, லாரி ஓட்டுனர்களின் பார்வை பிரச்சினைகள் பற்றிய ஆய்வையும் நடத்தியுள்ளது.
"அவர்களின் வருமானம் - மாதத்திற்கு ரூ.21,000 முதல் ரூ. 24,000 வரை - என்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் இணைந்திருக்கவில்லை," என்று அவர் கூறினார். "லாரி தொழிலில் 95%, எந்தவொரு பெரும் போக்குவரத்துக்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைக்கப்படவில்லை; இவ்வளவு பெரிய மக்கள் அமைப்பு ஒழுங்கற்றதாக இருக்கும்போது, அதற்கு சுகாதாரத்துக்கான அணுகல் தேவைப்படுகிறது." என்றார் அவர்.
லாரி ஓட்டுனர்கள் மிகச்சிறிய வயதிலேயே வீட்டை விட்டு வந்து கிளீனர்களாக வேலை செய்வதற்கும், கயிறுகளைக் கற்றுக்கொள்வதற்கும் தயாராகிவிடுவதாக கூறிய திவாரி "இது பல மட்டங்களில் வியக்கத்தக்க வகையில் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகம்," என்றார். "இது வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லை, ஆனால் ஒவ்வொரு சமூக-பொருளாதார மட்டத்திலும், அவை மோசமாக செயல்படுகின்றன" என்று தெரிவித்தார்.
லாரி ஓட்டுநர் பணி ஏன் மிகவும் ஆபத்தானது என்பது குறித்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் நிபுணர்களுடன்இந்தியா ஸ்பெண்ட் குழு பேசியது. இதில், பின்வரும் காரணிகளே மிகவும் காரணம் என்பது தெரிந்தது: அதிக சுமை; நீண்ட நேரம் வேலை மற்றும் தூக்கமின்மை; மற்றும் மோசமான உடல்நலம், குறிப்பாக பார்வை பிரச்சினைகள்.
மிகப்பெரிய காரணி: அதிக சுமை
கடந்த 2018 சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக (MoRTH) அறிக்கையின்படி, அதிக சுமை கொண்ட வாகனங்கள் மொத்த விபத்துக்களில் 10%, இறப்புகளில் 12% மற்றும் காயங்களில் 27% பங்களிப்பை கொண்டுள்ளன. இருப்பினும், அதிக சுமை காரணமாக ஏற்படும் விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 2017 உடன் ஒப்பிடும்போது 2018 இல் சரிவை சந்தித்துள்ளது.
அதிக சுமை கொண்ட லாரிகள் பல காரணங்களுக்காக விபத்துக்களை ஏற்படுத்துகின்றன: டயர் வெடிப்பு, பிரேக் பிடிக்காதது, சாலையில் சரிந்து கவிழ்ந்தல், சமநிலைத்தன்மை இழப்பு மற்றும் சாய்வு பகுதிகளில் கட்டுப்பாட்டை இழத்தல் ஆகியன காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
"அதிக சுமை வாகனத்தின் வெயிட்டேஜை பாதிக்கிறது மற்றும் ஈர்ப்பு மையத்தையும் பாதிக்கிறது, இது வாகனத்தின் இயக்கத்தை பாதிக்கிறது," என்று, பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) இணை பேராசிரியர் ஆஷிஷ் வர்மா கூறினார்.
இதேபோல், டேங்கர் லாரிகள் திரவங்களை சுமந்து முன்னும் பின்னுமாக சறுக்குகின்றன, இது லாரியின் இயற்கையான ஈர்ப்பு மையத்தை பாதிக்கிறது. "அதிக சுமையானது லாரியின் பிரேக் திறனின் ஆற்றலை தடுக்கிறது" என்று உபய்கர் கூறினார்.
"அதிக சுமை என்பது எல்லோரும் - சாலை போக்குவரத்து அலுவலகம், சரக்கு அலுவலகம் மற்றும் டிரக் உரிமையாளர்கள் - பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகும்" என்று உபய்கர் கூறினார். "எனவே அதிக சுமைகளைத் தடுக்க, நீங்கள் மூன்று தரப்பினரையும் ஓட்டுனருடன் பொறுப்பேற்க வேண்டும். மேலும், விதிக்கப்படும் அபராதம் அதிக சுமை மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்; இல்லையெனில், இது நிறுத்தப்படாது” என்றார்.
‘ஒவ்வொரு மணி நேர தாமதத்திற்கும் ரூ.200 இழப்பு’
வேகம் மற்றும் அதிக வேலைக்கான போக்கு என்பது, ஊக்கத்தொகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று லாரி உரிமையாளர்கள்,இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். பாட்னாவை சேர்ந்த ஓட்டுநர் இஜாஸ் அகமது கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து வாகனம் ஓட்ட வேண்டும். “எடுத்துக்காட்டாக கூரியர் டெலிவரி 65 மணி நேரத்தில் நாங்கள் வழங்க வேண்டும். டிரக் சரியான நேரத்தில் வந்தால் உங்களுக்கு ரூ .1,000 முதல் ரூ .2,000 வரை போனஸ் கிடைக்கும்; ஆனால் நீங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால், தாமதத்திற்கு ஒருமணி நேரத்திற்கு ரூ.200 குறைப்பார்கள்” என்றார்.
ஏப்ரல் 2018 இல், காஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம், டெல்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த 1,000 லாரி டிரைவர்கள் தொடர்புடைய ஒருமாத கணக்கெடுப்பை (மேலே மேற்கோள் காட்டியது) நடத்தியது. இதில் பங்கேற்றவர்களில் பாதி (48%) ஒரு மாதத்திற்கு சராசரியாக 12 தடவைக்கும் மேல் லாரி டிரிப் அடித்ததாக கூறினர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தன.
சுமார் 63% ஓட்டுநர்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனம் ஓட்டுவதாக கணக்கெடுப்பில் தெரிவித்தனர். 56% ஓட்டுநர்கள் ஒன்று அல்லது இரண்டு குறுகிய ஓய்வுகளையும், 78% பேர் ஒன்று அல்லது இரண்டு நீண்ட ஓய்வுகளை எடுத்தனர். சுமார் 5% லாரி ஓட்டுனர்கள் எந்த இடைவெளியும் இல்லாமல், 6% நீண்ட ஓய்வும் இல்லாமல் வாகனம் ஓட்டுவதாக கூறியத்து ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
"ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுகிறார்கள், இது சோர்வை ஏற்படுத்துகிறது. இது வாகனத்தை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது" என்று ஐ.ஐ.எஸ்.சி.யின் வர்மா கூறினார். லாரி ஓட்டுநர்களுக்கு உரிய வசதிகள் இல்லாததால் இதுவும் நிகழ்கிறது. அவர்கள் ஓய்வெடுக்க வசதிகள் உள்ள ஒரு முனையம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இது அவர்களின் சோர்வை அதிகரிக்கிறது” என்றார்.
"நாங்கள் இடங்களை கண்டறிந்து வைத்திருக்கிறோம். பெரும்பாலும்தாபாக்களில் நாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்கிறோம்," என்று அகமது கூறினார். " சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்த முடியாது" என்றார் அவர்.
ஓட்டுநர்களில் கால் பகுதியினர் (23%) தூக்கமின்மை இருப்பதாக தெரிவித்தனர். பெரும்பாலான ஓட்டுனர்கள் இசை அல்லது பாடல்களை (49%) கேட்பதன் மூலம் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதை சமாளிக்கின்றனர்; 14% பேர் வழக்கமான நடைபயிற்சி / ஜாக்கிங் தேர்வு செய்கிறார்கள்.
93% ஓட்டுனர்களுக்கு பார்வை பிரச்சினைகள்
சைட் சேவர்ஸ் இந்தியா 2017 ஆம் ஆண்டில் ‘ஐ ஓகே ப்ளீஸ்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. லாரிகள் மற்றும் போக்குவரத்தை இயக்குபவர்களிடையே பார்வை மங்கலான மற்றும் கண்கவர் பயன்பாட்டை ஏற்படுத்தும் பார்வையில் ஒளிவிலகல் பிழைகளைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்.
பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் - அதாவது 93.2% -10 முக்கிய இந்திய நகரங்களில் சைட் சேவர்ஸ் நடத்திய 235 கண் முகாம்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். இவற்றில், 42.2% பேர் வாகனம் ஓட்டும்போது முகவரி அறிந்து கொள்ளுதல், உயரம் தூரங்களை அனுமானித்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.
பார்வை குறித்த கணக்கெடுப்பிற்கு பதிலளித்த 137 பேரில் 70% பேர் அரிப்பு இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து கண்களில் நீர் (64%), தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் (63%) மற்றும் தலைவலி (61%) இருப்பதாகவும் தெரிவித்தனர். பிற முக்கிய பிரச்சினைகளாக வாசிப்பதில் சிரமம் (37%) மற்றும் கண்கள் சிவந்து போகுதல் (20%) உள்ளது. ஓட்டுநர் தேர்வுக்கு மூன்று சோதனைகள் நடத்தப்பட வேண்டும்: வர்மாவின் கருத்துப்படி, பார்வை கூர்மை, நிறம் பகுத்தறிதல், பார்வை புலச்சோதனை.
"சாதாரண பார்வை இல்லாதவர்களுக்கு தூரப்பார்வை இருப்பதானால், ஓட்டுநருக்கு அது ஆபத்தானது, ஏனென்றால் சாலைத் தடுப்பு, அபாய அறிகுறி அல்லது ஒரு குழியை கூட சரிவர காண முடியாமல் தடுக்கிறது," என்று அவர் கூறினார். "ஓட்டுனர் முன்கூட்டியே போக்குவரத்தை கணிக்கக் கூடிய நல்ல கணிப்பாளர்களாக இருக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் முந்திச் செல்ல முயற்சிக்கும்போது. சாலையில் பாதசாரிகளின் நடந்து செல்லும் போக்கை தீர்மானிக்கும் ஒரு சீரான பார்வை, அவர்களுக்கு தேவை” என்றார்.
பதிலளித்தவர்களில் 64% பேர் தங்கள் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எதுவும் செய்யவில்லை. சரி செய்யப்படாத வெளிச்ச விலகல் பார்வை பிழை கொண்ட 7,605 லாரி ஓட்டுனர்களுக்கு சைட் சேவர்ஸ் அமைப்பு சார்பில், இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதை 39% பேர் நிறுத்திவிட்டனர் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. "ஓட்டுநர்கள் பொதுவாக தாங்கள் கண்ணாடி அணிந்திருப்பத்தை விரும்புவதில்லை, ஏனெனில் இது அவர்களின் சம்பாதிக்கும் திறனைப் பாதிக்கிறது," என்று திவாரி கூறினார்.
இரவில் வாகனம் ஓட்டுவது, அதிக வெளிச்சம் கொண்ட பீம் ஹெட்லைட்கள் மற்றும் அனைத்து வகையான காலநிலை நிலைமைகளுக்கும் ஆளாவது, லாரி ஓட்டுநர்களின் பார்வையை சேதப்படுத்தும் என்று திவாரி கூறினார்.
“வாகனம் ஓட்டும்போது, கை-கண் ஒருங்கிணைப்பு முக்கியமானது; எனவே 50% லாரி ஓட்டுநர்களுக்கு பார்வை பிரச்சினைகள் இருந்த போதும் அது நாம் அவசரமாக அது குறித்து கவனம் செலுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
உடல்நலத்திற்கு குறைந்த முன்னுரிமை
சாலையில் நீண்ட நேரம் பயணித்துக் கொண்டிருப்பதால், சுகாதாரத்துக்கான அணுகல் என்பது ஒரு பிரச்சினை என்று, லாரி ஓட்டுநர்கள் கூறினர். 2016 ஆம் ஆண்டில், தேவிந்தர் சிங் ஒரு தார்பாலின் அட்டையை அகற்றும் போது லாரியில் இருந்து கீழே விழுந்ததில் முதுகில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்குச் செல்ல அவருக்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்களும், மருத்துவ உதவி பெற இன்னும் 30 நிமிடங்களும் ஆனது. காயத்திற்கு பிறகு, ஒரு மாதத்திற்கு அவரால் வாகனம் ஓட்ட இயலவில்லை; இன்றும் கூட, அவரால் அதிக எடையை தூக்குவது கடினமாக உள்ளது.
"நான் மருத்துவரிடம் செல்லவில்லை; ஒருசில அத்தியாவசிய மருந்துகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்," என்று அவர் கூறினார். "எனக்கு மருத்துவ பரிசோதனைக்கு நேரம் இல்லை" என்றார். லாரி ஓட்டுநர்கள் தங்கள் பயண வாழ்க்கை முறைக்கு இணங்கி செல்வதால், உடலில் அதன் தாக்கத்தை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று தனது புத்தகத்திற்காக ஆராய்ச்சி செய்யும் போது லாரி ஓட்டுனர்களுடன் நெருக்கமாக உரையாடிய உபய்கர் கூறினார்.
காஸ்ட்ரோல் நிறுவன ஆய்வின்படி, 63% லாரி ஓட்டுனர்களின் முதல் மூன்று முன்னுரிமை பட்டியலில் ஆரோக்கியம் என்பது இடம்பெறவில்லை. ஆய்வில் கலந்து கொண்ட ஓட்டுனர்களில் 68% பேர், தங்களது உடல் முற்றிலும் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்ததாக கூறினர். ஆனால் 53%, நாங்கள் சொன்னது போல், சோர்வு, தூக்கமின்மை, உடல் பருமன், முதுகுவலி, மூட்டு மற்றும் கழுத்து வலி, சிக்கலான பார்வை, மூச்சுத் திணறல் / சுவாச பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற பிரச்சினைகள் குறித்து கூறினர். 23% வரை தூக்கமின்மையையும், 18% பேர் உடல் வலியையும், 12% பேர் மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர்.
கணக்கெடுக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களில் 67% வரை அவர்கள் வேதனையின் போது மட்டுமே மருத்துவர்களை சந்தித்ததாகக் கூறினர்; மூன்றில் ஒரு பங்கிற்கு மேலானவர்களுக்கு (36%) ஆயுள் காப்பீடு இல்லை, 32% பேர் தங்களுக்கு அது தேவையில்லை என்று கூறினர்.
(சால்வி,இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர். இக்கட்டுரை சாலை பாதுகாப்பு மீடியா பெல்லோஷிப் 2019 இன் ஒரு பகுதியாகும்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.