மோசமான சுகாதார குறிகாட்டிகள் உள்ள மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு
மும்பை: மிக அதிகளவில் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதங்களைக் கொண்ட, மிகவும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய எட்டு இந்திய மாநிலங்களில் ஆறில் (அதிகாரம் பெற்ற செயல் குழு என்று அழைக்கப்படுகிறது), நாடு தழுவிய கோவிட் 19 ஊரடங்கின் போது சுகாதார மேம்பாட்டு சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளதை, பலதரப்பட்ட அரசு மற்றும் ஊடக அறிக்கைகள் பலவும் காட்டுகின்றன. ஒடிசாவை தவிர, இந்த மாநிலங்களில் நோய்த்தடுப்பு மருந்துகள், பேறு காலத்திற்கு முந்தைய பரிசோதனை (ஏ.என்.சி) மற்றும் ஊட்டச்சத்து செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன; இதில் உத்தரகண்ட் மட்டும், அதன் நோய்த்தடுப்பு சேவைகளை நடைமுறையில் வைத்துள்ளது.
மூன்று வகையான முன்னணி சுகாதார ஊழியர்களை - துணை செவிலியர் மருத்துவச்சிகள் (ANM), அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் போஷன் சகீஸ் (கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாநில கிராமப்புற வாழ்வாதார பணியின் பணியாளர்களாக இருக்கும் ஊட்டச்சத்து வழிகாட்டிகள்) ஆகியோரை ஒடிசா பயன்படுத்துகிறது. இவர்கள், சுகாதார சேவைகள் மற்றும் உணவுப்பொருட்களின் வீடுகளுக்கு விநியோகத்தை உறுதி செய்கின்றனர். ஒருசில கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஒடிசா தனது முன்னணி சுகாதார ஊழியர்களை, கோவிட் பரவலை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது.
தற்போதைய ஊரடங்கானது, பொது சுகாதார ஊழியர்களின் நகர்வுகளை தடை செய்துள்ளது, அவர்கள் சுகாதார அமைச்சகத்தின் மைக்ரோ திட்டத்தில், கோவிட் 19 பரவல் கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"கிராம சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பணிகளின் போது கோவிட் தொற்று பரவலாம் என்ற அச்சத்தால், இச்சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் எங்களது தற்போதைய வளங்கள் அனைத்தும் கோவிட் 19 தொற்றுக்கு எதிரான போராட்டம் மற்றும் கண்காணிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது," என்று, ராஜஸ்தான் அரசின் கூடுதல் சுகாதார தலைமை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறினார். நோய்த்தடுப்பு, பிறப்புக்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனை பிரசவங்கள் தேவைப்படும் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள், மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.
தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் 2007ல் தொடங்கப்பட்ட இந்த அவுட்ரீச் சேவைகள், தாய் சேய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (எம்.என்.சி.எச்.என்) சேவைகளுக்கான கிராமப்புற அணுகலை மேம்படுத்துவதாகும். கர்ப்பிணிகள் இரத்தச்சோகை மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்காக பரிசோதிக்கப்படுவதையும், உகந்த உடல் எடையை பராமரிப்பதையும், இலவச கால்சியம் மற்றும் இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுவதையும், இத்திட்டம் உறுதி செய்கின்றன.
குழந்தைகளுக்கு காசநோய் (டி.பி.), தொண்டை அழற்சி - கக்குவான் / வறட்டு இருமல்-டெட்டனஸ் (டிபிடி), போலியோ மற்றும் அம்மை நோய்களுக்கு எதிராக வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
'கிராம ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தினம்' (வி.எச்.என்.டி) வரக்கூடிய நாளில் அங்கன்வாடிகளில் (கிராமங்களில் குழந்தை பராமரிப்பு மையம்) வழங்கப்படும் சேவைகள், குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதங்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று, 2018இல் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தாய் மற்றும் குழந்தைகளுக்கான மம்தா சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்தது. இச்சேவைகள், பிறப்புக்கு முந்தைய பரிசோதனைகளில் 9.4% புள்ளி மேம்பாட்டையும், சுகாதார வசதிகளில் பிரசவங்களில் 15% புள்ளி அதிகரிப்பையும் செயல்படுத்த முடியும் என்று, அது மேலும் தெரிவிக்கிறது.
அரசுடன் இணைந்து பணிபுரியும் சுகாதார ஆலோசகர்கள், தங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறுகிறார்கள். "தற்போதைய நெருக்கடி எதிர்பாராதாதது மற்றும் துரதிர்ஷ்டவசமானது; நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஒரு போரை நடத்துகிறோம், ஆனால் மொத்த முடக்கத்தின் நன்மைகள் [குழந்தை மற்றும் தாய் ஆரோக்கியத்திற்கான] அபாயங்களை விட அதிகமாக உள்ளன, ” என்று, இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசிய கவுன்சில் மற்றும் போஷன் அப்யான் உறுப்பினர் சந்திரகாந்த் பாண்டவ் கூறினார். பயனாளிகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு வீடுதேடி உணவுப் பொருட்கள் பெறுவதை உறுதி செய்யுமாறு ஆஷாக்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் (AWW) மற்றும் ஏ.என்.எம். கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கோவிட் பணிகளுக்கு அனுப்பப்பட்ட சுகாதார ஊழியர்கள்
ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமண்ட் மாவட்டத்தில் ஆஷா மேற்பார்வையாளரான மஞ்சு குமாவத், அண்மை வாரங்களில் இப்பகுதிக்கு பயணித்த அனைவரையும் கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்குவீடு சோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். "வீட்டிலேயே தங்கியிருத்தல் மற்றும் கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஆஷாக்கள் சொல்ல வேண்டும்," என்று அவர் கூறினார். "நாங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களையும் கண்காணிக்கிறோம்" என்றார் அவர்.
சுகாதார முன்னணி ஊழியர்கள் இவ்வாறு திசை திருப்பப்படுவதால் அவுட்ரீச் திட்டங்களை முடக்குவது தற்காலிகமாக இருந்தாலும், அது லட்சக்கணக்கானவர்களை பாதிக்கும். "சுகாதார கல்வி மற்றும் கண்காணிப்பு சேவைகளை நேரடியாக சமூக உறுப்பினர்களிடம் கொண்டு வருவதற்கும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவுவதற்கும் அவுட்ரீச் திட்டங்கள், நம் நாட்டில் முக்கியமான கருவிகள்" என்று டெல்லியை சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்துவாதிகளின் வலையமைப்பான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் சுஜீத் ரஞ்சன் கூறினார். "அவுட்ரீச் ஹெல்த்கேர் என்பது ஒரு முக்கிய உத்தி; இது சுகாதார / ஊட்டச்சத்து சேவை விநியோகத்தின் முதுகெலும்பாக உள்ளது" என்று அவர் கூறினார்.
மாதிரி பதிவு கணக்கெடுப்பு அறிக்கை 2019ன்படி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியன, குழந்தை இறப்பு விகிதங்களின் தேசிய சராசரியாக 1,000 க்கு 33 என்பதைவிட அதிக விகிதங்களை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பீகாரின் குழந்தை இறப்பு விகிதம் காங்கோ குடியரசு மற்றும் மத்திய பிரதேசத்தின் விகிதம் நைஜர் நாட்டுக்கு சமம் என்று ஜூன் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
இந்த அத்தியாவசிய சுகாதார சேவைகளை நிறுத்துவது, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மார்ச் 25, 2020 வழிகாட்டுதல்களை மீறி வழக்கமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆபத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு பிறப்புக்கு முந்தைய பரிசோதனைகளை உறுதி செய்கிறது. ஆஷாக்களால் தொலைபேசி வாயிலாக அணி திரட்டப்பட்ட சிறிய குழுக்களுடன் இணைந்து அதிக நோய்த்தடுப்பு அமர்வுகளை மேள்கொள்ள அமைச்சகம் பரிந்துரைத்தது.
"ஆஷாக்கள் மற்றும் ஏ.என்.எம் ஆகியோர், ஆபத்தில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பட்டியலை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்," என்று, இந்தியா ஸ்பெண்டிடம் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆணையர் அஜய் கெரா தெரிவித்தார். “தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி, காசநோய் நோயாளிகள் குறித்தும் நேரடியாக சுகாதார மையங்களுக்கு அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். “இந்த நோயாளிகளை அடைய டெலிமெடிசின் பயன்படுத்தவும் பரிந்துரைத்துள்ளோம். நோயாளிகளை பரிசோதிக்கும் ஆஷாக்களின் தொலைபேசி கட்டணங்களை ஈடுசெய்ய மாநிலங்களை நாங்கள் கேட்டுள்ளோம்” என்றார்.
‘கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு, மரணம் அருகில்’
இந்தியாவின் பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்) -அதாவது 1,00,000 பிரசவங்களுக்கு தாய் இறப்பு- 2011-13ம் ஆண்டில் 167 இல் இருந்து 27% குறைந்து 2015-17ல் 122 ஆக குறைந்தது என்று, 2015-17 ஆம் ஆண்டின் மாதிரி பதிவு முறை அறிக்கை தெரிவிக்கிறது. குழந்தை இறப்பு விகிதம் - அதாவது 1,000 பிரசவங்களுக்கு இறப்பு - 2012ம் ஆண்டில் 42ல் இருந்து 2016ஆம் ஆண்டில் 33 ஆக குறைந்தது.
கடந்த 2016இல் தாய் இறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு பிற காரணிகளுடன், சமூக மேம்பாட்டு திட்டங்களின் பங்கையும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த விகிதம், உலக சராசரியை (29) விடவும், இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (28), வங்கதேசம் (27), பூட்டான் (26), இலங்கை (8) மற்றும் சீனா (8) ஆகியவற்றை விட அதிகமாக இருந்தது என்று, டிசம்பர் 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
ஊரடங்கின் போது, சுகாதார சேவைகளில் தடங்கல் ஏற்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பது மற்றொரு கவலை அளிக்கும் அம்சமாக மாறியுள்ளதாக, நிபுணர்கள் தெரிவித்தனர். பொதுவாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் மத்தியில் கடும் ஊட்டச்சத்துக் குறைபாடு (வளர்ச்சியின்மை) மிக அதிகமாக - முறையே 46% மற்றும் 48% உள்ளது என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவிக்கிறது. இது, தேசிய சராசரியான 38% உடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
"அங்கன்வாடிகள் துணை ஊட்டச்சத்துகளை வழங்காததால், கடும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தைகள் மரணத்திற்கு அருகில் இருக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நடுத்தர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மற்றும் மிகக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வகைக்கு செல்லக்கூடும் என்ற அச்சமும் உள்ளது," என்று, பெயர் குறிப்பிட விரும்பாத உத்திரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு இத்தகைய வளங்களை திசை திருப்புவது, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் 109 மாவட்டங்களை உள்ளடக்கிய தீவிர தடுப்பூசி திட்டமான இந்திரதனுஷையும் பாதித்துள்ளது - இவை, 70% க்கும் குறைவாகவே தடுப்பூசி பாதுகாப்பு பதிவு செய்துள்ள மாநிலங்கள். இந்த தடுப்பூசிகள் ஏ.என்.எம்.களால் நிர்வகிக்கப்படுகின்றன.
முற்போக்கான பொது சுகாதார அமைப்புக்கு பெயர் பெற்ற கேரளா கூட, கோவிட்19 காரணமாக, அதன் சில அவுட்ரிச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. "ராஷ்டிரிய பால் சுரக்ஷா காரியக்ரம் [குழந்தை பருவ சுகாதார தலையீடுகள்] இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது (குழந்தை பருவ குறைபாடுகளை கண்காணித்தல் மற்றும் சிகிச்சை அளித்தல்) மற்றும் நோய்த்தடுப்புடன் கண்காணிப்பு பகுதி ஆகியன இதனால் பாதிக்கப்பட்டுள்ளது," தெற்கு கேரளாவின் பதினம்திட்டா மாவட்டத்தின் திட்ட மேலாளர் அபே சுஷன் கூறினார். "நாம் தற்போது பரவலின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம்; சமூக அளவிற்கு இந்த பரவல் முன்னேறினால், இந்த தடை நீண்ட காலத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். காசநோய் நோயாளிகளை பற்றியும் எங்களுக்கு கவலை இருக்கிறது" என்றார் அவர்.
விரைவாக தொடரும் ஒடிசாஎவ்வாறாயினும், ஒடிசா தனது அவுட்ரீச் சேவைகளை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்து, வீட்டிற்கே உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. "இவை வாழ்வதற்கு மக்கள் தேவைப்படும் அடிப்படை சேவைகள்; எனவே அரசு இந்த சேவைகளை எவ்வாறு நிறுத்த முடியும்?" என்று ஒடிசாவின் பஞ்சாயத்து ராஜ் துறையின் திட்ட இயக்குநர் அதுல்யா சம்பதிரே கூறினார்.
ஒடிசாவில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு (வயதுக்கு குறைந்த உயரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அடையாளம்) விகிதம், 2005-06ம் ஆண்டில் 46.5%இல் இருந்து 2015-16இல் 35.3% ஆக குறைந்தது; ஆகஸ்ட் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, அதே வயதினருக்கான எடை குறைந்த குழந்தைகளின் விகிதம் 42.3% இல் இருந்து 35.8% ஆகக் குறைந்துள்ளது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல, அவுட்ரீச் சுகாதார சேவைகளையும், கோவிட்19 தொடர்பான பணிகளையும் கையாளுமாறு, மூன்று முன்னணி சுகாதார ஊழியர்களை மாநில அரசு கேட்டுள்ளது. "கூட்டமாக கூடுவதற்கு தடை செய்யப்பட்டிருப்பதால், வீடுதேடி சேவைகளை வழங்கவில்லை," என்று ஒடிசா வாழ்வாதாரத் திட்டத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி பபிதா மொஹாபத்ரா கூறினார். போஷன் சகீஸ் (தேசிய கிராமப்புற வாழ்வாதார பணியின் ஒரு பகுதி) ஆஷாக்கள் மற்றும் ஏ.என்.எம் களுடன் இணைந்து வீட்டில் சுகாதார சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக பணியாற்றுகின்றனர்.
"ஆஷாக்கள், போஷன் சகீஸ்களுடன் வீடு வீடாகச் சென்று கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோய்த்தடுப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகள் போன்ற பயனாளிகளை அடையாளம் காண்கின்றனர்," என்று, மத்திய ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் மம்தா பத்ரா கூறினார். "நாங்கள் கிராம சுகாதார மற்றும் ஊட்டச்சத்து நாட்களில் வீடுகளில் இருந்து அங்கன்வாடிகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் - முகக்கவசம் அணிந்து கொண்டு, பாதுகாப்பான இடைவெளி விட்டு வரிசையில் நிற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
ஒடிசா தனது பயணத்தைத் தொடர முடிந்ததற்கு ஒரு காரணம், அது குறைந்த எண்ணிக்கையிலான கோவிட் 19 நோயாளிகளை கண்டறியந்தது ஆகும்; நாங்கள் முன்பு கூறியது போல் - மொத்தத்தில் 61 என்ற எண்ணிக்கையுடன் கொரொனா பாதிப்பில் நாட்டில் 17வது இடத்தை (ஏப்ரல் 19 நிலவரப்படி) பிடித்ததிருந்ததாக, ஹெல்த்செக் கொரோனா வைரஸ் மானிட்டர் தகவல் தெரிவிக்கிறது.
"எங்களிடம் 4-5 மாவட்டங்களில் மட்டுமே கோவிட் பாதித்த நோயாளிகள் உள்ளனர். நாங்கள் சேகரித்த பெரும்பாலான மாதிரிகள் எதிர்மறையை சோதித்தன," என்று தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள மத்திய ஒடிசாவின் கிஷோரெனகர் மருத்துவ அதிகாரி சரோஜ் நந்தா கூறினார். "வெளியில் பயணம் செய்த நபரை போஷன் சக்கீஸ்கள் அல்லது ஆஷாக்கள் கண்டறிந்தவுடன், அதுகுறித்து மருத்துவ அதிகாரி அல்லது ஏ.என்.எம்.களுக்கு தெரிவிப்பார்கள்” என்றார்.
தெற்கு ஒடிசாவின் கோராபுட்டை சேர்ந்த ஹரப்ரியா பெஹெரா என்ற போஷன் சக்கீ, சந்தேகத்திற்குரிய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு காரணமானவர்களில் ஒருவர். "ஒரு நபர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இங்கு பயணம் செய்திருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான இடம் அவர்களுக்கு இல்லையென்றால், அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.
இந்த திட்டங்களது பயனாளிகளின் பட்டியல்கள், தற்போதைய நெருக்கடியான காலத்தில் கைக்கு வந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். "பயனாளர்களை அழைக்கவும், அவர்களின் நோய்த்தடுப்பு பதிவுகள் மற்றும் ஏ.என்.சி. சரிபார்ப்புகளை பற்றி விசாரிக்கவும் நாங்கள் இப்பட்டியலை பயன்படுத்துகிறோம். யாராவது பரிசோதனைக்கு வந்தால், நான் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆஷா தீதிக்குத் தெரிவிக்கிறேன், ”என்றார் பெஹெரா.
(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.