பிறப்புச் சான்றிதழை குடியுரிமைச்சான்று என்கிறது அரசு. ஆனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38% பேரிடம் அது இல்லை
புதுடெல்லி / பெங்களூரு: குடிமக்களின் தேசிய பதிவுக்கான குடியுரிமையை நிரூபிக்க, பிறந்ததேதி மற்றும் இடம் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கலாம் என்று அரசு கூறி இருக்கிறது. ஆனால் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக வயதானவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை என்பதை, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.
ஐந்து வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் மூன்று பேர் (62.3%), 2015-16 ஆம் ஆண்டில் பிறப்புகளை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழைக் கொண்டிருந்தனர் என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ் -4) தெரிவித்துள்ளது. இது 2005-06ல் 26.9% ஆக இருந்தது.
சமீபத்திய ஆண்டுகளில் பதிவு விகிதங்கள் மேம்பட்டுள்ளதால், 2005-க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் (இது, ஒரு நபருக்கான சட்ட அடையாளத்தின் முதல் சான்று) இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று தரவு தெரிவிக்கிறது. ஏழ்மையான குழந்தைகள், பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலின பழங்குடியினர், பள்ளிப்படிப்பு இல்லாத குடும்பங்களிடம் பிறப்புச்சான்றிதழ் இல்லாதிருக்க வாய்ப்புள்ளது என்று எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
அசாமின் என்.ஆர்.சி.யில் பயன்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழ்
பிற ஆவணங்களின் பட்டியலில், குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) தொடர்பாக பிறந்ததேதி மற்றும் பிறந்த இடத்திற்கு சான்றாக பிறப்புச் சான்றிதழ்கள் ‘ஏற்றுக்கொள்ளத்தக்கவை’ என்று அரசு கூறியுள்ளது; இது வாக்காளர் அட்டைகள், பாஸ்போர்ட், ஆதார், லைசன்ஸ், காப்பீட்டு ஆவணங்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள் மற்றும் நிலம் அல்லது வீடு தொடர்பான ஆவணங்களை “சேர்க்க வாய்ப்புள்ளது”.
இது, டிசம்பர் 20, 2019 அன்று வெளியான பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) வெளியீட்டில் கூறப்பட்டது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு பேட்டியில் - குடியுரிமையை நிரூபிக்க ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போதுமானதாக இல்லை என்று கூறியதற்கு இது முரணானது.
"பிறப்பு விவரங்கள் உங்களிடம் இல்லையென்றால், பெற்றோரைப் பற்றிய பிறப்பு விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்" என்று பிஐபி வெளியீடு தெரிவித்துள்ளது. "ஆனால் பெற்றோரின் /பாதுகாவலரின் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை".
"இது [பிறப்புச் சான்றிதழ்] குழந்தைகளுக்கான என்.ஆர்.சி.யின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் அவசியமான இணைப்பு ஆவணங்களில் ஒன்றாகும்" என்று அசாம் குவஹாத்தியை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அமன் வாதுட், மாநிலத்தில் சமீபத்தில் முடிவடைந்த என்.ஆர்.சி நடவடிக்கைகள் பற்றி கூறினார். "18 வயதிற்கு உட்பட்ட, வாக்களிக்காத, அல்லது எந்த வாரிய [பள்ளி தேர்வு] சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு, பெற்றோருடன் உள்ள இணைப்பை வழங்குவதற்கான ஒரே ஆவணம் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே" என்றார் அவர்.
பல பிறப்பு மற்றும் இறப்புகள் இன்னமும் பதிவு செய்யப்படுவதில்லை
தற்போதும் கூட பிறப்பு மற்றும் இறப்புகள், நாட்டில் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. குழந்தை இறப்புகளை பதிவு செய்வதில் மோசமான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலங்களும், குழந்தை இறப்பு விகிதத்தில் கணிசமாக அதிகமாக உள்ளன என்று ப்ரூக்கிங்ஸ் இந்தியா ஆராய்ச்சி இயக்குனர் ஷாமிகா ரவி மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ) பொருளாதாரத்தின் இணை பேராசிரியர் முடித் கபூர், டிசம்பர் 26, 2019 என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதினர்.
நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வதில் தற்போதுள்ள மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, “தற்போதுள்ள அரசு உள்கட்டமைப்புகளுடன் என்.ஆர்.சி தொடங்குவது உகந்ததல்ல. இது குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும், ”என்று அவர்கள் எழுதினர்.
பிற ஆவணங்களை பொறுத்தவரை: 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை என்றால் (அவர்களிடம் அந்த சான்றிதழ்களும் இருக்காது), பிறப்புச்சான்றிதழ் ஒன்று தான் அவர்களின் பிறப்பிடத்திற்கான ஒரே சான்று. "இறுதி வரைவு மசோதா முடிந்தபின் அசாமில், 40 லட்சம் பேர் வெளியேறினர்," என்று வாதுட் கூறினார். "இதில், ஏராளமானோர் குழந்தைகள், ஏனெனில் அவர்களின் பெற்றோரால் பிறப்புச்சான்றிதழ்களை வழங்க முடியவில்லை" என்றார் அவர்.
நாடு முழுவதும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள், பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டவர்கள். பள்ளி சேர்க்கைக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று குறிப்பிடும் கல்வி உரிமைச் சட்டம் இருந்தபோதும் தனியார் பள்ளிகளில் சேரும்போது சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று டெல்லி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தீபா சின்ஹா கூறினார். "எந்தவொரு உரிமையுடனும் பிறப்புக்கான ஆதாரத்தை இணைப்பது குறிப்பாக குடியுரிமை போன்றது, அச்சத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
பதிவு செய்யப்படாத ‘கண்ணுக்கு புலப்படாத’ குழந்தைகள்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்- 1969இன் கீழ், ஒவ்வொரு பிறப்பு மற்றும் இறப்புகளையும் 21 நாட்களுக்குள் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்; இருப்பினும், அனைத்து பிறப்புகளிலும் 84.9% மற்றும் அனைத்து இறப்புகளில் 79.6% மட்டுமே 2017 இல் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று, இந்திய பதிவாளர் ஜெனரலின் அலுவலகத்தின் சிவில் பதிவு முறையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
யுனிசெஃப் தகவலின்படி பிறப்புகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத குழந்தைகள், கண்ணுக்கு புலப்படாதவர்களாக கருதப்படுகிறார்கள்.
உலகின் 166 மில்லியன் குழந்தைகளில் பாதிக்கும் மேலானவர்களின் பிறப்பு விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை; இதில் இந்தியாவும் ஐந்து நாடுகளில் ஒன்றாகும் - மற்றவை காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் - ஆகும் என, 2019 யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில், ஐந்து வயதிற்குட்பட்ட கிட்டத்தட்ட 2.4 கோடி குழந்தைகளின் பிறப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யவில்லை என்று யுனிசெஃப் மதிப்பீடு தெரிவிக்கிறது.
பிறப்பு பதிவு என்பது குழந்தைக்கு இருப்பதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பது அந்த செயல்முறையின் சான்று, பெரும்பாலும் குழந்தைக்கான சட்ட அடையாளத்தின் முதல் மற்றும் ஒரே சான்று.
அவர்கள் கைகோர்த்துச் செல்ல வேண்டும், ஆனால் ஒரு குழந்தையின் இருப்பிடத்தைப் பொறுத்து, குழந்தை பிறப்புச் சான்றிதழ், பிறப்பை பதிவு செய்யாமல் பெறலாம்.
பிறக்கும்போதே பதிவு செய்யப்படாத ஒரு குழந்தை பின்னர் கணக்கிடப்படலாம். "அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படுவார்கள்; அவர்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே" என்று இந்திய புள்ளிவிவர நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ) கபூர் கூறினார். "பிரசவத்தின் போது அதிக குழந்தை இறப்பு விகிதம் (ஐஎம்ஆர்) மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு ஆகியவற்றுடன், பல குழந்தைகளை ஒருபோதும் கணக்கிடப்படுவதில்லை" என்றார் அவர்.
"கடந்த 2000ஆம் ஆண்டுகளில் நிறுவன பிரசவங்கள் அதிகரித்த பிறகே பிறப்பு பதிவுகள் எடுக்கப்பட்டன" என்று டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக டாக்டர் சின்ஹா கூறினார். அதற்கு முன் பிரசவங்கள் நிறுவனங்களில் இல்லாமல் பெரும்பாலாலும் வீடுகளில் அல்லது சுகாதார அமைப்புகளில் நிகழ்ந்தன; அவை பிறப்பு பதிவை கொண்டிருக்கவில்லை.
கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பலருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ்கள் இருக்காது, அல்லது வெவ்வேறு பிறந்த தேதிகளைக் காட்டும் (வெவ்வேறு அதிகாரிகளால் வழங்கப்படும், பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில்) பல ஆவணங்கள் இருக்கும். "இது எதுவுமே எந்த மோசமான நோக்கத்திற்கும் புறம்பானது அல்ல, ஆனால் அவர்களின் பெற்றோர் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால் தான்" என்று சின்ஹா கூறினார்.
எல்லா பிறப்புகளும் ஏன் பதிவு செய்யப்படவில்லை?
ஒரு மருத்துவ அதிகாரி பொறுப்பில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் பிரசவம் நிகழ்ந்தால், பிறப்பு பதிவு செய்வதற்கான செயல்முறை எளிதானது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மட்டத்திலும் பிறப்புகளை பதிவு செய்யக்கூடிய உள்ளூர் அதிகாரிகள் உள்ளனர். சமூக அளவிலான தொழிலாளர்களும் பிறப்புகளில் பதிவாளருக்கு அறிவிக்க முடியும். பிறப்புகளை பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன, வீட்டு பிரசவங்கள் கூட மற்றும் பிரசவத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 21 நாட்கள் காலத்திற்குப் பிறகும் கூட பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
நாங்கள் முன்பு கூறியது போல், இந்தியாவில் 2017இல் ஒட்டுமொத்த பிறப்பு பதிவு விகிதம் 84.9% ஆகும், இது 2008 இல் 76.4% ஆக இருந்தது என்று, சிவில் பதிவு முறை அறிக்கையின் அடிப்படையில், கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவான இந்தியாவின் 2017 முக்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விகிதம் 2000 ஆம் ஆண்டில் 56.2% ஆக இருந்தது, அதாவது 2000 இல் பிறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தங்கள் பிறப்புகளை பதிவு செய்திருப்பார்கள்.
ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பிறப்பு பதிவு விகிதத்தை தேசிய விகிதத்தை விட குறைவாகக் கொண்டுள்ளன. அவற்றில் நான்கு பெரிய மாநிலங்கள் உத்தரபிரதேசம் (61.5%), அத்துடன் பீகார் (73.7%), மத்தியப் பிரதேசம் (74.6%), மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் (78.8%) ஆகியவை அடங்கும்.
கடந்த 2017 சிஆர்எஸ் அறிக்கையில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இறப்பு மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவது பற்றிய தகவல்களைக் கொடுத்தன. போதுமான ஊழியர்கள் இல்லாதது, மென்பொருள் குறைபாடுகள் மற்றும் இணைய சிக்கல்கள் போன்ற காரணங்களால் வழங்கப்படவில்லை.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 79.4% பேர் 2015-16 ஆம் ஆண்டு நிலவரப்படி பிறப்பு பதிவு செய்துள்ள நிலையில், அந்த வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் மூன்று பேர் (62.3%) மட்டுமே பிறப்புச் சான்றிதழ் பதிவுக்கான ஆதாரங்களைக் கொண்டிருந்ததாக என்எஃப்ஹெச்எஸ் -4 தெரிவித்துள்ளது. அதாவது, ஐந்து வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளில் ஒருவர் (17.4%) அவர்களின் பிறப்புகளை பதிவு செய்திருந்தார், ஆனால் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை.
பிறப்புகள் பதிவு செய்யப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன - சில நாடுகளில் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது அல்லது குடும்பங்கள் அருகிலுள்ள பதிவு மையத்திற்கு செல்ல முடியாது.
மேலும், அரசால் வழங்கப்படும் எந்தவொரு சமூக சேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான உடனடி தேவையோ கோரிக்கையோ இல்லை. "பெரும்பாலான பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் தொலைதூர பகுதிகளில் அல்லது குறைந்த பதிவுப்பிரிவுகள் உள்ள தொலைதூரப் பகுதிகளில் வாழ்கின்றனர்" என்று யுனிசெப் இந்தியாவின் சமூகக் கொள்கைக்கான திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர், இந்தியா ஸ்பெண்டிடம் மின்னஞ்சலில் தெரிவித்தார்.
“பிறப்பு அல்லது இறப்பு - எந்தவொரு பதிவு குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால்தான் பெண் குழந்தைகள் காணாதது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது, ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பொது சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். "நீங்கள் பிறப்பை பதிவு செய்யாவிட்டால், வளர்ச்சி விகிதம், குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களின் வெற்றி அல்லது பிரசவங்களின் எண்ணிக்கை உங்களுக்குத் தெரியாது" என்றார்.
பிறப்பை பதிவு செய்யப்படாவிட்டால், குடும்பத்திற்கு பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டால், பின்னர் பிறப்பை பதிவு செய்ய முடியும் என்று கபூர் கூறினார்.
என்.ஆர்.சி வரவை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள மாலேகான் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. குஜராத் மற்றும் கொல்கத்தாவில் சூரத் மற்றும் மொடாசாவிலும் இதே போன்ற அதிகரிப்புகள் காணப்படுகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 29, 2019 செய்தி தெரிவித்துள்ளது.
அசாமிலும் பிறப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் ஏராளமாக இருந்தன. "பிறந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பித்த ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது" என்று கவுஹாத்தியைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் வாதுத் கூறினார். ஆனால் பல சந்தர்ப்பங்களில் உரிய செயல்முறை பின்பற்றப்படவில்லை; இதனால் சான்றிதழ்கள் பின்னர் ரத்து செய்யப்பட்டன மற்றும் தனிநபர்கள் என்.ஆர்.சி.-யில் இருந்து வெளியேறினர்.
பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்கள் பெரும்பாலும் ஏழ்மையான, பாதிக்கப்படக்கூடியவர்கள்
இந்தியாவில், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 77% பேர் தங்கள் பிறப்புகளைப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டிருந்தனர் என்று என்.எஃப்.எச்.எஸ் -4 தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் இது 56.4% ஆகும். இந்த எண்ணிக்கை வீட்டுச் செல்வத்துடன் ஒப்பிடும் போது குறைகிறது: பணக்கார செல்வந்தக்குழுவில் ஐந்து வயதிற்குட்பட்ட 82.3% குழந்தைகள் தங்கள் பிறப்புகளைப் பதிவுசெய்து பிறப்புச் சான்றிதழைக் கொண்டிருந்தாலும், ஏழ்மையான குழுவில் 40.7% மட்டுமே கொண்டிருந்தனர்.
மேலும், ஏழை குழுவில் அவர்களின் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட நான்கில் ஒரு குழந்தைக்கு (23%) பிறப்பு சான்றிதழ் இல்லை; இது செல்வந்த குழுவில் 10.5% ஆக உள்ளது என்று, என்.எப்.எச்.எஸ்.-4 தரவுகள் கூறுகின்றன.
பட்டியலின சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் இடையே முறையே 60.2% மற்றும் 55.6% பேர் மட்டுமே பிறப்பை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளனர்; இது, ‘பிற’ சாதிக்குழுக்களில் 71.9% என்பதைவிட குறைவாக இருப்பதை குறிக்கிறது.
மேலும், கல்வி இல்லாத தாய்மார்களின் குழந்தைகளில் ஐந்தில் இரண்டு (41.4%) குழந்தைகளில் மட்டுமே பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் இருந்தது; இது, 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த தாய்மார்களின் குழந்தைகளில் நான்கில் மூன்று (77.6%) பேர் என்பதுடன் ஒப்பிடும் போது குறைவாகும்.
"பிறப்புச்சான்றிதழ் பெற்றவர் குறைவாக இருக்கலாம்; ஏனெனில் இந்தியாவில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் [பிறப்பு] சான்றிதழ்களை பிற்கால தேதிகளில் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக தேவைப்படும் போது சேகரிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர்," என்று, மும்பையின் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவன பேராசிரியர் சந்திரசேகர், தமது தனிப்பட்ட கருத்தை தெளிவுபடுத்தினார். சில மாநிலங்களில் பிறப்பு பதிவு ஏற்கனவே 99% ஆக உள்ளது என்றும், கணக்கெடுப்புக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு பகுப்பாய்வு செய்தால் அது அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர் மற்றும் ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.