சிறந்த தடுப்பு மருந்துகள் இருந்தும் இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒரு குழந்தையை கொல்லும் வயிற்றுப்போக்கு, நிமோனியா
மும்பை: இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 2,61,000 குழந்தைகள் தங்களின் 5வது பிறந்தநாளை கொண்டாடும் முன்பே, தடுக்கக்கூடிய நோய்களான வயிற்றுப் போகு அல்லது நிமோனியாவால் இறந்துவிட்டனர். இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டு உலகளவில் 5வது இடத்தில் உள்ள நம் நாட்டின் இந்த எண்ணிக்கை, உலகின் அதிகபட்ச ஒன்றாகும் என்று, 2018ஆம் ஆண்டுக்கான வயிற்றுப்போக்கு, நிமோனியா குறித்த முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உலக நிமோனியா தினமான 2018, நவ. 12-ல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் தினமும் 735 குழந்தைகள் இவ்விரு நோயால் இறக்கின்றனர்; ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால்வாசி பேரின் இறப்புக்கு இவ்விரு நோய்களும் காரணமாகின்றன. இந்நோய்களுக்கு எதிராக இணைந்து களமிறங்கினால் குழந்தைகளின் இறப்பை குறைக்க முடியும்.
கடந்த 2016-ல் வயிற்றுப்போக்கு, நிமோனியாவை கட்டுப்படுத்துதல், தடுத்தல், சிகிச்சை அளித்தலில் இந்தியா ஓரளவு வெற்றி கண்டது: நோயெதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேம்பட்டன; எனினும் சிகிச்சை அளிப்பதில் சரிவு ஏற்பட்டது என, சர்வதேச நோய் தடுப்பு மையம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் சுகாதார பள்ளி அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கை, நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்க, சிகிச்சை தர நாடுகள் எவ்வாறு திறமையாக 10 முக்கிய பணிகளை-- அதாவது தாய்ப்பால் புகட்டுதல், தடுப்பூசி, பராமரிப்புக்கான அணுகல், நுண்ணுயிர் எதிர்ப்புகளின் பயன்பாடு, வாய்வழியே நீர்க்கரைசல் (ORS) மற்றும் கூடுதல் துத்தநாகம் போன்றவற்றை எவ்வாறு நாடுகின்றன என்பதை ஆய்வு செய்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், ஹீமோபிலஸ் இன்ப்ளூபென்ஸே வகை பி (ஹிப்) தடுப்பூசி பயன்பாடு, இந்தியாவில் 8%புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடும் வயிற்றுப்போக்கை தடுக்கும், 2016ல் அறிமுகமான, ரோடாவைரஸ் மருந்து பயன்பாடு இந்தியாவில் 9% புள்ளிகள் அதிகரித்ததாக கடந்தாண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு மாறாக இந்தியாவில் பிற சிகிச்சைகளான, ஓஆர்எஸ் (ORS) கவரேஜ் (13% புள்ளிகள்), பிரத்தியேக தாய்ப்பால் (10%) மற்றும் நியூமேனியா கவனித்தல் (4%புள்ளிகள்) குறைந்துள்ளன.
அதேநேரம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் இறக்கும் எண்ணிக்கையில் (ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப் போக்கால் 7.2%, நிமோனியாவால் 6.8%) சீரான சரிவு உள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து 2018க்குள் வயிற்றுப்போக்கால் இறந்தோர் எண்ணிக்கை 3,39,937-ல் இருந்து 1,02,813 என 69.7%; நிமோனியாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,85,094-ல் 1,58,176 என, 67% குறைந்துள்ளது.
கடந்த 2005 - 2015ஆம் ஆண்டுக்கிடையே, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஒரு மில்லியன் பேரின் இறப்பை இந்தியா தடுத்துள்ளது. வயிற்றுப்போக்கிற்கு உரிய நேரத்தில் சிகிச்சை, தட்டம்மைக்கான தடுப்பூசிகள், மற்றும் அதிகரித்த மருத்துவமனை பிரசவங்கள் போன்ற நடவடிக்கையால் இது சாத்தியமானதாக, 2017 அக். மாத இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.
"இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை செய்திருக்கிறது. எனினும் இது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்" என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக
சர்வதேச சுகாதார மற்றும் குழந்தை நலவியல் துறை பேராசிரியர் மதுசந்தோஷம் கூறியுள்ளார்.
”தற்போது வயிற்றுப்போக்குள்ள குழந்தைகளில் 20% பேருக்கே துத்தநாக மருந்துகள் கிடைக்கின்றன. ரோடோ வைரஸ் தடுப்பு மருந்து கிடைப்பதில்லை பிசிவி [நிமோகோகல் கான்ஜிகேட் தடுப்பூசி] ஆறு மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது” என்றார்.
நிமோனியாவுக்கு காரணமாக நிமோகோகல் தொற்றை தடுக்கக்கூடிய நிமோகோகல் கான்ஜிகேட் தடுப்பு மருந்து பயன்பாட்டை இந்திய 2017 மே மாதம் தொடங்கி, இன்னமும் அது மெதுவாகவே உள்ளது. இது இன்றுவரை ஆறு மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது. இம்மருந்தின் மூன்றாவது சொட்டு, இதுவரை எந்த குழந்தைக்கும் போடப்படவில்லை என்று, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Treatment In Countries With Most Under-Five Pneumonia & Diarrhoea Deaths | |||||
---|---|---|---|---|---|
% of children under 5 with suspected pneumonia | % of children under 5 with suspected diarrhea | ||||
Global rank | Country | Taken to an appropriate health care provider | Receiving antibiotics | Receiving ORS | Receiving zinc supplements |
Target: 90% | |||||
1 | India | 73 | N/A | 21 | 20 |
2 | Nigeria | 24 | 23 | 37 | 33 |
3 | Pakistan | 64 | 42 | 38 | 1 |
4 | DRC | 42 | 40 | 39 | 2 |
5 | Ethiopia | 31 | 7 | 30 | 33 |
Source: 2018 Pneumonia & Diarrhoea Progress Report
பாதிக்கப்படும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1000 பேருக்கு 25 என்று, 2030 ஆம் ஆண்டுக்குள் குறைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கை எட்ட, தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் தற்போது இந்த விகிதம் 1000 குழந்தைகளுக்கு 39 என்றளவில் உள்ளது. இது, 2012ல் 1.4 மில்லியன் பேரில் 9,89,000 என்பதைவிட 30% குறைந்துள்ளதாக, 2018 செப்டம்பரில் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
அண்டை நாடான வங்கதேசம், தான்சானியா போன்ற நாடுகள் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் பணியில் பெரிய அளவில் நேர்மையான மாற்றங்களை கண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சரியான நோய்தடுப்பு பணி; தவறான சிகிச்சை
நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான உலக செயல் திட்டத்தின் (GAPPD) கீழ் இந்தியாவின் செயல்திறனுக்கான மதிப்பெண் (முன்பு சுட்டிக்காட்டப்பட்ட 10 பணிகளின் அடிப்படையில் இது கூட்டாக தரப்படும்), கடந்தாண்டின் 50% என்பதுடன் ஒப்பிடும்போது, தற்போது ஒரு சதவீத புள்ளி உயர்ந்துள்ளது. ஆனால் இது 86% இலக்கு என்பதில் இருந்து நீண்ட பயணமாகும். செயல்பாட்டுத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 15 நாடுகளில் ஒன்றுகூட இதை இன்னும் எட்டவில்லை. பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் 2016ஆம் ஆண்டில் நிமோனியாவால் அதிக இழப்பை சந்தித்தவை.
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதுடன் ஒப்பிடும் போது, நிமோனியா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நிமோனியா கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் இலக்கு 86% என்ற நிலையில் 65%ஐ அது எட்டியுள்ளது. இதுவே வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துவதில், 82% என்ற இலக்கில் தற்போது 39% என்ற நிலையே உள்ளது.
Countries With Most Under-Five Pneumonia & diarrhoea Deaths: Performance On Global Action Plan For Prevention & Control | ||||
---|---|---|---|---|
Global rank | Country | 2018 GAPPD | ||
Overall Target 86% | Pneumonia* Target 84% | Diarrhoea* Target 82% | ||
1 | India | 50 | 65 | 39 |
2 | Nigeria | 30 | 33 | 27 |
3 | Pakistan | 50 | 63 | 33 |
4 | DRC | 49 | 64 | 34 |
5 | Ethiopia | 52 | 53 | 53 |
Median across 15 high-burden countries | 50 | 59 | 36 |
Source: 2018 Pneumonia & Diarrhoea Progress Report
உண்மையில், ஐந்து வயதுக்குட்பட்ட வயிற்றுப்போக்குள்ள குழந்தைகளில் 20% பேர் மட்டுமே ஓ.எஸ்.ஆர். உப்பு பெற்றுள்ளனர்; 21% மட்டுமே துத்தநாகம் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குழந்தை பருவ வயிற்றுப்போக்கிற்கு 90%க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் தவறானவை என்று, 2015 பிப்ரவரி 18ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. தகுதியற்ற மருத்துவ பயிற்சியாளர்கள், அறிமுகமற்ற மலிவான உயிர்பாதுகாப்பு மருந்துகள் பயன்பாடு, பரிந்துரைக்கப்படும் நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் கேடு விளைவிக்கும் பிற மருந்துகளை குறிப்பிடலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஓ.ஆர்.எஸ். என்பது சுத்தமான தண்ணீரில் கலந்த உப்பு, சர்க்கரை கரைசலாகும். இது சிறு குடலால் உறிஞ்சப்பட்டு வயிற்றுப்போக்கால் உடல் இழந்த ஆற்றலை தருகிறது. உலக சுகாதார நிறுவன தகவலின்படி, துத்தநாகம் வயிற்றுப்போக்கு கால அளவை 25% குறைக்கிறது; கழிவு வெளியேற்றத்தை 30% குறைக்கிறது.
”ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நோய்தடுப்பு முறைகள் அதிகரித்துள்ளன. ஆனால் நீண்ட காலமாக தடுப்பூசிகள் அல்லது சிகிச்சையில் கவனம் செலுத்துவதாக அது இல்லை. வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா இறப்பை நாம் குறைத்தாக வேண்டும்” என்றார் சந்தோஷம்.
நிமோனியா சிகிச்சை மற்றும் தடுப்பு பணி மேற்கொண்ட குழந்தைகளின் (77%) விகிதம் காரணமாக, 15 நாடுகளில் 3வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. எனினும் நிமோனியாவை எதிர்கொள்ள எத்தனை குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது என்ற விவரம் அதில் இல்லை.
ஏற்றத்தாழ்வால் பாதிப்பு: மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஏழைப்பெண்கள்
தேசிய சமூக- மக்கள் தொகை விவர வேறுபாடுகள் நோய் தடுப்பு திட்டத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிய பாலினம், சொத்து, பெற்றோர் கல்வி, குடியிருப்பு அடிப்படைவிவரங்களையும் இந்த அறிக்கை ஆராய்ந்தது.
இந்தியா முழுவதும் சிகிச்சையில் சமச்சீரற்றதன்மை இருப்பதை ஆய்வு வெளிப்படுத்தியது, கிராமப்புறங்களில் ஏழை பெண் குழந்தைகள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் குறைந்தளவே நோய் தடுப்பு சிகிச்சைகளை பெற்றிருந்தனர். உதாரணத்துக்கு, டெல்லியின் குறைந்த வருவாய் உள்ள பகுதியில் 100 பெண்களில் 78 பேரே முழுமையான நோய்த்தடுப்பு திட்டத்தால் பலன் பெற்றுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
”தடுப்பு மருந்தோ, சிகிச்சையோ பெறாத குழந்தைகளை நாம் கண்டறிய வேண்டும். ஏனெனில் அவர்கள் ஏழையாகவும், (நோய் தொற்றால்) இறக்க வாய்ப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்” என்று சந்தோஷம் தெரிவித்தார்.
எனினும், இந்தியாவில் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. உதாரணத்துக்கு வருடாந்திர நோய்தடுப்பு வாரம் (ஏப். 24- 30) வாயிலாக தொலைதூர கிராமங்களுக்கும் தடுப்பு மருந்துகள் சென்றடைந்து வருகின்றன. தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் தகவல் பரிமாற்றங்கள் வெற்றிகரமாக நடக்கிறது. இது, சமூக சுகாதாரத் தொழிலாளர் குழுக்கள் மற்றும் ஆர்வலர் (பாலின இடைவெளியைக் கையாள்வதற்காக) குழுக்கள் மற்றும் சுகாதார வசதிகளை ஈடுசெய்யும் இந்தியாவின் முன்னணி சுகாதார திட்டமாகும்.
“இந்த அணுகுமுறை, அடிப்படை நோய் தடுப்பு சிகிச்சையில் 6% சிறுவர்கள் என்ற பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்துள்ளது” என்று கூறியுள்ள அறிக்கை, ஹரியானா கிராமப்புற சுகாதார திட்டத்தின் பாலினம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் மீதான தாக்கத்தை அளவிடும் 2016 ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளது.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.