சிறப்பு பயிற்சி எவ்வாறு கர்நாடக மாவட்டம் ஒன்றின் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை மேம்படுத்த உதவியது

Update: 2019-07-20 00:30 GMT

பெங்களூரு: “நான் ஒரு பொறியாளர் ஆக விரும்புகிறேன். அதனால் தான் அறிவியலை தேர்ந்தெடுத்தேன் ”என 16 வயது நிதின் குமார் தனது மணிக்கட்டில் உள்ள ஆரஞ்சு நிற பட்டையை சரிசெய்து, நீல நிற கட்டம் போட்ட சட்டையின் முழுக்கையை கீழே இழுத்து விடுகிறார். கர்நாடக தலைநகரில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள தேவனஹள்ளியில் உள்ள ராகி மற்றும் காய்கறி விவசாயியான அவரது தந்தை என். முனியப்பா இதை கேட்டு மகிழ்ச்சியடைகிறார்.

நிதின், கர்நாடகாவில் 2018-19 மூத்தோர் நிலை பள்ளி இறுதித்தேர்வு சான்றிதழ் - எஸ்.எஸ்.எல்.சி, (SSLC அல்லது 10ஆம் வகுப்பு) தேர்வில் 83% மதிப்பெண் பெற்றவர்; 1,983 விசேஷா பரிகனிதா கம்பொ - வி.பி.ஜி. (அல்லது சிறப்பு வகை) மாணவர்களில் முதலிடம் பெற்றார். இதற்காக கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புக்குழுவால் நிதி வழங்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ், இடைக்கால தேர்வில் மோசமாக மதிப்பெண் பெற்ற 1,983 மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளால் சிறப்பு பயிற்சியும், கூடுதல் கவனமும் தரப்பட்டது. இவர்களில் கிட்டத்தட்ட 70% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

முந்தைய ஆண்டின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது, 2018-19 ஆம் ஆண்டில் 34 பள்ளி மாவட்டங்களில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு தரவரிசை பட்டியலில் 11ஆம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது 2019 எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் அணுகியதில் தெரிய வருகிறது. அனைத்து மாணவர்களில், 88%-க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்; இது 2017-18 ஆம் ஆண்டை விட ஆறு சதவீத புள்ளிகள் அதிகமாகும்; மாநில சராசரியை விட (73.7%) , 15 சதவீதம் புள்ளிகள் அதிகம். நான்கு தாலுகாக்களில் (மாவட்டங்களுக்குள் உள்ள நிர்வாக பிரிவுகள்) இரண்டு - தேவனஹள்ளி மற்றும் நீலமங்கலா- முறையே மாநிலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பெற்றன.

ஒட்டுமொத்தமாக கர்நாடக மாநிலம் தென்னிந்திய மாநிலங்களில் - அதாவது ஆந்திரா 94.88%, கேரளா 98.11%, தெலுங்கானா 92.43% மற்றும் தமிழ்நாடு 95.2% - மோசமான எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி சதவீதத்தைக் கொண்டிருக்கும் நிலையில், இம்மாவட்டத்தின் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாகும்.

பல இந்திய குழந்தைகள் வயது வந்தோருக்குத் தேவையான அடிப்படை திறன்கள் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) 2018 குறிப்பிட்டத்தை, ஜனவரி 15, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்திய 2018- தேசிய சாதனையாளர் கணக்கெடுப்பில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் கணிதத்தில் மிக மோசமாக இருந்தது தெரியவந்தது.

ஒரு சிறப்பு வகை

செப்டம்பர் 2018 இல் நடைபெற்ற இடைக்கால தேர்வுகளில் 40% க்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது இத்திட்டம். இது ஒரு பெரிய அளவில் வெற்றியை பெற்றது - அதாவது, 70% விபிஜி மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; இதில், 30% (584 பேர் ) முதல் வகுப்பு (60% -70% மதிப்பெண்கள்) மற்றும் 31% (618 பேர்) இரண்டாம் வகுப்பில் (50-59%) தேர்ச்சி பெற்றனர்.

இடைத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்கு இடையிலான ஐந்து மாதங்களில், இத்திட்டத்தில் வி.பி.ஜி மாணவர்களுக்கு, நாங்கள் சொன்னது போல், கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் - இலவசமாக நடைபெறும் வார இறுதி நாள் வகுப்புகளில், குறிப்பாக இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட மையங்களில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பாடத்திட்டம் தனிப்பயனாக்கப்பட்டதாக இருந்தது, மேலும் சிறந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை மற்றும் உணவு வழங்கப்பட்டது."இதன் நோக்கம் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது மட்டுமல்ல; அவர்களின் திறனை அறிந்து கற்றுக் கொள்ள அனுமதிப்பதும் ஆகும்," என்று, இந்த முன்முயற்சியை வழிநடத்திய பெங்களூரு கிராமப்புற மாவட்டம் திட்ட தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) ஆர் லதா கூறினார்.

"கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவும் எந்தவொரு முயற்சியும் ஒரு நல்ல செயல் என்றே நான் நினைக்கிறேன்," என்று, கிராமப்புறங்களில் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் பெங்களூரு மாவட்ட நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீதரன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்த திட்டத்தில் இதுபோன்ற 2,000 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் படிப்பிற்கு ஆதரவு வழங்கப்பட்டது. இதுபோன்ற முயற்சிகள் 10 ஆம் வகுப்பில் மட்டுமல்லாமல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.

கடந்த 2018 மார்ச் மாதம், தலைமை செயல் அதிகாரியாக லதா பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்கு பிறகு, 2017-18 ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முந்தைய ஆண்டை விட ஐந்து இடங்கள் பின்தங்கி, இந்த மாவட்டம் 14வது இடத்தில் இருந்தது. அப்போது, மாவட்டத்தை சேர்ந்த அமைச்சராக இருந்த கிருஷ்ணா பைரே கவுடா, மறுஆய்வுக் கூட்டத்தின் போது கல்விச் செயல்திறன் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, “இதற்கு ஒரு திட்டம் வகுப்பதை தீர்மானிக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார்”, என்று, இந்தியா ஸ்பெண்டிடம் லதா கூறினார்.

பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தின் சிறப்பு பயிற்சியால் மாணவர்கள் நிதின் குமார், கீர்த்தனா எஸ், ரக்ஷிதா எம் மற்றும் நேத்ரா கே ஆகியோர், கர்நாடகா மேல்நிலைப் பள்ளி தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இந்த பயிற்சியால், மாணவர்களிள் மத்தியில் நிதின் 83% மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.

தலைமை செயல் அதிகாரி, கல்வி ஆலோசகர், முன்முயற்சியைக் கண்காணிக்க கொண்டுவரப்பட்ட ஒரு "முறைசாரா குழு", தலைமை கணக்கு அதிகாரி, தலைமை திட்டமிடல் அதிகாரி, பொது அறிவுறுத்தலின் துணை இயக்குநர் மற்றும் ஒரு கல்வி அதிகாரி ஆகியோர் குழு, இடைத்தேர்வுகளில் 40%க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்தது. "ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களைக்கூட வி.பி.ஜி. திட்டத்தில் நாங்கள் சேர்த்துள்ளோம்" என்று லதா கூறினார். அவர்களில் ஒருவராக நிதின் இருந்தார்.

"முறையற்ற கற்பித்தல் வழி, ஆசிரியர்களிடமிருந்து தொழில்முறை தொடர்பு இல்லாதது, சில பள்ளியில் ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் வேறு சிலவற்றில் ஊழியர்களின் உபரி, மெதுவான கற்பவர்களுக்கு தனிப்பட்ட கவனம் இல்லாமை, பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளை இந்த குழு உணர்ந்தது. மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் ”குறைந்த சதவீதத்திற்கு காரணமாக இருந்தன என்று அறிக்கை குறிப்பிட்டது.

அக்டோபர் 2018-க்குள், ஒரு குழுவில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த வி.பி.ஜி மாணவர்கள், தலைமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரின் (HM) பொறுப்பில் ஒரு மாதிரி நோடல் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு மையத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்கள் வரை இருந்தனர். குழுவில் சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட பள்ளி ஒரு நோடல் மையமாக தேர்வு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்தோம், ”என்றார் லதா. மொத்தத்தில், 33 நோடல் மையங்களில் 42 வகுப்பறைகள் இருந்தன.

Source: CEO, Zilla Panchayat, Bengaluru Rural

மாவட்டத்தில் “சிறந்த ஆசிரியர்களை” உள்ளடக்கிய ஒரு குழு, கல்வித் துறை அதிகாரிகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு, விபிஜி பாடத்திட்டத்தை உருவாக்கியது. அந்தந்த பாட ஆசிரியர்கள் தலைப்புகளை பட்டியலிட்டனர். நேர அட்டவணைகள் ஒதுக்கப்பட்டன மற்றும் நோடல் மையங்களில் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் ஒதுக்கப்பட்டன.

"தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான நோக்குநிலை எங்களுக்கு இருந்தது. நாங்கள் அவர்களை நம்பிக்கையுடன் எடுக்க விரும்பினோம்,” என்று, கல்வி ஆலோசகரும், பிரதான குழுவில் உள்ளவருமான ஆர் நாகராஜையா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தலைமை ஆசிரியர்களின் நோக்குநிலையின் போது அவர்களின் ஒத்துழைப்பு, நல்லெண்ணம் மற்றும் தலைமையின் அவசியம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம்" என்றார் அவர்.

"டிசம்பர் மாதத்திற்கு பிறகு தான் சமூக அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஆசிரியர்களுக்காக நாங்கள் இரண்டு நாள் நோக்குநிலையை நடத்தினோம்," என்று, பஷெட்டிஹள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரும், பாடத்திட்டத்தை வடிவமைத்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தவருமான பாஸ்கர் ஆர் என், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நிறைய ஆய்வுப் பொருட்கள் உள்ளன, ஆனால் விபிஜி குழுவிற்கு ஒரு குறுகிய காலத்தில் என்ன, எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது" என்றார் அவர்.

மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான அம்சம் என்றாலும், தேவைக்கு ஏற்ப ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது மற்றும் அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் உள்ள சிறிய சாளரமான ஐந்து மாதங்களுக்கு முன்னுரிமை அளித்தது.

"கணித ஆசிரியர்களின் குழு, முழு பாடத்திட்டத்திலும் 40% கொண்ட ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது," என்று, குழுவின் ஒரு பகுதியாக இருந்த 15 வருட அனுபவமுள்ள கணித ஆசிரியர் சுவாமி எச் ஆர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "கடந்த ஆண்டு ஆசிரியர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர், ஏனெனில் மாநில அரசு சி.பி.எஸ்.இ. [மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்] பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் முதல் அணி என்பதால், வினாத்தாளின் வடிவம் எங்களுக்குத் தெரியாது” என்றார் அவர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றன; பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 31 லட்சம் (45,000 டாலர்) நிதி உதவியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு வழங்கப்பட்டது.

நோடல் மையங்கள், லதாவுக்கு அறிக்கை அளிக்கும் தலைமை ஆசிரியர்களால் கண்காணிக்கப்பட்டன. "நான் வாரந்தோறும் சரிபார்த்துக் கொண்டிருந்தேன், தலைமை ஆசிரியர்கள் நிலவரத்தை என்னிடம் கூறுவர் என எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.

விசேஷா பரிகனிதா கம்பொ-வி.பி.ஜி தலைமை செயல் அதிகாரி ஆர். லதா, இத்திட்டத்திற்கு தலைமை தாங்கினார். கர்நாடக மாநிலத்தில் 2018-19 மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி தரவரிசையில் முந்தைய ஆண்டில் இருந்து 11 இடங்கள் முன்னேறி, மூன்றாம் இடத்தை பிடித்தது.

முதல்முறை ஆயத்த தேர்வு முடிவுகள் போதுமானதாக இல்லை

டிசம்பரில் நடந்த முதல் ஆயத்த தேர்வுகளின் முடிவுகள் மிகக் குறைவானவை. 90% வி.பி.ஜி மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று லதா எதிர்பார்த்த நிலையில், 70% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதற்கான காரணம், பாடத்திட்டத்தில் மாற்றம் என்று, அவருக்கு கூறப்பட்டது.

மேலும், 1,983 மாணவர்களின் முதல் ஆயத்த தேர்வுத்தாட்களை ஆய்வு செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து கணித ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டனர். "கணிதம் ஒரு கடினமான விஷயமாகக் கருதப்படுவதால், பொதுவாக, இறுதி முடிவுகளை பாதிக்கும் என்பதால், நாங்கள் ஒரு பரந்த கருத்தை விரும்பினோம்," என்று லதா கூறினார்.

கலந்தாலோசனைக்கு பிறகு, ஒரு பணிப்புத்தகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மிக அனுபவம் வாய்ந்த கணித ஆசிரியர்களில் ஐந்து பேர் மற்ற பொறுப்புகளிலிருந்து விலக்கு பெற்றனர். "நாங்கள் 66 கேள்விகளைக் கொண்ட ஒரு பணிப்புத்தகத்தை உருவாக்கினோம், இதனால் ஒரு மாணவர் முழு பாடத்திட்டத்தால் மிரட்டப்படுவதில்லை. இது பாடத்திட்டத்தின் 25% ஆகும், ” என்று, கணித ஆசிரியரும் பணிப்புத்தகத்தை உருவாக்க உதவியவர்களில் ஒருவருமான சுவாமி கூறினார். பணிப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் கட்டுமானம் மற்றும் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் ஆசிரியர்களின் அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் சாத்தியமான கேள்விகள்.

"எங்கள் கவனம் வரைபடங்கள், தேற்றம் மற்றும் வகைப்பாடுகள் போன்ற அடிப்படை தலைப்புகளை மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஒத்திகை போன்றவற்றை உறுதி செய்வதில் இருந்தது," என்று, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவமுள்ள அறிவியல் ஆசிரியரான ரோஹினி ஹெக்டே தெரிவித்தார்.

பெங்களூரு கிராமப்புற மாவட்ட சிறப்பு வகை மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட கணித பணிப் புத்தகத்தின் ஒரு பக்கம் இது.நீங்கள் பணிப்புத்தகத்தை இங்கே காணலாம்.
ஆதாரம்: தலைமை செயல் அதிகாரி, ஜில்லா பஞ்சாயத்து, பெங்களூர் கிராமப்புறம்

பின்னர், பணிப்புத்தகத்தின் பயன்பாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என்ற லதா, மேலும், “விபிஜி மாணவர்கள் அதில் உறுதியாக பணியாற்றுவதை [ நாங்கள்] உறுதிப்படுத்த விரும்பினோம். இறுதித் தேர்வில் இந்த பணிப் புத்தகத்தில் இருந்து சுமார் 44 [மதிப்புள்ள கேள்விகள்] மதிப்பெண்கள் வந்தன” என்று மேலும் கூறினார்.

சிறு குழுக்கள், மாணவர்களிடம் கேள்விகளை கேட்பதற்கும் அவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் என்று நம்பிக்கையை தந்தாக, இந்தியா ஸ்பெண்டிடம் நிதின் தெரிவித்தார். "எனது நோக்கம் 90% க்கும் அதிகமாக மதிப்பெண் என்று இருந்ததும். இந்த ஆண்டு எனது சகோதரி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதவுள்ளார். அவர் என்னை விட அதிக மதிப்பெண் பெறுவார் என்று நம்புகிறார், ”என அவர் கூறினார்.

வி.பி.ஜி முன்முயற்சியின் தேவைகளுக்கு ஏற்ப கணிதம், ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என நான்கு பாடங்களுக்கு ஆசிரியர்கள் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கினர். 70% விபிஜி மாணவர்கள், 30% முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

"வகுப்பறைகள் எனது சந்தேகங்களைத் தீர்ப்பதை எளிதாக்கின; மேலும் புதிய ஆசிரியர்களைச் சந்திப்பதும், புதிய நண்பர்களை உருவாக்குவதும் எனக்கு புத்துணர்ச்சியாக இருந்தது," என்று, 79% மதிப்பெண் பெற்ற மற்றொரு வி.பி.ஜி. மாணவர் ரக்ஷிதா எம் தெரிவித்தார். இவர், வணிகத்தில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் வேலை செய்ய விரும்புகிறார். 6 ஆம் வகுப்பு வரை படித்து, கூலித் தொழிலாளியாக உள்ள அவரது தந்தை முனிராஜு கே எம், தனது மகள் படிப்பை தொடர்வதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். "இது குழந்தைகளுக்கு ஒரு நல்ல முயற்சி; இது தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

இனிய வீட்டுப் பள்ளிகள்

மூன்று ஆயத்த தேர்வுகளுக்கு பிறகும் கூட, 20% மாணவர்கள் இன்னும் 28 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, கல்வி ஆலோசகர் நாகராஜையாவுடன் கலந்தாலோசித்து, ‘ஹேப்பி ஹோம் ஸ்கூல்ஸ்’ அதாவது இனிய வீட்டு பள்ளிகள் என்ற ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. இது ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை ஒரு சிறிய குழுவிற்கு கற்பிக்கும். வழக்கமான ஆசிரியர்களால் வகுப்புகள் கற்பிக்கப்படுவதால் ஆசிரியர் இடம்பெயர்வு இருக்காது.

"இது குழந்தைகள் தங்கள் பாணியில் கற்றுக்கொள்ள உதவும் [ஜோஹான்] பெஸ்டலோஸ்ஸியின் கல்வி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது,"என்ற நாகராஜையா, மாணவர்கள் ஏன் ஆசிரியர்களுடன் தரையில் ஒரு பாயில் உட்கார்ந்து கொள்கிறார்கள் என்பதை விளக்கினார். "ஒவ்வொரு மாணவரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு கற்பிப்பதை மீண்டும் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, அது பெரிய குழுவால் மீண்டும் மீண்டும் செய்யப்படும்" என்றார் அவர். அவர்கள் ஏ-1 (A1) குழு என்று அழைக்கப்பட்டனர் மற்றும் தேர்வுகள் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் ஒரு பாடத்திட்டம் விரைவாக வடிவமைக்கப்பட்டது.

குழந்தைகள் கல்வி ரீதியாக நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று முத்திரை குத்தப்படவில்லை. “மெதுவாக கற்பவர்கள் உள்ளனர். கல்வியை எல்லோரும் ஒரே வேகத்தில் கற்றுக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது” என்று நாகராஜையா தெரிவித்தார்.

மூன்றாவது ஆயத்த தேர்வில் 28% க்கும் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு உதவ ஹேப்பி ஹோம் ஸ்கூல் எனப்படும் இனிய வீட்டு பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஜோஹான் பெஸ்டலோஸ்ஸியின் தத்துவத்தின் அடிப்படையில், கல்வி ஆலோசகர் ஆர் நாகராஜையா இதை உருவாக்கியுள்ளார்.

நேத்ரா கே, கீர்த்தனா எஸ் உள்ளிட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.

கீர்த்தனா தனது குடும்பத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முதல் நபர். அவரது தாயார் 7 ஆம் வகுப்பு வரை படித்திருந்தார்; தந்தை கல்வி கற்கவில்லை. இருவரும் சிமென்ட் பூச்சு தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவரது சகோதரர் 9 ஆம் வகுப்புக்கு பின் பள்ளியை விட்டு நின்று, ஓட்டுனராக உள்ளார்.

"நாங்கள் எங்கள் ஆசிரியர்களைச் சுற்றி அமர்ந்தோம். எங்கள் விபிஜி வகுப்பை விட இக்குழு சிறியதாக இருந்தது. இது எனக்கு மேலும் உதவியது,” என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆயத்த தேர்வில் பெரும்பாலான பாடங்களில் தோல்வியடைந்த நேத்ரா கே, ஹேப்பி ஹோம் பள்ளியில் படித்த பிறகு, 67% மதிப்பெண் பெற்றார். ஒரு கேண்டீனில் பணிபுரியும் அவரது தாயார் காயத்ரி, இந்த முயற்சி பலனளித்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.

“ஆரம்பத்தில் சில மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் முடிவுகள் நன்றாக இருந்தன, ” என்று சன்னஹள்ளியில் உள்ள ஒரு ஆங்கில ஆசிரியரும், இத்திட்டத்துடன் தொடர்புடையவருமான ரூபா கூறினார். குழந்தைகள் ஆரம்பத்தில் விபிஜி வகுப்புகளில் சேர தயக்கம் காட்டினர். ஏனெனில், "மந்தமான "மாணவர்கள் என்று தாங்கள் அழைக்கப்படுவோமோ என்று அஞ்சினர்" என்றார் அவர்.

முன்னோக்கிச் செல்வது: முறையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை

அரசு பள்ளிகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் மோசமான செயல்பாட்டுக்காக நிறுத்தப்பட்ட மாணவர்களை அனுமதிக்க வேண்டும் (இதனால் எஸ்.எஸ்.எல்.சியில் தனியார் பள்ளிகளின் செயல்திறன் பாதிக்கப்படாது) என, அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், அரசு பள்ளிகளில் சேருதல் குறைந்து வருகிறது; ஒட்டுமொத்தமாக, "தனியார் துறையினரால் ஏராளமான குழந்தைகளுக்கு வழங்கப்படுவது மிகவும் பிரிக்கப்பட்ட மற்றும் அடுக்கடுக்கான கல்வி" க்கு வழிவகுக்கிறது என்றார் ஸ்ரீதரன். பழைய உள்கட்டமைப்பு மற்றும் சில இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறையும் பெரிய சவால்களாக உள்ளன.

இந்த முயற்சிகள் பலனை தந்தாலும், அடுத்த ஆண்டு இதே வேகத்தைத் தொடருவது என்பது சவால் உள்ளது. இந்த நடவடிக்கைகளை தலைமை செயல் அதிகாரி நுண்கண்காணிப்பு செய்ய வேண்டியிருந்தது; மேலும் ஆறு வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.

"எங்களுக்கு சில அற்புதமான ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர், இது எங்களுக்கு சிறப்பாக செயல்பட அனுமதித்தது" என்று லதா கூறினார். "ஆனால் நாங்கள் செயல்முறையை முறைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் வேண்டும். நான் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு மாவட்டத்திற்குச் செல்லும்போது அது முடிவடையும் என்று நான் விரும்பவில்லை. இது தொடர வேண்டும், எந்தவொரு நபரின் இருப்பு தேவையில்லை" என்றார்.

தனிப்பட்ட முறையில் இயக்கப்படும் திட்ட நிரல்கள் அதன் திறனை மிக எளிதாக இழக்கின்றன; இந்த முறையை மீண்டும் மீண்டும் பார்த்தோம் என்ற ஸ்ரீதரன், புதியமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். "நன்கு கட்டமைக்கப்பட்ட கல்வி அதிகாரத்துவம் மாநிலம் முழுவதும் இந்த அளவிற்கு உதவக்கூடும்," என்ற அவர், அந்தந்த மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் இத்திட்டத்தை வழிநடத்த முடியும் என்றார்.

தரப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளில் சிறப்பாக செயல்பட மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த வேண்டியது அவசியமில்லை என்றும் ஸ்ரீதரன் எச்சரிக்கிறார். "எனினும் இதுபோன்ற உயர் மதிப்பீடுகளின் செயல்திறன், பயிற்சியின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. இதுபோன்ற மதிப்பீடுகளை எடுக்க மாணவர்கள் பள்ளியில் இருந்து உயர் கல்விக்கு செல்லும்போது, அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News