இந்தியாவின் முன்னேறிய மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கிய வறட்சி, விவசாய நெருக்கடிகள்

Update: 2019-05-07 01:20 GMT

ஷிரூர் (பீட்), மகாராஷ்டிரா: இந்தியாவின் முன்னேறிய மாநிலத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வறட்சி பாதித்த பீட் மாவட்டம் தஹிவாண்டி கிராமத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே டேங்கர் வண்டிகளில் தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. கோடைகாலம் மூன்று மாதங்கள் நீடிக்கும் சூழலில் சிரூர் தாலுகாவில் (துணைப்பிரிவு) ஏற்கனவே குடிக்க, பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீரின்றி பலர் வெளியேறிவிட்டனர்.

தண்ணீர் டேங்கர் லாரிகளை சுற்றி காலி குடங்கள், பாத்திரங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த வரிசையானது நீண்டு கொண்டே செல்கிறது. “இவ்வளவு சீக்கிரமே தண்ணீர் பிரச்சனை ஏந்த ஆண்டிலும் தஹிவாண்டி கிராமம் சந்தித்ததில்லை” என்று, கிராம தலைவரான (சார்பஞ்ச்) 32 வயது ஷீலா ஆக்வா தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க. ) அரசு கிராம பஞ்சாயத்துடன் இணைந்து இங்கு ஐந்து கிணறுகளை அமைத்திருந்தது; அவையும் வறண்டுவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மழை சரிவர பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீரை சாத்தியமற்றதாக மாற்றிவிட்டது” என, 25 வயது விவசாயி யுவராஜ் உத்தம் காடலே தெரிவித்தார்.

பீட் மாவட்டத்தின் 11 தாலுகாக்களின் மிக மோசமான வறட்சி பாதிப்பை ஷிருர் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் குறைந்தளவாக 38.2% மழை பெய்தது - மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 666.36 மிமீ ஆகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பீட் மாவட்ட மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் கிராமங்களில் வாழ்கின்றனர். மழையை நம்பியிருக்கும் விவசாயமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

பீட் அமைந்திருக்கும் மராத்வாடா பகுதி இந்தியாவின் கிராமிய துயரத்தின் ஒரு அடையாளமாகும்: 77% விவசாயிகளிடம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு கூட இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மூன்று ஆண்டுகளாக வறட்சியை அனுபவித்து வருகிறது. கிராமப்புற தனிநபர் வருமானம் ரூ.90,460 அல்லது தேசிய சராசரியை விட ரூ. 12,547 குறைவாக உள்ளதாக, ஜூலை 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

தொடர்ச்சியான வறட்சி ஆண்டுகள், அதிகரித்து வரும் கடன்கள் மற்றும் வறுமை ஆகியவற்றால், பீட் மாவட்டத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன: இங்கு 2018 ஆம் ஆண்டில் 125 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்; இது மராத்வாடாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த விவசாயத்துயர், மாநிலத்தின் பெரும் அரசியல் பிரச்சினையாக மாறிவிட்டது; இங்கு 2019 ஏப். 29இல் நான்காவது மற்றும் இறுதிகட்ட மக்கள்வை தேர்தல் நடந்துள்ளது.

வறட்சியால் இந்தியாவின் 40%-க்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் பாதிக்கப்படும் சூழலில், அது குறித்த எங்களின் நான்காவது கட்டுரை இதுவாகும். முந்தைய கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே நீங்கள் காணலாம்.

இந்த கட்டுரையானது, தொடர் மழையின்மை, கிட்டத்தட்ட அனைத்து கிணறுகளும், குழாய்களும் நீர்த்தேக்கங்களும் வறண்டுள்ள பீட் மாவட்ட நிலவரத்தை ஆராய்கிறது. வேளாண்மையில் இனி சாத்தியமற்றது என்ற சூழலில் கிராமவாசிகள் இடம் பெயரத் தொடங்கினார்கள். வேறு மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு வயல்களுக்கு வேலை தேடி சென்றனர். நீர் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், பல பெரிய விவசாயிகள் கூட இந்தாண்டு ரபி (வசந்தகாலம்) பயிர்களை விதைக்கவில்லை.

50% சாகுபடி தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பு

கடந்த 2018 அக்டோபர் 31இல், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 26 மாவட்டங்களில் ஒன்றாக பீட் மாவட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிவித்தது; இது களநிலவரம் (கள ஆய்வு), மழை பற்றாக்குறை, நீர்த்தேக்க இருப்பு, நிலத்தடி நீர் குறியீடு மற்றும் மண் ஈரப்பதம் போன்ற பல்வேறு குறிகாட்டிகள் மூலம் மதிப்பிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் பீட் மாவட்ட சராசரி மழைப்பொழிவு 334.70 மிமீ ஆகும்; இது, நீர் சேமிப்பை கடினமாக்கியது.

Source: Mahalanobis National Crop Forecast Centre website

கடந்த 2018 காரிப் (பருவமழை பயிர்) பருவத்தின் (ஜூன் 28, 2018) கணக்கெடுப்பு அறிக்கை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பீட் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் சாகுபடி பரப்பளவில் 50% க்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதை காட்டியது. பீட் மாவட்டத்தின் மண்ணின் ஈரப்பதம் (PASM) மதிப்பு சதவீத இந்த பருவத்திற்குப் பிந்தைய காலப்பகுதி - அக்டோபர் 1, 2018இல் 20.974 முதல், பிப்ரவரி 28, 2019 வரை 0.042 என - தொடர்ந்து சரிந்துள்ளது. (இந்த குறியீட்டு மதிப்பு 0 இல் இருந்து 100 வரை இருக்கும்; கடும் வறட்சி 0 எனவும், மற்றும் ஈரப்பத நிலை 100 என குறிக்கும்).

Source: Mahalanobis National Crop Forecast Centre website

"குறைந்தளவு மழையால், மண்ணில் போதிய ஈரப்பதம் இல்லை என்பது நான் பார்த்துள்ள பெரிய பிரச்சினைகள் ஒன்று," என புவியியல் தகவல்முறை ஆராய்ச்சியாளரும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் ஆஃப் மும்பையில் ஆலோசகருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். "குறைந்த மழை, மண்ணில் நிலத்தடி நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்பு அறிவு இல்லாதது, மற்றும் தூய்மையான மேற்பரப்பில் நீர் கிடைக்காததால் மோசமான மேலாண்மை ஆகியன மகாராஷ்டிராவின் தற்போதைய விவசாய மற்றும் வளி மண்டல வறட்சிக்கு காரணமாக அமைந்தன" என்றார் அவர். இதில் தலையீடு இல்லாவிட்டால், பிரச்சினை எதிர்காலத்தில் ஒரு நீர்வழிகல் வறட்சி (மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரில் ஒரு குறையும் குறைப்பு) ஏற்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

சர்க்கரை ஆலை, கரும்பு வயல்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்தவர்கள்

தஹிவாண்டில் எந்த விவசாய வேலை வாய்ப்பும் இல்லாததால், பல கிராமவாசிகள் 269 கி.மீ. தொலைவில், இது பாராமதியில் இருந்து 94 கி.மீ.யில் உள்ள சாங்கிலியில் இருக்கும் சர்க்கரை ஆலைகளில் வேலை செய்யத் தொடங்கினர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில், பெரும்பாலும் சோலாப்பூர், கோலாப்பூர் மற்றும் அஹமதுநகரில் பருவகால பணியான கரும்பு வெட்டும் வேலைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

தஹிவாண்டிக்கு அருகே உள்ள உத்தம்நகரை சேர்ந்த சிந்துபாய் உபேகர் (40), அவரது கணவர் உத்தம் இருவரும், பாராமதி அல்லது சாங்கிலியில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பணி புரிந்து, இருவரும் இணைந்து மாதத்திற்கு ரூ.12,000 சம்பாதிக்கின்றனர். இங்கு, ஆண்களுக்கு குறைந்தபட்ச தினக்கூ லிரூ 300 மற்றும் பெண்கள் ரூ.250 ஆகும்.

இருவரும் மூன்று குழந்தைகள் -இரு மகள்கள் மற்றும் ஒருமகன்- உடன் சேர்ந்து இடம் பெயர்ந்து தொழிற்சாலை பகுதியை சுற்றி குடும்பத்தோடு வசிக்கின்றனர். தஹிவாண்டில் குழந்தைகளை கவனிப்பதற்கு யாரும் இல்லை என்பவதால், வேறுவழியின்றி அந்த தம்பதி குழந்தைகளை தங்களுடன் அழைத்து வந்துவிட்டனர்.

"எங்களுடைய குழந்தைகள் நன்கு படித்து, நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் மரியாதைக்குரிய அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்ற சிந்துபாய், "ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சர்க்கரை ஆலைப்பகுதிக்கு பணிக்காக இடம் பெயர வேண்டி உள்ளது. எனவே அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. இந்த கனவை நிறைவேற்ற அவர்களை எப்படி படிக்க வைப்பது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.

சிந்துபாய் கல்வி கற்றவர் அல்ல; அவரது கணவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். அவர்கள் தஹிவாண்டிக்குத் திரும்பும்போது, அங்கு கட்டுமான வேலைகள், சாலைகள் மற்றும் கட்டிட பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ரேகா பாபா சாஹேப் காடே (26) சர்க்கரை ஆலைக்கு வேலை தேடி வந்துள்ள நிலையில், உடன் தனது இரு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். அவர், கரும்பு வெட்டுவதற்கு ஒருநாளைக்கு ரூ. 244 கூலியாக பெறுகிறார். ஆனால் இந்த வேலை, ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

"நாங்கள் ஜோடியாக பணம் பெறுகிறோம். இரண்டு கரும்பு தொழிலாளர்களும் ஒரு மாதத்திற்கு 12,000 -15,000 ரூபாய் மட்டுமே வழங்குவார்கள்," என்று காடே தெரிவித்தார். "பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டிருக்கும். அப்போது நாங்கள் வீட்டிற்கு செல்கிறோம்" என்றார். ஆனால் தஹிவாண்டில் வாழ்க்கை என்பது கடினமானது; ஆனால் கரும்பு வயல்களில் செய்த பணியைவிட மோசமானது அல்ல.

வறண்ட கிணறுகள், குறைந்துபோன குழாய் நீர், டேங்கர்லாரிகலே ஒரே ஆதாரம்

சிந்துபாய் தண்ணீர் சேகரிக்க, தனது வீட்டிலிருந்து தினமும் 5 கி.மீ. நடந்து செல்கிறார்; அங்கு தண்ணீர் பிடிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார். தஹிவாண்டி கிராம பஞ்சாயத்தால் கட்டப்பட்ட சில நீர்வழங்கல் குழாய்கள், ஒரு பொது கிணறுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தஹிவாண்டிக்கு அருகே உள்ள உத்தமநகரை சேர்ந்த உள்ள 40 வயது சிந்துபாய் உபேர்கர் (மஞ்சள் நிற உடை) குடிநீர் சேகரிக்க ஒவ்வொரு நாளும் 5 கி.மீ. நடந்து வரவேண்டியுள்ளது. பின்னால் தெரியும் குழாய்கள் தாஹிவண்டி கிராம பஞ்சாயத்து சமூக கிணற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பீட் மாவட்டட்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பெரிய பிளாடிக் டிரம்கள் உள்ளன; சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு (RO) மாவட்டம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. 15 லிட்டர் சுத்திகரித்த கேன் தண்ணீர் விலை ரூ.20 என்று, புனேவை சேர்ந்த நீர்ப்பிடிப்பு அமைப்பு அறக்கட்டளை (WOTR) துணை பொது மேலாளர் ஹரீஷ் தவேர் தெரிவித்தார். “கோடை அதிகரித்ததும் இதன் விலையும் உயர்ந்துவிடும்” என்றார்.

தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக உள்ள பீட் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகாரபூர ஆவணங்களின்படி, 670 கிராமங்களுக்கு 570 டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படுகின்றன.

படாடோ தாலுகாவின் பிம்பல்கான்தாஸ் கிராமத்தில் கிணறு வறண்டு போய்விட்டது. ஒவ்வொரு நாளும் அரசின் இரண்டு டேங்கர்கள் - ஒன்று, சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள உகந்தா தலாப்பில் இருந்தும்; மற்றொன்று 25-30 கி.மீ தொலைவில் டோம்ரி தலாப்பில் இருந்தும்- ஒவ்வொரு முறையும் 13,000 லிட்டர் கொண்டு வருகின்றன. "எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை தற்போது கிட்டத்தட்ட 2,200 பேருக்கு மேல் உள்ளது”என்ற பட்டோடா தாலுகா தலைவர் ராஜ்பூர் பாபுராவ், “கூடுதல் தண்ணீர் கொண்டு செல்ல இன்னும் டேங்கர்கள் தேவைப்படுகின்றன” என்றார்.

ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மோசமாக, துர்நாற்றமுடன் இருப்பதாக கூறும் பிம்பல்கான்தாஸ் பகுதியை சேர்ந்த 85 வயது திருபாதா நானா பகதுர்கா. எனவே தண்ணீர் டேங்கர்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கரும்பு ஆலைகளில் பணிபுரிந்தார். இப்போது கிராமத்தில் தனியாக வாழ்கிறார். "எனது மகன்கள் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்துள்ளனர். ஆனால் கிராமத்தில் தங்க விரும்பவில்லை. ஏனெனில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லை"என்ற அவர், "ஆனால் அவர்கள் எப்போதாவது என்னை சந்திப்பார்கள்; எனக்கு தவறாமல் பணத்தை அனுப்புவார்கள்" என்றார்.

பீட் மாவட்டம் பிம்பல்கான்தாஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார் 85 வயது நானா பகதுர்கா. தண்ணீர் மோசமாக இருப்பதால் டேங்கர் லாரியை நம்பி இருப்பதாக கூறுகிறார். சில நேரங்களில் சமுதாய கிணறுகளில் 15 அடி ஆழத்திற்கு இறங்கி தண்ணீர் பிடிப்பதுண்டு; இப்போது அதுவும் வறண்டுவிட்டது.

கிராமத்தின் தேவைகளை சமாளிப்பதற்கு டேங்கர்கள் போதாது என்று தஹிவாண்டி குடியிருப்பாளர்களும் புகார் செய்துள்ளனர். கிராமத் தலைவர் ஷீலா ஆகாவ், கூடுதல் டேங்கர்கள் வேண்டுமென்று கலெக்டரிடம் கோரி வருகிறார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தஹிவாண்டி கிராமத்தில் 325 குடும்பங்களுடன் 1,598 மக்கள் வசிக்கின்றன. 2019ல் கிராமத்தில் குறைந்தது 2,500 பேர் இருப்பதாக ஆகாவ் கூறினார்.

“நாங்கள் ஒரு அண்டா (உலோக பாத்திரம்) தண்ணீர் பிடிக்க கைப்பம்பில் ஒரு மணி நேரம் அடிக்க வேண்டியிருக்கிறது” என்ற ஆகாவ், "இரண்டு மாதங்களுக்கு முன்பு, கலெக்டர் அலுவலகம் சென்று டேங்கர் தண்ணீர் பற்றி கோரிக்கை விடுத்த பிறகே முதல் குடிநீர் டேங்கர் கிராமத்திற்கு வந்தது. நாங்கள் 31,000 லிட்டர் தண்ணீரை அர்சு டேங்கர்கள் மூலம் பெற்று வருகிறோம். ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி டேங்கர் லாரி குடிநீர் அனுப்பப்படுகிறது. இது எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது” என்றார்.

குடிக்கத் தகுதியற்ற தண்ணீரை டேங்கர் லாரிகளில் வழங்குவதாக புகார்கள் இருந்தன: "அதை குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை," என்றார் 41 வயது மந்தர் ஆகாக். "பாத்திரங்கள் மற்றும் துணி துவைக்க அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாது. எனக்கு தெரிந்தவரை பெரும்பாலான மக்களும், ஆழ்துளை கிணற்று நீரை எடுப்பதற்காக அதிகாலையில் எழுந்துவிடுகின்றனர். சொந்தமாக ஆழ்துளை கிணறு இல்லாதவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தண்ணீருர் கேட்க வேண்டும். எனது ஆழ்துளை கிணறு, 300 அடி ஆழத்தில் உள்ளது, அதில் ஏப்ரல் இறுதி வரை தண்ணீர் இருக்கும்; ஆனால் மே மாதத்தில் அது ஒரு கனவாகிவிடும்" என்றார்.

மஜல்கான் அணையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள நிருத் பகுதியில், 2011 கணக்கெடுப்பின்படி, இரண்டு டாங்கர் லாரிகளில் தினமும் இருமுறை, 6,208 பேர் வசிக்கும் 1,256 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது கிராமத்தின் மக்கள் தொகை, கிட்டத்தட்ட 9,800 பேர் என, பரலி தாலுகா மொஹா கிராமத்தில் உள்ள மகாராஷ்டிரா வித்யாலயா பள்ளி ஆசிரியரும், விவசாயிமான தத்தா தேக் கூறினார்.

"மஜல்கான் தாலுகாவிற்கு இரண்டு பாகங்கள் உள்ளன: கோதாவரிக்கு அருகிலுள்ள கிராமங்கள் குடிநீர் வேண்டும் "என்று அவர் கூறினார். "அந்த பிராந்திய விவசாயிகள் குறைந்தபட்சம் 1-2 சதவிகிதத்தினர் தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் வைத்துள்ளனர். ஆனால் மஜல்காவின் 70% பகுதிகளில் குடிநீர் இல்லை.நாங்கள் டேங்கர்களை சார்ந்து இருக்க வேண்டும்" என்றார்.

மஜல்கான் அணை போன்ற பீட் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய அணைகளும் வறண்டு போயுள்ளன என்று, பார்லி தாலுகா கிராமப்புற மேம்பாட்டுக்காக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான குளோபல் பார்லி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாயங் காந்தி தெரிவித்தார்.

இந்த கிராமங்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருள் வழங்கப்படுகிறது. ஆனால் அத்தகைய உத்திகளால் தீராதபடி, தண்ணீர் பற்றாக்குறை பீட் மக்களை வாட்டி வதைக்கிறது. "ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கப்படும் அடுத்த மழை வரையில், 1,403 கிராமங்களில் உள்ள பறவைகள், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு உடனடித் தேவை உள்ளது" என்று காந்தி கூறினார்.

அஷ்டி கிராமத்தின் முன்னாள் தலைவர் தத்தா ககாடே கூறும் போது, அவரது கிராமத்திற்கு கின்ஹி ஏரியிலிருந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்; பின்னர் அந்த கிராமத்திற்கு 85 கி.மீ. தூரத்தில் சினா கோலேகான் அணையில் இருந்து டேங்கர்களில் தான் தண்ணீரை பெற வேண்டும். இருப்பினும், 76% (மில்லியன் கன மீட்டர்) அதன் நேரடி சேமிப்பு திறன் கொண்ட சினா கோலேகான் அணையில் தண்ணீ இருப்பு 0% ஆகும் என்று, மகாராஷ்டிரா நீர்வழங்கல் துறை தெரிவிக்கிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்குள் நீர் வழங்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 1,006 ஆக அதிகரிக்கும். இதற்காக 45.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ரபி சாகுபடி இல்லை

கடந்த ஒரு வருடமாக தஹிவாண்டி பகுதி விளை நிலங்கள் வறண்டு விட்டன. "இந்த வருடம், மகசூல் மிகக் குறைவாக இருக்கும், ஏனெனில் கோடை சீக்கிரம் ஆரம்பமானது," என்ற அகக், "இந்த ஆண்டு இந்த பகுதியில் இருந்து அதிக உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது" என்றார்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் எந்த ரபி (வசந்த) பயிரினமும் பயிரிடவில்லை. "ரபி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் அவை வறட்சியில் பாதிக்கப்பட்டதால், மிகவும் துன்பத்துக்குள்ளகைனர்," என்று, படோடா தாலுகா தலைவர் ராஜ்பூர் பாபுராவ் தெரிவித்தார்.

யுவராஜ் உத்தம் கடாலே, 25, வயதான விவசாயி. இவர், சுமார் 3 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். அதில், பருத்தி, வெங்காயம் மற்றும் பருப்பு (பட்டாணி) பயிரிடுகிறார். "ரபி மற்றும் கரீப் பயிர்கள் இரண்டிலும் ரூ .50,000 முதலீடு செய்துள்ளேன்" என்றார் அவர். "ஆனால் மொத்த பயிரும் தண்ணீரின்றி கருகின. எனக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 3,000-4,000 ரூபாய் கிடைத்தது" என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரதம மந்திரி ஃபாசல் பீமா யோஜனா என்ற இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது கரீப் பருவத்திற்கு 2% காப்பீடு மற்றும் ரபி பயிர்களுக்கு 1.5% காப்பீடு பெற்று விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. 2018 ஆம் ஆண்டில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டின் சிறந்த மாவட்டமாக பீட் மாவட்டத்தை பிரதமர் அறிவித்தார்.

படோடா தாலுகா, தாகர் கிராமத்தை சேர்ந்த விஷ்வநாத் லட்சுமண் கிஷ்சாத் (49), தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் பஜ்ரா (முத்து திணை) மற்றும் பருத்தியை சாகுபடி செய்ய 40,000 ரூபாய் செலவிட்டார். தோங்கார்க்கினியில் உள்ள மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் அவர் இதற்காக, ரூ. 35,000 கடன் பெற்றார். "பயிர் விளைச்சல் இல்லாவிட்டாலும் நாம் தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்தாக வேண்டும்," என்றார் அவர். "வறட்சியால் எங்களது பயிர்கள் இந்த ஆண்டு முழுவதும் காய்ந்து பொய்த்துவிட்டன. நாங்கள் பெரும் இழப்புக்களைச் சந்திக்க உள்ளோம்" என்றார்.

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக சாகுபடி செய்த பயிர்களில் 75 சதவீதம் நாசமாகிவிட்டன என்று, கோலாப்பூரில் உள்ள விவசாய சங்கமான ஸ்வாபிமானி ஷெட்கரி சங்கத்தின் சமூக சேவகர் பூஜா மோர் தெரிவித்தார். "விவசாயிகள் வறட்சி நிவாரணம் திட்டங்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அல்லது கடன் தள்ளுபடி ஆகியவற்றால் பயனடையவில்லை; மாறாக, வேலைக்காக இடம் பெயர அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

பர்லி தாலுகாவில் கடுமையான வறட்சி பாதிப்பு என, 2019 மார்ச் 18தேதியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், 117 கிராமங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன; 2018 ஆம் ஆண்டில் கரீப் பயிர் இழப்பீடாக ஒதுக்கப்பட்ட ரூ.32.39 கோடி, 55,077 விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதில், பட்டியலிடப்பட்ட அனைத்து விவசாயிகளில் 95.56% பேருக்கு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இன்றுவரை மகா விவசாயிகளுக்கு எந்தவொரு இழப்பீடும் கிடைக்கவில்லை என்று விவசாயி விஷால் தேஷ்முக் கூறினார்.” இழப்பீடு எப்போது வருமென்று தெரியாது; போதாக்குறைக்கு இப்போது தேர்தல் வேறு நடக்கிறது. இதன் முடிவை பொறுத்து, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது” என்றார். "ஆனால் மகசூல் இந்த ஆண்டு ஒன்றிற்கு அடுத்ததாக இருக்கும், எனவே இழப்பீட்டுத் தேவை எங்களுக்குத் தெரியும்."

தண்ணீர் மிகுதியாக தேவைப்படும் பயிர்களை விதைத்த விவசாயிகள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்."மோஹாவில், ரப்பி பயிர் விதைக்கப்படவில்லை," என்ற தேஷ்முக், "எங்கள் நிலம் சத்து குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. பீட் மாவட்டத்தில், விவசாயிகளில் 1% மட்டுமே ரப்பி பயிரிட்டுள்ளனர் - அவர்களும் தண்ணீர் மற்றும் அணைக்கு அருகில் வசிப்பவர்கள்.என் கிராமத்தில், மக்கள் பருத்தி, ஜொவர் (சோளம்), கம்பு மற்றும் பருப்பு வகைகள் சாகுபடி செய்கிறார்கள். எங்கள் கிராமத்தில் 0.5 சதவிகித விவசாயிகளே கரும்பு சாகுபடி செய்துள்ளனர்; அவர்களே நிறைய தண்ணீரை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் கரும்பு சாகுபடி செய்யவில்லை என்றார். மற்ற பயிர்களுக்கு தண்ணீரும் மற்றும் மக்களுக்கு குடிநீரும் கிடைத்திருக்கும்" என்றார்.

முகாம்களுக்கு அனுப்பப்படும் கால்நடைகள்

மந்தர் ஆகவிற்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது; அதில் அவர் பருத்தி, சோளம், கம்பு மற்றும் சப்போட்டா ஆகியவற்றை வளர்க்கிறார். அவர் தனது பயிர்களுக்கு தனியார் சப்ளையரிடம் இருந்து தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார். 5,000 லிட்டர் கொண்ட நான்கு டேங்கர்கள் 8 நாட்களுக்கு போதும். ஒரு டேங்கர் தண்ணீரின் விலை ரூ. 700. "இந்த ஆண்டு விவசாய செலவு கணிசமாக அதிகரித்துள்ளது," என்று அவர் கூறினார். "நாங்கள் எங்களது கால்நடைகளுக்கு தீவனம் வாங்க வேண்டியிருந்தது. எட்டு நாட்களுக்கு முன்னர் முகாம் துவங்கியதால் எனது கால்நடையை அங்கு அனுப்பி பிழைக்கச் செய்தேன்," என்றார்.

1,000 கால்நடைகளை தங்க வைப்பதற்காக ஷிரூரில் ஒரு கால்நடை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பல விவசாயிகள் துன்பத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு, அவர்களின் கால்நடைகள் இங்கு இடம் பெயரச் செய்யப்பட்டன என்று, மஹாசவாட் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் தர போராடும் தன்னார்வ அமைப்பான மன் தேஷி அறக்கட்டளையின் நிறுவனர்சேடானா காலா சின்ஹா தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு மாடு அல்லது எருமைக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 40 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜெர்சி பசுக்கள் 60 லிட்டர் தேவைப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட விலங்கு கணக்கெடுப்பின்படி, அஷ்ட்டா தாலுகாவில் 3,501 சிறு கால்நடைகள் மற்றும் 43,015 பெரியவை உள்ளன. கால்நடை முகாம்களுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 277 என்ற நிலையில், 2019 மார்ச் 18 அன்று 87 கால்நடை முகாம்கள் அஷ்டியில் துவங்கின.

"என் கிராமத்தில் பெரிய கால்நடைகளை வைத்திருக்கும் மக்கள், பெரிய அளவில் டேங்கர்களை வைத்துள்ளனர்," என்று அஷ்டி தாலுக்காவின் தனோரா கிராமத்தில் வசிக்கும், WOTR அமைப்பின் களமுகவர், அம்பதாஸ் அம்காஷே கூறினார்.

அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டன; நிலத்தடி நீர் சரிந்தன

நாட்டின் முழுமையான 5,264 பெரிய அணைகளில் 2,069 மகாராஷ்டிராவில் உள்ளன; மாநிலங்களில் உள்ள அதிகபட்ச அணைக்கட்டுகளின் எண்ணிக்கை இது என்று, பெரிய அணைகளுக்கான தேசிய பதிவு (2016 புதுப்பிக்கப்பட்டது) தெரிவிக்கிறது. மேலும் 285 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மஜல்கான் அணையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பீட் மாவட்டம் பராலி தால்காவின் மொஹா கிராமத்தில், நீர் மட்டம் சரிந்துவிட்டது. கிராமத்தின் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. “நாங்கள் 650 அடி ஆழத்தில் இன்னும் இரண்டு ஆழ்துளை கிணறுகளை அமைக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்" என்று விவசாயி விஷால் தேஷ்முக் கூறினார். "இது தண்ணீர் மட்டத்திற்கு நல்லதல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்; ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

மராத்வாடாவில் நிலத்தடி நீர் பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு கட்டுப்பாடற்ற ஆழ்துளை கிணறு அமைப்பது காரணம் என்று, பானர்ஜி கூறினார். "நிலத்தடி நீரைப் பெற ஆழ்துளை கிணறுகளை தோண்டும் விவசாயிகளை நாம் குற்றம் சொல்ல முடியாது; எனினும், நிலத்தடி நீர் மட்டம் மேலும் வீழ்ச்சியடைய இது வழிவகுக்கப்படும்; ஒவ்வொருவரும் குறுகிய தூரத்தில் உள்ள துணியால் கட்டப்பட்டிருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

மகாராஷ்டிரா நிலத்தடி நீர் சட்டம் 2009ன் விதிகள், நன்கு செயல்படுத்தினால் வறட்சி நெருக்கடியை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று, WOTR மூத்த ஆராய்ச்சியாளர் ஈஸ்வர் காலே தெரிவித்தார். இந்த சட்டம் 60 மீட்டருக்கு (200 அடி) மேலாக ஆழ்துளை கிணறு தோண்டுவதை தடைசெய்கிறது; இப்பகுதியில் தண்ணீர் கிடைப்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலம் பயிர் முறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

மராத்வாடா மீண்டும் பயிர் திட்டமிடல் தேவை

மராத்வாடாவில் ஆண்டு சராசரி மழையளவு 650-700 மி.மீ.என்று வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி அஸ்வினி குல்கர்னி தெரிவித்தார். நடப்பு விவசாய நெருக்கடிக்கு தவறான பயிர் முறை முடிவுகளின் விளைவே காரணம். குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மாநிலத்தின் காலநிலை தரவை கருத்தில் கொள்ளாமல் சாகுபடி, குறிப்பாக நீரை அதிகம் இழுக்கும் கரும்பு போன்றவை பயிரிடப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர் குல்கர்னி, 'மழைக்காலத்தின் மாறுபாடு, 2015 மராத்வாடா வறட்சி மற்றும் மழைக்கால விவசாயம்' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி, மராத்வாடாவின் வறட்சி முறைகள் பற்றி 2016இல் வெளியிட்ட அறிக்கையில் இப்பகுதியில் குறைந்த மழைப்பொழிவு ஒரு கணிக்கக்கூடிய காலநிலை மாறுபாடு என்று வாதிடுகிறது. "சர்க்கரை, இது ஆண்டு முழுவதும் சுழற்சியாக சாகுபடி செய்யப்படுகிறது மற்றும் அதன் வளர்ச்சி காலம் முழுவதிலும் தண்ணீர் தேவை; அதே போல் அறுவடைக்கு பிறகு மராத்வாடா போன்ற வறட்சி-பாதிப்பு நிறைந்த பகுதியில், அவற்றை அழிக்கவும் இடம் இல்லை" என்றார் அவர்.

வறட்சி நீடித்த போதிலும், 2018-19ல், மகாராஷ்டிராவில் கரும்பு சாகுபடி பரப்பளவு 25% உயர்ந்துள்ளது. "மராத்வாடாவில் கரும்பு விவசாயத்திற்கு இடமில்லை, அது இன்னும் பெரிய அளவில் தொடர்கிறது, அதை மறுபரிசீலனை செய்வதற்கு எந்த முயற்சியும் இல்லை" என்று, இந்தியாவில் தண்ணீர் தொடர்பான பிரச்சினையை முறைசாராமல் இணைக்கும் வேலை செய்து வரும் தெற்காசிய அணைகள், நதிகள் மற்றும் மக்கள் (SANDRP) அமைப்பின் ஹிமான்ஷூ தாக்கர் கூறினார்.

கரும்பு ஆலைகள் கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு வருகின்றன, ஆனால் இந்த குடியேற்றமானது நீர்பிடிப்பு நிர்வாகத்தில் சமூகத்தின் பங்களிப்பை பாதிக்கிறது. கரும்பு தொழிற்துறையில் 50 சதவீத மக்கள் பணியாற்றி வருகின்றனர் "என்று புனேவை சேர்ந்த நீர்நிலை மேம்பாட்டு அமைப்பான, நீர்வழங்கல் அமைப்பு அறக்கட்டளை (WOTR) துணை பொது மேலாளர் ஹரிஷ் டவாரே கூறினார். "சமூக நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை திட்டமிடும் போது, நீங்கள் 50% மக்கள் இல்லை என்று அறியலாம்" என்றார்.

மகாராஷ்டிராவில் இந்த அளவுக்கு அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தனைக்கும் மகாராஷ்டிராவில் தான் பெரிய அணைக்கட்டுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மகாராஷ்டிரா அரசு, வறட்சியை போக்கும் நோக்கத்துடன் 2016 இல் ஜல்யுக்த் ஷிவார் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், விவசாய குட்டைகள், ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்துதல், மண் அரிப்பை தடுக்க சிமெண்ட் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், ஜல்யுக்த் ஷிவார் அபியான் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாக இல்லை; ஏனெனில் அது நிலத்தடிநீர் செரிவூட்டலை பாதிக்கிறது," என்கிறார் தக்கர்.

தற்போதைய விவசாய நெருக்கடிகளை போக்க மாநில அரசு வரைந்த திட்டங்கள் களத்தில் வேலை செய்யவில்லை மற்றும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என, ஒரு சிவில் சமூகம் அரசு சாரா அமைப்பான மகாராஷ்டிரா மாநில வறட்சி சீர்குலைவு மற்றும் பஞ்சம் அழிப்புக் குழுவின் உறுப்பினர் எச்.எம். தேசர்தா தெரிவித்தார்.

"பயிர் சாகுபடி முறையை மாற்றுவது அவசியம்," என்று அவர் கூறினார். "300 மி.மீ. மழை, அல்லது 3 மில்லியன் லிட்டர் தண்ணீர், ஒரு சாகுபடியையே காப்பாற்றும். தண்ணீர் பாதுகாப்பு என்பதை ஒரு அறிவியல் ரீதியாக திட்டமிடப்பட்டால், அதனுள் அடிப்படை தேவைகளும் வந்துவிடும். ஆனால் தற்போதைய திட்டங்கள் சமூகம் சம்பந்தப்படவில்லை" என்றார்.

இது ஆறு பாகங்கள் கொண்ட தொடரில் நான்காவது கட்டுரையாகும். நீங்கள் இங்கே முதல் கட்டுரையை, இங்கே இரண்டாவது கட்டுரையை மற்றும் இங்கே மூன்றாவது கட்டுரையை படிக்கலாம்.

(வினயா குர்ட்கோடி மற்றும் குன்வந்தி பரஸ்தே இருவரும், புனேயை சார்ந்த எழுத்தாளர்கள்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News