நிலம் பாலைவனமாவதை ஒரே நேரத்தில் ராஜஸ்தான் கிராமம் எவ்வாறு தடுத்தது
உதய்பூர், மேற்கு ராஜஸ்தான்: மேற்கு ராஜஸ்தானில், தார் பாலைவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மார்வார் என்ற நிலப்பரப்பை எதிர்கொள்ளும் ஆரவல்லி மலைத்தொடரில், ஒரு குன்றின் மீது கஜீந்தர் கலால் நின்றார். அவர் நின்றது, ராஜஸ்தானின் மேவார் பகுதி உதய்பூரில் உள்ள கோகுண்டாவில் இருக்கும் மலைத்தொடர்.
குன்றின் இருபுறமும் உள்ள காட்சிகள் மாறுபட்டவை: கலாலுக்கு முன்னால் வறண்ட பாலைவனத்தின் தொடக்கமும்; பின்னால், பச்சைப்பசேல் என காடுகள், சீதாப்பழ மரங்கள் உள்ளன. தார் பாலைவனத்திற்கு ஒரு தடை போட்டு, மேவார் மற்றும் அதற்கு அப்பால் மணல் நுழைவதை ஆரவல்லி மலைத்தொடர் தான் தடுக்கிறது.
கோகுண்டாவின் பக்கத்து ஒன்றியமான ஜாடோலை சேர்ந்தவர் கலால். கரேச்சின் முன்னாள் கிராமத் தலைவர் (சர்பஞ்ச்) ஹன்சா ராமை சந்திக்க சென்று கொண்டிருந்தார். "இது முன்பு வறண்ட பகுதியாக இருந்தது; இங்கு எதுவுமே வளர்ந்ததில்லை," என்று அவர் கூறினார். உள்ளூர் சமூகங்களால் மீட்டெடுக்கப்பட்ட 359 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சிலமேய்ச்சல் பகுதிகளை கடந்து அவர் சென்று கொண்டிருந்தார்.
ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு முன், கரேச்சில் வசிப்பவர்கள், மேய்ச்சல் நிலங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் கிடைக்கும் தீவனம்; புதிய மற்றும் காய்ந்த விறகிற்காக வெட்டியதால் உள்ளூர் மரங்களின் பசுமைப்பரப்பு குறைந்து வருவதை கண்டனர். அரசின் கூட்டு வன மேலாண்மை திட்டத்துடன் இணைந்த கூட்டு பிரச்சாரங்கள் வாயிலாக, 2002 ஆம் ஆண்டில் இருந்து இச்சமூகத்தினர், 300 ஹெக்டேருக்கும் அதிகமான பொதுவான நிலங்களை வெற்றிகரமாக மீட்டு எடுத்துள்ளனர்.
கடுமையான விதிமுறைகள் பொதுவான ஒப்புதலால் இங்கே வகுக்கப்பட்டன; பின்பற்றப்பட்டன. இளம் மரக்கன்றுகள் மேய்ச்சலுக்கோ அல்லது வெட்டவோ கூடாது. எனவே ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்திற்கு பொதுவெளி பகுதிகள் மூடப்படும்; காய்ந்து போனவற்றை மட்டுமே அங்கே சேகரிக்க முடியும்; பச்சை தாவரங்கள், மரங்களை அல்ல.
உலகெங்கிலும், 130 கோடிக்கும் அதிகமான மக்கள் பாழ்பட்ட விவசாய நிலத்தில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கல் தடுப்பது தொடர்பான மாநாட்டின் (யுஎன்சிசிடி) 14வது அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட 2019 அறிக்கை தெரிவிக்கிறது. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிலத்திற்கு பாதுகாப்பான அணுகலோ, நில வளங்கள் மீதான அதிகாரமோ இல்லை.
இந்தியாவில், 2011-13 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 9.654 கோடி ஹெக்டேர் அல்லது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% பாலைவனமாக்கலுக்கு உட்பட்டுள்ளது என, லாப நோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பான தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (டெரி) 2018 ஆம் ஆண்டின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த சீரழிவில் 10% வரை நீர் அரிப்பு மற்றும் தாவரங்களின் இழப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது. மற்ற காரணிகள் காற்று அரிப்பு, உப்புத்தன்மை மற்றும் மனித காரணங்கள். டெரி அறிக்கையின்படி, தனது நிலப்பரப்பில் 50%, கடும் சீரழிவை எதிர்கொள்ளும் ஆறு இந்திய மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும்.
கட்டாய இடம் பெயரும் அபாயத்தை குறைக்க, ஒரு நாட்டின் மிகவும் பலவீனமான பகுதிகளில் மற்றும் பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நில மறுசீரமைப்பு மற்றும் நிலையான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று, ஐ.நா அறிக்கை பரிந்துரைத்தது.
ஐ.நா. பரிந்துரைகள் குறித்து கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தாலும், ஹன்சா ராம் மற்றும் பிறர், துல்லியமாக இந்த உத்திகளுடன் செயல்பட்டு வருகின்றனர். மேம்பாட்டு இதழியல் இணையதளமான Bastion, ஆரவல்லி மலைப்பகுதியில் ஒருமாதம் தீவிர கள ஆய்வில் இறங்கியது. இதில், சுரங்கம், கட்டுமானம், அத்துமீறல் மற்றும் கழிவுகளை கொட்டுவது போன்றவற்றால் இப்பகுதி போராடி கொண்டிருப்பது தெளிவாகியது. கரேச்சாவில் மேற்கொள்ளப்பட்ட சமூக முயற்சிகள் இந்த காரணிகளால் ஏற்படும் நிலச்சரிவைத் தடுக்கக்கூடும்.
"இதை பார்த்தால், சமூகங்களின் இம்முயற்சி, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் பங்களிக்கின்றன," என்று, ராஜஸ்தான் உட்பட ஏழு மாநிலங்களில் லாப நோக்கற்ற பணிகளை மேற்கொள்ளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் (FES) பணிபுரியும் கோகுண்டா ஒன்றிய குழுத்தலைவர் சேதன் துபே கூறினார். "காலநிலை மாற்றத்தின் கடும் வரையறைகள் மற்றும் விதிமுறைகள் அவற்றின் அகராதிக்கு பொருந்தாது; ஆனால் மைக்ரோ மட்டங்களில் இந்த கூட்டு முயற்சி காலநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்கிறது” என்றார்.
வாழ்வாதாரங்களும், பொதுவானவையும்
சமீபத்தில் அறுவடையான மக்காச்சோள வயல்களுக்கு நடுவில் ஹன்சா ராமின் வீடு உள்ளது. கரேச்சில் உள்ள 600 விவசாய வீடுகளில் இதுவும் ஒன்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் சோயா பீன்ஸ், கோதுமை மற்றும் கடுகு ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். ஹன்சா ராமின் மொட்டை மாடியில், அம்லா (நெல்லிக்காய்) மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவை வெயிலில் காயப் போடப்பட்டுள்ளன.
"இவை எங்கள் வீடுகளில் இருந்து வந்தவை, ஆனால் நாங்கள் மீட்டெடுத்த பொது நிலத்தில் இது நிறைய வளர்கிறது," என்று வன் சுரக்ஷா பிரபந்தன் சமிதியின் (வன பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குழு) தலைவராக இருக்கும் விவசாயி ஒருவர் கூறினார். இந்த குழு எப்.இ.எஸ். (FES) உதவியுடன் உருவாக்கப்பட்டது.
கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள், பொது சொத்தில் விளையும் பழங்கள், தீவனம் மற்றும் மரக்கன்றுகளை சார்ந்துள்ளன.
ஹன்சா ராமின் மொட்டை மாடியில், நெல்லிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியன வெயிலில் காயப்போடப்பட்டுள்ளன. கரேச்சில் உள்ள 600 விவசாய வீடுகளில் இதுவும் ஒன்று. பாலைவனமாக்கல் போன்ற பல சவால்களை எதிர்கொண்டு அவரது கிராமம் உள்ளூர் பொது நிலங்களை பாதுகாத்தது.
கடந்த 2002இல், கிராமவாசிகள் உள்ளூர் பசுமை பரப்பு வீழ்ச்சியைக் கண்டபோது, அவர்கள் தங்களை சமிதிக்குள் கட்டமைத்து கொண்டனர். "ஆரம்பத்தில், தொடர் கூட்டங்கள் மட்டுமே நடக்கும். எந்த வேலையும் தொடங்காது என்பதால் மக்கள் எரிச்சலடைந்தனர்" என்று ஹன்சா ராம் கூறினார். "ஆனால் இந்த ஆரம்ப கூட்டங்கள்தான் எங்களுக்கு ஒரு பொதுவான சிந்தனை செயல்முறைக்கு நெறிப்படுத்தின" என்றார்.
சமிதிக்கு நிதி தேவைப்படுகிறது; அதற்காக அவர்கள் வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும். ஒரு புதிய கணக்கிற்கான குறைந்தபட்ச தொகை ரூ.500. எனவே, ஒவ்வொரு குடும்பமும் சுமார் 3 ரூபாய் பங்களிப்பு செய்தது. இனி, வேலையை தொடங்க முடியும்.
வனங்களை நிர்வகிப்பதில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு அரசின் முயற்சியாக, கூட்டு வன மேலாண்மை திட்டத்துடன் பணிபுரிந்து சமூகத்னர் மறுசீரமைப்பு பணியைத் தொடங்கினர். கிராமத்தினர் விவாதித்து, மண்டலம் பிரித்தல், மரக்கன்றுகளின் நீர் தேவை மற்றும் நடவு செய்ய வேண்டிய மரக்கன்றுகள் பற்றிய முடிவுகளை உள்ளடக்கிய பாதுகாப்புக்கான திட்டங்களை உருவாக்கினர். "இன்று, காடு மிகவும் அடர்த்தியாக உள்ளது. இரண்டு பேர் ஒன்றாக நடந்து செல்வது கடினம்," என்று ஹன்சா ராம் கூறினார்.
எப்படி அவர்கள் இதை சாதித்தார்கள்
இடதுபுறம் உள்ளது, 2002 இல் இருந்த கரேச்; வலது பக்கம், 17 ஆண்டுகள் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு, 2005 இல் எடுக்கப்பட்ட கரேச். பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களில், கிராமவாசிகள் இந்த செயல்பாட்டை நம்பவில்லை; ஆனால் முடிவுகளை பார்க்கத் தொடங்கியதும் தீவிரமாக களமிறங்கினர்.
முதல் கட்ட திட்டமிடல் முடிந்ததும், பொது இட நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது; இது தொடர்பாக கடுமையான விதிகளை வகுத்து செயல்படுத்தப்பட்டது. உதாரணமாக, மரக்கன்றுகள் பசுமையாக இருக்கும் போது, கால்நடை மேய்ச்சலைத்தடுக்க பொதுவான மைதானங்கள் மூடப்பட வேண்டியிருந்தது; கிராமவாசிகள் விறகுகளுக்காக மரக்கிளைகளை சேகரிப்பதைத் தடுக்க வேண்டியிருந்தது.
தற்போது மீட்டெடுக்கப்பட்ட மொத்த 359 ஹெக்டேர் நிலங்களில், ஒன்பது மட்டுமே மேய்ச்சல் மற்றும் விளைபொருட்களை சேகரிப்பதற்காக ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். மீதமுள்ளவை ஆண்டின் பெரும்பகுதியும் பாதுகாக்கப்படுகின்றன; ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை தீயை தடுக்க பொதுவெளியில் புல் வெட்டுவதற்கு மட்டுமே திறக்கப்படும். கால்நடை தீவனங்களை சேகரிக்க சமூகத்தவர்கள் பொது இடத்தில் நுழைந்தால், மற்றொரு விதி பின்பற்றப்படுகிறது - ஏக் கர் சே ஏக் தத்லி - அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உறுப்பினர் மட்டுமே, அதிகப்படியான பயன்பாட்டை தடுக்க, தீவனம் சேகரிக்க முடியும்.
பொது இட நிர்வாகத்தின் போது ஏற்பட்ட ஒரு சவால் - பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றியது. "குடும்பங்கள் தங்களது வீடுகளை கட்டுவதற்காக மரங்களை வெட்டிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன" என்று ஹன்சா ராம் கூறினார். "இதற்கு காய்ந்த பட்டுப்போன மரங்களை மட்டுமே சேகரிக்க முடியும், ஆனால் பச்சையான வளரும் மரங்கள் அல்ல. அதை மீறும் குடும்பத்தினருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.
மேலும், மேய்ச்சல் நிலம் மூடப்பட்டிருக்கும் மாதங்களில் கிராமவாசி எவரேனும் கால்நடைகளை மேய்ப்பதைக் கண்டால், அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத கட்டணம் விலங்கை பொறுத்தது - ஆடுகளுக்கு ரூ. 50, மாடுகள் மற்றும் எருதுகளுக்கு ரூ.10 ஆகும்.
இடைவிடாத விழிப்புணர்வை சமூகங்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றன? நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முறை தான் “லத்தி அமைப்பு”; இதன் கீழ் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொன்றாக பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் பிற வேலைகளுக்கு மக்கள் முன்னுரிமை அளித்ததால், இந்த அமைப்பானது விரைவிலேயே பலவீனமடைந்தது. எனவே, சமிதி சார்பில் கூட்டாக ஒரு காவலரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டுக்கு ரூ.750 செலவாகும்.
கரேச்சில் மீட்டெடுக்கப்பட்ட பொதுவான நிலங்கள் அமைந்துள்ள எல்லைச் சுவரில் கஜீந்தர் கலால். நிலச்சீரழிவை தடுக்க நிலப்பயன்பாடு குறித்த விதிகளின் தொகுப்பை கிராம சமூகம் உருவாக்கி, அதை பின்பற்றியது.
பல ஆண்டுகளாக மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்ட (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நிதியைப் பயன்படுத்தி, சமூகத்தினர் எல்லைச் சுவரைக் கட்டினர். இத்திட்டம் கிராமப்புற இந்தியாவில் ஒரு வருடத்தில் 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை வழங்குகிறது. எல்லை சுவரை ஒட்டி, சீத்தாபழ மரங்கள், மூங்கில் மற்றும் பிற தாவரங்களை நடவு செய்வது பற்றிய விவாதங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. அதாவது நிரந்தரமான ஒரு பசுமை “சுவரை” உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நாங்கள் கிராமத்திற்குச் சென்றபோது, சுமார் 25 குடியிருப்பாளர்கள் கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் கூடி சீதாப்பழம் விற்பனைக்கு ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இது தயாரிப்புகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விலை பேசவும், இடைத்தரகர்களை நீக்கவும் அவர்களுக்கு உதவும். இப்போதுகரேச்சின் குடியிருப்பாளர்கள் - கூட்டாக நிலையான முடிவெடுத்தல் மற்றும் நடவடிக்கை என்ற தங்கள் ஆயுதத்தை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினர்.
(ரத்தோர், தி பாஸன் இணையதளத்தின் சுற்றுச்சூழல் பணியாளர். இது, முதலில் தி பாஸன் தளத்தில் வெளியிடப்பட்டது).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.