இந்தியாவின் சூரிய சக்தி திறன் ஆயர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்கக்கூடும்

Update: 2019-08-06 20:30 GMT

சரங்கா, பதான்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருந்து 50 கி.மீ தூரத்தில், வடமேற்கு குஜராத்தின் சரங்கா கிராமத்தில் பழுப்பு நிற நிலம் முடிவற்றதாகத் தோன்றியது. கோடைகாலத்தில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக இப்பகுதி மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டு, எல்லா உயிரினங்களையும் - வறட்சி தாங்கும் தாவரங்கள் கூட பெரும்பாலான இலை உதிர்ந்து- இழந்ததாகத் தெரிகிறது. 2019 ஜூன் மாதம் குஜராத் கடற்கரையை தாக்கிய வாயு புயல் கூட, பதான் மாவட்டத்தை புதுப்பிக்க சிறிதும் உதவவில்லை.

குஜராத் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் 5,384 ஏக்கர் பரப்பளவில் சரங்கா சூரிய பூங்காவின் "பயன்படுத்தப்படாத" நிலமாக பரவி இருப்பதை விளக்குகிறது. ஆனால், பூங்காவின் அலுவலகத்தில் கிடைக்கும் திட்ட வரைபடம், இந்த மதிப்பீட்டில் இருந்து வேறுபடுகிறது - 5,417 ஏக்கரில் 2,000 ஏக்கருக்கு அருகே சாகுபடி செய்யப்படுவதை அது காட்டுகிறது. மீதமுள்ளவ, வரைபடத்தின்படி "அரசு நிலம்" ஆகும்.

இந்த முத்திரைகளால் கிராமவாசிகள் ஒளிர்ந்தனர். "நிலம் பயன்படுத்தப்படாதது மற்றும் அது அரசுக்கு சொந்தமானது என்று அவர்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?" என்று கால்நடை வளர்ப்பாளர் ராகு பென் கேட்டார். "இதை நாங்கள் கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்துகிறோம்; எங்கள் வாழ்வாதாரம் இந்த நிலத்தை சார்ந்துள்ளது. இது யாருக்கும் சொந்தமல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது” என்றார் அவர்.

கடந்த 2010 டிசம்பரில் தொடங்கப்பட்ட சூரியஒளி பூங்கா திட்டம், 2012 ஏப்ரல் முதல் செயல்பட்டு வருகிறது. இது, மால்தாரிஸ் எனப்படும் இப்பிராந்தியத்தின் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மேய்ச்சலாக இருந்தது. அவர்கள், கால்நடை மேய்ச்சல் நிலத்தை, பாரம்பரியமாக ஒருபோதும் சொந்தம் கொண்டாடவில்லை; ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாகும். மால்தாரிகள் ஒரு காலத்தில் நாடோடி சமூகமாக இருந்தனர்; ஆனால் சிலர் குடியேறி தங்க விரும்பினர்.

இந்த காரணிகள் 2015 ஆண்டு மாநில சூரிய மின்சக்தி கொள்கை அல்லது 2018 இன் குஜராத் காற்று-சூரிய ஹைபிரிட் மின் கொள்கையில் பிரதிபலிக்கவில்லை. "இழப்பீடு" அல்லது "வாழ்வாதாரங்கள்" என்ற வார்த்தைகள் சூரிய சக்தி கொள்கையில் எங்கும் இல்லை.

படத்தில், வலது புறத்தில் சூரிய பூங்கா உள்ளது. இடதுபுறத்தில் உள்ள நிலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல இடமில்லை. இந்த மேய்ச்சல் நிலங்கள் பூங்காவிற்கு கையகப்படுத்தப்பட்டதில் இருந்து சரங்காவின் கால்நடை எண்ணிக்கை குறைந்துவிட்டன.

மேய்ச்சல் நிலங்களுக்கான அணுகலை இழந்ததால், மால்தாரிகளால் இனி ஆடுகள், செம்மறி ஆடுகள், மாடுகள் அல்லது எருமைகளை வளர்க்க முடியாது. மேலும் பிராந்தியத்தில் உள்ள பிற வளமான நிலப்பகுதிக்கு அவர்கள் நுழைவதற்கு வனத்துறை அனுமதி மறுக்கிறது.

"இதன் விளைவாக, ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற மற்றும் சுதந்திரமாக இருந்த அந்த சமூகம், தற்போது அண்டை கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தினசரி கூலித் தொழிலாளர்களாகவோ அல்லது சூரிய பூங்காவில் துப்புரவாளராகவோ பணியாற்றும் நிலைக்கு சரிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்," என, பொது நிலங்கள், கால்நடைகள், உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஆயர் சார்பு கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு அமைப்பான, தெற்காசியா ஆயர் கூட்டணிக்கான இந்தியாவின் மத்திய பிரமுகர் அனுவர்மா தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு - என்.டி.சி (NDC) உறுதிப்பாட்டின் இதயமாக உள்ளது. இது உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் கீழ் வைத்திருக்க முயன்றது. 2030 ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் ஆற்றலில் 40% புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மின்சார உற்பத்தியை அதிகரிப்பது ஒரு முக்கிய உறுதிப்பாடாகும். இந்தியாவின் சூரியஒளி மின் உற்பத்தி திறன் 2014-15ஆம் ஆண்டில் 3,744 மெகாவாட்டில் இருந்து, 2019 மார்ச்சில் 28,181 மெகாவாட்டாக வளர்ந்துள்ளது என, இந்திய மத்திய மின்சார ஆணையத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த இலக்கை ஒரு தசாப்தத்திற்கு முன்பே நாடு அடைய வாய்ப்புள்ளது என்று, ஆளுமை மற்றும் ஆற்றலை பகுப்பாய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்திக்கான செலவு ரூ.2.44 / கிலோவாட் ஆக சரிந்துள்ளது; 2011 ல், சூரிய மின் சக்தி புரட்சி தொடங்கும் முன்பு இதுரூ.1277/ கிலோவாட் என்றிருந்தது.

எவ்வாறாயினும், உள்நாட்டு சமூகங்களுடன் பணியாற்றும் ஆர்வலர்கள், இந்த சக்தியின் உண்மையான செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றனர், வளர்ந்து வரும் மோதலின் தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், இந்தியாஸ்பெண்ட் மார்ச் 2017 கட்டுரை தெரிவித்தது போல. சூரிய சக்தி மிகவும் நிலம் சார்ந்த மின்சக்தி ஆதாரங்களில் ஒன்றாகும் மற்றும் வறண்ட மற்றும் அரை வறண்ட பெரிய பகுதிகள் சூரிய பேனல்களால் மூடப்பட்டுள்ளன.

"தற்போதுள்ள எழுத்து வடிவங்களை மறுஆய்வு செய்வது, ஒரு மெகாவாட் சூரியசக்தி நிறுவப்பட்ட கொள்ளளவுக்கு சராசரி நிலத்தேவை 4-5 ஏக்கர் என்ற வரம்பில் உள்ளது; அதே நேரம் 1 மெகாவாட் காற்றாலைக்கான சராசரி நிலத்தேவை 1 ஹெக்டேர் (அல்லது 2.47 ஏக்கர்) ஆகும்," என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் - எம்.என்.ஆர்.இ (MNRE) வரைவு அறிக்கை கூறியது. "எனவே, நிலத்தின் வாய்ப்பு செலவு (விவசாய வருமானம் / ஏக்கர்) / (நிறுவப்பட்ட திறன் / ஏக்கர்), அதாவது (ரூ / ஏக்கர்) / (மெகாவாட் / ஏக்கர்) அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

புல்வெளியா இல்லையா: விவாதம்

சூரிய பூங்காக்கள் தங்கள் புல்வெளி பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டினர்; ஆனால் குஜராத் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஜிபிசிஎல் (GPCL) அதிகாரிகள் இதை மறுத்தனர். "சூரிய பூங்கா நிலத்திற்காக மாநிலத்தில் நிலவும் விதிகள், செயல்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஜிபிசிஎல் பின்பற்றுகிறது" என்று ஜி.பி.சி.எல் தலைமை திட்ட அதிகாரி மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி கூறினார். “சரங்கா சூரிய திட்டத்தைப் பொருத்தவரை, ஜி.பி.சி.எல் பூங்காவிற்கு புல்வெளி நிலத்தை (கவுசர் நிலம்) எடுக்கவில்லை” என்றார்.

வருவாய் பதிவுகளின்படி இரு வகையான அரசு நிலங்கள் உள்ளன - அரசு தரிசு நிலம் மற்றும் புல்வெளி என்று மிஸ்திரி சுட்டிக்காட்டினார். "ஜிபிசிஎல் அரசு தரிசு நிலத்தை (மட்டுமே) எடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.

ஒரு மால்தாரி தனது எருமைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார். பின்னணியில் தெரியும் மின்வழித்தடங்கள், சரங்கா சூரியசக்தி பூங்காவில் இருந்து செல்பவை.

நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு, அதற்கான இழப்பீடு வழங்குவதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான பொருளாதார செலவு கணக்கிடப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதார இழப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குவதற்கான சமூக செலவுகள் குறித்து வரைவு அறிக்கை குறிப்பிடவில்லை.

சூரிய பூங்காக்கள் உருவாக்கும் உத்தரவுக்கு முன்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் (EIA) தேவையில்லை என, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆகஸ்ட் 2017 குறிப்பு கூறியது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவலை மாற்றத்துறை அமைச்சகத்தின் ("MOEF & CC ) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் அறிவிப்பு -2006, சூரிய பி.வி, (ஒளிமின்னழுத்த) மின் திட்டங்களுக்கு பொருந்தாது," என்று தெளிவு படுத்தியுள்ளது என, பி.வி. கலங்களை அகற்றுவது அபாயகரமான மற்றும் பிற கழிவு (மேலாண்மை மற்றும் டிரான்ஸ்-எல்லை இயக்கம்) 2016 விதிகளை ஈர்க்கும் என்று அலுவலக குறிப்பாணை தெரிவித்துள்ளது.

சூரிய பூங்காக்களின் மேம்பாடு என்பது, நீர் சட்டம் 1974 மற்றும் காற்று சட்டம் 1981 ஆகியவற்றின் கீழ், இந்த் ஏற்பாடுகளை ஈர்க்கும் என்றும், இவை இரண்டும் மாசுபாட்டை மையமாகக் கொண்டுள்ளன என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய பூங்காக்கள் அமைக்கப்படும் நிலத்திலிருந்து சூரிய ஒளி மற்றும் மழையைத் துண்டிப்பதால் ஏற்படும் நீண்டகால தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்; மேலும் பெரிய பூங்காக்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு இதுபற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "உலகம் முழுவதும் சூரிய பூங்காக்கள் உருவாக்கம் என்பது பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இது, குறிப்பிடத்தக்க நில பயன்பாட்டு மாற்றத்திற்கு வழிவகுத்தது," என்று ஐரோப்பிய ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் அறிக்கை கூறியது; சூரிய பூங்காக்கள் நுண் பருவநிலை மற்றும் தாவர-மண் செயல்முறைகளில் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்தன. "இருப்பினும், சூரிய பூங்காக்களால் ஏற்படும் நில பயன்பாட்டு மாற்றத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை" என்றது அது.

நுண் பருவநிலை மாற்றத்தில், சூரிய திட்டங்களின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த ஆய்வு காட்டுகிறது. "உதாரணமாக, வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை, சராசரி இடைவெளி மற்றும் கட்டுப்பாட்டு அடுக்குகளில் உள்ள மண்ணை விட, சூரிய ஒளி தகடுகளின் கீழுள்ள மண் 5.2oC குளிர்ச்சியாக இருந்தது," என்று ஆய்வு கூறியது. "மண்ணின் குறைந்த வெப்பநிலையானது, உற்பத்தித்திறன் மற்றும் சிதைவு உட்பட பல முக்கியமான தாவர-மண் செயல்முறைகளை பாதிக்கும்" எங்கிறது ஆய்வு.

இந்த ஆய்வானது சூரிய ஒளி தகடுகளுக்கு கீழே உள்ள காற்றில் குறைந்த ஈரப்பதத்தைக் கண்டறிந்தது; அதாவது தாவரங்களில் இருந்து நீரை குறைந்த அளவுக்கே ஆவியாதல் செய்வதாகவும், இதனால் ஒளிச்சேர்க்கை விகிதங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆனால் வெப்பமான பகுதிகளில் சூரிய ஒளி தகடுகள், தாவர வளர்ச்சியை அதிகரிக்கும். "ஐரோப்பிய மத்திய தரைக்கடல் போன்ற சூரியஒளி மிகுந்த பகுதிகளில் உள்ள தகடுகளின் கீழ் குறைந்த சூரிய கதிர்வீச்சு (தாவரங்களை வலியுறுத்தக்கூடியது) உண்மையில் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்," என்று ஆய்வு கூறுகிறது.

அற்ப வேலைகளில் ஈடுபட நிர்பந்தம்

பூங்காவில் குறைந்த ஊதியம் பெறும் - பேனல்களை சுத்தம் செய்தல், புல் வெட்டுவது மற்றும் கேபிள் பதிப்பு போன்ற வேலைகளை கிராம மக்கள் ஈடுபட வேண்டியுள்ளது. "இது எங்களுக்கு ஒருநாளைக்கு ரூ.200 கூலியை தருகிறது. ஆனால், மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் வேலை கிடைப்பதில்லை. மழையின் போது குறைவாக இருக்கும்" என்று கால்நடை வளர்ப்பாளர் நீரு பென் கூறினார்.

"பத்து ஆண்டுகளுக்கு முன், கிராமத்தில் இருக்கும் நூறு குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 350 ஆடுகள் இருந்தன;முழு கிராமத்திலும் சுமார் 1,200 மாடுகள் இருந்தன" என்று கால்நடை வளர்ப்பாளரான நீரு பென் நினைவு கூர்ந்தார். “இப்போது 20 குடும்பங்களில் மட்டுமே கால்நடைகள் உள்ளன. மேய்ச்சல் நிலம் இல்லாமல் என் சொந்த ஆடுகள் பசியால் இறந்ததை கண்டிருக்கிறேன்” என்றார்.

இந்த மாற்றங்கள் இப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். "கிராமவாசிகளுடனான எனது தொடர்பில் இருந்து தெரிய வருவது சூரியஒளி பூங்கா வந்தது முதல், அவர்களின் சுயமரியாதையும் அடையாள உணர்வும் அடி பட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்று தெற்காசியா ஆயர் கூட்டணியின் வர்மா கூறினார்.

இத்திட்டம் சரங்காவை சுற்றி சுமார் 2,000 ஏக்கர் சாகுபடி நிலங்களையும் கையகப்படுத்தியுள்ளது. நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 80,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இழப்பீடாக கிடைத்தாலும், மீதமுள்ளவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. "எங்கள் கிராமத்தில் விவசாய வேலை கிடைக்காததால் நாங்கள் பக்கத்து கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்," என்று நீரு பென் மேலும் கூறினார்.

உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் அனைத்து அம்சங்களையும் தற்போதைய அரசு முறையாக தகர்த்துவிட்டது என்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட அமைப்பான காங்கிரஸ் சேவா தளத்தின் தேசிய தலைவரும், விவசாயத்தலைவரும், மால்தாரியுமான லால்ஜி தேசாய் குற்றம்சாட்டியுள்ளார். நேரடி நில உடைமை இல்லாத ஆனால் அதன் பாரம்பரிய பாதுகாவலர்களாக இருப்பவர்களுக்கு இது உண்மையாகும் என்று அவர் மேலும் கூறினார்.

‘மேய்ச்சல் நில விவகாரத்தில் மாநில விதி பின்பற்றப்படவில்லை’

"குஜராத் மாநில அரசு கொள்கைகளின்படி, கால்நடை வளர்ப்போர் வைத்திருக்கும் ஒவ்வொரு 100 விலங்குகளுக்கும் குறைந்தது 40 ஏக்கர் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஆனால் இந்த விதி பின்பற்றப்படவில்லை" என்று தேசாய் கூறினார். "இது தவிர, 70% நில உரிமையாளர்களை கையகப்படுத்துவதற்கு முன்பு அரசு ஒப்புதலும் தேவை" என்று எல்.ஏ.ஆர்.ஆர். (LARR - நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச்சட்டம் 2013 இல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை) தெரிவித்துள்ளது.

மால்தாரிகள் ஒரு காலத்தில் நாடோடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் தற்போது, குடியேற விரும்புகிறார்கள்.

சரங்காவில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள நூறு குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 350 ஆடுகள் இருந்தன; கிராமம் முழுவதும் சுமார் 1,200 மாடுகள் இருந்தன" என்று நீரு பென் நினைவு கூர்ந்தார். “இப்போது 20 குடும்பங்களில் மட்டுமே கால்நடைகள் உள்ளன. மேய்ச்சல் நிலமின்றி, என் சொந்த ஆடுகள் பசியால் இறப்பதை நான் கண்டிருக்கிறேன்” என்றார் அவர்.

தீவனம் ஒரு கிலோ/ரூ. 22 என சந்தையில் கிடைக்கிறது, ஆனால் கிராமவாசிகளால் அதை வாங்க முடியாது. "ஒவ்வொரு பசுக்கும் தினமும் குறைந்தது 12 கிலோ தீவனம் தேவைப்படுகிறது" என்று நீரு பென் கூறினார். "இதை நாங்கள் எப்படி வாங்க முடியும்?" என்றார் அவர்.

சூரிய ஒளி பூங்கா வருவதற்கு முன்பு, அப்போதைய மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டு விழாவிற்காக 2011இல் சரங்காவுக்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் இருந்து தாங்கள் வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைக்கப்பட்டதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டினர். "முரண்பாடாக, அண்டை கிராமங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காவல்துறை அனுமதித்தது" என்று கால்நடை வளர்ப்பான ஜானு பென் கூறினார். "நான் எப்படியோ உள்ளே விழாவில் கலந்துகொண்டேன். அவர் (மோடி) எங்களுக்கு இலவச தண்ணீர், மின்சாரம் மற்றும் மருத்துவமனை வசதி கூட செய்து தருவதாக உறுதியளித்தார். இந்த வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை” என்றார் அவர்.

தீர்வில் சிக்கல்

ஒவ்வொரு மெகாவாட் சூரிய ஆற்றலுக்கும் சராசரியாக ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, சுமார் 140,000 ஏக்கர் (570 சதுர கி.மீ) நிலம் ஏற்கனவே நாடு முழுவதும் சூரிய ஒளி தகடுகளின் கீழ் உள்ளது. பல ஆய்வாளர்கள் சந்தேகம் கொண்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டளவில் இந்தியா தனது 100 ஜிகாவாட் சூரியஒளி மின் உற்பத்தி இலக்கை அடைய வேண்டுமானால், கிட்டத்தட்ட 3,00,000 ஏக்கர் (1,214 சதுர கி.மீ) நிலம் இந்தியா முழுவதும் சூரிய ஒளி தகடுகளின் கீழ் இருக்க வேண்டும். 100 ஜிகாவாட் என்ற இலக்கில், 60 ஜிகாவாட் பெரிய சூரிய பூங்காக்களில் இருந்தும், 40 ஜிகாவாட் சூரியஒளி மேற்தகடுகளில் இருந்தும் வர வேண்டும்.

நிலம் என்பது மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஒரு மாநிலப் பொருள்; எம்.என்.ஆர்.இ மற்றும் இந்திய சூரிய ஆற்றல் கழகம்- எஸ்.இ.சி.ஐ (SECI) ஆகிய இரண்டும், சூரிய ஆற்றலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். "நாங்கள் நிலத்தை கட்டி டெவலப்பர்களுக்கு மட்டுமே கொடுப்போம்" என்று எம்.என்.ஆர்.இ. கூடுதல் செயலாளர் பிரவீன் குமார் கூறினார். “நாங்கள் அதை பெறுவதோ வாங்குவதோ இல்லை. நிலமற்ற சமூகங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசு என்ன கொள்கைகளை வைத்திருந்தாலும், அவை பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

கால்நடைகளை வளர்ப்பதற்கு சொந்தமாக இல்லாத கால்நடை வளர்ப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த கேள்விகளில் மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க முடியுமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எஸ்.இ.சி.ஐ அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் பேசும் போது கூட, நிலம் அல்லது பிற சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு இழப்பீடு கணக்கிடுவதற்கான வழிமுறைகள் உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றனர். "எல்லாம் பணத்தை உள்ளடக்கியது," என்று எஸ்.இ. சி.ஐ.யின் ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் சஞ்சய் குமார் கூறினார். “அது (நிலம் இல்லாத சமூகங்களுக்கு இழப்பீடு) எந்தவொரு கொள்கையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால் அல்லது கட்டாயப்படுத்தப்படாவிட்டால், நாங்கள் எந்த தொகையையும் (இழப்பீட்டில்) செலவிட முடியாது. அதற்கு மாநில அரசு வர வேண்டும்” என்றார்.

சரங்கா கிராமவாசிகளின் பிரச்சினையை எம்.என்.ஆர்.இ.க்கு தெரிவிப்பது அல்லது ஒரு தீர்வை எஸ்.சி.ஐ. முன்மொழிய வேண்டும். “(ஆனால்) இதை மத்திய அரசால் செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது: அந்த பொறுப்பை அரசு சொந்தமாக்க வேண்டும்” என்றார்.

கடந்த 2011இல், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அப்போதைய மாநில மேம்பாட்டு ஆணையர், புல்வெளிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.

நில பயன்பாட்டு காரணியை புறக்கணிக்க முடியாது: ஆர்வலர்கள்

நிலத்தின் பல்வேறு அம்சங்களை - குறிப்பாக வரலாற்று மற்றும் அரசியல் போராட்டங்களில் அதன் முக்கியத்துவம் - கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஒரு கண்மூடித்தனமான பார்வை என்று நில மோதல் குறித்த நிபுணர்கள் தெரிவித்தனர். "நிலத்தை அதன் தொழில்சார் பயன்பாட்டிற்காக அங்கீகரிக்காதது, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியன, அவற்றை தரிசு நிலங்களாக வகைப்படுத்த வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்; இவை அரசு பயன்பாட்டிற்காக அல்லது தனியார் துறை திட்டங்களுக்கு எளிதாக மாற்றக்கூடியதை விட வெற்று இடங்கள் என்ற தோற்றத்தை அளிக்கிறது" என்று, புதுடெல்லியை சேர்ந்த பொது கொள்கை சிந்தனை கொண்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்காஞ்சி கோஹ்லி கூறினார்.

"சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கும், இயக்குவதற்கும் நிலத்தை பெறுவதற்கு சூரியஒளி திட்ட மேம்பாட்டாளர் பொறுப்பேற்க வேண்டும்" என்று குஜராத் சூரிய மின்சக்தி கொள்கை 2015 கூறியது. பட்டியலின பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய மலைவாழ் மக்கள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் 2006 மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (RFCTLARR) சட்டம் - 2013 கால்நடை வளர்க்கும் சமூகங்களின் புல்வெளி முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. "இருப்பினும், நிலத்தின் பயன்பாடுகளும் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அவை பயன்படுத்தப்பட முடியும்" என்று கோஹ்லி கூறினார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்மாற்ற துறையில் பணிபுரியும் வல்லுநர்கள் இந்த சமூகங்களைப் பாதுகாக்க குறிப்பிட்ட சட்டங்கள் தேவை என்று நம்புகிறார்கள். "இந்த திட்டங்கள் செயல்படும் விகிதம், உண்மையான சுற்றுச்சூழல் செலவு மற்றும் மற்றவர்கள் செலுத்தும் வாய்ப்பு செலவு (அவர்களுக்கு) கணக்கிடப்படவில்லை," என உலகளாவிய காலநிலை அமைப்பான ஆக்ஸன் எய்ட் ஹர்ஜீத் சிங் கூறினார். "சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சி இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. சரியான ஆய்வு இல்லாமல் நாம் அதை அனுமதிக்கக்கூடாது; பின்னர் சுற்றுச்சூழலும், மக்களும் அதற்கு உண்மையான விலையாக தந்தாக வேண்டும்" என்றார்.

(கார்த்திகேயன், சென்னையை சேர்ந்த ப்ரீலான்ஸ் பத்திரிகையாளர். நில உரிமைகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், விவசாயம் குறித்து அவர் எழுதி வருகிறார். அவர் 2018-க்கான கிராமப்புற செய்திக்கான ஸ்டேட்ஸ்மேன் விருது வென்றவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News