போக்சோ சட்டத்தில் மரண தண்டனை, பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தாகிறது
புதுடெல்லி: சட்ட திருத்த மசோதா என்பது, அசல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரிசெய்ய வேண்டும்; ஆனால், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்ட திருத்தம்-2012, அதன் அசல் மசோதாவைவிட மேம்பட்டதாக இல்லை என்று, குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (திருத்தம்) மசோதா, உண்மையில் போக்ஸோ சட்டத்தை பலவீனப்படுத்துகிறது என்கிறார் வழக்கறிஞரும் ஹக் இணை இயக்குநருமான ஷைலப் குமார்: குழந்தைகள் உரிமை மையம், தண்டனையாக மரண தண்டனையை சேர்ப்பது வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் கொலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்தத் திருத்தமும் இல்லை, வழக்குகளின் நிலுவைக் குறைப்பதற்கான வலுவான தீர்வும் இல்லை.
அரசியல் கட்சிகள் முழுவதும் உள்ள பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த திருத்தங்களை வரவேற்றனர், மேலும் இந்த மசோதா - கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவையில் விவாதிக்கப்பட்டிருந்தாலும் - எந்த நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் குறிப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. மக்களவையின் மழைக்கால அமர்வில், மற்ற 34 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன, ஒவ்வொன்றும் சட்டம் இயற்றுபவர்களிடம் இருந்து கொஞ்சம் கவனத்தைப் பெற்றன. இந்த 35 மசோதாக்களில் மிக முக்கியமானவற்றை பகுப்பாய்வு செய்யும் எங்கள் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.
16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பலவந்தம் செய்து வன்கொடுமை செய்யும் 10 முதல் 20 வயது வரையிலானவருக்கு தண்டனை நீக்குதல் மற்றும் அதிகாரம் கொண்டவர்கள்- இதில் காவல்துறை அடங்கும் அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்- பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை உள்ளிட்ட ஐந்து புதிய உட்பிரிவுகளுடன் போக்ஸோ சட்டம் திருத்தப்பட்டது. குற்றவாளி, குழந்தையின் உறவினர் என்றாலும், அல்லது குழந்தையின் பாலியல் உறுப்புகளை காயப்படுத்தினால் கூட இது அடங்கும்.
மோசமான பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு குழந்தையின் மரணம் அல்லது இயற்கை பேரழிவின் போது அல்லது எந்தவொரு வன்முறை சூழ்நிலையிலும் தாக்குதல் போன்றவற்றுக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் எனவும் இந்த திருத்தம் கூறுகிறது, இது, 'வகுப்புவாத அல்லது குறுங்குழுவாத வன்முறை' என்று அசல் மசோதா கூறப்பட்டதற்கு மாற்றாகும்.
பிற விதிகள், சில வகையான குற்றங்களுக்கான சிறைத் தண்டனைகளின் நீளத்தை மாற்றுகின்றன, மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மரண தண்டனை தடுக்காது
"மரண தண்டனையை அறிமுகப்படுத்துவது ஒரு ஜனரஞ்சக நடவடிக்கை தவிர வேறில்லை" என்று குமார் கூறினார்.
நாம் கூறியது போல், மரணதண்டனை அறிமுகப்படுத்தப்படுவது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்று ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். "பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் 94%, அவருக்கு தெரிந்தவர்களால் நேரிட்டுள்ளது" என்று டெல்லியில் உள்ள பெண்கள் உரிமை அமைப்பான பிரேக் த்ரோ-வின் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை மேலாளர் முகமத் இக்ரம் கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கும்போது, இறப்புக்கான சாத்தியம் பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்கத் தடுக்கக்கூடும்" என்றார்.
பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று, இக்ரம் கூறினார். மேலும், மரண தண்டனை தொடர்பான சட்ட ஆணையத்தின் 2015 அறிக்கையின்படி, மரண தண்டனை ஆயுள் தண்டனை மற்றும் அதற்கு மேல் ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருப்பதற்கான எந்த ஆதார ஆதாரமும் இல்லை. பயங்கரவாதத்தை தவிர பிற அனைத்து வழக்குகளுக்கும் மரண தண்டனையை ரத்து செய்ய, அறிக்கை பரிந்துரைத்தது.
ஒரு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கிய வழக்குகளில் 28.9%, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதில் முடிந்தது. மரண தண்டனை 4.3% வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது - 95.7% வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் தவறாக மரண தண்டனையை விதித்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாம் காலக்கெடுவைப் பார்த்தால், ஒரு பெரிய அமளி காரணமாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உன்னாவ் மற்றும் கத்துவா வன்கொடுமை வழக்குகளுக்கு பிறகு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது," என்று குமார் கூறினார். "பிரதமர் [நரேந்திர] மோடி உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்திற்குச் சென்றார், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கை குறித்து இந்தியா விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது" என்றார்.
கத்துவா வழக்கில், 2018 ஜனவரியில் ஜம்மு-காஷ்மீரில் கத்துவா அருகே ஒரு கிராமத்தில் எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் 6 பேர் குற்றவாளிகள், அவர்களில் மூன்று பேர் ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
உன்னாவ் வழக்கில், ஏப்ரல் 2017 இல் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், இதில் குற்றம் சாட்டப்பட்டவர் உன்னாவோவைச் சேர்ந்த உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர். மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா உறுப்பினராக இருந்தார். இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
பெரும்பாலான வழக்குகளில் நிலுவையில் உள்ள விசாரணை
கடந்த 2016இல், குழந்தைகளுக்கு எதிரான 106,958 குற்றங்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர், இது சமீபத்திய ஆண்டில் தேசிய குற்ற பதிவு பணியகத்தில் (என்.சி.ஆர்.பி) இருந்து கிடைத்த தரவு. இவற்றில் 36,022 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2016 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 89% விசாரணை நிலுவையில் உள்ளன. என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 90% க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்கள் 2016 ல் 29.6% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தன.
2019 ஜனவரி முதல் ஜூன் வரை, போக்சோவின் கீழ் 24,212 சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 27% வழக்குகள் விசாரணைக்கு வந்தன, இது சட்டத்தின் திருத்தத்தின் போது நாடாளுமன்ற விவாதத்தின் போது குறிப்பிடப்பட்டது; 4% வழக்குகள் முடிக்கப்பட்டன.
போக்சோ சட்டத்தின் கீழ் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் 60 நாட்கள் காலக்கெடுவுடன், விரைவு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. போக்ஸோ வழக்குகளுக்கு 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
ஆனால் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு என்பது வழக்குகளின் நிலுவைக் குறைக்க வழிவகுக்காது என்று குமார் கூறினார்.
உதாரணமாக, விரைவு நீதிமன்றங்கள் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள், ஒரு அமர்வு நீதிபதி பதவிக்கு கீழே இல்லாத நீதிபதிகளைக் கொண்டிருக்கும், அவர்கள், அதே நீதிபதிகளின் குழுவில் இருந்து நியமிக்கப்படுவார்கள்.
மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 2.87 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேவையான 17,850 நீதிபதிகள் என்ற எண்ணியுடன் ஒப்பிடும் போது தற்போது 17,891 நீதிபதிகளே உள்ளனர் என்று 2018-19 பொருளாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர் நீதிமன்றங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றை தீர்க்க 8,152 நீதிபதிகள் தேவை. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளில் 62% உயர்நீதிமன்றங்களில் உள்ளனர்; 1,079 நீதிபதிகளில் 671 பேர் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளனர் என்று பொருளாதார கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் குழந்தைகளுக்கு நட்பார்ந்த சூழலை உருவாக்குவது முக்கியம், இதனால் நீதித்துறை மற்றும் நிர்வாக செயல்முறை, குழந்தைக்கு அதிர்ச்சியை அதிகரிக்காது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்திய நீதித்துறை அமைப்பில், நீதிபதிகள் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் இருவருக்கும், முக்கியமான வழக்குகளை கையாள கூடுதல் பயிற்சி அளிப்பட வேண்டும் என்று குமார் கூறினார். உதாரணமாக, சிறார் நீதி மன்றம் ஒரு முதன்மை மாஜிஸ்திரேட் தலைமையிலானது, அவர் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை மட்டுமே கேட்கிறார்; இது அவர்களுக்கு அதிக உணர்திறன் மற்றும் இதுபோன்ற வழக்குகளுக்கு அவர்களின் முழுநேரத்தையும் கொடுக்க உதவுகிறது.
மேலும், இந்த வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணையை மேம்படுத்த மசோதா விதிகளை வகுக்க முயற்சி செய்ருக்க வேண்டும். உதாரணமாக, உச்சநீதிமன்றம், சிறார் பாலியல் பலாத்கார சம்பவங்கள், மெதுவான விசாரணைகள் மற்றும் ஆய்வக அறிக்கைகளைப் பெறுவதற்கான நேரம் குறித்த ஆபத்தான உயர்வு குறித்த பொது நலன் வழக்குக்கு பதிலளிக்கும் விதமாக, போக்ஸோ சட்டத்திற்காக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்ட தடய அறிவியல் ஆய்வகங்களை பரிந்துரைத்தது.
ஒரு நிறுத்த மையங்கள்
திருத்தப்பட்ட போக்ஸோ சட்டம், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தங்குமிடம், மருத்துவ உதவி, ஆலோசனை மற்றும் சட்ட உதவி அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் பெறக்கூடிய ஒரு நிறுத்த மையங்களை அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. ஆர்வலர்கள் இந்த ஏற்பாட்டை வரவேற்றனர்.
இருப்பினும், இந்த தங்குமிடம், இல்லங்களை கண்காணிக்க வேண்டும். உதாரணமாக, ஹரியானாவில் உள்ள, ஒரு நிறுத்த மையத்தில் சிறுவர் பாலியல் அத்துமீறல் தொடர்பான 100 புகார்கள் செய்யப்பட்டது, தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ், ஆர்வலர் அசீம் தாக்யார் பெற்ற தகவலில் இருந்ததாக, டைம்ஸ் ஆப் இந்தியா ஜூன் 6, 2019 இல் செய்தி வெளியிட்டது.
குழந்தைகள் ஆதரவு முறை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மன மற்றும் உடல் நலனுக்காக ஆலோசனை மற்றும் நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இழப்பீட்டுக்கான செயல்முறை இல்லை
தப்பியவர்கள் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) இழப்பீட்டுத் திட்டம் சிறப்பு நீதிமன்றங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டியாக செயல்படும் என்று, உச்சநீதிமன்ற பெஞ்ச் 2018 இல் தீர்ப்பளித்தது, மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழ் இழப்பீட்டு விதிகளை உருவாக்குமாறு அரசை கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் திருத்தத்திற்குப் பிறகும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. மேலும், குழந்தை இறந்தால் யாருக்கு இழப்பீடு கிடைக்கும் என்று மசோதாவில் கூறப்படவில்லை.
இழப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் இடைவெளிகள் உள்ளன. உதாரணமாக, 2013 முதல் 2018 வரை, தமிழகத்தின் 25 மாவட்டங்களில் போக்ஸோவின் கீழ் 3,153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 95இல் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது என்று, ஒரு அரசுசாரா அமைப்பு தாக்கல் செய்த தகவல் அறியும் சட்ட கேள்விக்கான பதிலில் கூறப்பட்டிருந்ததாக, பிப்ரவரி 3, 2019 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்துள்ளது.
ஒருமித்த பாலினத்தின் பழமையான பார்வை
இந்த சட்டம் இளம் வயதினரிடையே ஒருமித்த பாலின செயல்பாட்டில் ஒரு பழமையான பார்வையை எடுக்கிறது. 16-18 வயதில் உள்ள பதின்வயதினரை பாலியல் செயல்களில் ஈடுபடக்கூடிய சம்மதமான வயது வந்தவர்களாகவும், ஒருமித்த பாலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இடையில் வேறுபடுத்தத் தவறியவர்களாகவும் போக்சோ சட்டம் கருதவில்லை. ஓடிப்போன மற்றும் சாதியினருக்கு இடையிலான திருமணங்களை மறைக்க இது பெரும்பாலும் குடும்பங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
அண்மையில் நடந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு ‘குழந்தையை’ வரையறுக்கும் வயதை 18 முதல் 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. பதின்வயதினரின் ஒருமித்த உறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இடையில் வேறுபடுவதற்கு துஷ்பிரயோகம் செய்பவனுக்கும் பாதிக்கப்பட்டவனுக்கும் இடையிலான வயது இடைவெளியை போக்சோ சட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நீதிமன்றம் கவனித்தது.
(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.