8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை கண்டுள்ள மத்தியப்பிரதேசம்; ஆனால், இன்னும் “பீமரு” தான்
புதுடெல்லி: இந்தியாவில் 8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை மத்திய பிரதேசம் (ம.பி. ) கண்டுள்ளது. எனினும், குறைந்த வருவாய், மோசமான சுகாதாரம் போன்றவை விவசாய அமைதியின்மையை ஏற்படுத்தி இருப்பது, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகையில் ஐந்தாவது (72.6 மில்லியன், இது தாய்லாந்துக்கு சமமானது) பெரிய இடத்திலும் உள்ள இம்மாநிலம், பத்து ஆண்டுக்கு முன் சுகாதாரப் பணிகளில் முன்னேறத் தொடங்கியது. ஆனால், குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் இறப்பு, பெண்களின் நிலை போன்றவற்றில் இன்னமும் மோசமாகவே உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் இவை.
“கடந்த 2003ஆம் ஆண்டைப்போல் சாலை, மின்சாரம், குடிநீர் போன்றவை இம்முறை மத்திய பிரதேச (ம.பி.) சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு (BJP)இருக்காது” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2018 நவ. 17-ல் தெரிவித்தார்.
மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தின் தேர்தல் வெற்றி, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றியின் முன்னோட்டமாகக் கொள்ளலாம். சட்டப்பேரவை தேர்தல் முடிவானது, 11 மாநிலங்களவை இடங்கள் (நாடாளுமன்ற ராஜ்யசபா) மற்றும் 29 மக்களவை (நாடாளுமன்ற லோக்சபா) இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கக் கூடும்.
பாரதிய ஜனதாவை பொருத்தவரை, மூன்று முறை அதிகாரத்தில் இருந்துள்ளதால் ஆட்சிக்கு எதிரான பொதுமான மனநிலையை எதிர்த்து அதிகாரத்தை தக்க வைப்பது என்பது, கடும் போராட்டமாக இருக்கும்.
சிறந்த வேளாண் முறையால் பஞ்சாப்பிடம் இருந்து இந்தியாவின் ”உணவுக்கிண்ணம்” என்ற பெயரை மத்தியப்பிரதேசம் தட்டிச் சென்று, தனது “பீமரு” (Bimaru) --அதாவது பின்தங்கிய பீகார், ம.பி., ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களின் சுருக்கம் நோஞ்சான் -- என்ற பெயரை தகர்த்துள்ளது என்று, ம.பி. மூன்று முறை முதல்வரான சிவராஜ்சிங் சவுகான், 2018 அக்.28-ல் தெரிவித்தார்.
அதிக பழங்குடிகள், கிராமப்புற மக்கள், குறைந்த எழுத்தறிவு
கடந்த 2000 ஆம் ஆண்டில், அதிக பழங்குடியினர் மற்றும் நிறைய கனிமவளம் உள்ள மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் மத்தியப்பிரதேசத்தில் இன்றும், 72% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவராகவும், 30% பேர் வனப்பகுதியிலும் வாழ்கின்றனர்.
கடந்த 2011 கணக்கெடுப்பின்படி, 21% பேர் அல்லது 15.3 மில்லியன் பேர் பழங்குடியினத்தவர்கள்; 16% அல்லது 11.3 மில்லியன் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இம்மாநிலம், கல்வியறிவு அடிப்படையில் பின்தங்கியிருக்கிறது: 2015-16ஆம் ஆண்டின்படி, 82% ஆண்கள் மற்றும் 59% பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர். இது, நாட்டின் மிக மோசமான விகிதம். எனினும், 2005-06ஆம் ஆண்டில் இது முறையே 73% மற்றும், 44% என்றிருந்தது.
ஆண்- பெண் பாலின விகிதத்தை கணக்கிடும் போது, 2005- 06ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் என்றிருந்தது, 2015-16ஆம் ஆண்டில் 927 என்று குறைந்துவிட்டது. எனினும் தேசிய சராசரியான 919 என்பதைவிட இது அதிகமாகும்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) மற்றும் நிதி ஆயோக் போன்ற தேசிய அளவிலான ஆதாரங்களை பயன்படுத்தி பிற மாநிலங்களின் சுகாதாரம், விவசாயம், வருமானம், வேலையின்மையை மத்தியப்பிரதேசத்தின் குறியீடுகளுடன் இந்தியா ஸ்பெண்ட் ஒப்பிட்டு பார்த்தது.
அவ்வகையில் பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மிஜோரம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவுடன் நாங்கள் ஒப்பீடு செய்து பார்த்தோம்.
சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்தது.ராஜஸ்தான் டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்கிறது. பெரிய மாநிலங்களாக மகாராஷ்டிராவும், குஜராத்தும் பாரதிய ஜனதா ஆட்சியின் கீழ் உள்ளன.
“பீமரு” மாநிலங்களில் பீகார், உத்திரப்பிரதேசமும் அடங்கும். பின்தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் முதல் எழுத்துகளை கொண்டு, கடந்த 1980-ல் ஆஷீஸ் போஸால் “பீமரு” என்ற சுருக்கப்பெயர் உருவாக்கப்பட்டது. அம்மாநிலங்களின் பின்தங்கிய நிலையை புலப்படுத்துகிறது.
அத்துடன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா மற்றும் பஞ்சாப்பை, இந்த ஒப்பீட்டுக்கு நாங்கள் தேர்வு செய்தோம். அத்துடன், கம்ப்யூனீஸ்ட் ஆட்சி செய்து வரும் ஒரே மாநிலமான கேரளாவையும் ஒப்பீடுக்கு தேர்ந்தெடுத்தோம்.
சாலை, மின்சாரத்தில் முன்னேற்றம்; கழிப்பறை நிலை முழுமையாக சரிபார்க்கப்படவில்லை
“நான் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கி, சாலைகளில் பயணித்தேன். அமெரிக்காவின் சாலைகளை விட மத்தியப்பிரதேச மாநில சாலைகளே மேல் என்று உணர்ந்தேன்” என்று, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, 2017 அக்.மாதம் பேட்டி அளித்திருந்தார்.
இது கொஞ்சம் உண்மையே: மத்திய பிரதேசத்தின் 87% கிராமப்புற சாலைகள் விகிதம் (தார் மூலம் அமைக்கப்படுபவை) தேசிய சராசரியை (64%) விட அதிகம். ஆனால் நகர்ப்புற சாலைகளை ஒப்பிடும் போது ம.பி. (72%) தேசிய சராசரியை (80%) விட குறைவு என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 9.7 மில்லியன் குடும்பங்களுக்கு மின்சார வினியோகம் தரப்பட்டுள்ளது அரசு தகவல் தெரிவிக்கிறது.
மத்தியப்பிரதேசம் தனது மின்சார அணுகல் குறியீட்டை -- திறன், காலம், தரம், நம்பகத்தன்மை, கட்டுப்பாடற்ற தன்மை, முறையான மின்சார கட்டமைப்பு என -- மேம்படுத்தியுள்ளது. 100% மின்சாரம் என்பது 2015-ல் 16-ல் இருந்து 2018ஆம் ஆண்டு 33.9 புள்ளிகளாகவும்; தினசரி 8 மணி நேர மின்சார வினியோகம் 15 மணி நேரமாகவும் மேம்பட்டுள்ளது என, மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் (CEEW) கவுன்சிலின் நவம்பர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.
வீட்டுக்கு வெளிச்சம் தரக்கூடிய அத்தியாவசிய பொருளான மண்ணெண்ணையை சார்ந்துள்ள குடும்பங்களின் விகிதம் 2015-ல் 27% என்பது, 2018ஆம் ஆண்டு 13% ஆக குறைந்துள்ளதாக, சி.இ.இ.டபிள்யூ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாநிலத்தில் இன்னமும் 8% வீடுகள் மின்வசதியை பெறவில்லை.
கடந்த 2018 அக். மாதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் 28% முழுமையாக சரிபார்க்கப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளதாக, தூய்மை இந்தியா (Swachh Bharat) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மையில் வளர்ச்சி; வருவாய் வளரவில்லை
மத்தியப்பிரதேச மாநிலம் விவசாயத்தை சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 55% பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய சராசரியான 47% என்பதைவிட, இது எட்டு சதவீதம் அதிகம்.
2015 ஆம் ஆண்டுடான எட்டு ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி, சராசரியாக 10.9% அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் அதிகபட்சமாகும்; மற்றும் தேசிய சராசரியான 4.3% ஐ விட கூடுதலாகும்.
மத்தியப்பிரதேச மாநிலம் சோயாபீன்ஸ் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. தேசிய அளவிலான சாகுபடியில் 51% இங்கு விளைவிக்கப்படுகிறது. அதேபோல் கோதுமை விளைச்சலில், இந்திய அளவில் மூன்றாமிடம்; அதாவது தேசிய உற்பத்தியில் 16%-ஐ கொண்டுள்ளது.
நிலத்தடி நீர்ப்பாசனத்திற்கு நம்பகமான மின் விநியோகம், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் போனஸ், வலுவான கோதுமைக்கான கொள்முதல் முறை மற்றும் சந்தைகளுடன் விவசாயிகள் நேரடியாக இணைப்பு, அனைத்து வகையான வானிலையை தாக்குப்பிடிக்கும் சாலைகள் போன்ற அம்சங்கள் மத்தியப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான காரணங்கள் என, அசோக் குலாத்தி, பல்லவி ராஜ்கோவா மற்றும் பிரேஷ் ஷர்மா ஆகியோரால் 2017ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வளர்ச்சியை கண்ட போதிலும் விவசாயிகள் போராட்டம் நடந்த மாநிலமாக இது உள்ளது: 2017ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி, கூடுதல் விலை கேட்டு மஞ்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் பரவியது. இதை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு விவசாயிகள் இறந்தனர்.
கடந்த 2017-ல் மாநிலத்தில் நிலவிய அமைதியின்மை, தூண்டுதல் சம்பவங்களின் கீழ் ஏற்பட்ட தாக்கம், வெங்காயம், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்ற விவசாயம், பயிர் சாகுபடியை முடக்கியது. அதன் விளைச்சல் 30-50% வீழ்ச்சியுற்றது.
வருமானத்தில் சமத்துவமின்மை - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பண்ணை அல்லாத வருவாயில் இருந்து வருமானம் அதிகரித்தது போதும், மத்திய பிரதேசத்தில் 2002 முதல் 2012 வரை விவசாய வருவாய் (ரூ.6,210) தேசிய வருவாயையை விட (ரூ.6,426) பின்தங்கியே இருந்தது என, 2017 ஜூன் 16-ல் மிண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 2016-ல் மத்திய பிரதேசத்தில் தினமும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொன்ற நிலை இருந்தது. இது (1,321) மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். முதலிடத்தில் மகாராஷ்டிரா (3,661), கர்நாடகா (2,079) ஆகியன முதலிரண்டு இடங்களில் இருந்ததாக, 2018 மார்ச் 20-ல் மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு வருவாய் உயரவில்லை என்றாலும், வேளாண் சார்ந்த பணிகள் மூலம் (76.5%) அதிக வருவாயும், குடும்பங்களின் வணிகம் சாராத நடவடிக்கை மூலம் (5%) குறைந்த வருவாயும் கிடைக்கிறது என, 2016 என்.எஸ்.எஸ்.ஓ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தனிநபர் வருமானம் அதிகம்; ஆனால் அதிக மக்கள் இன்னும் ஏழைகளே
மாநிலத்தின் தனிநபர் வருவாய் 2005-06-ல் ரூ.16,631 என்பது, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.56,182 ஆக அதிகரித்தது. இது நாட்டில் ஐந்தாவது குறைந்தபட்ச தொகையாகும்.
மத்தியப்பிரதேசத்தில், 23.4 மில்லியன் மக்கள் அல்லது 31% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், கிராமப்புறங்களில் மாதத்திற்கு 717 ரூபாய், நகர்ப்புறங்களில் மாதம் 897 ரூபாய்க்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தேசிய சராசரியை (21.9%) விடவும் மத்திய பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களே அதிகம் என, 2013ஆம் ஆண்டு திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.
மத்தியப்பிரதேசத்தில், மூன்றில் ஒரு குடும்பத்திற்கு -(37%) சராசரி மாத வருவாய் ரூ.5,000-க்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த இடங்களில் மேற்கு வங்கம் (35%), உத்தரப்பிரதேசம் (30%), ஒடிசா (30%) உள்ளதாக, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த 2015 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதேபோல் மத்தியப்பிரதேசத்தில் பெண் தொழிலாளர் பங்கெடுப்பு விகிதம் (17.4%), தேசிய சராசரியை (23.7%) விட குறைவாகும். மேலும், அதிக பெண் தொழிலாளர் விகிதத்தை கொண்டுள்ள சத்தீஸ்கரை (54.3%) விடவும் இது மிகவும் குறைவாகும்.
வேலைவாய்ப்பங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை, 53% அதிகரித்துள்ளது. அதாவது 2015ல் 1,56,000 என்ற எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் 2,37,000 என்று உயர்ந்துள்ளது என, 2018 பிப்.9-ல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
உடல் நலன், பெண்களுக்கு அதிகாரம் தருவதில் மோசம்
நாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதத்தை அதிகம் இம்மாநிலம் கொண்டுள்ளது. 1,000 பிரசவத்தில் 47 குழந்தைகள் இறப்பதாக, 2016ஆம் ஆண்டு மாதிரி பதிவு ஆய்வு தெரிவிக்கிறது.
அதேபோல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு என்பது, 1,000 பேரில் 65 என்ற விகிதத்தை மத்தியப்பிரதேசம் கொண்டிருக்கிறது. இதில், உத்திரப்பிரதேசத்திற்கு (78) அடுத்ததாக, கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டி உள்ளது என, 2015-16ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார் ஆய்வு (NFHS-4) தெரிவிக்கிறது.
மேலும், 54% குழந்தைகளுக்கு மட்டுமே அனைத்து வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இதுவும், தேசிய சராசரியை (62%) விட எட்டு சதவீதம் குறைவாகும். இது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் அபாயம் உண்டு.
இம்மாநிலத்தில், 42% குழந்தைகள் வயதுக்குரிய வளர்ச்சியை பெறாமல் (பட்டியலில் கீழிருந்து நான்காவது) உள்ளனர். மேலும், 26% குழந்தைகள் உயரத்திற்கேற்ற உடல் பருமனின்றி (கீழிருந்து நான்காவது) காணப்படுகின்றனர்.
அம்மாவின் கல்வி, உடல் நிறை குறியீட்டெண் மற்றும் பிறப்பு வயது ஆகியன குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (இங்கு மற்றும் இங்கு தான்).
இங்கு 59% பெண்கள் மட்டுமே கல்வியறிவு கொண்டிருக்கின்றனர். இதில் சத்தீஸ்கர் 66%, இந்திய சராசரி 68% ஆக உள்ளது). இது, நாட்டின் நான்காவது குறைந்த விகிதமாகும்.
மேலும், 23% பெண்கள் மட்டுமே, 10 அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு கல்வியை முடித்துள்ளனர். (சத்தீஸ்கர் 27%, இந்திய சராசரி 36%); அத்துடன், 32% பெண்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். (சத்தீஸ்கர் 21%, இந்திய சராசரி 27%).
Source: NFHS-4
தேசிய சராசரியுடன் (31%) ஒப்பிடும்போது மத்தியப்பிரதேசத்தில் அதிக பெண்கள் (35%) வன்முறைக்கு இலக்காகின்றனர். அதேபோல் சுயமாக முடிவெடுக்கக்கூடிய, அல்லது தாங்களாகவே வங்கி கணக்கு பராமரிக்கும் பெண்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட மத்தியப்பிரதேசத்தில் குறைவாகவே உள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் 69% பெண்கள் மட்டுமே மகப்பேறு மருத்துவம் (ANC) ஆலோசனைகளை திறன்வாய்ந்தவர்களிடம் இருந்து பெறுகின்றனர். இது தேசிய அளவில் நான்காவது மோசமான விகிதமாகும்; மற்றும் தேசிய சராசரியைவிட (79%) பத்து சதவிகிதம் குறைவு. இதில் சத்தீஸ்கரில் 91% பெண்கள் உரிய மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்.
பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம், 2005-06ஆம் ஆண்டு 1,00,000 பேருக்கு 335 என்று இருந்தது, 2014-16ஆம் ஆண்டுகளில் 173 ஆக குறைந்தது என என்.எப்.எச்.எஸ். -4 ஆய்வு தெரிவிக்கிறது.
பயிற்சி பெற்றவர்கள், மருத்துவர் மேற்கொள்ளும் பிரவச விகிதம், 26% என்பது 81% ஆக அதிகரித்துள்ளது.
சுதாதாரத்தின் மோசமாக பின்தங்கியிருந்த போதும் அத்துறைகளில் மத்தியப்பிரதேச அரசு முதலீடு செய்யவில்லை. ஒரு நபரில் ஒரு ஆண்டு சுகாதாரத்திற்கு அரசு ரூ.716 மட்டுமே செலவிடுகிறது. (வளர்ச்சியுற்ற மாநிலங்களில் இதற்கு ரூ.871 செல்விடப்படுகிறது). இது மிகவும் குறைந்த தொகையாகும்.இது சுகாதாரத்திற்கென 4.17% மட்டுமே செலவிடுகிறது (தேசிய சராசரி 5.05%) என, 2018 தேசிய சுகாதார புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
துணை சுகாதார நிலையங்களில் -- இது, இந்திய பொது சுகாதார அமைப்புகளின் முக்கிய மையம் -- 28% தண்ணீர் வசதியின்றியும், 20% மின்சார இணைப்புமின்றி காணப்படுகிறன. அரசு மருத்துவமனைகளில் 51% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.