ஒடிசா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான ஷிப்டுகள், மோசமான ஊதியங்களுக்குத் திரும்புகின்றனர்

Update: 2020-11-18 00:30 GMT

புதுடெல்லி: அக்டோபர் நடுப்பகுதியில், இயந்திரவியலாளர் பிபின் ரமேஷ் சாஹு, 38, ஒடிசா கிராமத்தில் இருந்து சூரத்துக்கு தனது முன்னாள் முதலாளியான ஜவுளி ஆலை உரிமையாளரால் திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் வேலைகளை இழந்து வீடு திரும்பிய புலம்பெயர்ந்த 67 லட்சம் தொழிலாளர்களில் சாஹுவும் ஒருவர்; அவரை மீண்டும் பணியமர்த்துவதற்கான தனது முதலாளியின் ஆர்வம், சூரத்தில் சிறந்த வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை தரும் என்று நினைத்தார்  - அதாவது அதிக மனிதாபிமான மாற்றங்கள், பணிப் பாதுகாப்பு, பணத்திற்கு பதிலாக ஊதிய காசோலைகள், வருடாந்திர போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கூட இருக்கலாம் என்று கருதினார்.

இந்தியாவின் மிகப்பெரிய இடம்பெயர்வு இடங்களில் ஒன்றில் பணிபுரிந்த சாஹுவுக்கு பிறகுதான் தெரிந்தது, எதுவும் மாறவில்லை என்று. அவர் இப்போது கூடுதலாக வேலை பார்க்க வேண்டியுள்ளது; ஒருநாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் விடுப்பு அல்லது இடைவெளியின்றி வேலை செய்ய வேண்டும் - அப்படிச்செய்தால் கிடைப்பது, ஒரு மாதத்திற்கு ரூ.15,000 தான். விசைத்தறிகளில் ஏற்படும் ஓசையால் அவரது செவிப்புலன் பாதிக்கப்படாமல் இருக்க, அவரிடம் இன்னும் பாதுகாப்பு கருவி இல்லை. 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சியால் தூங்கும் வகையிலான பகிர்ந்து கொள்ளும்  தங்குமிடத்தில் ஒரு அறை மட்டுமே அவருக்கானது. சூரத் போன்ற நகரங்களில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கான வீட்டு நிலைமைகள் கடுமையானவை, அவர்களுக்கு ஆறுதலும் கண்ணியமும் இல்லை.

ஏப்ரல் மாதத்தில், தெற்கு ஒடிசாவில் உள்ள சாஹுவின் சொந்த மாவட்டமான கஞ்சாமில் இருந்து வந்த தொழிலாளர்கள், வேலை, தங்குமிடம் அல்லது உணவு இல்லாவிட்டாலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்காத குஜராத் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சங்கமயமாக்கும் இத்தகைய செயல், அவரைப் போன்ற தொழிலாளர்கள் திரும்பி வரும்போது பணியில் சிறந்த நிலைகளை பெற உதவும் என்று சாஹு நம்பினார்.  "அப்போது எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை, இப்போதும் யாரும் எங்களுக்கு உதவவில்லை," என்று அவர் கூறினார்.

ஊரடங்கின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 50% தொழிலாளர்கள், தாங்கள் விட்டுச்சென்ற நகரங்களுக்கே மீண்டும் திரும்பி வந்துள்ளனர், இது உழைப்பின் அதிகப்படியான விநியோகத்தை உருவாக்குகிறது என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மையமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான அஜீவிகா பணியகத்தின் சஞ்சய் படேல் தெரிவித்தார். சாஹு கனவு கண்ட வேலை நிலைமைகள் குறித்து பேச்சு நடத்த அவர்கள் எந்த நிலையிலும் இல்லை. "அவர்கள் திரும்பி வருவதும் போது ஆலை உரிமையாளர்கள் விதிமுறைகளை நிர்ணயித்துவிடுவதால், பேரம் பேசும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போகிறது” என்று படேல் கூறினார்.

எந்தவொரு அதிகாரபூர்வ தரவுகளும் இல்லாத நிலையில், சிவில் சமூக அமைப்புகளின் ஆய்வுகள் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது. தனது கிராமமான பாரிடாவில், குறைந்தது 2,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வேலை செய்த நகரங்களுக்கு - பேருந்துகள், ரயில்கள் மற்றும் எப்போதாவது விமானம் மூலம் திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக, சாஹு மதிப்பிட்டுள்ளார். பொருளாதார புத்துயிர் பெறுவதற்கான நம்பிக்கையை நகரங்கள் கொண்டிருக்கும்போது, ​​உள்ளூரில்  வேலைவாய்ப்புகள் இல்லை என்றார்.

கோவிட்-19 தொற்று நெருக்கடியானது வாழ்வாதாரங்களை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த மூன்று பகுதிகள் கொண்ட தொடரில், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு தொழிலாளர்கள் எவ்வாறு ஒத்துப்போகிறார்கள் என்பதை, நாம் ஏற்கனவே அலசினோம். இத்தொடரின் முதல் பகுதியில், தெற்கு ராஜஸ்தானை சேர்ந்த கிராமங்களில் திரும்ப வந்து தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை பார்த்தோம். இந்த இரண்டாவது பகுதியில், ஒடிசாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சூரத் மற்றும் பிற புலம்பெயர்ந்த இடங்களுக்கு திரும்புவதையும், அவர்கள் திரும்பி வந்த வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளையும் நாம் ஆராய்கிறோம். இத்தொடரின் இறுதிப்பகுதியில், உத்தரபிரதேசத்தில் தொற்றுநோயால் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதை ஆராயவிருக்கிறோம்.

‘புலம்பெயர்ந்த’ மாநிலங்களில் எதுவும் மாறவில்லை

சாஹு போலுள்ள தொழிலாளர்கள், சூரத் போன்ற நகரங்களுக்குத் திரும்புவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒடிசா போன்ற மாநிலங்கள் குறிப்பாக கஞ்சம், போலங்கீர், கோராபுட் மற்றும் கலஹந்தி ஆகிய பின்தங்கிய மாவட்டங்கள், திரும்பி வரும் தனது தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ளத் தயாராக இல்லை, இதனால் தொழிலாளர்களுக்கு அவர்களது ஊரில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இரண்டாவதாக, அக்டோபர் - டிசம்பர் வரை நீடிக்கும் இந்தியாவின் பண்டிகை மற்றும் திருமண காலம், சூரத் போன்ற நகரங்களுக்கு உகந்த நேரமாகும்.  அங்கு ஜவுளித் தொழில் அடிப்படையில் சீசன் வேலைவாய்ப்புகளை ஏராளமாக உருவாக்குகிறது.

எய்ட் எட் ஆக்சன் (Aide et Action) மற்றும் அஜீவிகா பணியகம் போன்ற தொழிலாளர் உரிமை சார்ந்த குழுக்கள், கஞ்சாம் மாவட்டத்தில் இருந்து, சூரத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 800,000 என்றிருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் மற்றொரு அறிக்கையானது இந்த எண்ணிக்கையை 600,000 என்கிறது.  எனினும், மோசமான ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு, நெரிசலான தங்குமிடம் மற்றும் வேலையில் ஆபத்தான சூழ்நிலைகள் போன்றவற்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களில் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடுவார்கள் என்று, வாழ்வாதாரங்களை செயல்படுத்துவதில் செயல்படும் சமூக நிறுவனமான லேபர்னெட்டின் (Labournet) தலைவர் காயத்ரி வாசுதேவன் கூறினார்.

முறைசாராத மதிப்பீடுகளின்படி, ஒடிசாவில் 25 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். 1990ம் ஆண்டுகளில் இருந்து, புலம்பெயர்ந்தோர் மற்றும் விவசாயத்தை முக்கிய வழங்குநர்களாகக் கொண்டு, “புலம்பெயர்ந்தோர்” வாழ்வாதாரங்கள் என ஆராய்ச்சியாளர்களால் விவரிக்கப்படுவதை அரசு கண்டிருக்கிறது. ஏப்ரல் 2020இல், இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) தொகுத்த தரவு, ஒடிசாவில் வேலையின்மை விகிதம் 23.8% என்று காட்டியது, இது அதே காலத்திற்கான தேசிய சராசரியான 23.5% ஐ விட அதிகமாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் பெரும்பாலான மாநிலங்களைப் போலவே, ஒடிசாவும் திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கத் தயாராக இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டத்தில் (MGNREGS), தொழிலாளர்களுக்கு தாமதமாக கூலி வழங்கப்படுவதாக, நீண்டகால புகார்களுடன் இந்த மாநிலமும் நீண்டகால பதிவைக் கொண்டுள்ளது.

பிபின் சாஹு சூரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஒரு விசைத்தறியில் மெக்கானிக் ஆக இருந்தார்; வாழ்நாள் முழுவதும் இயந்திரங்களின் இரைச்சலுக்கு மத்தியில் அவர் பணிபுரிந்ததால், தனது கேட்கும் திறனை அவர் இழந்தார், இந்த நிலை பொதுவாக இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் பலரால் தெரிவிக்கப்பட்டது. ஜவுளி நெசவாளர்கள் செவிப்புலன் இழப்புக்கு அதிக ஆபத்தில் உள்ளனர் என்று தேசிய தொழில் சுகாதார நிறுவன ஆய்வு கூறுகிறது.

“என்னால் இரவில் தூங்க முடியாது, கடகடவென்று தறியின் சத்தம் எப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. தறி உரிமையாளர்கள் எங்களுக்கு சில நூறு ரூபாயைக் கொடுப்பார்கள், எங்கள் வியர்வை மற்றும் உழைப்பிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பார்கள். மார்ச் மாதத்தில் தறிகள் மூடப்பட்டபோது, ஒருநாள் கூட அவர்கள் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை,” என்றார் சாஹு.

ஒழுங்கற்ற திறந்தவெளி குடியிருப்புகளில் வசிக்கும் அவலம்

சாஹூ போன்ற தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு வீட்டுவசதி என்பது,  தொடர்ந்து ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளபடி, ஊரடங்கால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரச்சினைகளில் ஒன்று, நகரங்களில் தங்குமிடங்களின் நிலை. பெரும்பாலான தொழிலாளர்கள் திறந்தவெளிகளில், பணி நிலையங்களுக்குள் அல்லது ஒழுங்கற்ற குடியிருப்புகளில் வாடகை அறைகளில் தங்குகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைந்த வாடகை மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில், பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடமைப்பு வளாகங்கள் (ARHC) திட்டம்-2020 ஐ தொடங்குவதன் மூலம், அரசு இந்த நெருக்கடிக்கு பதில் தந்துள்ளது.

"இந்த திட்டம் நீண்ட காலமாக இருந்தது. ஆனால் பொது வாடகை வீட்டுவசதி ஒரு வித்தியாசத்தை உருவாக்க நேரம் எடுக்கும். இதற்கிடையில், தொழிலாளர்கள் நகரங்களுக்குத் திரும்பும்போது இந்த பிரச்சினை தொடர்கிறது ”என்று தொழிலாளர் ஆராய்ச்சி மற்றும் செயல் மையத்தின் செயலாளர் சுதிர் கட்டியார் கூறினார்.

ஒடிசாவில் இருந்து குடியேறிய பெரும்பாலான தொழிலாளர்களைப் போலல்லாமல், சாஹு தனது குடும்பத்தினரையும், அவரது மனைவியையும், நான்கு குழந்தைகளையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்துக்கு அழைத்து வந்திருந்தார். வைரஸ் பயம் காரணமாக அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் மீண்டும் தங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு, கஞ்சம் மாவட்டம் கோவிட் -19 ஹாட்ஸ்பாட்டாக மாறியது. ஜூலை இறுதிக்குள், அந்த மாவட்டத்தில் 10,000 தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அக்டோபர் மாதத்தில்தான் மாவட்ட நிர்வாகத்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.

சாஹு தனது குழந்தைகளை தனது கிராமத்தில் உள்ள ஆங்கிலவழி நடுநிலைப்பள்ளிக்கு அனுப்ப, ஜூலை மாதத்தில் தனது கிராமத்தில் ஒரு பணக்காரரிடம் இருந்து ரூ.90,000 கடன் வாங்க வேண்டியிருந்தது. "நான் சொந்த ஊரில் வேலை கிடைத்திருந்தால், நான் மீண்டும் வெளியூருக்கு திரும்பி சென்றிருக்க மாட்டேன்," என்று அவர் கூறினார். அவர் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை தேட முயன்றார், கிடைக்கவில்லை. அந்த பணி உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

"சூரத்தில் உள்ள நிர்வாகம் எங்களுக்கு உதவவில்லை, சொந்த ஊரிலேயே எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை" என்று அவர் கவலையோடு கூறினார்.

ஆபத்தான பணிச்சூழல்கள்

கொல்கத்தாவின் சணல் ஆலைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முறைசாரா சமூக வலைப்பின்னல்கள் மூலம் சூரத்துக்குச் சென்றதால், கஞ்சாம் மாவட்டத்தில்  இருந்து இளம் ஆண் தொழிலாளர்களின் இடம்பெயர்வு 1980 களின் முற்பகுதியில் தொடங்கியது. நகரத்தின் தொழிலாளர்களில் 70% க்கும் அதிகமானோர் குடியேறியவர்களுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருந்தாலும், சூரத்தின் பணிச்சூழல்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. "தொழிலாளர்களின் பெயர்கள் எந்த தரவுத்தளத்திலும் பதிவு செய்யப்படவில்லை, அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை," என்று, ஒடிசாவில் இடம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சியாளரும், எய்ட் எட் ஆக்சன் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் இயக்குநருமான உமி டேனியல் கூறினார்.

விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் யூனிட்டுகளை, கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் பதிவு செய்வதன் மூலம் தொழிலாளர் சட்டங்களை மீறுகிறார்கள்; விபத்து மற்றும் இறப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களை பாதுகாக்க, தொழிற்சாலைகள் சட்டம் வழிவகுக்கிறது. "இயந்திரங்களை  இயக்கும்போது காயங்கள், விபத்துக்கள் மற்றும் இறப்புகள் நடைபெறுகின்றன, ஆனால் வெளியே தெரிவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் விசைத்தறிக்கூடங்களில் நேரிட்ட மின்சார விபத்தால், 13 இறப்புகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்,” என்று அஜீவிகா பணியகத்தின் படேல் கூறினார்.

ஊரடங்கில் இருந்து விசைத்தறிகள் இதுவரை விபத்துக்கள் அல்லது இறப்புகள் குறித்து தெரிவிக்கவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள் இந்தியாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகரிப்பதைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். "பணிச்சூழல்கள் முன்பை விட மோசமாகிவிட்டன" என்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பிரச்சினையில் செயல்படும் ஒரு அமைப்பான மக்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெகதீஷ் படேல் கூறினார். "நாடு முழுவதும் இந்த ஆண்டு 50 இறப்புகள் மற்றும் 95 தொழில்துறை விபத்துக்களை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், இது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடும், மேலும் உற்பத்தியின் வேகத்தைத் தக்கவைக்க, குறைந்த தொழிலாளர்கள், நீண்ட  நேரம் ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள்” என்றார்.

கடன் அடைப்பதற்காக இடம்பெயர்வு

நாட்டில் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தீபாவளிக்குப் பிறகு மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பலர் ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கிறார்கள் மற்றும் புதிய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது.

மேற்கு ஒடிசாவில் உள்ள போலங்கீரின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது, மாநிலத்தின் மிகவும் வளர்ச்சியடையாத பகுதி,  நீண்ட நாட்களாக வறட்சிக்கு இலக்காகியுள்ளதால், அந்த துயரம் இடம்பெயர்வுகளைத் தூண்டுகிறது. இங்கிருந்தும், அண்டை மாவட்டங்களான கலஹந்தி மற்றும் கோராபுட் மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து, பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள நகரங்களில் செங்கல் சூளைகளில் வேலை செய்ய குடியேறுகின்றனர். அவர்களில் 200,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைக்காலம் வரை ஆறு மாதங்கள் வேலை செய்வதற்காக புறப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத்துறை மெதுவாக புத்துயிர் பெறுவதால், இந்த ஆண்டு, முதன்முறையாக, எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. “தசராவுக்கு பிறகு, தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு பணம் தேவை. ஒப்பந்தக்காரர்கள் அவர்களை அணுகத் தொடங்கியுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டாலும், இது இப்போது காத்திருந்து, பார்த்தல் என்ற நிலைமை ”என்று எய்ட் எட் ஆக்சனுடன் திட்ட அதிகாரி சரோஜ் குமார் கூறினார்.

இந்த தொழிலாளர்களுக்கு ஊதிய முறை இல்லை. தொழிலாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களால் முன்கூட்டியே பணம் செலுத்தும் புலம்பெயர்ந்தோரை ஆட்சேர்ப்பு செய்யும் ‘தாதன்’ முறையின் அடிப்படையில் அவர்கள் வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் "கடன் அடைப்பதற்காக குடியேறியவர்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். "இது ஒரு கொத்தடிமை முறை மற்றும் அவர்களில் சிலர் கடத்தப்படுகிறார்கள்" என்று டேனியல் கூறினார்.

37 வயதானஹொடலால் பராபோய் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒன்பது ஆண்டுகளாக சென்னை அருகே  செங்கல் சூளைகளில் பணியாற்றி வருகிறார். தெற்கு ஒடிசாவைப் போலல்லாமல், இந்த பிராந்தியத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுவதால் குடும்ப இடம்பெயர்வு போக்கு உள்ளது. 2019ம் ஆண்டில், ஹொடலால் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு சென்னையில் பணிபுரிய ஒப்பந்தக்காரர் தலா ரூ. 20,000 ஊதியம் வழங்கினார். ஆனால் இந்த ஆண்டு, இந்த ஜோடியை இன்னும் சென்னைக்கு வரவழைக்கவில்லை.

"இந்த ஆண்டு, தீபாவளி வரை காத்திருக்குமாறு ஒப்பந்தக்காரர்களால் நாங்கள் கூறப்பட்டுள்ளோம். என் மனைவி திரும்பிச் செல்லவோ, கொரோனாவால் பாதிக்கப்படலாமோ என்று பயப்படுகிறாள், ”என்றார் ஹோடலால். குடும்பம் தங்களது ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலத்தில் கோதுமையை சாகுபடி செய்துள்ளது;  ஆனால் அந்த விளைச்சல் வாழ்வதற்கு போதுமானதாக இல்லை.

ஹொடலால்,  செல்வந்தர் ஒருவரிடம் இருந்து ரூ.10,000 கடன் வாங்கியுள்ளார்.  நூறுநாள் வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கால்பந்து மைதானப்பணியை தினமும் ரூ.300 என, ஐந்து நாட்கள் வேலை பார்த்தார். ஆனால் இப்போது அத்தகைய வாய்ப்புகள் எதுவும் இல்லை. "இந்த மாதத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வேலை தேடி நான் ஒடிசாவை விட்டு வெளியேற வேண்டும்," என்றார் அவர்.

ஒடிசாவில் இருந்து எப்படி வெளியேறுவது என்று ஹொடலால் கவலைப்படுகிறார். "கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்றவற்றை சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற ஆசைப்படுகிறார்கள், சொந்த ஊரில் வேலை எதுவும் இல்லை, ஆனால் போக்குவரத்து சேவைகள் இல்லாததால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" என்று லேபர்னெட்டின் வாசுதேவன் கூறினார். "அனைத்து முதலாளிகளும் தங்கள் வருவாயை இதற்காகச் செலுத்த முடியாது. போக்குவரத்தின் நெருக்கடியையும், அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளவில்லை” என்றார்.

திறனுள்ள தொழிலாளர்கள் நகரங்களில் மீண்டும் வேலையை தொடங்குவது என்பது சற்று எளிதாக உள்ளனர். போலங்கிரில் இருந்து பயிற்சி பெற்ற கொத்தனார் ரமேஷ் பெஹெரா, 36, ஊரடங்கின்போது மும்பையில் இருந்து வீட்டிற்கு ஒன்பது நாட்களில் 1,600 கி.மீ. சைக்கிளை ஓட்டி வந்திருக்கிறார்.

மும்பையில் ஒரு கட்டுமானத்தளத்தில் பணிபுரிந்த பெஹெரா, செப்டம்பர் மாதம் தனது முதலாளி அனுப்பிய காரில், மீண்டும் அந்த நகரத்திற்கு திரும்பியிருந்தார். இப்போது அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார், நகரின் புறநகரில் வேலை செய்கிறார்; மாதம் ரூ. 20,000 சம்பாதிக்கிறார். இதில், அவர் ரூ.15,000 வீட்டிற்கு அனுப்புகிறார். போலங்கிரில் தங்கியிருப்பதில் அவருக்கும் விருப்பம் இல்லை, ஆனால் தனது ஐந்து வயது மகனை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதற்கு ரூ.25,000 செலுத்திய பின்னர் நகரத்தில் வேலை தேட வேண்டியிருந்தது என்றார்.

நகரங்கள் தமக்கு நிறைய கொடுத்திருப்பதாக, பெஹெரா கூறினார். "நான் திரும்ப நகருக்கு செல்ல, என் குடும்பத்தினரை மிகவும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது, உள்ளூரிலும் வேலை கிடையாது. நான் நகரத்தில் வசிக்க விரும்புகிறேன்: என் முதலாளிகள் என்னை நியாயமாக நடத்தினர்” என்றார்.

(குமார், டெல்லியைச் சேர்ந்த சுதந்திரப் பத்திரிகையாளர். சமூகநீதி மற்றும் பாலினம் குறித்து எழுதி வருகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

 

Similar News