காற்று மாசுபாடு 2019ல் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் புதிதாக பிறந்த ஒரு குழந்தையைக் கொன்றது

Update: 2020-10-26 00:30 GMT

புதுடெல்லி: பிறந்த முதலாவது மாதத்திற்குள் இந்தியாவில் சுமார் 1,16,000 கைக்குழந்தைகள், காற்று மாசுபாட்டால் இறந்ததாக  உலகெங்கிலும் சுகாதார மாசுபாட்டின் சுமை குறித்த புதிய உலகளாவிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

குழந்தைகளின் இறப்பில் பாதிக்கும் மேற்பட்டவை, வெளிப்புற பி.எம். 2.5 (மனித தலைமுடியை விட 30 மடங்கு மெல்லிய, இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடிய காற்றில் உள்ள துகள்கள்; இவை கடும் உடல்நல கேட்டை ஏற்படுத்துகின்றன) காரணமாகவும், வீட்டு உட்புற காற்று மாசுபாடு ஏற்படுத்தும் கரி, மரம் மற்றும் சாணம் போன்ற சமையலுக்கு பயன்படுத்தும் திட எரிபொருட்கள் தொடர்புடையதாகவும் இருந்ததாக, அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் 2020 அறிக்கை (SoGA 2020) கண்டறிந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிந்தனைக்குழுவான ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காற்று மாசுபாடு ஏற்படுத்திய உலகளாவிய தாக்கம் குறித்த முதலாவது விரிவான பகுப்பாய்வு என்று கூறியுள்ளது.

எடை குறைந்த குழந்தை பிரசவம், குறை பிரசவம் போன்றவை இளம் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையவை; இந்த சிக்கல்களுக்கு கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் காற்று மாசுபாட்டின் நேரடி விளைவுகளே காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளன. எடை குறைந்த பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை பருவ நோய்த்தொற்றுகள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகம். குறைபிரசவ  குழந்தைகளின் நுரையீரலும் முழுமையாக உருவாகி இருக்காது. குழந்தை மரணம் மற்றும் காற்று மாசுபாடு மற்றும் பல இந்திய (இங்கே) மற்றும் சர்வதேச (இங்கே) ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்த ஆதாரங்கள் பெருகி வருகின்றன (இங்கே மற்றும் இங்கே).

"குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாடு அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தையும், வளர்ந்த பிறகு உற்பத்தித்திறனையும் குறைக்கிறது," என்று பரிவு பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் (r.i.c.e) நிர்வாக இயக்குனர் டீன் ஸ்பியர்ஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆனாலும், குழந்தைகளது  காற்று மாசுபாட்டின் விளைவுகள், அவர்களின் தகுதியான கவனத்தை ஈர்க்கவில்லை" என்றார். ஸ்பியர்ஸ் இந்தியாவில் குழந்தைகள் மீது காற்று மாசுபாடு ஏற்படுத்து தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்,  இது தொடர்பாக ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

குழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் அவர்களது பெரிய வயது பொருளாதார உற்பத்தித்திறனை நேரடியாக பாதிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு காற்று மாசுபாட்டை ஒரு பொருளாதாரச் செலவை ஏற்படுத்துகிறது, இந்த சிக்கலை எதிர்கொள்வது ஒரு பொருளாதார கொள்கையாக இருக்கலாம் என்று ஸ்பியர்ஸ் கூறினார். அவரது ஆராய்ச்சி - அவரது நூலில் இடம் பெற்றுள்ளது - காற்று மாசுபாடு குறிப்பாக மிக மோசமாக இருந்த இடங்களிலும், அந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளும், அதே வட்டாரத்தில் மாசுபாடு குறைவாக இருந்தபோது  பிறந்த குழந்தைகளைப்போல உயரமாக வளரவில்லை என்று கண்டறிந்துள்ளது.

"ஒரு குழந்தையின் ஆரோக்கியம் ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது, குறிப்பாக தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக இந்த புதிய சான்றுகள் கூறுக்ன்றன" என்று, ஹெல்த் எபக்ட்ஸ் நிறுவனத்  தலைவர் டான் க்ரீன்பாம் அக்டோபர் 21 அறிக்கையில் தெரிவித்தார். ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவனம் 2017 முதல் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) குளோபல் பார்டன் ஆஃப் டிசீஸ் திட்டத்துடன் இணைந்து வருடாந்திர சோகா அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

"வீடுகளில் மோசமான தரத்தில் உள்ள எரிபொருட்களின் பயன்பாட்டில் மெதுவான மற்றும் நிலையான குறைப்பு ஏற்பட்டாலும், இந்த எரிபொருட்களில் இருந்து வெளிப்படும் காற்று மாசுபாடு, இளம் வயது குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கிய காரணமாக தொடர்கிறது" என்று க்ரீன்பாம் மேலும் கூறினார்.

இந்தியாவில், வெளிப்புற மற்றும் வீட்டு காற்று மாசுபாட்டிற்கான நீண்டகால வெளிப்பாடு, அனைத்து வயது தரப்பினருக்கும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கான  நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, அதன் மூலம், 2019ம் ஆண்டில் 16.7 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு பங்களித்ததாக, சோகா 2020 அறிக்கை தெரிவித்தது.

உலகளவில் 2019ம் ஆண்டில் 66.7 லட்சம் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு  பங்களித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உலகளாவிய இறப்புகளில் கிட்டத்தட்ட 12% ஆகும். 2019ம் ஆண்டில் உலகளவில் முன்கூட்டியே மரணத்திற்கான நான்காவது முக்கிய ஆபத்து காரணியாக காற்று மாசுபாடு இருந்தது, இது உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு மற்றும் மோசமான உணவு ஆகியற்றை மிஞ்சிவிட்டதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

உலகின் பல நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா, 2010-19ம் ஆண்டுகளுக்கு  இடையிலான கடந்த தசாப்தத்தில், தூய்மையான சமையல் எரிபொருட்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் வீட்டு காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றத்தைக் காட்டி இருந்தாலும், வெளிப்புற அல்லது சுற்றுப்புற காற்று மாசுபாட்டைக் கையாளும் அதன் நடவடிக்கைகள், அதே காலகட்டத்தில் தேக்க நிலையில் தான் இருந்தன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஒட்டுமொத்த வெளிப்புற காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டில், இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதாக (மக்கள்தொகையில் இருந்து கணக்கிடப்பட்ட வருடாந்திர வெளிப்புற காற்று மாசுபாடு செறிவு பற்றி நாங்கள் பின்னர் விளக்குகிறோம்), அறிக்கை கூறியது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் 1,15,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட சூழலில், இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. இதயம் மற்றும் நுரையீரல் நிலைமைகள் மோசமாக உள்ளவர்கள் கோவிட்-19ன் கடுமையான வடிவத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா குளிர்காலத்தை நோக்கி நகர்கிறது, இது ஏற்கனவே காற்று மாசுபாட்டால் மோசமாகி இருக்கும் பல இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் , ஏற்கனவே அதிக அளவில் காற்று மாசுபாடு மற்றும் புகைவெளிப்பாடு அதிகமுள்ளது, குறிப்பாக வடக்கு பகுதிகளில்.

கிடைக்கக்கூடிய சான்றுகளானது காற்று மாசுபாடு மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் அபாயத்தை தெளிவாக இணைத்துள்ளதால், குளிர்கால மாதங்களில் அதிக அளவு காற்று மாசுபட்டு, கோவிட்-19ன் தாக்கங்களை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளதாக, ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சிக்கு காற்று மாசுபாடு தடைபடுகிறது

கடந்த 2019ம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 5,00,000 குழந்தை இறப்புகளுக்கு காற்று மாசுபாடு பங்களித்தது. இந்தியாவில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் அனைத்து காரணங்களில் ஐந்தில் ஒரு பங்கு காற்று மாசு காரணமாக இருக்கலாம். இந்த விகிதம் அதிகபட்சமாக 30% என, ஆப்ரிக்க துணை கண்டத்தில் உள்ளது.

முதல் மாதம்  என்பது, ஏற்கனவே புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பாதிக்கப்படக்கூடிய நேரம்.  ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் வளர்ந்து வரும் விஞ்ஞான சான்றுகள், கர்ப்ப காலத்தில் துகள்ளால் காற்று மாசுபடுவதால் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பு மற்றும் குறைப்பிரசவம் ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது, இது பிறந்த குழந்தைகளின் பெரும்பான்மையான இறப்புகளுக்குக் காரணமாகும்.

குறைந்த எடையுள்ள பிரசவம் என்பது, பிறக்கும் போது 2.5 கிலோவுக்கும் குறைவாக குழந்தை எடை கொண்டிருக்கும் என இந்த ஆய்வு வரையறுக்கிறது, அதே நேரத்தில் குறைபிரசவம் என்பது பிறப்பு 37 வார கர்ப்பத்திற்கு முன்பே குழந்தை பிறப்பு என  வரையறுக்கப்படுகிறது (குழந்தை தாயின் வயிற்றில் சுமந்து செல்லும் காலம்). கர்ப்பத்தின் முழு காலம் 38 முதல் 40 வாரங்கள் ஆகும்.

இந்த நிலைமைகள்,  குறைபிரசவ குழந்தைகள் பெரும்பாலும் சிறியவையாக இருப்பதால், அதிக இறப்பு விகிதம் அல்லது நீண்டகால குறைபாடுகள் அதிக ஆபத்துடன்  குழந்தைகளுக்கு பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக,  அவை குறை சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் பிற தீவிர நோய்த்தொற்றுகள் மற்றும் மூளை பாதிப்பு மற்றும் வீக்கம், இரத்தக் கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அதிக ஆபத்துடன் தொடர்புடையவை. 

இத்தகைய ஆபத்துக்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைகளை பின்தொடரக்கூடும். "இந்த குழந்தைகள் இளம் பருவத்தில் உயிர் பிழைத்தாலும் சிறுவயது முழுவதும் குறை  சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்று நோய்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் பெரிய நாள்பட்ட நோய்களுக்கான அதிக ஆபத்தில் உள்ளன" என்று ஆய்வு தெரிவிக்கிறது.

"பாதகமான கர்ப்ப விளைவுகளிலும், புதிதாக பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திலும் காற்று மாசுபாட்டின் தாக்கங்களை களைவது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள  நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது" என்று,  கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக காற்று மாசுபாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவு குறித்து விரிவான பணிகளைச் செய்த சுதந்திர நிபுணர் கல்பனா பாலகிருஷ்ணன் கூறினார். "இது [கர்ப்பப்பையில் கருவில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை களைவது] நாடுகளுக்கு முக்கியமானது, ஏனெனில் எடை குறைந்த குழந்தை பிரசவம், குறைப்பிரசவம் மற்றும் குழந்தை வளர்ச்சியின்மை அதிகமாக இருப்பதால் மட்டுமின்றி, இந்த பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இது வழிநடத்தக்கூடிய உத்தி தலையீடுகளின் வடிவமைப்பை அனுமதிக்கிறது" என்றார்.

காற்று மாசுபாட்டைக் கையாள்வதில் இருக்கும் ஒரு சிக்கல், அது முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாதது என்பது தான் என்று ஸ்பியர்ஸ் கூறினார். "அதற்கு பதிலாக பல கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கண்கவர் கொள்கைகளை அறிவிக்கிறார்கள், இது நீடித்த இந்த அச்சுறுத்தலைத் தீர்க்காமல் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது," என்று, அவர் இந்தியாவின் கொள்கைகளை பற்றி கூறினார்.

பி.எம். 2.5 மாசுபாட்டில் இருந்து நோயின் சுமை

வருடாந்திர காற்று மாசுபாட்டின் அளவை மதிப்பிடுவதற்கு, சோகா அறிக்கை பிஎம் 2.5ஐ ஒரு குறிகாட்டியாகப் பயன்படுத்தியது. வாகனங்கள், நிலக்கரி பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழில்துறை நடவடிக்கைகள், கழிவுகளை எரித்தல் மற்றும் பல மனித மற்றும் இயற்கை மூலங்களில் இருந்து உமிழப்படுவது, பல ஆண்டுகளில் பிஎம் 2.5 அளவை வெளிப்படுத்தி, இருதய, சுவாசத்தில் இருந்தும் மற்றும் பிற வகையான நோய்களில் இருந்தும் இறப்பு விகிதத்தை மிகவும் உறுதியான மற்றும் வலுவான முன்னறிப்பு செய்து வருவதாக ஆய்வு கூறியது.

கடந்த 2019ம் ஆண்டில் பிஎம் 2.5ன் வெளிப்புற உயர் சராசரி நிலைகளின் வெளிப்பாடுகள் இந்தியாவில் 980,000 இறப்புகளை ஏற்படுத்தின - கிட்டத்தட்ட 60% காற்று மாசுபாடு-காரணமான இறப்புகள். உலகளவில், 2019ல் இதுபோன்ற 41.4 லட்சம் இறப்புகள் நிகழ்ந்தன.

காற்று மாசுபாட்டின் சுகாதாரச்சுமை மிகவும் மாறுபட்ட மக்கள்தொகை அளவுகள் மற்றும் மக்கள்தொகையில் வயதான மற்றும் இளையோரின் விநியோகம் நாடுகளுக்கு நாடு வேறுபடுவதால், இந்த ஆய்வு வயது நிர்ணய அடிப்படையில் காற்று மாசுபாட்டை -ஒரு நிலையான விநியோகத்தின் அடிப்படையில் 100,000 மக்கள்தொகைக்கு இறப்புகளின் அடிப்படையில் இறப்பு விகிதங்கள் வயது பிரிவுகளில் மக்கள் தொகையை கணக்கிடுகிறது. இது நாடுகளிடையே நேரடி ஒப்பீடுகளை அனுமதிக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டில், இந்தியாவின் வயது-தரப்படுத்தப்பட்ட பிஎம் 2.5- காரணமான இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 96 இறப்புகளில் மிக உயர்ந்ததாக இருந்தது. காசநோய், எச்.ஐ.வி, மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட பல பெரிய தொற்று நோய்களுக்கான 100,000 மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 75 என்ற இறப்பு விகிதத்தை விட இது அதிகமாக இருந்தது, உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளைக் காட்டியது.

இந்தியாவின் மொத்த இறப்புகள் பிஎம் 2.5 க்கு காரணமாக உள்ளன, இது 2019ம் ஆண்டில் 980,000 இறப்புகளாக இருந்தது, 2010 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு  இடையில் சுமார் 61% அல்லது 373,000 இறப்புகள் அதிகரித்ததாக  ஆய்வு  (கீழே உள்ள விளக்கப்படத்தை காண்க) கூறியது. இந்த போக்கு இந்தியாவின் காற்றில் ஆண்டுதோறும் பிஎம் 2.5ன் உயர் செறிவு மற்றும் கடந்த தசாப்தத்தில் அதன் அதிகரிப்புக்கு ஏற்ப உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை-எடையுள்ள ஆண்டு சராசரி பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 83.2 மைக்ரோகிராம் (μg / m3) [உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரமான 10 μg / m3 ஐ விட ஏழு மடங்கு அதிகம்] மற்றும் உலகிலேயே மிக உயர்ந்ததாக இருந்தது. (மக்கள்தொகை எடையுள்ள வருடாந்திர சராசரி செறிவு என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகை வெளிப்படும் காற்று மாசுபாட்டின் சராசரி நிலை ஆகும். மாசு அளவு மற்றும் மக்கள்தொகை அளவுகள் நாடுகளுக்குள் வேறுபடுவதால், இந்த மெட்ரிக் நாடுகளுக்கு இடையே நியாயமான ஒப்பீடுகளை செயல்படுத்துகிறது).

கடந்த 2010 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையிலான கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் மக்கள்தொகை-எடையுள்ள ஆண்டு சராசரி பிஎம் 2.5 இன் செறிவு 6.5 μg / m3 அதிகரித்து 83.2 μg / m3 ஆக அதிகரித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 90% க்கும் அதிகமானோர் வருடாந்திர சராசரி பிஎம் 2.5 செறிவுகளை அனுபவித்தனர், இது 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான தரமான 10 μg / m3 ஐ விட அதிகமாக இருந்தது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வீட்டு காற்று மாசுபாட்டால் இறப்புகள்

கடந்த 2019ம் ஆண்டில்  உட்புற அல்லது வீட்டு காற்று மாசுபாட்டால் கிட்டத்தட்ட 600,000 இந்தியர்கள் இறந்தனர், அதே நேரத்தில் உலகளவில் 23.1 லட்சம் இறப்புகள் நிகழ்ந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான சமையல் எரிபொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்திய கொள்கைகள் காரணமாக - எடுத்துக்காட்டாக, இந்தியாவில் திரவ பெட்ரோலிய எரிபொருள் எல்.பி.ஜி. (2010 முதல், இந்தியா 2010 மற்றும் 2019 க்கு இடையில் வீட்டு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் சதவீதத்தை 73% முதல் 61% வரை குறைத்தது) வழங்கப்பட்டது. இதனால் 2010 மற்றும் 2019ம் ஆண்டுக்கு  இடையில் 2,08,000 வீட்டு காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய இறப்புகளை குறைக்க,  நாட்டிற்கு அது உதவியது.

உலகளவில், வீட்டு காற்று மாசுபாட்டில் இருந்து வரும் நோய்களின் சுமை கடந்த தசாப்தத்தில் படிப்படியாக குறைந்துள்ளது. வீட்டு காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 23.8% குறைந்துள்ளன, வயது நிர்ணயிக்கப்பட்ட இறப்பு விகிதம் 37.5% குறைந்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது உலக மக்கள்தொகையில் 49% - ஏறத்தாழ 3.8 பில்லியன் மக்கள் - திட எரிபொருட்களை எரிப்பதால் வீட்டு காற்று மாசுபாட்டிற்கு ஆளாகிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

 

Similar News