வறுமை, பாதுகாப்பின்மையால் உ.பி. லலித்பூரில் உள்ள 5 பெண்களில் 2 பேருக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கும் குடும்பங்கள்

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர், 20-24 வயதுடைய பெண்களின் விகிதாச்சாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது, அவர்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர்.

Update: 2022-02-28 00:30 GMT

லலித்பூர்: 15 வயதான சப்னா* மே 2021 இல் திருமணம் செய்து கொண்டபோது, அவளது தந்தை சங்கர்* நிம்மதி பெருமூச்சு விட்டார். அவர் 'கவலைப்படுவதற்கு' இப்போது தனது இளைய மகள் ஜோதி* மட்டும் இருக்கிறார் என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உத்தரபிரதேசத்தின் வறண்ட பந்தல்கந்த் பகுதியில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் வசிக்கும் குடும்பம், சப்னாவின் மைத்துனரின் திருமணத்திற்குச் சென்றது. இந்த நாள், ஜோதியின் வாழ்க்கையை மாற்றியது. காரணம், மைத்துனரின் திருமணம் எதிர்பாராதவிதமாக தடைபட்டது, சப்னாவின் மாமனார் நள்ளிரவில் சங்கரை எழுப்பி, திருமணம் நின்று போனது குறித்து அழுது புலம்பினார்; அத்துடன், சங்கரின் உதவியை கேட்டு கெஞ்சினார். தன் நற்பெயரை காப்பாற்ற, ஜோதியை திருமணம் செய்து வைக்குமாறு சங்கரிடம் கேட்டார். குடிபோதையில் இருந்த சங்கர், இறுதியில் விட்டுக் கொடுத்தார், என்றார். தாலி கட்டும் தருணம் வரை, 11 வயதான தனக்கு, இது பற்றி எதுவும் தெரியாது என்று ஜோதி கூறினார்

லலித்பூருக்கு, இதுபோன்ற சம்பவங்கள் எப்போதோ நடப்பதல்ல; 2020-21 இல் கணக்கெடுக்கப்பட்டதன்படி, 20-24 வயதுடைய ஐந்தில் இரு பெண்களில் (42.5%) அவர்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர்.

உத்தரப்பிரதேசம் (உ.பி.) முழுவதும் , 20-24 வயதுடைய 15.8% பெண்கள், 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர், அதே நேரத்தில் இதில் தேசிய சராசரி 23.3% என்று தரவு காட்டுகிறது.

உத்தரப்பிரதேசத்தில், அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் ஷ்ரவஸ்தி பகுதியில் நடைபெறுகின்றன, அங்கு 51.9% பெண்கள், 20-24 வயதுடைய 18 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது; லலித்பூர் (42.5%), பஹ்ரைச் (37.5%), பல்ராம்பூர் (35%) மற்றும் சித்தார்த்நகர் (33.9%) ஆகிய விகிதத்தில் உள்ளன.

லலித்பூரில் ஏன் குழந்தைத் திருமணங்கள் பொதுவானவை?

லலித்பூரில், குழந்தைத் திருமணங்களுக்குப் பின்னால் கல்வியறிவின்மை, வறுமை, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, வேலைவாய்ப்பு தொடர்பான இடம்பெயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

"இந்தப் பகுதியில், பட்டியலின சாதி (SC) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (ST) மற்றும் சஹாரியா பழங்குடியினர் மத்தியில் உள்ள குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் பொதுவானவை" என்று லலித்பூரில் உள்ள சைல்டு லைன் (CHILDLINE) திட்ட இயக்குனராக இருக்கும் தீபாலி படேரியா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "இவர்கள் குடும்பத்தை விட்டுவிட்டு வேலை தேடி அடிக்கடி இடம்பெயர வேண்டிய ஏழைகள். அவர்கள் தங்கள் மகள்களின் வாழ்க்கை [மற்றும் அவர்களின் பாதுகாப்பு] பற்றி கவலைப்படுகிறார்கள், எனவே அவர்கள் தங்கள் மாமியார்களுடன் வாழத் தொடங்குவதற்கு, சிறு வயதிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்" என்றார்.


இளவயது திருமணம், பலவீனமான சாதியினரின் மகள்களை வலிமையானவர்களிடம் இருந்தும், உயர் சாதியினரிடம் இருந்தும் பாதுகாக்கிறது என்று படேரியா கூறினார். "இந்த கிராமங்களில் தங்கள் மகள்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது, அதனால்தான் அவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கிறார்கள். மகள்களின் வயது எவ்வளவு என்பது அவர்களுக்கு முக்கியமில்லை, ஆனால் இந்த பிரச்சனைக்கு திருமணம்தான் தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்" என்றார்.

லலித்பூரில் உள்ள பாலாபெஹட் கிராமத்தில் வசிக்கும் கிராமவாசிகள் இதை ஒப்புக்கொண்டனர். சஹாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 40 வயதான பகீரத் சஹாரியா, தனது மகளுக்கு 17 வயதில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். அவர் சொன்னான்: "நாங்கள் அடிக்கடி வேலைக்காக இடம்பெயர வேண்டியிருக்கும். எங்கள் வீட்டு இளம் பெண்களை எப்படி விட்டுச் செல்வது? எனவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம்" என்றார்.

"எங்களது வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். பெரும்பாலான பெண்கள், 15-16 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்," என்று மற்றொரு குடியிருப்பாளரான தன்சராணி சஹாரியா கூறினார். "எங்கள் மகள்கள் தங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்லும்போது நாங்கள் நிம்மதியாக உணர்கிறோம்" என்றார்.

புலம்பெயர்தல் மற்றும் துன்புறுத்தல் பயம் தவிர, பெற்றோர்களும் வரதட்சணை பற்றிய கவலையில் உள்ளனர். "ஒரு பையன் சம்பாதிக்கத் தொடங்கும் போது, ​​குடும்பம் அதிக வரதட்சணையைக் கோருகிறது" என்று குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜான் சஹாஸ் உடன் பணிபுரியும் ராஜீவ் அஹிர்வார் கூறினார். "இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதால், அவர்கள் தங்கள் மகள்களை இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள், அதனால் அவர்கள் நிறைய வரதட்சணை கொடுக்க வேண்டியதில்லை".

குழந்தைத் திருமணங்களை நிறுத்துதல்

குழந்தை துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகளில் செயல்படும் சைல்டுலைன் (CHILDLINE_ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ஜோதி மற்றும் சப்னாவின் விவகாரத்தில் தலையிட்டு, அவர்களின் பெற்றோரை சமாதானப்படுத்தியது. அவள், 18 வயதான பிறகே கணவர்- மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, சட்ட விதிகளை சொல்லி விளக்கியது. சப்னா தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், மேலும் பள்ளியை முடிக்க விரும்புகிறாள், ஆனால் எப்போதாவது, அவளது மாமியார் அவளை சீக்கிரம் திரும்பி வரும்படி வற்புறுத்துகிறார்கள் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.


பெரும்பாலும், குழந்தைத் திருமணம் பற்றிய தகவலை சைல்டுலைன் அமைப்பினர் பெற்றால், அதை நிறுத்துவதற்கு ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அல்லது, திருமணத்தை நிறுத்த உதவுவதற்கு உள்ளூர் நிர்வாகம் அல்லது கிராமவாசிகளிடம் இருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று, அவர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

2019 மற்றும் 2021 க்கு இடையில், லலித்பூரில் உள்ள சைல்டு லைன் பணியாளர்கள் 12 குழந்தை திருமணங்களில் தலையிட்டனர். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்த நிலையில், ஆறு திருமணங்கள் தடுக்கப்பட்டன, நான்கு திருமணங்கள் நிறுத்தப்பட்டன.

நிர்வாகத்தைப் பொறுத்தவரை, லலித்பூரில் குழந்தைத் திருமணங்கள் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளன, மேலும் பொது களத்தில் உள்ள தரவுகள் உண்மையான படத்தைக் காட்ட மிகவும் பழமையானவை என்று மாவட்ட நன்னடத்தை அதிகாரி சுரேந்திர குமார் படேல் கூறினார். இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தரவு, லலித்பூரில் 2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் இருந்து பெறப்பட்டது.

"பெண்கள் கல்விக்காகவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில வழக்குகளில் கிரிமினல் வழக்குகள் தொடங்கப்பட்டன, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைத் திருமண வழக்குகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை" என்று படேல் கூறினார். நிர்வாகம் தலையிட்டு கிரிமினல் வழக்குகளை தாக்கல் செய்த குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் வழங்கவில்லை.

கடந்த 2021 டிசம்பரில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, குழந்தை திருமணத்திற்கு எதிரான 2006 சட்டத்தில், பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருகிறது.

குழந்தைத் திருமணங்களில் இந்த மசோதா ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து படேலிடம் நாங்கள் கருத்து கேட்டபோது, ​​அரசிடம் இருந்து இன்னும் அத்தகைய உத்தரவு எதுவும் வரவில்லை என்றும், விதிகள் மாற்றப்பட்டவுடன் ஒரு குறித்த உத்தியை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கத் தவறிய சட்டங்களைத் திருத்துவதன் மூலம், பெண்களின் திருமண வயதை அதிகரிக்கக்கூடாது. ஆனால் பெண்களின் கல்விக்கான அணுகலை அதிகரிப்பது, அவர்களுக்கு சந்தைப்படுத்தக்கூடிய திறன்களை அளிப்பது மற்றும் அவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வது போன்ற நடைமுறை வழிகள் மூலம், இதை தடுக்கலாம் என்று, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா பிப்ரவரி 2022 இல், இந்தியா ஸ்பெண்டிடம் இடம் கூறினார்.

குழந்தை திருமணங்களால் உடல்நல பாதிப்புகள்

குழந்தைத் திருமணங்கள் என்பது பெண்கள் பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்வதை விட அதிக குழந்தைகளைப் பெறுவதைக் குறிக்கும். அவர்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள் என்று, நிபுணர்கள் கூறுகின்றனர்.

"எங்களிடம் திருமணமான 17 முதல், 18 வயதுள்ள பெண்கள் வருவார்கள், குழந்தைகளைப் பெறுவதற்கு சில வருடங்கள் காத்திருக்கச் சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு மூன்று-நான்கு முறை, நாங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் 17-18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுடன் சமாளிக்க வேண்டும் என்று, லலித்பூர் மாவட்ட மருத்துவமனையின் வளரிளம் பருவ சுகாதார கிளினிக்கின் ஆலோசகர் ரஷ்மி ஸ்ரீவஸ்தவா கூறினார். "முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையில் இடைவெளியை வைத்திருப்பது முக்கியம் என்பதை நாங்கள் அவர்களுக்குப் புரிய வைக்கிறோம்" என்றார்.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் கணக்கெடுக்கப்பட்ட லலித்பூரில், 15-19 வயதுடைய 9.4% பெண்கள் புதிய தாய்மார்களாகவோ அல்லது குழந்தை பிரசவ சூழலில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில், 2.9% பெண்கள் புதிய தாய்மார்கள் அல்லது ஒரு குழந்தை பிரசவ சூழலில் உள்ளனர், அதே நேரத்தில் இதில் இந்தியாவின் சராசரி 6.8% ஆகும்.

பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில், குழந்தைத் திருமணத்தின் தாக்கம் குறித்து அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து, கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாதது மற்றும் வெகுஜன அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்க உள்கட்டமைப்பு பற்றாக்குறையும் உள்ளது என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். லலித்பூரில் உள்ள இளம்பருவ சுகாதார மையத்தில், இரண்டு ஆலோசகர்கள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார்.


ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RKSK) திட்டத்தின் கீழ், வளரிளம் பருவத்தினருக்கான சுகாதார மையங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கிளினிக்குகளில், பருவ வயது சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து, வளரிளம் பருவ ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பானது உள்ளிட்ட ஆறு விஷயங்களில் ஆலோசனை வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற 346 கிளினிக்குகள் உள்ளன. இதில் இரண்டு லலித்பூரில் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் உள்ள இளம் பருவ சுகாதார மையங்களுக்கு வாலிபர்களும், சிறுமியரும் வருகை தருகிறார்கள், மேலும் அவர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்களை உதவிக்கு அணுக தயங்குகிறார்கள் என்று, ஆகஸ்ட் 2020 இல் இந்தியா ஸ்பெண்ட் ஹிந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

(* தனிநபரின் அடையாளம் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News