வாழ்வாதாரம் மற்றும் உதவிக்காக நாடற்ற ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் எவ்வாறு போராடுகிறார்கள்
இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மற்றும் புகலிடம் தேடி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல், அவர்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. புகலிடத்திற்கான உள்நாட்டுச் சட்டம் இல்லாதது ஒரு தடையாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு: வடக்கு பெங்களூரின் தாசரஹள்ளியில் உள்ள, நகரின் மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றான மன்யாதா எம்பஸி-யில் இருந்து, சில கிலோமீட்டர் தொலைவில், 315 நாடற்ற ரோஹிங்கியா அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தற்காலிகக் குடியேற்றத்தில் வசிக்கின்றனர்; கிட்டத்தட்ட 500 ரோஹிங்கியா அகதிகள் உள்ள நகரத்தில் இதுபோன்ற மூன்று குடியிருப்புகளில் இது ஒன்று என, அங்குள்ள ஒரு அகதி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.
மியான்மரில் 'இனப்படுகொலையில்' இருந்து தப்பிப்பிழைத்தவர்கள், மூங்கில் கம்புகளால் கட்டப்பட்ட தார்ப்பாய் கூடாரங்களில் வாழ்கின்றனர்; சாக்குபைகள் மற்றும் பழைய துணியால் தரைவிரிப்புடன் உள்ளனர். 60 குழந்தைகள் உட்பட சுமார் 63 குடும்பங்கள், இந்த ஒரு பகுதியில் நிரம்பி வழிகின்றன--ஒவ்வொரு கூடாரத்திலும் சராசரியாக ஆறு பேர் வாழ்கின்றனர்; ஒவ்வொரு குடும்பமும் நில உரிமையாளருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,000 வாடகையாகக் கொடுக்கிறது, கழிவு, குப்பை சேகரித்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்கின்றனர். அவர்களின் கூடாரங்கள் பிளாஸ்டிக் குப்பைகள், பீர் பாட்டில்கள் மற்றும் பிற சுகாதார மற்றும் உலர் கழிவுகளால் சூழப்பட்டுள்ளன, அவை ஆபத்தான வாழ்வாதாரத்தை சம்பாதிக்க சேகரிக்கின்றன.
பெரும்பாலும் முஸ்லீம்களாக உள்ள ரோஹிங்கியாக்கள், மியான்மரில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு இனக்குழுவாகும், மேலும் நான்கு தசாப்தங்களாக வன்முறை அலைகளை எதிர்கொண்டுள்ளனர். 2022 ஜனவரிக்குள் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதிக்கு 920,994 ரோஹிங்கியா அகதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் (UNHCR) டிசம்பர் 31, 2021 வரை மியான்மரில் இருந்து 23,592 அகதிகள் மற்றும் புகலிடக் கோரியவர்களை பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டாலும், ஜனவரி 2019 ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகத்தின் இந்தியா தரவுகளின்படி, நாட்டில் 18,000 ரோஹிங்கியாக்கள் உள்ளனர். "உலகில் மிகவும் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்" என, ஐக்கிய நாடுகள் சபையால் விவரிக்கப்பட்டுள்ளபடி, ரோஹிங்கியாக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள், மேலும் பாலின அடிப்படையிலான பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கின்றனர்.
துன்புறுத்தல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் கிழக்கு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் செழித்து வளர்ந்தனர். இப்போது, அகதிகளாக, அவர்கள் "மரியாதை" மற்றும் வாழ்வாதாரத்தைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள் என்று அகதிகள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
இந்த முகாமில் உள்ள பெரும்பாலான அகதிகள் விவசாயிகள்; அவர்கள் தங்கள் கிராமங்களில் கால்நடைகள் மற்றும் வணிகங்களை வைத்திருந்தனர். "எனது குடும்பம் 200-250 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது, குறைந்தது 15 முதல் 20 பேர் எங்களிடம் வேலை செய்கிறார்கள். நான் ஏழ்மையில் அல்லது குடிசைப்பகுதியில் வளர்ந்தவன் அல்ல" என்று ரக்கைனில் உள்ள போலி பஜாரைச் சேர்ந்த அகதியான கரிமுல்லா, 42; இவர், 2013 இல் தனது குடும்பத்துடன் 15 நாட்கள் காடு, மலைகளில் ஏறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். "நாங்கள் தழை, இலைகளை சாப்பிட்டு பிழைத்தோம், எங்கள் பயணத்தின் போது, மற்றவர்கள் இறப்பதைக் கண்டோம்" என்றார்.
அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் மீதான தேசிய உள்நாட்டுச் சட்டம் இந்தியாவில் இல்லை; வெளிநாட்டினர் நலன், ஆதரவு மற்றும் ஆவணங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களின் கலவையால் நிர்வகிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களை வழக்குத் தொடரும். அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அகதிகளை ஆதரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கும் சட்டம் தேவை என்று நிபுணர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தல்களை வழக்கமாக எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் மற்றும் பிற அகதிகளுக்கு சுகாதாரம், ரேஷன் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகளை இந்தியா ஒரே மாதிரியாக அணுகுவதை இது உறுதி செய்யும், மேலும் அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அவர்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.
மரியாதை மற்றும் வருமானம் இல்லாமை
அறுபது வயதான சாரா கதுன், தான் கண்ட வன்முறையை நினைவு கூர்ந்தபோது, மறைந்து போகும் மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார். ராக்கைன் புத்திடாங்கில் உள்ள அவரது கிராமத்தில் உள்ள உள்ளூர் பௌத்தக் குடும்பங்களுடனான அவரது சமூகத்தின் உறவுகள் எப்போதும் நட்பாக இருந்திருக்காது, ஆனால் சிறுவயதில் இதுபோன்ற கொடூரத்தை அவர் கண்டதில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார். அவர்கள் தங்கள் சமூகத்தின் மீது இராணுவத்தால் கொலைகள் மற்றும் தாக்குதலைக் கண்ட பிறகு, மீனவரான தனது கணவருடன் எல்லை தாண்டி வங்கதேசம் சென்றார்.
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள பூட்டிடாங் பகுதியைச் சேர்ந்த சாரா காதுன் என்பவர், ஆற்றைக் கடந்து வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றார். தாசரஹள்ளி முகாமில் உள்ள ஒரு சிறிய கடைக்கு வெளியே, சாரா காதுன்; படம், பிப்ரவரி 24. புகைப்பட உதவி: ஸ்ரீஹரி பாலியத்
"நாங்கள் ஆற்றைக் கடக்கும் போது தண்ணீர் கழுத்து அளவுக்கு இருந்தது, உடல்கள் மிதந்தன" என்று சாரா கதுன் கூறினார். "ஒவ்வொரு 50 மீட்டருக்கும் அனுப்பப்படும் இராணுவத்தினர் எங்களை சுட்டுவிடுவார்கள் என்று நாங்கள் கவலைப்பட்டோம்". தனது கணவர் பங்களாதேஷ் முகாமில் இறந்துவிட்டதாக அவர் கூறினார். சாரா காதுன் கூறுகையில், தான் ஒரு வெளிநிலத்தில் கழிவுகளை சேகரிக்கும் தொழிலாளியாக மாறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. "எனக்கு வேறு வழிகள் இல்லை, நான் வேலை செய்யவில்லை என்றால் எனது உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்துகளை வாங்க முடியாது" என்றார்.
குப்பைக்கழிவு சேகரிப்பாளர்களாக, ரோஹிங்கியாக்கள் பெருநகரத்திற்கு ஒரு சேவையை வழங்குகிறார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு போதுமான அளவு சம்பாதிக்கவோ அல்லது அதிக வேலை வாய்ப்புகளை தேடவோ முடியவில்லை. "நான் ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்," என்கிறார் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கரிமுல்லா. "நாங்கள் காலையில் சாதம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் இருக்கும்போது மதிய உணவை தேநீர் அல்லது தண்ணீருக்கு மட்டுமே முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள், சம்பாதித்த அனைத்தையும் ஒரு வேளை உணவிற்குச் செலவழித்தால், நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது?" என்றார்.
ரோஹிங்கியா அகதிகளின் குடிசைகள் எரிக்கப்பட்ட பிறகு, அதாவது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்முவிலிருந்து பெங்களூரு வந்தார்.
ரக்கைனில் உள்ள போலி பஜாரில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, தசரஹள்ளியில் உள்ள கரிமுல்லா, பிப்ரவரி 24 அன்று எடுத்த படம். தற்போது, குப்பை சேகரிக்கும் தொழிலாளியாக அவர், தினமும், 300 முதல், 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். புகைப்படம்: ஸ்ரீஹரி பாலியத்
மற்ற பலரைப் போலல்லாமல், சாரா கதூனின் மருமகன் ஜேம்ஸ் தஹியாத், 25, இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை கற்கும் அதிர்ஷ்டம் பெற்றவர், இப்போது ஒரு மேம்பட்ட பட்டப்படிப்பைத் தொடர்கிறார். அவரது மூத்த சகோதரர், 2013 இல் வங்கதேச குடியேறியவர்களால் கொல்லப்பட்டார் என்று தஹியாத் கூறினார். இப்போது எஞ்சியிருக்கும் உடன்பிறந்தவர்களில் மூத்தவர், தஹியாத் தனது ஆரம்ப ஆண்டுகளை இந்தியாவில் தனது பள்ளிப்படிப்பிற்காக டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு நகரத்தில் கழிவுகளை அகற்றினார். "அகதி வாழ்க்கை கடினமானது," என்று தஹியாத் கூறுகிறார். "மக்கள் எங்களைப் பார்க்கும்போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி அறிந்தவர்களே தவிர, அவர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள்" என்றார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில், அவரது தந்தை ஃபரூக், 55, தனது குடும்பத்துடன் - மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் - இரண்டு நாட்கள் நடந்து சென்றார், அவர் அண்டை கிராமங்களில் மியான்மர் இராணுவத்தால் வன்முறை மற்றும் தீ வைப்பைக் கண்ட பிறகு, காக்ஸ் பஜாருக்கு வந்தார். 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் முன்னாள் தச்சரும் விவசாயியுமான ஃபாரூக் கூறுகையில், "நான் இளமையாக இருந்தபோதும், எங்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்தன, ஆனால் அவ்வளவாக இல்லை" என்றார்.
தரவு இல்லை, சிறிதளவே பாதுகாப்பு
காக்ஸ் பஜார், உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக உள்ளது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர், இந்தியாவில் வாழும் அகதிகளின் மொத்த மக்கள் தொகை குறித்த துல்லியமான தரவு எதுவும் இல்லை. "மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியாக்களின் சரியான மக்கள்தொகை தெரியவில்லை" என்று 2021 டிசம்பரில் வெளியான, அகதிகள் மீதான உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வு குழுவின் (RRAG) அறிக்கை கூறுகிறது.
ஆகஸ்ட் 9, 2017 அன்று, "நாட்டில் சுமார் 40,000 ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்" என்று மத்திய அரசு கூறியது. மேலும் "ரோஹிங்கியாக்கள் உட்பட சட்டவிரோத வெளிநாட்டினரை நாடு கடத்துவதற்கு" அரசாங்கம் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
முந்தைய நாளில், அரசு "சட்டவிரோதமாக குடியேறியவர்களை" அடையாளம் கண்டு கண்காணிப்பது குறித்த ஆலோசனையை வெளியிட்டது, அவர்கள் "இந்திய குடிமக்களின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சிலர் கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துகிறார்கள்" என்று குறிப்பிட்டது. "மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து இந்தியப் பகுதிக்குள் குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் ஊடுருவல், நாட்டின் வரையறுக்கப்பட்ட வளங்களின் மீதான சுமை தவிர, நாட்டிற்கு முன்வைக்கப்படும் பாதுகாப்பு சவால்களை மோசமாக்குகிறது" என்றார்
இந்தியாவில் புகலிடச் சட்டம் இல்லாததால், ரோஹிங்கியாக்கள் இயல்பாகவே சட்டவிரோதமாக அத்துமீறி நுழைநtha வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று, மனித உரிமைகள் வலையமைப்பான தெற்காசிய மனித உரிமைகள் ஆவண மையத்தின் (SAHRDC) நிர்வாக இயக்குநர் ரவி நாயர் கூறினார். "இது அவர்களை காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் துன்புறுத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது" என்றார்.
"எங்கள் இன அடையாளம் மற்றும் நம்பிக்கையின் காரணமாக, ஒரு பகுதி மக்கள் எங்களை அவமதிக்கிறார்கள். ஆனால் ரோஹிங்கியாக்கள் பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு சமூகம்" என்று, ரோஹிங்கியா மனித உரிமைகள் முன்முயற்சியின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரும், 2005 முதல் இந்தியாவில் வசிக்கும் சுதந்திர ரோஹிங்கியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சப்பர் கியாவ் மின் கூறினார்.
அகதிகள் மற்றும் புகலிடம் தேடுவோர் மீதான உள்நாட்டுச் சட்டம், இந்தியாவில் இல்லை என்றாலும், 1951 ஆம் ஆண்டு அகதிகள் தொடர்பான ஐநா மாநாட்டிலும் அதன் 1967 நெறிமுறையிலும் கையொப்பமிடவில்லை என்றாலும், அது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் கையெழுத்திட்டது. அதன் விதிகளின்படி, துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்புக் கோருபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளது. கூடுதலாக, நீதித்துறை உத்தரவுகள் சில நிவாரணங்களை வழங்கியுள்ளன மற்றும் சட்டத்தில் உள்ள சில இடைவெளிகளை நிரப்பியுள்ளன.
அக்டோபர் 2021 இல், கர்நாடக அரசு, அதன் முந்தைய நிலைப்பாட்டை, திருத்தியது, பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ரோஹிங்கியா மக்களை நாடு கடத்த "உடனடியாகத் திட்டமிடவில்லை" என்றும், நாடு கடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்குவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
அகதிகள் மீதான உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வு குழு அறிக்கையின்படி, 2021 வரையிலான நான்கு ஆண்டுகளில், குறைந்தது 1,178 ரோஹிங்கியாக்கள் வெவ்வேறு மாநிலங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கடத்தலில் இருந்து மீட்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் கர்நாடகாவில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 2021 ஆம் ஆண்டில், குறைந்தது 354 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது மீட்கப்பட்டனர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் (174), அதைத் தொடர்ந்து டெல்லி (95).
இந்தியா ஸ்பெண்ட், கர்நாடக உள்துறையின் மூத்த அதிகாரிகள், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே மற்றும் பெங்களூரு நகரின் துணை ஆணையர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோரிடம் நகரம் மற்றும் மாநிலங்களில் உள்ள ரோஹிங்கியாக்களின் கணக்கெடுப்பு மற்றும் ஆதரவு குறித்து தங்கள் கருத்துக்களைக் கேட்டது. அவர்களின் பதில்களைப் பெறும்போது, இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.
புகலிடம் பற்றிய ஒரு மசோதா
பிப்ரவரி 2022 இல், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதற்கான தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
"அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் அனுபவிக்கும் சட்டப் பாதுகாப்புகளை வரையறுக்க வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் அத்தகைய நபர்கள் இந்த பாதுகாப்புகளை தொடர்ந்து அனுபவிக்க முடியும்" என்று தரூர் கூறினார். எந்தவொரு சட்ட கட்டமைப்பும் இல்லாத நிலையில், அவர்களில் பலருக்கு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை பொதுச் சேவைகளுக்கான அணுகல் மறுக்கப்படுகிறது, இதன் விளைவாக சுரண்டல் ஏற்படுகிறது.
ஜனவரி 2022 தேசிய மனித உரிமைகள் ஆணைய விவாதம் "அகதிகள் மற்றும் புகலிடக் கோருவோரை கையாள்வதில் ஆட்-ஹாசிசம் மற்றும் தெளிவின்மைக்கு முடிவுகட்ட" ஒரு சட்டம் அல்லது சட்டத்தின் அவசியத்தைக் குறிப்பிட்டது.
தரூரின் முன்முயற்சி நல்ல அர்த்தமுள்ளதாக இருந்தாலும், தனிநபர் உறுப்பினர் மசோதா அதிகாரப்பூர்வ மசோதாவாக மாறுவது சாத்தியமில்லை என்று, மனித உரிமைகள் வலையமைப்பான தெற்காசிய மனித உரிமைகள் ஆவண மையத்தின் நாயர் கூறினார். "நீதிபதி பி.என்.பகவதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானால் மறு வரைவு செய்யப்பட்ட மற்ற மசோதாக்களும் இழுபறியாகவில்லை. ஏனெனில் அரசியல் காரணங்களுக்காக அகதிகள் பிரச்சினையை தெளிவற்றதாக வைத்திருக்க அரசாங்கங்கள் விரும்புகின்றன" என்றார்.
அகதிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் வெளிநாட்டினர் சட்டம், 1946, வெளிநாட்டினர் பதிவு சட்டம், 1939, பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம், 1920 மற்றும் குடியுரிமைச் சட்டம், 1955 ஆகியவற்றில் உள்ள விதிகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் ஆகஸ்ட் 2021 இல் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. 2011 ஆம் ஆண்டில், வெளிநாட்டினரைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அரசாங்கம் வெளியிட்டது. இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு நீண்ட கால விசாக்களை (LTV) அனுமதிக்கிறது, இது உள்துறைத் துறையின் மதிப்பாய்வின் அடிப்படையில் ஆறாவது ஆண்டிற்கு நீட்டிக்கப்படலாம்.
"அகதிகள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் ஆறு ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும் என்று, நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) கருதுகிறது" என்று, அகதிகள் மீதான உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வு குழுவின் அறிக்கை குறிப்பிட்டது. நாடற்றவர்களாகவும், இந்தியாவில் வழக்குத் தொடரவும், மியான்மரில் பல தசாப்தங்களாக துன்புறுத்தப்படுவதையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் ரோஹிங்கியாக்களுக்கு இது பொருத்தமானது.
கடந்த 2019 இல் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி அல்லது கிறிஸ்தவ சமூகங்கள் போன்ற துன்புறுத்தப்பட்ட சில மத சிறுபான்மையினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்குகிறது, மேலும் ரோஹிங்கியாக்கள் போன்ற நாடற்ற சமூகங்களை மேலும் ஓரங்கட்டுகிறது. முஸ்லீம்கள், மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்ல.
2019, குடியுரிமை திருத்தச் சட்டமானது அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் அகதிகளை தகுதியற்றவர்களாக ஆக்குகிறது மற்றும் அவர்களை முழுமையாக அம்பலப்படுத்துகிறது என்று தரூர் கூறினார் ஒவ்வொரு நாட்டிலும் விரிவான உள்நாட்டு அகதிகள் சட்டத்தின் தேவைக்கான மற்றொரு உதாரணம், தற்போதைய உக்ரைன் நெருக்கடியை சுட்டிக்காட்டி, "இவை அனைத்தையும் ஒரு அகதிகள் சட்டத்தின் மூலம் சரிசெய்ய முடியும்" என்றார்.
2021 ஆம் ஆண்டில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம், இந்தியாவில் 5,873 புதிய தனிநபர் புகலிடம் கோரிய விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளது, 2020 ஆம் ஆண்டை விட 154% அதிகரிப்பு, "மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை" காரணமாக என்று, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் இந்திய பிரிவின் 2022 அறிக்கை தெரிவிக்கிறது.
ஆவணப்படுத்தல் புதிர்
தாசரஹள்ளி முகாமில், உலர் மீனை ஊறவைத்து, மதிய உணவிற்கு சில காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பெண்கள், அளவான உணவு மட்டுமே கிடைப்பதாக தெரிவித்தனர். 2020ல் கோவிட்-19 ஊரடங்கின் போது, தனது குடும்பம் தினமும் அரை கிலோ அரிசியைக் கொண்டு நிர்வகிக்க வேண்டியதாயிற்று என்று, கரிமுல்லா கூறினார். "நாங்கள் குறைவாக சாப்பிட வேண்டியிருந்தது மற்றும் வாரக்கணக்கில் எங்கள் உணவுகளை நிர்வகிக்க வேண்டியிருந்தது. எந்த உதவியும் எங்களுக்கு இல்லை" என்றார்.
ரோஹிங்கியா பெண்கள் ஊறவைத்த உலர் மீன் மற்றும் காய்கறிகளை மதிய உணவிற்கு தயார் செய்கிறார்கள், பிப்ரவரி 24. ரோஹிங்கியா அகதிகள் முகாமில் உள்ள சுகாதாரமற்ற சூழல், ஈக்கள் வர காரணமாகிறது. புகைப்படம்: ஸ்ரீஹரி பாலியத்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் கீழ், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அகதிகள், சில நிபந்தனைகளின் அடிப்படையில் உதவியைப் பெறுகிறார்கள். வரையறுக்கப்பட்ட நிதி சார்ந்த உதவியின் காரணமாக, குடும்பத்தின் அளவு, மருத்துவம் மற்றும் பிற பாதிப்புகள் மற்றும் குடும்பத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டுமே பண அடிப்படையிலான உதவி வழங்கப்படுகிறது. இந்த அகதிகளுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்வதில்லை.
பெங்களூரில், 95 குடும்பங்கள் உணவு பொருட்களை பெற்றனர்; 87 பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கௌரவ உபகரணங்கள் கிடைத்தன; 95 குடும்பங்கள் கொசுவலைகளை பெற்றனர் மற்றும் 65 அகதிகளுக்கு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்று, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் இந்திய பிரிவு, இந்தியா ஸ்பெண்டுடன் பகிர்ந்துள்ள வரையறுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
"10 ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை நாங்கள் உணவுப் பொருட்களை பெற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்," என்று தஹியாத் கூறினார். ஏறக்குறைய 20 ரோஹிங்கியாக்களிடம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் அடையாள அட்டைகள் இல்லை என்று அவர் கூறினார்.
பதிவு செய்தவர்களுக்கு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் அகதிகள் அட்டைகளைத் தவிர, வேறு எந்த ஆவணமும் ரோஹிங்கியாக்களிடம் இல்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்திற்காக மொழிபெயர்ப்பாளராக வேலை தேடுவதற்கு முன்பு, டெல்லியில் முறைசாரா துறையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்த கியா மின், எழுத்துப்பிழையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக 2020 இல் அவரது ஆதார் அட்டையை இழந்தார். "அகதிகளுக்கு ஆதார் அட்டைகளை வழங்க முடியாது என்று அதிகாரிகள் என்னிடம் பின்னர் தெரிவித்தனர். எனது நீண்ட கால விசா (LTV) காலாவதியாகிவிட்டது, இப்போது என்னிடம் இருப்பது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் அகதிகள் அட்டை மட்டுமே" என்றார்.
ஆதார் அட்டை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டிருப்பது ரோஹிங்கியாக்கள் தங்களைத் தாங்களே உதவி பெறும் திறனை கடுமையாக பாதித்தது என்று, டிசம்பர் 2020 இல் ஆய்வாளர்கள் அனுபவ் தத் திவாரி மற்றும் ஜெசிகா ஃபீல்ட் ஆகியோரின் பகுப்பாய்வு கூறியது. "மியான்மரில், அவை [அடையாள ஆவணங்கள்] குடியுரிமை மற்றும் சொந்தத்திற்கு இன்றியமையாதவை; இந்தியாவில், அடையாள ஆவணங்கள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அடிப்படை சேவைகளை அணுகுவதற்கு முக்கியமாகும்" என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. "இன்னும் ஒரே மாதிரியாக இருப்பது இந்திய ஆவணப்பட ஆட்சி மியான்மருடன் பகிர்ந்து கொள்ளும் விடுதலை / அடக்குமுறை / அழிவு சக்திகள் ஆகும்" என்றார்.
சில ரோஹிங்கியாக்கள் ஆதார் தகவல்களை மறைத்து ஆதார் பெற்றிருக்கலாம், அதை பொய்யாக்கி அவசியமில்லை. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும், அது குடியுரிமைக்கு அல்ல, குடியுரிமைக்கான ஆதாரமாக மட்டுமே இருக்கும் என்று நாயர் கூறினார்.
தரூர் இதை ஒப்புக்கொண்டார், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்கள் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறவும், இந்தியாவில் தங்களை ஆதரிக்கவும் உதவும் என்று கூறினார். "அகதிகள் அடிப்படை பொதுச் சேவைகளை அணுகவும் சட்டப்பூர்வமாக வேலை தேடவும் வாழ்வாதார வாய்ப்புகளைத் தொடரவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கட்டமைப்பு இல்லாததால், அகதிகள் சுரண்டலுக்கு, குறிப்பாக மனித கடத்தலுக்கு ஆளாக நேரிடும்" என்றார்.
ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல் இல்லாதது, ரோஹிங்கியாக்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைகளை மறுக்கிறது என்று கியாவ் மின் கூறினார், பலர் ராக்கைன் மாநிலத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் உயிருக்கு பயப்படுவதால் முடியவில்லை.
சாரா காதுன், தன்னாம் திரும்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றார். "அங்கே அமைதி இருக்காது," அவர் பெருமூச்சு விடுகிறார். "அவர்கள் எங்களிடம் இருந்து எடுத்ததை திருப்பித் தர முடியாது" என்றார் அவர்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.