விளக்கம்: புயல், சூறாவளிகளுக்கான இந்தியாவின் முன் எச்சரிக்கை அமைப்புகள் ஏன் குறைகின்றன

தாக்கம் சார்ந்த முன்னறிவிப்புகள் இல்லாமை, ஆபத்தில் உள்ளவர்களுக்கு தவறான தகவல்களைப் பரப்புதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறன் பற்றிய தரவு இல்லாமை மற்றும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட செயல் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவை இந்தியாவின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பாதிக்கின்றன.

Update: 2022-07-11 00:30 GMT

மும்பை: 2022 பருவமழை, இந்தியா முழுவதும் தொடங்கிவிட்ட நிலையில், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில், பேரழிவு தரும் வெள்ளத்தைத் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. காலநிலை மாற்றம் தீவிர வானிலை நிகழ்வுகளை அதிகரிக்கும் நிலையில், உயிர்கள், உடைமைகள், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளைத் தடுப்பதில், இந்தியாவின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

வெள்ளம் மற்றும் சூறாவளிகளுக்கான நவீன, அதிநவீன முன் எச்சரிக்கை அமைப்புகளை தன்னிடம் இருப்பதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அபாயங்களை அடையாளம் காணும் தாக்கம் சார்ந்த முன்னறிவிப்புகள் இல்லாமை, மக்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்புதல், எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறன் குறித்த அறிவியல் தரவு இல்லாமை மற்றும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட செயல் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவை இந்தியாவின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை (EWS) பாதிக்கும் சில சிக்கல்களாகும் என்பதை, நாங்கள் கண்டுபிடித்தோம்.

2021 ஆம் ஆண்டில் உலகின் 10 பொருளாதார பேரழிவு காலநிலை நிகழ்வுகளில் இரண்டை இந்தியா சந்தித்தது. இரண்டு நிகழ்வுகளான தக்டே புயல் மற்றும் யாஸ் புயல் ஆகியன, உயிர் இழப்புகள் தவிர, தலா $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.

2010 மற்றும் 2021 க்கு இடையில், சூறாவளி புயல்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் 2013 முதல், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இறப்பு அதிகரிப்பின் பின்னணியில் உள்ள காரணங்களுக்காக, குறிப்பாக முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் குறித்து, புவி அறிவியல் அமைச்சகத்திற்கு (MoES) கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் பதிலளிக்கும்போது, இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.


Full View


வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் ஏன் வேலை செய்யவில்லை?

அஸ்ஸாம் அல்லது பீகாரில் அடிக்கடி காணப்படுவது போன்ற வெள்ளங்கள், ஆற்றங்கரையாக இருக்கலாம் அல்லது மோசமான மழைநீர் வடிகால் அமைப்புகளுடன் கூடிய மிக அதிக மழையினால் ஏற்படும் நகர்ப்புற வெள்ளங்களாக இருக்கலாம். இந்தியாவில், நகர்ப்புற வெள்ளத்தை ஏற்படுத்தும் கனமழை, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் (IMD) கண்காணிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஆறுகளில் நீர்மட்டம் உயரும் நடவடிக்கை, மத்திய நீர் ஆணையத்தால் (CWC) கண்காணிக்கப்படுகிறது.

தற்போது, ​​நாடு முழுவதும் 20 ஆற்றுப்படுகைகளை உள்ளடக்கிய சுமார் 1,600 ஹைட்ரோ வானிலை தளங்கள், மத்திய நீர் ஆணையத்தால் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல நிலையங்கள், வெள்ள முன்னறிவிப்புகளை உருவாக்க வெள்ள கண்காணிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ள முன்னறிவிப்பு என்பது, நீர்மட்ட முன்னறிவிப்பு மற்றும் வரத்து முன்னறிவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. நீர்மட்ட நிலை முன்னறிவிப்புகள் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு வெளியேற்றம், மக்கள் மற்றும் அவர்களின் அசையும் சொத்துக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் போன்ற தணிப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உதவுகின்றன. நீர்த்தேக்கங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வெள்ளநீர் கீழ்நோக்கி பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யவும் பல்வேறு அணை அதிகாரிகளால் நீர் வரத்து முன்னறிவிப்பு பயன்படுத்தப்படுகிறது. பருவமழை இல்லாத காலத்தில், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்த்தேக்கங்களில் போதுமான சேமிப்பை உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது.

ஒரு நிலையான இயக்க நடைமுறையின்படி, 325 நிலையங்களில் (132 வரத்து முன்னறிவிப்பு நிலையங்கள் + 199 நிலை முன்னறிவிப்பு நிலையங்கள்) மத்திய நீர் ஆணையத்தால், வெள்ள முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன, மேலும் இது ஆண்டுதோறும் 10,000 வெள்ள முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது. வெள்ளம் தொடர்பான விழிப்பூட்டல்களைப் பரப்புவதற்கு மத்திய நீர் ஆணையம், கூகுள் (Google) நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

மற்றவற்றுடன் நகர்ப்புற வெள்ளம் போன்ற சூழலுக்காக, இந்திய வானிலை ஆய்வுத் துறை 33 நிலையங்களைக் கொண்ட டாப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பைக் கொண்டுள்ளது, இது இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி போன்ற கடுமையான வானிலைகளைக் கண்காணிக்கவும் முன்னறிவிக்கவும் உதவுகிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையானது, 14 இடங்களில் (ஆக்ரா, அகமதாபாத், அசன்சோல், புவனேஷ்வர், பெங்களூரு, சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஜல்பைகுரி, லக்னோ, புதுடெல்லி, பாட்னா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்) வெள்ளம் தொடர்பான வானிலை அலுவலகங்களை (FMOs) இயக்குகிறது.

ஆனால், திடீரென ஏற்படும் வெள்ளம், திட்டமிடல் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது, ஏனெனில் அவை குறுகிய காலத்தில் பரவலான அழிவை ஏற்படுத்துகின்றன. 2021 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையானது, "போதுமான நேரத்துடன் திடீரென உண்டாகும் பெருவெள்ளத்தை (sic) முன்னறிவிப்பதற்கான மாதிரி அடிப்படையிலான அமைப்பின் வளர்ச்சியில் அறிவியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்" என்று பரிந்துரைத்தது.

Full View

அவற்றின் சேதம் மற்றும் திடீர் பெருவெள்ள எச்சரிக்கை திறன்களின் பொதுவான பற்றாக்குறையை உணர்ந்து, இந்திய வானிலைய்த்துறையானது அமெரிக்க தேசிய வானிலை சேவையுடன் இணைந்து, அக்டோபர் 2020 முதல் தெற்காசியப் பகுதிக்கான திடீர் பெருவெள்ள வழிகாட்டி அமைப்பை (FFGS) உருவாக்கியுள்ளது. இமயமலைப் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு 6-24 மணிநேரத்திற்கு முன்னரே பெருவெள்ள வழிகாட்டி அமைப்பு, எச்சரிக்கைகளை வழங்க முடியும்.

பெருவெள்ள வழிகாட்டி அமைப்பு (FFGS) அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நீர்நிலைகளிலும், நகர அளவிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திடீர் வெள்ள முன்னறிவிப்புகளை வழங்க உதவுகிறது.

"இந்தியாவில் பெருவெள்ள வழிகாட்டி அமைப்பு போன்றவை இருந்தால், வடகிழக்கில் நாம் பார்ப்பது போன்ற வெள்ளத்தை கணிக்க முடியுமா?" என்று, மும்பை ஐ.ஐ.டி காலநிலை ஆய்வு மையத்தின் இயந்திரவியல் பேராசிரியர் ஸ்ரீதர் பாலசுப்ரமணியன் கேட்கிறார். "தற்போது, ​​எங்கள் மாடல்களால் 24 மணி நேரத்திற்கு முன்பே வெள்ளத்தை கணிக்க முடியவில்லை. நிகழ்வுக்கு குறைந்தபட்சம் 48-72 மணிநேரத்திற்கு முன்னரே வெள்ளத்தை முன்னறிவிக்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க இன்னும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை."

இந்திய வானிலைத்துறையானது, இந்தியாவின் தலைநகரங்களுக்குள் ஏழு நாட்களுக்கு இருப்பிடம் சார்ந்த முன்னறிவிப்புகளையும், அடுத்த மூன்று மணிநேரங்களுக்கு 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கி இப்போது வெளியிடப்படும் (அவசர கணிப்புகள்) வெளியீடுகளையும் வழங்குகிறது. அதே முன்னறிவிப்பு திறன் புயல்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை உட்பட சில நகரங்கள் வெள்ளத்திற்கு சொந்தமாக முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பை வைத்துள்ளன. மும்பையின் அமைப்புக்கு, iFlows என்று பெயரிடப்பட்டுள்ளது, ஆனால் ஜூன் 2020 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இது சிறிய வெற்றியைக் காட்டியுள்ளது. "மும்பையில், iFlows நேரடியாக முன்னறிவிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எனவே இது நடைமுறையில் முன்னறிவிப்பைப் போலவே உள்ளது மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அல்ல" என்று பாலசுப்ரமணியன் கூறினார்.

2021-26 ஆம் ஆண்டிற்கான வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதி திட்டத்திற்கு (FMBAP) சுமார் ரூ.15,000 கோடியை இந்தியா முன்மொழிந்துள்ளது. வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் வெள்ளத்தில் இருந்து நீண்ட காலப் பாதுகாப்பிற்கான முக்கியமான திட்டங்களை மேற்கொள்ளலாம், இதில் கரைகள் அல்லது அணைகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

பெருவெள்ள வழிகாட்டி அமைப்பு மற்றும் iFlows இன் செயல்திறன் குறித்து, புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறைக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், அவர்களிடம் இருந்து பதிலைப் பெறும்போது, இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

புயல்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் பெரும்பாலும் தவறானவை

இந்தியாவில் மிகக் கடுமையான மற்றும் மிகக் கனமழையை உண்டாக்கும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சூறாவளிகள் குறுகிய காலத்தில் பரவலான அழிவை ஏற்படுத்தும்.

Full View

இந்தியாவின் தேசிய சூறாவளி அபாயக் குறைப்புத் திட்டம், ஆறு கடலோர மாநிலங்களை உள்ளடக்கியது மற்றும் அவை ரூ. 2,059 கோடி செலவைக் கொண்டுள்ளன. இதில், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளுக்கு மட்டும் ரூ.126 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் பல்நோக்கு சூறாவளி முகாம்கள், நிலத்தடி கேபிள் பதிப்பு, சாலைகள், உப்பளங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட தணிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் இது கருத்தில் கொள்ளும்.

ஐஐடி பாம்பேயின் பாலசுப்ரமணியன், இந்தியாவின் சூறாவளி முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு, வெள்ள அபாயத்தை விட சிறந்தது என்று நம்புகிறார்.

"இந்தியாவில் நல்ல மாதிரிகள் உள்ளன, அதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது, ஏனென்றால் எப்போதாவது ஒரு சூறாவளி வருகிறது, அசானி புயலைப் போலவே, அது அனைவரையும் திகைக்க வைக்கிறது,"என்று, அவர் மே 2022 இல் வங்கக் கடலில் உருவான சூறாவளியைப் பற்றி கூறினார்.

"ஐஎம்டி-ஜிஎஸ்எஸ் மாதிரியானது, அசானி ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் என்று கணித்திருந்தது, ஆனால் அது ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் என்று ஐரோப்பிய மாதிரி பரிந்துரைத்தது. வர்தா புயல் விஷயத்திலும், ஐஎம்டி தெற்கு ஆந்திராவை நோக்கி அதன் பாதையை முன்னறிவித்தது, அதே நேரத்தில் ஐரோப்பிய மாதிரி தெளிவாக சென்னைக்கு திரும்பும் என்று கூறியது, அது சரியானது. நமது அமைப்புகள் நன்றாக உள்ளன, ஆனால் அவை நிச்சயமாக மேம்படுத்தப்படலாம்" என்று, வர்தா புயல் 2016 இல் இந்தியாவைத் தாக்கியது.

2019 இல் புவி அறிவியல் அமைச்சகம் ஒப்புக்கொண்டது போல், பேரிடர் எச்சரிக்கைகளை சரியான நேரத்தில் தொடர்பு கொள்வதில் ஒரு குறைபாடு இருந்தது. "2017 ஆம் ஆண்டு ஓகி புயலின் போது, ​​மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, ​​புயல் உருவாகி வருவதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க முடியவில்லை," என்று 2019 இல், புவி அறிவியல் அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியது. "இந்த தகவல்தொடர்பு இடைவெளியில், உயிர் இழப்புகள், மீட்கப்பட்டவர்களுக்கு கடுமையான காயங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது" என்றது.

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS), GEMINI (GAGAN Enabled Mariner's Instrument for Navigation and Information) என்ற பெயரில் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது, இது செயற்கைக்கோள் அமைப்பான 'GAGAN' மூலம் அனுப்பப்படும் தகவலைப் பெற்று, புளூடூத் மூலம் மொபைல் போன்களுக்கு அனுப்புகிறது. கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தால் (INCOIS) ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயலி, செயற்கைக்கோள் செய்திகளை படிக்கக்கூடிய வரைபடங்கள் மற்றும் உரை வடிவில் மாற்றுகிறது. டிகோட் செய்யப்பட்ட தகவல்களை இந்தியாவின் கடலோர மாநிலங்களில் பேசப்படும் எந்த மொழியிலும் பார்க்க முடியும், மேலும் மீனவர்கள் மற்றும் கடலைச் சார்ந்து வாழ்வாதாரத்திற்காகப் பிறர் அணுகலாம்.

"முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதில் இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆனால் கடைசி மைல் வரை தகவல் சென்றடையும் இடத்தில் இறுதி முதல் இறுதி வரையிலான இணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்" என்று, இந்தியாவின் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்பு (EWS) குறித்து தற்போது ஆராய்ச்சி செய்து வரும் டெல்லியில் உள்ள ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) திட்டத் தலைவர் அபினாஷ் மொஹந்தி கூறினார்.

"ஒரு சூப்பர் சூறாவளி தாக்கப் போகிறது என்றால், விவசாயிகள், மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு என்ன அர்த்தம்? ஆரம்ப எச்சரிக்கைகள் தாக்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும். நாம் தகவல் ஆதாரங்களை வலுப்படுத்தியுள்ளோம், ஆனால் அது சமூகங்களின் மட்டத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்" என்றார்.

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம், புயலால் ஏற்படும் சீற்றம் மற்றும் வெள்ளப்பெருக்கு அளவைக் கணிக்க, இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எழுச்சி ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை (SSEWS) அமைத்தது. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, கடலோர மாவட்டங்களில் நிலச்சரிவு சூறாவளிகளுடன் தொடர்புடைய எதிர்பார்க்கப்படும் சேதத்தை முன்னறிவிப்பதற்கான இணைய அடிப்படையிலான கருவியை உருவாக்கியுள்ளது.

"முன்கூட்டியே எச்சரிக்கைக்கும் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது, ஆனால் இடைவெளி திறன் மட்டத்தில் உள்ளது" என்று மொஹந்தி விளக்கினார். 30% மாவட்டங்கள் மட்டுமே பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைப் புதுப்பித்துள்ளன. முன்கூட்டியே எச்சரிக்கைகள் உடனடியாக திட்டமிடல் மற்றும் பேரிடர் தயார்நிலை/பதிலளிப்பு நெறிமுறைகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தகவல் கீழ்நோக்கி செல்கிறது, ஆனால் துறை சார்ந்த தகவல்கள், தாக்கம் சார்ந்த தகவல்கள் நமது அன்றாட வாழ்விலும் நிர்வாக செயல்முறைகளிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்றார்.

"நமது முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளைச் சுற்றியுள்ள தரவுகளின் பற்றாக்குறை, நமது அறிவில் பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது," என்கிறார் ஐஐடி காந்திநகரின் சிவில் இன்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் உதித் பாட்டியா. "நமது தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதலை மேம்படுத்த வேண்டும்… நம்மிடம் தொழில்நுட்பம் இருக்கலாம், ஆனால் பிராந்திய அளவீடுகளில் அறிவியல் மாதிரிகளை உருவாக்க நம்மிடம் தரவு இல்லையென்றால், தீவிர நிகழ்வுகளைத் திட்டமிடுவது மிகவும் கடினமாகிவிடும்" என்றார். உதாரணமாக, நாம் ஒருபோதும் தரவுகளைப் பார்க்காததால், வெள்ளப்பெருக்கின் எதிர்பார்க்கப்படும் அளவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கான விரிவான மாதிரி நம்மிடம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தியா மேலும் நம்பகமான தரவுகளை சேகரித்து, அவற்றை அறிவியல் சமூகம் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளிப்படையாக அணுகும்படி அவர் கேட்டுக் கொள்கிறார். பின்னர், "நம்மிடம் தலையீடுகளின் தாக்கத்தையும் நாம் அளவிட முடியும், இல்லையெனில் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பை நம்புவதற்கு மக்களை நம்ப வைப்பது மிகவும் கடினமாக இருக்கும்" என்றார்.

புயல், சூறாவளி முன்னறிவிப்பு துல்லியம், மோசமான தகவல் தொடர்பு மற்றும் நம்மிடம் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளுடன் தொடர்புடைய அறிவியல் தரவு இல்லாதது குறித்து கருத்து அறிய, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய வானிலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் பதிலளிக்கும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

மக்கள் இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள்

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புக்கான செலவுகள் மற்றும் சூறாவளி புயல்களால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன என்று, அரசாங்கத்தின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவை உண்மையில் 2010 மற்றும் 2021 க்கு இடையில் அதிகரித்துள்ளன என்று ராஜ்யசபாவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மோகந்தி மற்றும் பாலசுப்ரமணியன் இருவரும், புயல்களின் அதிகரிப்பு, சூறாவளிகளின் தீவிரம், அதிகரித்த மக்கள்தொகை மற்றும் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் அதிகமான மக்கள் போன்ற காரணங்களாலும், மற்ற காரணங்களாலும், சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகளின் அதிகரிப்பு, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பின் தோல்வி மட்டுமே காரணமாக இருக்காது என்று மதிப்பிடுகின்றனர்.

"இறுதியில், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பானது, நமது பேரிடர் தயார்நிலையின் ஒரு கூறு மட்டுமே" என்று பாட்டியா கூறினார். "நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நான்கு மணி நேரம் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்தாலும், நகரின் வடிகால் அமைப்பு சரியாக இல்லை என்றால், அந்த எச்சரிக்கையால் என்ன பயன்?" என்றார்.

"மாறாக, செயல்படும் மறுமொழி பொறிமுறைகள் உள்ளன, ஆனால் சிறிய அல்லது முன்கூட்டியே எச்சரிக்கை இல்லை என்றால், நாம் இன்னும் நிறைய சேதங்களைத் தணிக்க முடியும். உள்கட்டமைப்பை சில மணிநேரங்களில் மாற்ற முடியாது. நாம் அதில் கவனமாக முதலீடு செய்ய வேண்டும், அதை காலநிலை ஆதாரமாக மாற்ற வேண்டும், மக்களை மையமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News