இந்தியாவுக்கு உண்மையில் எவ்வளவு கத்திரிக்காய் தேவை?

Update: 2020-10-14 00:30 GMT

ஒரு தசாப்த கால தடைக்குப் பிறகு, பி.டி. எனப்படும் மரபணு மாற்ற கத்தரி தொடர்பான கள பரிசோதனைகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்க இந்தியா அனுமதி தந்தது. மரபணு மாற்ற பருத்திக்கு பிறகு  இந்தியாவின் இரண்டாவது மரபணு மாற்றம் (GM) செய்யப்பட்ட பயிர் மற்றும் முதலாவது மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிர் என்பதால், வர்த்தக சந்தைப்படுத்துதலுக்கான முதல் படியை, இது குறிக்கிறது. ஆனால், கட்டுப்பாடற்ற மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பி.டி. பருத்தியை போன்ற அதே பாதையில் பி.டி. கத்தரிக்காயை கொண்டு சேர்க்கும் என்று  சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.  மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கள பரிசோதனைகள், போதிய பாதுகாப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றால் வணிகமயமாக்கல் குறிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பருத்தி சாகுபடி பரப்பில் 93% க்கும் அதிகமான பகுதிகளை உள்ளடக்கி மற்ற வகைகளை அது  மாற்றியது.

எனவே, பாதுகாப்பு பற்றிய கவலைகள், சரியான கட்டுப்பாடு, பாதுகாப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் தேவை இன்னும் அதிகமாக உள்ளது, ஏனெனில் பி.டி. கத்திரிக்காய் என்பது பி.டி. பருத்தியல்ல, இது ஒரு உணவுப்பயிர். அத்துடன் உள்நாட்டு பயிர் வகைகள் மற்றும் விதைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் நன்கு நிறுவப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் ஒப்புதல்க்குழு (GEAC) இரண்டு சுதேசிய வகை பி.டி. கத்திரிக்காயை கள ஆய்வு செய்ய அனுமதி தந்துள்ளது, இதை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்), பீகார், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களில் உருவாக்கியது. மண்ணில் உள்ள  பாக்டீரியாவில் இருந்து பேசிலஸ் துரிங்கியன்சிஸ் (Bacillus thuringiensis -Bt) என்ற புரோட்டீன் மரபணுவை (க்ரை 1 எஃப் 1) கத்திரிக்காயின் டி.என்.ஏ.வில் செலுத்துவதன் மூலம் இவ்வகை பி.டி. கத்தரிக்காய்கள் உருவாக்கப்படுகின்றன.

மரபணு மாற்ற கத்திரிக்காய் என்பது,  பழம் மற்றும்  தாவரத்தின் உற்பத்தித்திறனை 70% குறைக்கும்  பூச்சியான  துளைப்பானை (FSB) கொல்லும் வகையில்  உருவாக்கப்பட்டது, செயற்கையான புரதத்தை துளைப்பான் உட்கொண்டு அதை  ஜீரணிக்க முடியாமது இறுதியில் இறந்துவிடும். பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இந்த தொழில்நுட்பம்,  கத்திரிக்காய் விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் லாபத்தையும் அதிகரிக்க முடியும் என்று மரபணு மாற்ற அறிவியல் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்தியாவில் கத்திரிக்காய்க்கு மரபணு மாற்றம் என்பது தேவையில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தி பயிரின் பரந்த பகுதிகளுக்கு கழிவுகளை இட்டு இளஞ்சிவப்பு புழுக்களில் இருந்து பயிரைப் பாதுகாப்பதன் மூலம் பருத்தி விவசாயத்தின் உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை பி.டி.பருத்தி வழங்கியது. பி.டி. பருத்தி பயன்படுத்தப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்திலும், உலகின் இரண்டாவது பெரிய பருத்தி ஏற்றுமதியாளராகவும் ஆனது.

மறுபுறம், கத்திரிக்காய் ஏற்கனவே ஏராளமாக வளர்ந்துள்ளது, இது உலகின் விநியோகத்தில் 27% இந்தியாவைக் கொண்டுள்ளது, இதில்  சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. இந்தியாவில் 4,000 ஆண்டுகளாக, 2,500 வகைகளில் இது பயிரிடப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2010  குறிப்பு தெரிவிக்கிறது. பூர்வீக பயிர்களை மரபணு மாற்ற தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும்  வாதிடப்பட்டது.  மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற பயன்பாடு, இத்தகைய ஏராளமான உள்ளூர் வகைகளை கொல்லக்கூடும் என்று வேளாண் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

இந்தியாவில் பிடி பருத்தி எவ்வாறு வணிகமயமாக்கப்பட்டது

நாங்கள் சொன்னது போல மரபணு மாற்ற பயிர்கள், தாவர மரபணுக்களுக்கு இயற்கையானவை அல்லாத குணாதிசயங்களைக் கொண்ட வெளிநாட்டு மரபணுக்களை தாவரங்களுக்குள் செலுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்த  பண்புகள் பூச்சி எதிர்ப்பு (பருத்தி), கூடுதல் ஊட்டச்சத்து (மரபணு மாற்ற பொன்னிற அரிசி ) அல்லது களைக்கொல்லி ஏற்பமைவு (பருத்தி, சோயாபீன் போன்றவை) என  இருக்கலாம். உலகெங்கிலும் மிகவும் பொதுவான மரபணு பொறியியல் பயிர்கள் பருத்தி, சோயாபீன் மற்றும் சோளம் ஆகும்.

இந்தியாவில் பி.டி. பருத்தி ஏற்கனவே 11.6% என, உலகின் ஐந்தாவது பெரிய ஏக்கரில் மரபணு மாற்ற பயிர்களைக் கொண்டுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டில், மும்பையை சேர்ந்த மகாராஷ்டிரா ஹைப்ரிட் சீட்ஸ் கோ (Mahyco), பி.டி பருத்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க வேளாண் வேதியியல் நிறுவனமான (2018ல் பாயர் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது) மாண்சாண்டோவுடன் கூட்டுசேர்ந்தது.  க்ரை 1 ஏசி  (Cry1Ac)  வடிவத்தில் உள்ள நச்சுகள் பருத்தி பயிர்களுக்கு மிகப்பெரிய கொள்ளைநோயான இளஞ்சிவப்பு காய்ப்புழுவை கொல்லும் திறன் இருப்பதாகக் கூறின.

இந்தியாவில் விவசாயிகள் பி.டி. பருத்தியை அதன் சட்டப்பூர்வ வணிகமயமாக்கலுக்கு முன்பே பயிரிடத் தொடங்கினர். கள பரிசோதனைகள் சட்டவிரோத சாகுபடிக்கு வழிவகுத்தன, இது வணிகமயமாக்கல் செயல்முறையை ஊக்குவித்தது மற்றும் விரைவுபடுத்தியது என்று சசெக்ஸின் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்-சின் ஸ்டெப்ஸ் மைய இணை இயக்குனர் இயன் ஸ்கோன்ஸ் குறிப்பிட்டார். இந்த சட்டவிரோத சாகுபடி, 1990ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் குஜராத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்தது. 2002 ஆம் ஆண்டில், குஜராத்தில் மட்டும் சுமார் 10,000 ஹெக்டேர் பருத்தி பயிரிடப்பட்டதாகக் கூறப்பட்டது; மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள பிற பகுதிகளின் குறிப்பிடத்தக்க இடங்களில் சட்டவிரோத மரபணு மாற்ற பருத்தி சாகுபடி நடந்ததாக கூறப்பட்டது.

இத்தகைய சட்டவிரோத பயிர்களை அழிப்பதற்கும், விவசாயிகளுக்கு அழிவுக்கு ஈடுசெய்வதற்கும் பதிலாக, அமைச்சகம் மார்ச் 2002ம் ஆண்டில் பி.டி. பருத்தியை வணிகமயமாக்க அனுமதித்தது.

ஹரியானாவில் மரபணு மாற்ற  கத்திரிக்காயை சட்டவிரோதமாக பயிரிடுவது தொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து உள்ளன.

எனினும் பி.டி. கத்திரிக்காய் 2010ல் தடைகளை தகர்த்தது

கடந்த 2005ல், தார்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து  மகாராஷ்டிரா ஹைப்ரிட் சீட்ஸ் கோ (Mahyco), இந்தியாவில் பி.டி. கத்திரிக்காயை உருவாக்கத் தொடங்கியது. மரபணு பொறியியல் ஒப்புதல் குழு ( GEAC) மரபணு மாற்ற விதைகளுக்கு ஒப்புதல் அளித்ததும், பி.டி. கத்திரிக்காய் மீது 2002 மற்றும் 2006ம் ஆண்டுக்கு இடையில் கள சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், 2010 ஆம் ஆண்டில், அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பி.டி. கத்திரிக்காயை வணிகமயமாக்குவது குறித்து பொது மக்களின் குரல் மற்றும் சுகாதார மற்றும் பல்லுயிர் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கு இடையே, அதற்கு தடை விதித்தார். இந்த அணுகுமுறை "அறிவியலுக்கு பொறுப்பானது மற்றும் சமூகத்திற்கு பதிலளிக்கக்கூடியது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தடைக்காலம் பல காரணிகளால் இயக்கப்படுகிறது - விஞ்ஞான சமூகத்தில் பி.டி தொழில்நுட்பத்தில் ஒருமித்த கருத்து இல்லாதது, சுதந்திரமான உயிர் பாதுகாப்பு ஆய்வுகள் இல்லாதது, பொது அவநம்பிக்கை மற்றும் கத்திரிக்காய் உற்பத்தி செய்யும் 10 பெரிய மாநிலங்களின் எதிர்ப்பு ஆகியன, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. திருப்திகரமான சுதந்திர அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னர் தடை நீக்கப்படும்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா ஹைப்ரிட் சீட்ஸ் கோ (Mahyco) உருவாக்கிய பி.டி. கத்திரிக்காய் 2010ம் ஆண்டில்  உயிரியக்கக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. பெங்களூரு  அறக்கட்டளையான சுற்றுச்சூழல் ஆதரவு குழு (ESG), கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கத்திரிக்காய் வகைகளை மாநில பல்லுயிர் வாரியத்திடம் அனுமதி பெறாமல் மஹிகோ பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் நடவடிக்கையும் எடுக்க கர்நாடக பல்லுயிர் வாரியம் 2015 வரை காத்திருந்தது, அதன் பிறகு இவ்வழக்கை தேசிய பல்லுயிர் ஆணையத்திற்கு (NBA) அனுப்பியது.

கடந்த 2019ம் ஆண்டில், ஹரியானா விவசாயிகள் வங்கதேசத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விதைகளை கொண்டு சட்டவிரோதமாக பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தேசிய தாவர பயோடெக்னாலஜி நிறுவனம் ஒரு புதியரக பி.டி. கத்திரிக்காய் விதைகளை உருவாக்கியது.

கடந்த மே 2020ல், மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவானது புதிய பி.டி. கத்திரிக்காய் விதைக்கு ஒப்புதல் அளித்தது, செப்டம்பர் 2020ல், ஜல்னாவை சேர்ந்த தனியார் நிறுவனமான பீஜ்ஷீட்டல் (Beejsheetal ) ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் தயாரித்த இரண்டு வகைகளின் கள சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. 2020 முதல் 2023ம் ஆண்டு வரை மாநில வேளாண் துறைகளின் ஒப்புதலுடன் ஏழு மாநிலங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

புதிய பி.டி. கத்திரிக்காய் வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2002 இல் வெளியிடப்பட்டதைவிட வேறுபட்டது, கத்திரிக்காய் கலப்பினங்களின் ஜனக் மற்றும் பி.எஸ்.எஸ் -793 ஆகிய உள்நாட்டு மரபணு மாற்ற வகைகளைப் பயன்படுத்துகிறது. "புதிய வகையானது பொது களத்தில் கொண்டு வரப்படவில்லை, மேலும் தொற்றுநோய் காரணமாக நாடு ஊரடங்கு அமலான நிலையில் சத்தமிடாமல் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது," என்று, ஆஷாவின் (Alliance for Sustainable & Holistic Agriculture -ASHA ) தேசிய அமைப்பாளர் கவிதா குருகந்தி கூறினார். பயன்படுத்தப்படும் பெற்றோர் மரபணு போன்ற விவரங்கள் அரசு அறிவிப்புகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.  தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அவர் பயிரின் உயிர் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கோரியபோது - சம்பந்தப்பட்ட தரப்பினரின் வணிக நலன்களை மீறும் என்ற அடிப்படையில், அவை மறுக்கப்பட்டன. 

ஐந்து ஆண்டுகளில் வழக்கற்றுப் போய்விட்டது

வேளாண் தொழில்நுட்பத் துறையான அலையன்ஸ் ஃபார் அக்ரிகல்ச்சர் இன்னோவேஷன் (Alliance for Agriculture Innovation -AAI) போன்ற தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்கள்,  பி.டி. கத்திரிக்காயை வணிகமயமாக்க அனுமதிக்குமாறு கேட்டு எட்டு மாநில அரசுகளுடன் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. பி.டி தொழில்நுட்பத்துடன் தாவரத்தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம், “நாம்  விவசாயிகளின் வருமானத்தை காப்பாற்றலாம், சுற்றுச்சூழலில் பூச்சிக்கொல்லி சுமையை குறைக்கலாம் மற்றும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சி இல்லாத கத்திரிக்காய்களை நுகர்வோருக்கு வழங்க முடியும்” என்று ஆகஸ்ட் 6, 2020 தேதியிட்ட செய்திக்குறிப்பில் ஏ.ஏ.ஐ.  இயக்குநர் ஜெனரல் ராம்கவுண்டின்யா கூறினார்.

இருப்பினும், நீடித்த விவசாய ஆர்வலர்கள் தொழில்நுட்பம் எவ்வளவு விரைவாக வழக்கற்றுப் போகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தி மற்றும் கத்திரிக்காயை உண்ணும் பூச்சிகள் ஏகபோகமானவை - அதாவது அவை ஒரு வகையான உணவை மட்டுமே சாப்பிடுகின்றன. இதன் பொருள் அவை நச்சுத்தன்மையுள்ள புரதத்தை எதிர்க்கின்றன. "தொழில்நுட்பத்திற்கு சுமார் ஐந்து ஆண்டுகள் வரம்பு உள்ளது," என்ற  ஹைதராபாத்தில் உள்ள ஒரு சுதந்திர ஆராய்ச்சி அமைப்பான சென்டர் ஃபார் சஸ்டைனபிள் அக்ரிகல்சர் நிர்வாக இயக்குநர் ஜி.வி. ராமஞ்சநேயுலு கூறினார்.

இது ஏற்கனவே பி.டி. பருத்தியின் அனுபவமாக இருந்தது. முதல் தலைமுறை பி.டி. பருத்தி  போல்கார்ட்-I,  கடந்த 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது, 2004ல் மான்சாண்டோ போல்கார்ட் II-ஐ அறிமுகப்படுத்திய உடனேயே, இந்தியாவில் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களை  2009ல் விரட்டும் செயலை தொடங்கியது. 2015ம் ஆண்டில், நாக்பூரை சேர்ந்த மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) , இரண்டாம் தலைமுறை பி.டி பருத்தி விதைகளுக்கும், இளஞ்சிவப்பு காய்ப்புழு எதிர்ப்பு திறனை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவின் பருத்தி சங்கம் 2019 அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2005 மற்றும் 2017ம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவின் பருத்தி சாகுபடி ஏக்கர் மற்றும் மகசூல் அதிகரித்தாலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இரசாயனங்கள் பயன்படுத்தாமல், உற்பத்தித்திறன் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கத்திரிக்காய்க்கு பருத்திக்கு தேவைப்பட்ட அழுத்தம் தேவையில்லை. இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்த கத்திரிக்காயின் சராசரி உலக உற்பத்தித்திறன், ஒரு ஹெக்டேருக்கு 25 டன் (t/ha). உலகளாவிய பருத்தி உற்பத்தித்திறன் பட்டியலில் இந்தியா 70வது இடத்தில் உள்ளது, ஆனால் கத்தரிக்காய் உற்பத்தித்திறனில் ஹெக்டேருக்கு 17.5 டன் என, எட்டாவது இடத்தில் உள்ளது.

"விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை உற்பத்தித்திறனைக் காட்டிலும் விலைதான்" என்று ராமஞ்சநேயுலு குறிப்பிட்டார். பி.டி தொழில்நுட்பம் கத்திரிக்காயின் உற்பத்தியை அதிகரிக்கலாம் மற்றும் சந்தையில் ஒரு உபரியை உருவாக்கலாம், இது விலைச்சரிவுக்கு வழிவகுக்கும். இது விவசாயிகளை விட நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என்று தேசிய வேளாண் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டது.

Full View

கலப்பினம் தேவையற்றதா?

தேவையற்ற மகரந்தச்சேர்க்கையை தவிர்ப்பதற்கு, கள பரிசோதனைகள் மற்றும் பி.டி பயிர்களை பயிரிடுவதில் முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) பருத்தி வயல்களைச் சுற்றி மரபணு மாற்றம் செய்யப்படாதவற்றை 0.8 கி.மீ. சுற்றளவில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கிறது. சிறிய அளவிலான விளைநிலங்கள்  இருப்பதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இத்தகைய விதிமுறைகளை செயல்படுத்த முடியவில்லை.

தேவையற்ற மகரந்தச்சேர்க்கையின் அபாயத்தை தணிக்க வேண்டும் என்று பி.டி.  கத்திரிக்காய் சாகுபடி ஆதரவாளர்களே கூட ஒப்புக்கொள்கிறார்கள். பி.டி. கத்திரிக்காயின் கள சோதனைகளை ஆதரிக்கும் நிலையிலும் கூட, "பி.டி. பருத்தியை போலவே பண்புகளையும் சூழலுக்குள் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது," என்று இந்திய தேசிய விதை சங்கத்தின் கொள்கை மற்றும் மேம்பாட்டு இயக்குனர் இந்திர சேகர் சிங் கூறினார்.

இந்தியாவின் விதை கொள்கைகள்,  தாவர வகைகள் அத்துடன் விவசாயிகள் உரிமை  பாதுகாப்பு சட்டம்  (PPVFRA)- 2001 போன்ற சட்டங்கல், விதைகளை விதைக்க, சேமிக்க, பரிமாறிக்கொள்ள மற்றும் விற்பனை செய்யும் சுதந்திரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது, இந்தியாவில் திறந்த-மகரந்த சேர்க்கை விதைகளை அறிமுகப்படுத்த தனியார் முதலீட்டாளர்களுக்கு குறைந்த ஊக்கத்தை தருகிறது.

Difference between open pollination, hybridisation and genetic modification

Open pollination allows plants to reproduce naturally through the means of air, insects, etc., which ensures the parental breed line remains intact.

However, in case of hybrid seeds, the offspring are bred by breeders in order to carry the desired characteristics of two different parents or varieties of the same species.

In case of GM seeds, characteristics that are not naturally available to the gene line are introduced using gene editing technology. The transferred gene could belong to a different plant or animal.

திறந்த-மகரந்தச் சேர்க்கை விதைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரே மாதிரியான குணாதிசயங்களுடன் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன, அதே நேரம்  கலப்பினங்களின் சந்ததி பண்புகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில்லை. எனவே, குணாதிசயங்களைத் தக்கவைக்க, விவசாயிகள் ஒவ்வொரு விதைப்பு சுழற்சிக்கும் விதைகளை வாங்க வேண்டும்.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் திறந்த மகரந்தச் சேர்க்கை விதைகளாக பி.டி.  பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது.  விதைகளை மறுபயன்பாடு செய்தல், பரிமாறிக்கொள்வது அல்லது சேமித்ததற்காக அமெரிக்காவின் விவசாயிகள் மீது மான்சாண்டோ வழக்கு தொடர முடியும் என்றாலும், பிபிவிஎஃப்ஆர்ஏ (PPVFRA) 2001 போன்ற வலுவான இந்திய சட்டங்கள் இந்தியாவில் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, இது கலப்பின விதை வகைகளை உருவாக்கியது, அதை விவசாயிகள் புதிதாக வாங்க வேண்டும்.

எனவே, புதிய மரபணு மாற்ற தொழில்நுட்பமானது உற்பத்தியை அதிகரித்த அதே வேளையில், இது விவசாயிகளின் செலவுகளையும் அதிகரித்தது. புதிய மரபணு மாற்ற  தொழில்நுட்ப விதைகள் அதிக விலை கொண்டவை, அவற்றை மீண்டும் நடவு செய்யும் பருவத்தில் புதிதாக வாங்க வேண்டும், ஏனெனில் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதால்  உற்பத்தித்திறன் குறைகிறது.

பி.டி. கத்தரிக்காயின் வணிகமயமாக்கலுக்கான முதல் படியே, மரபணு பொறியியல் ஒப்புதல் குழு அனுமதி.  கள சோதனைகளை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்தால், மரபணு மாற்ற பயிர்களின் வணிக விவசாயத்தை அனுமதிக்க ஒரு உயிர் பாதுகாப்பு அறிக்கை மற்றும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்கும் பொறுப்பு மாநில அதிகாரிகளுடையது ஆகும்.

பி.டி. பருத்தி அனுபவத்தை மீண்டும் நடந்துவிடாமல் தவிர்ப்பதில் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

(மண்டல், சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் வளர்ச்சி, நிலைத்தன்மை, விவசாயம் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியன குறித்து எழுதி வருகிறார்.  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றவர், அத்துடன் இங்கிலாந்தின் சசெக்ஸ், ஐடிஎஸ்-இல் மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News