கல்வி, பொருளாதார சுதந்திரம் இந்திய பெண்களது தற்கொலைகளை குறைக்கலாம்
புதுடெல்லி: இந்திய பெண்கள் படித்திருந்து, பொருளாதார சுதந்திரம் பெற்று, வீட்டு அடக்குமுறைகளை குறைந்தளவே சந்திக்க நேருமானால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் --அதாவது உலகளாவிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம்-- குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் 1,00,000 பெண்களில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்; இது உலக சராசரியை விட 2.1 மடங்கு அதிகம்; 2016ஆம் ஆண்டின்படி அதிக தற்கொலை நிகழும் நாடுகளில் இந்தியா ஆறாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்கொலை இறப்புகளில் பாலின வேறுபாடு மற்றும் மாநில மாறுபாடுகள் உள்ளதாக, தி குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் ஸ்டடி : 1990-2016 ஆய்வை மேற்கோள்காட்டி, மருத்துவ பத்திரிகையான தி லான்செட், 2018 செப்டம்பர் இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பெண்களுக்கான வயதில் தற்கொலை மரண விகிதம் (SDR) 27% என சரிந்துள்ளது; அதேநேரம் ஆண்கள் தற்கொலை மரண விகிதம், 1990ஆம் ஆண்டில் இருந்து 2016 வரை மாறவேயில்லை. இந்த வயது வித்தியாச விகிதங்கள் வெவ்வேறு மக்களிடையே ஒப்பிட உதவுகின்றன.
“1990ஆம் ஆண்டில் இருந்து 2016 கல்வியறிவு அதிகரிப்பு, பெண்களுக்கு உரிய வயதில் திருமணம், பொருளாதார முன்னேற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்” என, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் முன்னணி பேராசிரியரும், சிந்தனையாளருமான ராக்கி தண்டோனா தெரிவிக்கிறார்.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் அதிக விகிதம் பேர், திருமணமானவர்கள் என்றபோதும், உலகளவில் பெண்கள் தற்கொலையை தடுக்கும் காரணியாக தற்கொலை கருதப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம், முன்கூட்டியே திருமணம், இளம் வயதில் தாய்மை, குறைந்த வாழ்க்கைத்தரம், குடும்ப வன்முறை, பொருளாதார சுதந்திரமின்மை போன்றவை இதற்கு காரணமாகிறது.
இளம் வயது திருமணம்; குறைந்த வாழ்க்கைத்தரம்
இளம் வயது திருமணம் என்பது இந்தியாவில் பொதுவாக உள்ளது. 27% பெண்கள், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்; 8% பெண்கள் (15- 19 வயது) 19 வயதுக்கு முன்பாகவே கர்ப்பமடைவதாக, சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-4) தெரிவிக்கிறது.
பொதுவாக உலக அளவில், குடும்ப வன்முறையே பெண்களின் தற்கொலை எண்ணத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தியாவில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட, திருமணமான பெண்களில் 29% பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3% பெண்கள் கர்ப்ப காலத்தில் கொடுமையை சந்திப்பதாக, என்.எப்.எச்.எஸ்.-4 ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களில், 15-49 வயதுக்குட்பட்ட 36% பேர் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு மேலான கல்வியை முடித்துள்ளனர். எனவே இளம் வயது திருமணம், தாய்மை, குடும்ப வன்முறை, கல்வியின்மை அல்லது பொருளாதார சுதந்திரம் இல்லாதது போன்றவை இதற்கு காரணமாகிறது.
”ஆண்களை போல் அல்லாமல், கல்வி என்பது தற்கொலையில் இருந்து பெண்களை காக்கிறது” என்று, ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரும், சென்னை ‘ஸ்நேகா இந்தியா’ சுகாதார சேவை அமைப்பை சேர்ந்தவருமான லட்சுமி விஜயகுமார் கூறுகிறார்.
ஆண்களின் தற்கொலைக்கு பொதுவாக கடன் காரணமாகிறது; ஆனால் பெண்களுக்கோ திருமணம், குடும்ப பிரச்சனைகள் தற்கொலையை தூண்டுவதாக, அவர் தெரிவிக்கிறார்.
குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு கல்வி, வரதட்சணை குறைப்பு போன்றவை பெண்களின் தற்கொலையை தடுக்க உதவும் என்று, லட்சுமி விஜயகுமார் தெரிவித்தார்.
பெண்களின் தற்கொலைக்கு மற்றுமொரு முக்கிய காரணம், ஆண்களிடம் உள்ள மது அருந்தும் பழக்கம். ”மது அருந்தும் பழக்கத்தால் வீட்டு வன்முறைகள், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து, பெண்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர் என்பது பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
பாலியல் ரீதியான மற்றும் நெருக்கமானவரால் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்தினால் பெண்களின் தற்கொலை விகிதம் குறையும். பாலியல் துஷ்பிரயோகம் இல்லாத நிலையில் பெண்களின் தற்கொலை முயற்சி 28%; ஆண்களில் 7% குறையும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
ஆண்- பெண்களிடையே வித்தியாசம்
"பல சமூக காரணிகளால் பெண்களின் தற்கொலை விகிதம் குறைந்த போதும், கடந்த 30 ஆண்டுகளில் ஆண்களின் தற்கொலை விகிதம் இன்னமும் மாறவில்லை என்பது கவலைக்குரியது" என்று டான்டோனா கூறினார்.
தற்கொலை மரணம் என்பது, 1990ஆம் ஆண்டில் 1,00,000 பேரில் 20 பெண்கள் என்றும், 2016ல் இது 1,00,000 பேரில் 15 ஆகவும் குறைந்தது. ஆண்களில், 1990ஆம் ஆண்டில், 1,00,000 பேரில் 22 பேர்; 2016ஆம் ஆண்டில் 21 என தற்கொலை விகிதம் இருந்தது.
உலகளவில், ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆபத்து, பெண்களை விட இரு மடங்கு --200%--அதிகம். இந்தியாவில் இந்த விகிதம் குறைவாக, அதாவது பெண்களை விட 50% அதிகமாக உள்ளது.
15 முதல் 39க்குட்பட்ட வயதில் தற்கொலை செய்து கொள்வது அதிகம் உள்ளது. பெண் தற்கொலைகளில் 71%, ஆண்களில் 58% இவ்வாறு நிகழ்கிறது.
Source: The Lancet
குறிப்பு: ஈ.டி.எல். (ETL) என்பது நோய்த்தாக்க நிலை மாற்றம் என்பதை குறிக்கிறது. அதாவது, பிராந்தியத்தின் வளர்ச்சியுடன் தொடர்புள்ளவற்றுடன் இருந்து தொடர்புபடுத்தாத நோய்களுக்கு மாற்றுவது. குறைந்த ஈ.டி.எல். என்பது தொடர்புள்ள நோய்களில் அதிக சுமையையும்; உயர் ஈ.டி.எல். என்பது அதிக சுமை கொண்ட தொடர்பில்லா நோய்களை சுட்டிக்காட்டுகிறது.
பெண்களில் தற்கொலை முயற்சிகள் வெளியாவதில்லை
இந்த மதிப்பீடுகள் இந்தியாவில் தற்கொலைகளின் அளவைப் புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்கது; எனினும், அவை தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகளை இழக்கிறது; ஆனால் இறப்பிற்கு வழிவகுக்காது.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண்கள் தற்கொலை செய்துகொண்டால் அக்குடும்பத்தினரே பொறுப்பு என்பதால் பெண்களின் உண்மையான தற்கொலை விவரங்கள் பெரும்பாலும் பதிவாவதில்லை. பெண் தற்கொலை மற்றும் தற்கொலைகள் இடையே 37% வேறுபாடும்; தற்கொலை மற்றும் ஆண் தற்கொலைகளில் 25% வேறுபாடும் உள்ளதாக, தேசிய குற்ற ஆவணப் பணியகத்தை மேற்கோள்காட்டி, 2014 தற்கொலை இறப்பு ஆய்வு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் விஷமருந்தி தற்கொலை செய்யும் முயற்சிகள் தற்செயலாக விஷம் குடித்ததாகவே கூறப்படுவதாக, சி.இ.எச்.ஏ.டி. ஒருங்கிணைப்பாளர் ரங்கீதா ராஜே தெரிவிக்கிறார். இவர், வன்முறையை சந்திக்கும் பெண்களுக்கு மருத்துவமனை அடிப்படையிலான தீர்வு மையங்களை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கியவர்.
“அரசு மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும் ”தற்செயலாக விஷம்” என்ற பிரிவின் கீழ் மாதத்திற்கு 25 பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்” என்று அவர் கூறினார்.
“விஷம் குடித்து பாதிக்கப்பட்ட பல பெண்களை சந்தித்த பின், 2000ஆம் ஆண்டில் திலஷா (மருத்துவமனை அடிப்படையிலான தீர்வு மையம்) தொடங்கினோம். அந்த பெண்கள் இங்கு சிகிச்சை பெற்றனர்; எனினும் எதிர்கால தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்கான எந்த ஆதரவும் கிடைக்கவில்லை”.
”எதிர்மறையான சூழலை புறக்கணிக்கும் போது பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் பிரச்சனைகள் இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். அது, அவளை மேலும் தீவிரமான முயற்சியை எடுக்க செய்வதாக, ரங்கீதா கூறுகிறார்.
இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஏறத்தாழ, 15-19 வயதுடைய பெண்களில் 17% பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இது, அனைத்து வயதினரிடையிலான 3வது பெரிய நிகழ்வாகும்.
“பெற்றோரின் துஷ்பிரயோகம் பற்றி பேசப்படுவதில்லை. ஆனால், அவர்கள் அதிகம் பழிக்கிறார்கள்; கட்டுப்படுத்துகிறார்கள். இளம் பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை” என்கிறார் ராஜே.
குடும்ப வன்முறைகள் 30% பெற்றோர்களாலோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களால் நிகழ்வதாக, தேசிய சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.
பிராந்திய வேறுபாடுகள்
நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 26ல், 15 முதல் 29 வயதுக்குள்ளான பெண்களின் இறப்புக்கு தற்கொலையே காரணமாக உள்ளது. குறைந்த இறப்பு விகிதத்திற்கு தற்கொலையின் பங்களிப்பு வளரும் அல்லது வளர்ந்த மாநிலங்களைவிட பின்தங்கிய மாநிலங்களில் அதிகம் என, தி லான்செட் ஆய்வு கூறுகிறது.
Source: The Lancet (Image 4, age standardised SDR in 2016)
தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் மிக அதிகமான தற்கொலை மரண விகிதம் (SDR) உள்ளது. இங்கு 10,00,000 பேரில் 18 என்றிருந்தது. கிரீன்லாந்து (38.1), லெசோதோ (35.3) மற்றும் உகாண்டா (18.7) ஆகிய மூன்று நாடுகள் அதிக தற்கொலை விகிதத்தை கொண்டுள்ளன.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகியவற்றில், நாட்டின் பிற பகுதிகளை விட ஆண், பெண் தற்கொலை விகிதம் அதிகம் இருந்தது.
"தற்கொலை மிகவும் சிக்கலானது; வெறும் ஒரு காரணியை கொண்டு மட்டும் அதை குறைக்க முடியாது," என்று தான்டோனா கூறினார்.
“தென்மாநிலங்களில் அதிக நகர்ப்புற பகுதிகள் உள்ளன; அதிக மக்கள் நெரிசல், சிறு குடும்ப முறை, அதிக பொருட்செலவு மிகுந்த வாழ்க்கை முறை போன்ற அதிக மன அழுத்தம் தரக்கூடிய காரணிகள் உள்ளன. இதுவே, இம்மாநிலங்களின் அதிக தற்கொலை விகிதத்திற்கு காரணம். நகரங்களை நோக்கி மக்கள் செல்வதால் கிராமப்புற வளர்ச்சி தடைபட்டு, அங்கும் அதிக தற்கொலை விகிதம் ஏற்பட வழிவகுக்கிறது” என்கிறார் அவர்.
கடந்த 1990 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, பெண் தற்கொலைகளில் அதிக சரிவை உத்தரகண்ட் (45%), சிக்கிம் (43%), ஹிமாச்சல பிரதேசம் (40%) மற்றும் நாகாலாந்து (40%) ஆகியன கண்டுள்ளன.
இந்தியாவில் தற்கொலைகள் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை
பெண்களில், 19 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலையே அதிக காரணமாக உள்ளது; ஆனால் அதில் சிறு ஆராய்ச்சி இருக்கிறது. விவசாயிகள் தற்கொலையானது பொதுமக்களின் கவனத்தை பெறுவது போலின்றி இது எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதாகும்.
ஆண்களின் தற்கொலை விகிதங்கள் குறையாதது ஏன் என்று கண்டறியப்பட வேண்டும். "இந்தியாவில் ஆண்களின் தற்கொலை எனப்து, இளம் வயதினரை பாதிக்கக்கூடியது. திருமணம், அவர்களுக்கு பாதுகாப்பை தரவில்லை என்றே தோன்றுகிறது” என, லான்சட் இதழ் ஆய்வு தெரிவிக்கிறது.
உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, ஆண்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். உதவி கேட்பதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. “ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை, அவர்களுக்கு அதுபோன்ற பிரச்சனை இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை என்பதற்கு, பல சான்றுகள் உள்ளன” என்று டந்தோரா தெரிவிக்கிறார்.
தற்கொலைக்கு தீர்வாக, 2017ஆம் ஆண்டில் தேசிய மனநல சுகாதார சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மனநல சிகிச்சைக்கு அணுகுவதை மேம்படுத்தும்; தற்கொலை சூழலுக்கான களங்கத்தை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
தற்கொலைக்கு பொதுவான வழியாக உள்ள விஷம் குடிப்பதற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக்கு கட்டுப்படுத்துவது, மது விற்பனையை ஒழுங்குபடுத்துவது போன்றவை தற்கொலை குறைப்புக்கு உதவும். “மன அழுத்தம், தனிமை போன்ற அறிகுறிகளை கண்டறிய பொதுவான மருத்துவ முறைகளை கற்பிக்க வேண்டும். ஒருவருக்குள்ளான மோதல், உணர்ச்சி, கோப சூழல்களை கையாளுதல் குறித்து பள்ளிகளிலேயே கற்றுத்தர வேண்டும்” என்கிறார் விஜயகுமார்.
“தேசிய சுகாதார முன்னுரிமை பிரச்சனையாக தற்கொலையை நாம் அறிவிக்க வேண்டியது அவசியம்” என்று, ஹார்வர்ட் டிஎச் சான் பொது சுகாதார பள்ளியின் உலக சுகாதாரம் மக்கள் தொகை துறை பேராசிரியர் விக்ரம் படேல் கூறுகிறார். இந்தியாவில் தற்கொலை 2014 என்ற ஆய்வின் ஆசிரியர். தற்கொலைகளை தடுக்க, அதற்கான உத்திகளை செயல்படுத்த, அமைச்சர்கள் அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை விகிதம் கணிசமாக குறைந்த, அண்டை நாடுகளான சீனா, இலங்கையை இவ்விவகாரத்தில் இந்தியா முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று, படேல் மேலும் தெரிவித்தார்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.