‘பணியாளர்களின் சிறந்த மன உறுதியும், கைதிகளின் நல்லெண்ணமும் தெலுங்கானா சிறை சீர்திருத்தங்களில் முக்கியமானது’

Update: 2019-11-21 00:30 GMT

ஐதராபாத்: தெலுங்கானா சிறைச்சாலைகள் ஒரு திருப்புமுனையைக் கண்டன: அதில் இருப்போரின் விகிதம் 2014 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத ஆந்திராவாக இருந்த போது, 88% ஆக இருந்தது; 2017இல் இது 76.8% ஆக குறைந்தது. சிறையில் இறப்புகள் 2014 இல் 56 என்றிருந்த எண்ணிக்கை, 2018இல் எட்டு ஆக குறைந்தது. 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாநில சிறைத்துறை தன்னை ஊழல் இல்லாதததாக அறிவித்து கொண்டது.

கைதிகளுக்காக 18 பெட்ரோல் பங்க் சிறைத்துறை அமைத்து தந்ததில் 2018-19 ஆம் ஆண்டில் அவை ரூ. 20 கோடி லாபம் ஈட்டின; இது 2014 இல் ரூ.3 கோடி என்று இருந்தது. கைதிகள் எளிதாக தொலைபேசியில் பேசமுடியும்; பார்வையாளர்களை சுலபமாக சந்திக்கலாம். கிட்டத்தட்ட 1,30,000 கைதிகள் கல்வியறிவும் பெற்றனர். கைதிகளின் குடும்பங்களுக்கு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்பட்டன. விடுதலையான கைதிகளின் மறுவாழ்வுக்காக பராமரிப்புக்கு பிந்தைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த சிறை சீர்திருத்தங்கள் டாடா டிரஸ்ட்டால் 2019 நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கையில் சிறப்புக் குறிப்பைப் பெற்றன; அகமதாபாத்தை சேர்ந்த சமூகநீதி மையம், டெல்லியை சேர்ந்த காமன் காஸ், சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி, பெங்களூரை சேர்ந்த சிவில் சமூக அமைப்பான தக்ஷ், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் சமூகப்பணி திட்டமான பிரயாஸ், மற்றும் புதுடெல்லியை சேர்ந்த விதி என்ற சட்டக் கொள்கை மையம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில், தெலுங்கானா சிறைச்சாலைகளுக்கு 13வது இடத்தை தந்தது.

சிறைத்துறை பணியாளர்களின் ஊக்கம் மற்றும் கைதிகளின் நல்லெண்ணமுமே இந்த மாற்றத்திற்கு முக்கியமானது என்று தெலுங்கானா மாநில சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. வினய்குமார் சிங் கூறினார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் தனது பதவிக்காலத்தில் இம்மாற்றங்களை அவர்கள் ஏற்படுத்தினார்.

59 வயதான சிங், ஐ.பி.எஸ். 1987 தொகுதி அதிகாரி. தற்போது ஐதராபாத்தில் தெலுங்கானா மாநில போலீஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

நீங்கள் பொறுப்பேற்றபோது தெலுங்கானா சிறைச்சாலைகளின் நிலை என்ன?

சிறை என்பது இரு பகுதிகளை உள்ளடக்கியது: கைதிகளின் நலன் மற்றும் பாதுகாப்பான காவல், இரண்டாவது, அவர்களின் சீர்திருத்தம். ஆனால், சீர்திருத்தச்சேவை என்ற அம்சம் இந்தியா முழுவதும் இல்லை. மேலும், சிறைத்துறை பணியாளர்களுக்கு சுயமரியாதை குறைவாக இருப்பதை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நான் கண்டேன். அவர்களுக்கு எந்த ஊக்கமும் இல்லை; நிதி நெருக்கடி, அதிக எண்ணிக்கையில் கைதிகள் என்று உள்ளது. கைதிகள், பணியாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை காண முடிகிறது.

இந்த சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?

முதலில் [சிறையில்] உளவியல் சூழலை மாற்ற முடிவு செய்தேன். நாங்கள் உன்னாதி திட்டத்தை [ஒருமாத நடத்தை திறன் மேம்பாட்டுத்திட்டம்] ஆரம்பித்தபோது, உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும், உளவியல் தலைவருமான சி. பீனாவை சிறை அதிகாரிகளோ அல்லது கைதிகளோ வரவேற்கவில்லை. பின்னர், இதற்கான வருந்தினார்கள். வாய்வழி தகவல் தொடர்பில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது.

இம்முறையில் கிட்டத்தட்ட 4,000 கைதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அவர்களில் 27 பேர் மட்டுமே [மீண்டும் குற்றம் செய்து] சிறைக்கு திரும்பி வந்தனர். நாங்கள் 15 கிளை சிறைகளை, கைதிகள் இல்லாததால் மூடிவிட்டோம். எவ்வித ஊக்கமும் இல்லாமல் நம் மக்கள் எவ்வித ஊள்ளீடும் பெற முடியாது என்று நான் நினைத்தேன்.

கடந்த 2017இல் இந்தியாவில் 1,412 சிறைகளில் 4,50,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு 611 திருத்தும் அதிகாரிகள் (நலத்துறை அதிகாரிகள், உளவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள்) இருந்தனர். தெலுங்கானாவில் 5,500 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒருவர் மட்டுமே இருந்தார். ஒவ்வொரு 200 கைதிகளுக்கும் ஒரு திருத்தும் அதிகாரி மற்றும் ஒவ்வொரு 500 பேருக்கும் ஒரு உளவியலாளர் / ஆலோசகர் தேவை என்று, மாதிரி சிறைச்சாலை கையேடு- 2016 தெரிவிக்கிறது. ஏன் இத்தகைய இடைவெளிகள் உள்ளன?

நிதி நெருக்கடி ஒரு காரணம். இரண்டாவது, விழிப்புணர்வு [இல்லாமை]. நான் இத்தகைய ஓட்டைகளை அடைக்க முயற்சித்தேன்.

ஆனாலும், தெலுங்கானாவில் ஒரே ஒரு திருத்த ஊழியர் மட்டுமே இருந்தார். அது ஏன்?

ஆமாம். அதனால் எந்த மாறுபாடும் இல்லை. ஏனெனில் நாங்கள் கூடுதல் முயற்சிகளை [உன்னாதி திட்டத்தில் உள்ளது போல் ஆலோசகர்கள்] வழங்கியுள்ளோம்.நிரந்தர பட்டியலில் யாரையாவது வைத்திருப்பதை விட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறை ஊழியர்களை பற்றி பேசினீர்களா?

சிறை ஊழியர்கள், மற்றும் கைதிகளின் நல்லெண்ணம் - நாம் அவற்றை வெல்ல வேண்டும். இல்லையெனில், அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். இதில் அவர்களுக்கும் பங்கு உண்டு.

சிறை கட்டிடங்கள் புது வடிவம் பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். கைதிகள் 24x7 நேரமும் அங்கேயே இருப்பதால் [அவற்றை சரிசெய்ய] அவர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால் ஒரு வருடத்தில் சிறைகளே மாறிவிட்டன. இங்கு வருகை புரிந்த பல மாநிலக்குழுக்கள், வங்கதேச தூதுக்குழு மற்றும் இலங்கை சிறை அதிகாரிகள், இதை [சிறை] ஒரு ரிசார்ட் போல் தெரிகிறது என்றனர்.

சிறை ஊழியர்களின் குடியிருப்புகளை சரிசெய்தோம். அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேன்களை வழங்கினோம். சிறை ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன் தந்தோம். கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களிடம் லஞ்சம் வாங்க வேண்டாம் என்று சொன்னோம். எந்தவொரு சிறை அதிகாரி மீதும் ஊழல் புகாரை நிரூபிக்கும் எவருக்கும் ரூ.10,000 வெகுமதியை அறிவித்தேன். இது கைதிகளிடம் எங்கள் மீது நல்லெண்ணத்தை அளித்தது.

ஊழல் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தோம். அவர்களை இடைநீக்கம் செய்தல், பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கினோம்.

அதன் பிறகும் உங்களுக்கு ஏதேனும் புகார்கள் வந்தனவா?

ஆமாம். நானும் வெகுமதிகளை வழங்கினேன். ஆனால், மிகக் குறைவான [இதுபோன்ற நிகழ்வுகள்] இருந்தன. அதற்கு முன்பாக நாங்கள் நிறைய களப்பணி செய்தோம். ஒரு கால்சென்டர் வாயிலாக, சிறையில் இருந்து விடுதலையான கைதிகளின் அனுபவத்தை கேட்டறிந்தோம்.

இதன் ஆரம்பத்தில், நாங்கள் பல உள்ளீடுகளை பெற்றோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். இது, ஊழல் செய்பவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது.

கைதிகளின் நல்லெண்ணத்தை எப்படி பெற்றீர்கள்?

நாங்கள் உணவின் தரத்தை மேம்படுத்தினோம். கைதிகளுக்கு வட்டி இல்லாத கடன் தந்தோம். தொலைபேசி அழைப்பு பயன்பாடு மற்றும் உறவினர் சந்திப்புகளை எளிதாக்கினோம். எனவே, மூடப்பட்ட பாட்டிலில் சிக்கிக் கொண்டது போல், இங்கு இருக்கிறோம் என்ற உணர்வு கைதிகளில் போய்விட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் சிறைக்குள் கைதி வன்முறை என்ற ஒரு சம்பவத்தை கூட நாங்கள் கண்டதில்லை. அதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு, கொலை, சண்டைக்களமாக இவை இருந்தன.

கைதிகளை பயனுள்ள வகையில் ஈடுபடுத்துவதே எங்களின் முக்கிய வேலை. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து சிறைகளில் தொழிற்பணி சிறப்பாக செயல்படவில்லை. மூலப்பொருட்கள் கிடைக்காது. நிதி ஒதுக்கீடு வரும் நேரத்தில், பாதி ஆண்டுகள் ஓடிவிடும். அதன் பிறகு, அந்த நிதியை திருப்பித் தர வேண்டும்.

நான் இத்துறைக்கு வந்தபோது, மாநில சிறைச்சாலைகள் சுமார் ரூ. 3 கோடி லாபத்தில் இயங்கின. நான் வெளியேறும்போது, நான்கு ஆண்டுகளில் இது ரூ. 20 கோடியாக மாறியது. இந்தாண்டு அவர்கள் ரூ. 40 கோடி லாபத்தை ஈட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

எனது திட்டம், 2020 ஆண்டுக்குள் [சிறைத்துறை] தன்னிறைவை அடைய வேண்டும் என்பது தான்.

நாட்டின் எழுத்தறிவின்மை விகிதத்தில் தெலுங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. தகுதியான பார்வையாளர்கள், கற்பவர்கள் நம்மிடம் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 1,30,000 கல்வியறிவு இல்லாத அல்லது அரைகுறையாக கற்றவர்களை, கல்வியறிவு பெறச் செய்திருக்கிறோம். இதற்காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.

கைதிகள் குறைவால் 15 கிளை சிறைகள் மூடப்பட்டதாக கூறினீர்கள். தெலுங்கானாவின் சிறைகள், நாட்டின் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கைதி விகிதமாக டிசம்பர் 2017 நிலவரப்படி 76.8%ஐ கொண்டிருந்தன. டிசம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2017க்கு இடையில், 88% என்றிருந்த இந்த எண்ணிக்கை எப்படி இவ்வளவு சரிவை சந்தித்தது?

கைதிகளின் மறுவாழ்வு திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தினோம்: விடுதலயான கைதிகளால் நடத்த பெட்ரோல் பங்க், சிறை தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள், ஆயுர்வேத அழகு நிலையங்கள் போன்றவை திறந்தோம். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு சில வழிகளை செய்து தராவிட்டால், மீண்டும் குற்றச்செயல்களுக்கு திரும்பிவிடுவார்கள்.

நான், பராமரிப்புக்கு பிந்தைய சேவைகள் என்ற கருத்தையும் தொடங்கினேன். விடுதலை கைதிகளுக்கு உளவியல் ஆலோசனை தர யாரோ ஒருவர் இருக்க வேண்டும். அவர்களுக்கும் வேலை, போலீசார் அல்லது குடும்பத்தால் நெருக்கடி என்று ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றன.

அனைத்து தீவிர குற்றவாளிகளையும் பட்டியலிட்டு, அவர்களை தொடர்பு கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருவரை நியமித்தோம். அவர்களில் பெரும்பாலோர், குற்றங்களைச் செய்யவில்லை என்றாலும், போலீசார் தங்களை துன்புறுத்தியதாக கூறினார். பல சந்தர்ப்பங்களில், அவர்களின் கூற்றை ஆதரித்தோம். இதற்கு நேரம் பிடித்தது; ஆனால் மெதுவாக தெலுங்கானாவில் கைதிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

பெட்ரோல் பங்க் பற்றி குறிப்பிட்டீர்கள் - அவ்வாறு எத்தனை திறக்கப்பட்டன?

18 பங்க்குகள் தொடங்கினோம். அரசு திடீரென என்னை வெளியேற்றும்போது, மேலும் 12 தொடங்க நான் திட்டமிட்டிருந்தேன். 100 பெட்ரோல் பங்க் தொடங்க வேண்டும் என்பதே எனது எண்ணம். நாங்கள் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் போலவே பணியாற்றினோம். வேலை மேளாக்களை [கண்காட்சிகள்] ஏற்பாடு செய்தோம். இதில் பல நிறுவனங்களை அழைத்தோம்.

பெட்ரோல் பங்க்குகள், சிறைத்துறை நிதியை எவ்வளவு உயர்த்தின?

இது பணம் சம்பாதிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தொழில் மட்டுமல்ல. விடுதலை கைதிகளின் மறுவாழ்வுக்காக இதை செய்ய விரும்பினோம். கைதிகளுக்கு சேவை செய்வதற்கு சில வேலைகளையும் வழங்கினோம்.

தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தினமும் 12 மணிநேர வேலைக்கு ரூ.7,000 - ரூ. 8,000 சம்பளம் தந்தனர். நாங்கள் கிராமப்புறங்களில் ரூ.12,000; ஐதராபாத்தில் ரூ.15,000 என, தினமும் எட்டு மணி நேரப்பணிக்கு மாத ஊதியத்தை தந்தோம். நாங்கள் ஏன் அதிக பணம் தந்தோம்? அவர்களை மறுவாழ்வு செய்து சீர்திருத்தம் செய்வதற்காகத்தான். இது இறுதியில் சமூகத்திற்கு உதவும். அவர்கள் மீண்டும் குற்றம் செய்ய மாட்டார்கள்.

இது ஒரு பிளாக்பஸ்டர் [திட்டம்] என்று நிரூபிக்கப்பட்டது - இது அனைவராலும், குறிப்பாக பெண் கைதிகளால் பாராட்டப்பட்டது.

"2021 பட்ஜெட்டில் சிறைத்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தேவைப்படாது என்று நம்புகிறோம்," என்று பிப்ரவரி 2018 இல் நீங்கள் ஊடகங்களில் தெரிவித்தீர்கள். சிறைத்துறைக்கு 2014-15 முதல் 2017-18 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ.112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை நீங்கள் தொழில்துறை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இலாபத்தை ரூ.20 கோடியில் இருந்து ரூ. 100 கோடியாக உயர்த்த என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

முதலில், நாங்கள் 100 பெட்ரோல் பங்க் தொடங்க விரும்பினோம். அடுத்து, மாநிலத்தின் 585 மண்டலங்களில் (துணை மாவட்டங்கள்) சிறை தயாரிப்புகளுக்காக 1,130 விற்பனை நிலையங்களை அமைக்க விரும்பினோம். முன்பு, சந்தைப்படுத்துதல் வாய்ப்புகளை அவர்கள் கண்டறியவில்லை. நாங்கள் அதை உருவாக்கி தந்ததும் உற்பத்தி அதிகரித்தது. பின்னர், ஆயுர்வேத அழகு நிலையங்களில் இருந்தும் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 100% வளர்ச்சியை கண்டோம். எனவே, இந்த ஆண்டு ரூ .40 கோடி; அடுத்த ஆண்டு ரூ .80 கோடியை எட்டியிருப்போம்.

கைதிகளின் குடும்பங்களுக்கு வட்டி இல்லாத கடன்களை பெறுவதற்கான நடைமுறை என்ன? எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?

ஒரு கைதியின் மீதமுள்ள தண்டனை காலத்தை பார்ப்போம். அவர் அந்த காலத்திற்குள் தான் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சிறை தொழில்களில் பணியாற்றி, அதை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. தகுதியை பார்த்து, சிறை கண்காணிப்பாளர் [தொகையை] எங்களுக்கு பரிந்துரைப்பார்.

கைதிகளில் 80-90% பேர் மிக ஏழ்மையானவர்கள். ரூ. 20,000 கூட அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய தொகையாகும். எந்த வங்கியும் அவர்களுக்கு கடன் கொடுக்க முன்வராது. ஆனால், நாங்கள் எந்தவொரு பிணையும் இல்லாமல் அவர்களுக்கு கடன் வழங்கினோம்.

சுமார் 200-300 பேர் [கடன்களை] பெற்றனர். பெரும்பாலும், ஆயுள் தண்டனை கைதிகள் தான் இதை பயன்படுத்தி கொண்டனர். குறுகிய கால கைதிகள், இதற்கு தகுதி பெறவில்லை. ஏனெனில் அவர்களின் சிறைக்காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது எஞ்சியிருக்க வேண்டும். விசாரணை கைதிகள் வேலை செய்ய இயலாது; அவர்களால் [கடனை] திருப்பிச் செலுத்தவும் முடியாது.

இத்தனை முயற்சிகளையும் மீறி, தெலுங்கானாவின் குற்றங்களின் விகிதம் - இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 6.1% மற்றும் சிறப்பு உள்ளூர் சட்டங்களின் கீழ் 5.8% -தேசிய சராசரியைப் போன்றே உள்ளது. இது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

குற்றங்கள் குறையத் தொடங்கின; ஆனால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் அல்ல. எல்லா சிறைகளையும் சில காலத்தில் படிப்படியாக காலி செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 10 ஆண்டுகளில் அல்லது அதற்கு அப்பால், சிறைகளில் யாரும் இருக்க மாட்டார்கள்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் அதிகம் இருந்தன. இதனால் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இந்த நிகழ்வுகளை குறைத்தால் அந்த மாற்றத்தை காண்பீர்கள்.

சமீபத்திய அறிக்கையானது, தெலுங்கானா சிறைகளில் “இறப்பு வியத்தகு அளவில் குறைந்துள்ளது - 2014 இல் 56 என்றிருந்தது, 2018 இல் 8 ஆக குறைந்தது” என்று பாராட்டுகிறது. இது எவ்வாறு எட்டப்பட்டது. இதை மேலும் எவ்வாறு குறைக்க முடியும்?

கைதிகளில் உடல் நிலையை அறிய முதலில் அவர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்-அப்களை ஏற்பாடு செய்தேன். இரண்டாவதாக, சிறையில் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்தோம். உடல் பயிற்சி, அணிவகுப்புகள் மற்றும் பிற வகுப்புகள் என, எப்போதும் அவர்களை சுறுசுறுப்பாகவும், அர்த்தமுள்ள பணிகளிலும் ஈடுபடுத்தினோம். புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கஞ்சா, பீடிபோன்றவற்றை எளிதில் கடத்தவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தோம்.

இவை அனைத்தும் மரணங்களை குறைக்க உதவியது. நாங்கள் எந்த நிதியும் செலவிடாமல் இதை அடைந்தோம்.

ஐதராபாத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கு 2017இல் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக, அவர்களை "ஆனந்த ஆசிரமங்களில்" (மகிழ்வு முகாம்கள்) அடைத்து வைத்தது விமர்சனத்துக்குள்ளானது. சரியான செயல்முறையை பின்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி உங்கள் கருத்துகள்?

ஐதராபாத் நகரம், பிச்சைக்காரர்கள் நிறைந்தது. பார்வையாளர்கள் இதை பிச்சைக்காரர்களின் நகரம் என்று அழைப்பார்கள். பிச்சைக்காரர் இல்லாத நகரமாக்க முடிவு செய்தேன்.

சிலர் தொழில்முறை பிச்சைக்காரர்கள் உள்ளனர்; அவர்கள் பிச்சை எடுக்கத் தேவையில்லை. இன்னும் சிலருக்கு அவர்கள் பிச்சைக்குத் திரும்ப மாட்டார்கள் என்று [அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்] ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டியிருந்தது. பிச்சை தடுப்பு சட்டம் தெலுங்கானாவில் நடைமுறையில் இருப்பதற்கான அறிவிக்கை வந்தது. எனவே, நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்க விரும்பினோம்.

அவர்கள் தெருக்களில் இருந்து விரட்டப்பட்டதும், யாராவது அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் யார் என்று நமக்கு தெரியாது. அவர்கள் மறைந்துவிட்டால் அல்லது அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ, நம்மீது தவறு காண்பார்கள்.

காப்பகங்களில் பலர் திறமைகளை வளர்க்க தொடங்கினர். அவர்களில் பெரும்பாலோர் தொழுநோய் அல்லது தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. [இது] மனிதகுலத்திற்கான உச்சபட்ச சேவையாகும்.

நாங்கள் சுமார் 15 கிளை சிறைகளை மூடினோம். அவற்றில் இரண்டு, மூன்று அல்லது நான்கு கைதிகளே இருந்தனர். ஆதரவற்ற பெண்கள், முதியவர்கள், அனாதைகள் ஆகியோருக்கு நாம் ஏன் அவற்றை தங்குமிடங்களாக மாற்ற முடியாது? சிறைத்துறைக்கு ஆயிரக்கணக்கானவர்களை தங்க வைப்பதில் போதிய நிபுணத்துவம் உள்ளது. இது வேறு எந்த அமைப்பிலும் (நகராட்சி உட்பட) இல்லை.

சைனிக் [பாதுகாப்பு சேவைகளில் நுழைய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்] பள்ளிகளில் உள்ளது போல் உடல் பயிற்சி மற்றும் அணிவகுப்புகளில் - அவர்களை ஈடுபடுத்த ஒரு விரிவான தொகுப்பை நாங்கள் தொடங்கினோம். அவர்கள் பொழுதுபோக்கு வகுப்புகள் மற்றும் தார்மீக [அறிவியல்] வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். மாலையில் யோகா, விளையாட்டு வகுப்புகள் உள்ளன.

எல்லோரும் தாமாக முன்வந்து [தங்குமிடம்] வந்ததாக ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்கள்.

இந்த அறிவிப்புகள் எவ்வளவு தூரம் தாமாகவே தரப்பட்டவை?

அவர்களில் பெரும்பாலோர் தயாராக இருந்தனர். அவர்களுக்கு இரு வாய்ப்புகள் இருந்தன: ஒன்று நீங்கள் ஆசிரம தங்குமிடத்திற்கு செல்ல வேண்டும் அல்லது எங்களுடன் வர வேண்டும். ஆனால், நீங்கள் குறுக்கு வழியில் செல்ல முடியாது. அப்படி செய்தால் உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்பது தான்.

அது உண்மைதான், ஆனால் வழக்கு பதிவு செய்யாமல் தடுத்து வைப்பது சிக்கலானது அல்லவா?

அவர்கள் ஒன்றும் தடுத்து வைக்கப்படவில்லை. நாங்கள் கைதிகளின் அறிவிப்புகளை எடுத்துக்கொண்டோம். இப்போது யார் வேண்டுமானாலும் இது தன்னார்வமாக இல்லை என்று கூறலாம்; ஆனால் இது சர்ச்சைக்குரியது. உங்களிடம் ஆவண ஆதாரங்கள் இல்லாவிட்டால் யாரையும் அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் இங்கு கொண்டு வரப்படுகிறார்கள், ஆலோசனை வழங்கப்படுகிறது. பின்னர் அவர்கள் [தாங்களாகவே] விடப்படுகிறார்கள்.

சுமார் 90% மக்கள் அங்கே தங்குகுவதற்க விரும்பினர். அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்ற வாதத்தைப் பொருத்தவரை, [தங்குமிடத்தில்] ஒரு போலீஸ்காரர் கூட இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள் - கிட்டத்தட்ட, சிறை ஊழியர்களும் கிடையாது. அனைவரும் தன்னார்வலர்கள். மேலும் வாயிலில் யாரும் காவலுக்கு நிற்பதுகூட கிடையாது.

ஆனால், யாராவது அவர்களை அழைத்துச் செல்லும் வரை அவர்கள் வெளியேற முடியாது தானே.

அவர்கள் செல்ல விரும்பினால், அவர்களால் அது முடியும். அது அவர்களின் சுதந்திரம். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாராவது வர வேண்டும் என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தினோம். இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பிச்சைக்காரர்கள் அல்லாதவர்கள் அதே நாளில் அழைத்து செல்லப்பட்டனர்.

(மாதவபெட்டி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த ஆசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News