ஜன் தன் கணக்கு உள்ளவர்களில் 40% பேர் அரசின் கோவிட் -19 நிவாரணத்தை பெற முடியவில்லை: ஆய்வு
புதுடெல்லி: “ஜன் தன் கணக்கில் நான் நிதி பரிமாற்றமாக, ரூ.500ஐ பெற்றிருந்தால் அது எனக்கு நம்பிக்கை ஒளியை தந்திருக்கும்... வேறொன்றுமில்ல… விலைவாசி அதிகரித்துவிட்டது. ரூ.500-க்குள் ஒரு குடும்பத்தை நடத்துவது எப்படி?” மேற்கு டெல்லியை சேர்ந்த இல்லத்தரசியும், பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவருமான பிங்கி சர்மா கூறினார்.
எட்டு பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசிக்கும் ஷர்மா, அரசு திட்டத்தின் கீழ் பணம் பெற தாம் தகுதியுடையவர் என்று நினைத்தார்; ஆனால் கணக்கில் பணம் வந்ததாக வங்கியில் இருந்து எந்தவொரு குறுஞ்செய்தியும் அவருக்கு கிடைக்கவில்லை. பல லட்சக்கணக்கான பிற இந்தியர்களைப் போலவே, அவரது குடும்பமும், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. “எல்லோரும் தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பை பயன்படுத்தி பிழைத்து வருகின்றனர். என் கணவரும் தனது முதலாளியிடம் கடன் வாங்கி இருக்கிறார்,”என்று அவர் கூறினார்.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மாதம் ரூ. 500 வீதம் செலுத்தப்படும் என்று, மார்ச் மாத இறுதியில் நிதி அமைச்சர் அறிவித்தார். இதற்காக, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே, அரசு தலா ரூ. 10,300 கோடியை (1.3 பில்லியன் டாலர்) மூன்று தவணைகளை விடுவித்து, அத்தொகையானது சுமார் 20 கோடி பெண்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. இருப்பினும், ஷர்மாவை போலவே, ஏராளமான தகுதியுள்ள பெண்களால், கடினமான இந்த தருணத்தில் அந்த தொகையை பெற முடியவில்லை.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.10,300 கோடி (1.3 பில்லியன் டாலர்), சராசரியாக, ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 முதல் ரூ .4,000 கோடி வரை (400 மில்லியன் முதல் 520 மில்லியன் வரை) வங்கிக் கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது. அரிதான பயன்படுத்துவதால், வங்கி கணக்கு முடங்கிப் போனது மற்றும் தொலைவில் இருப்பதால் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள், மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை கொண்டிருத்தல் போன்றவற்றால் வங்கிக் கணக்கில் தங்களுக்கு பணம் வரவில்லை என்று பயனாளிகள் சுட்டிக்காட்டியதாக, கொள்கை அமலாக்கத்தில் கவனம் செலுத்தும் அரசு சாராத அமைப்பான, இந்துஸ் ஆக்ஸன் தரப்பினர் தொலைபேசி நேர்காணலில் தெரிவித்தனர்.இந்த இடைவெளிகளை போக்க, பலன்களை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களை இந்தியா தற்காலிகமாக தளர்த்த வேண்டும்; பயோமெட்ரிக் தோல்வியைக் கண்டறிவதற்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், மற்றும் குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்குவதற்கான வழிகளை தீர்மானிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு வலை வழியாக நழுவுதல்
பாதிக்கப்படக்கூடிய குடிமக்கள், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் எந்தளவிற்கு சமூகப் பாதுகாப்புகளைப் பெற்றார்கள் என்பதை மதிப்பிடுவதற்கு, 11 மாநிலங்களில் 5,242 குடும்பங்களை உள்ளடக்கி, ஏப்ரல் 6 முதல் மே 30ம் தேதி வரை ஒரு கணக்கெடுப்பை, இந்துஸ் ஆக்சன் குழு நடத்தியது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களை இந்துஸ் ஆக்சன் குழு ஆய்வு செய்த போதும், பெருநகரங்களில் பதிலளித்தவர்களால், அதன் மாதிரி திசை மாறியது. அந்த குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவை.
பயனாளிகளின் உணவுப்பொருள், சுகாதாரம், வேலைவாய்ப்பு நிலை மற்றும் அரசு திட்டங்களுக்கான அணுகல் குறித்து, இந்த கணக்கெடுப்பு மதிப்பீடு செய்தது. ஜன் தன் திட்டத்திற்கு தகுதியான 2,233 பெண்களில் சுமார் 59% மட்டுமே, தங்களுக்கு பணப்பலன் கிடைத்ததாக தெரிவித்தனர். 34% பேர் தங்களுக்கு பணப்பரிமாற்றம் கிடைக்கவில்லை எனவும், 7% பேர் தங்களுக்கு அவ்வாறு பணம் வந்ததா என்று தெரியவில்லை என்றனர்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியன, நிவாரணத் தொகுப்பாக முறையே 42%, 49% மற்றும் 55% என ஜன் தன் நிதி கணக்கில் நிதிபரிமாற்றங்களை மிகக் குறைந்த விகிதங்களில் பெற்றுள்ளன. இதில் உத்தரபிரதேசம் 68%, சத்தீஸ்கர் 70%, குஜராத் 75% அதிகபட்ச விகிதங்களை கொண்டுள்ளன. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ள பிற திட்டங்களுடன் ஒப்பிட்டால், ஒட்டுமொத்த ஜன் தன் பெற்ற தொகை விகிதம் 60.24% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது; இதேபோல், பிரதம மந்திரி கிசான் 57.12% மற்றும் பி.எம்.உஜ்வாலா திட்டம் 59.44% ஆகும். கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களில் 21.46% மட்டுமே பலன் பெற்றனர் என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் வெற்றிகரமாக இருந்தது.
ஜன் தன் திட்டம் சந்திக்கும் சவால்கள்
கோவிட்-19 பரவலின் போது ஜன் தன் திட்டத்தில் உள்ள இடைவெளிகளைப் புரிந்து கொள்வதற்கு முன்பு, இத்திட்டத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வது நல்லது. ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி சேவைகளின் உலகளாவிய அணுகலை வழங்கும் நோக்கில், பிரதம மந்திரி ஜன் தன் திட்டம், 2014 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. அத்துடன், நிதி கல்வியறிவை அதிகரிப்பது மற்றும் கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய அணுகலை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டது.இந்த திட்டத்தின் ஆரம்ப இலக்கு, நான்கு ஆண்டுகளில் 7.5 கோடி வங்கி கணக்குகளை தொடங்குவது ஆகும். இருப்பினும், திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களில் இலக்கு எட்டப்பட்டது; இரண்டு ஆண்டுகளில், 26 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. எனினும், கணக்கை அரிதாக கையாளுவதால் முடங்கிப் போகுதல் மற்றும் கடைசி தொலைவு என்பதால் விநியோக சிக்கல் போன்ற பிரச்சனைளும் இதற்கு இருந்தன.
தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூரில் வசிக்கும் 32 வயது வந்தனா ராமு என்ற இல்லத்தரசி, ஜன் தன் கணக்கு குறித்து அவரது உறவினர்கள் வாயிலாக அறிந்தார். “நாங்கள் நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையை அணுகி கணக்குகளை தொடங்கினோம். என்னிடம் வங்கிக் கணக்கு இல்லாததாலும், பூஜ்ஜியம் இருப்பு அம்சத்தால் உறுதி அளிக்கப்பட்டதாலும், நான் இத்திட்டத்திற்காக பதிவு செய்தேன்,” என்றார் ராமு. நேர்காணலின் போது, அவர் ஜன் தன் திட்டத்தை, "மோடி கணக்கு" என்று பலமுறை குறிப்பிட்டார், இந்த திட்டம் எவ்வாறு அடிக்கடி பிரதமர் பெயரை நேரடியாக தொடர்புபடுத்துகிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், திட்டத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒவ்வொரு வயது வந்த இந்தியரையும் இது சென்றடைய வேண்டும் என்ற புதிய இலக்கைக் கொண்டு, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு திட்டம் நீட்டிக்கப்பட்டது. அத்துடன் வீட்டு ஓவர் டிராஃப்ட் வரம்பை ரூ.5,000 என்பது ரூ.10,000 வரை என்று உயர்த்துவது; ரூ.2,000 வரை ஓவர் டிராப்ட்களுக்கான நிபந்தனைகளை நீக்குதல் போன்ற பிற நிதி சலுகைகளையும் அரசு சேர்த்தது.
ஜூன் 2020 நிலவரப்படி, 39.4 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளன; இதில் 21.6 கோடி கணக்குகள் பெண்கள் வைத்திருப்பதாக, இந்த திட்டத்தின் வலைதள தரவுகள் கூறுகின்றன. இதற்கு நேர்மாறாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சலுகை விலையில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக 2016 மே மாதம் தொடங்கப்பட்ட பிரதமர் உஜ்வாலா யோஜனா, 8 கோடி பேரை மட்டுமே உள்ளடக்கி இருக்கிறது.
ஜன் தன்-ஆதார்-மொபைல் (JAM- ஜாம்) எனப்படும் இம்மூன்றை அதாவது ஜன் தன் கணக்குகளை மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் மானியங்கள் திறம்பட பரிமாற்றம் அடைவதை அரசு உறுதிசெய்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதில் இது ஒருங்கிணைந்த செயலாகும். ஜன் தன் கணக்குகளில் பெரும்பாலானவை (79.4%) பொதுத்துறை வங்கிகளிலும்; 17.4% பிராந்திய கிராமப்புற வங்கிகளிலும்; 3.2% தனியார் வங்கிகளிலும் உள்ளதாக, ஜூன் 3, 2020 தேதியிட்ட வங்கி வகைப்பாடு அறிக்கை தெரிவிக்கிறது. 37% பயனாளிகள் நகர்ப்புற பெருநகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளிலும், 63% கிராமப்புற அல்லது பகுதி நகர்ப்புற இடங்களிலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரிந்துரைத்தபடி, ஜன் தன்- ஆதார்- மொபைல் (ஜாம்) என்பது மொபைல் நபர் சார்ந்த நன்மைகள் அடிப்படையில் “அசையாத இடத்தில் இருந்து இடம் பெயரும்” வாய்ப்பை வழங்குகிறது.
ஜாம் உள்கட்டமைப்பு வாய்ப்புகள் இருந்தபோதும், குடிமக்களில் பலர் தங்களது ஜன் தன் கணக்குகளை தொடங்கும் முன்பு, முறையான வங்கி முறைமை தொடர்பாக குறைந்த அனுபவத்தையே கொண்டிருந்தனர். எனவே, ஜன் தன் திட்டத்தின் முக்கிய சவால்களில் ஒன்று, அரிதாகவே பயன்படுத்துவதால் கணக்கு முடங்கி இருப்பதாகும். ஜனவரி 2020 நிலவரப்படி, 37.8 கோடி ஜன் தன் கணக்குகளில் 18.7% செயல்பாடு இல்லாதவை என்று, மக்களவையில் நிதியமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் செயலற்ற கணக்குகள் உள்ளன. இது முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது முன்னேற்றமாகும், ஆனால் நிதி சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்காக இந்த கணக்குகளை செயலில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை, இது சுட்டிக்காட்டுகிறது.
கோவிட்-19 சரிவுக்கு முன்பே, ஜன் தன் கணக்கு, பாதிக்கப்படக்கூடிய குடிமக்களை சென்றடையவில்லை என்று இங்கிலாந்தை சேர்ந்த சுயாதீன சிந்தனைக்குழுவான ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மானுவேலா கிறிஸ்டின் குந்தரின் ஆய்வு தெரிவிக்கிறது. ஜன் தன் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னும் பின்னுமான ஒருகால அளவை உள்ளடக்கிய 2013-15 முதல் கணக்கெடுப்பு தரவை குந்தரின் ஆராய்ச்சி பகுப்பாய்வு செய்தபோது, ஜன் தன் கணக்கைக் கொண்ட 51% நபர்களுக்கும் ஜன் அல்லாத வங்கி கணக்கு இருப்பது தெரிய வந்தது. அதாவது, ஏற்கனவே முறையான வங்கி உள்ள கணிசமான குடிமக்களும், ஜன் தன் திட்டத்திற்காக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
பணிபுரிவோரில் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் சொந்த மொபைல்போன் வைத்திருப்பவர்கள் மத்தியில் வங்கி கணக்கு உரிமையும் பயன்பாடும் அதிகமாக இருப்பதை குந்தர் கண்டறிந்தார். கிராமவாசிகள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் தங்கள் கணக்குகளைப் பயன்படுத்துவது குறைவு."பிற அரசு திட்டங்களைப் போலவே, பாலைவனத்திலோ அல்லது மலை அல்லது வனப்பகுதி போன்ற தொலைதூர கிராமங்களில் உள்ள பெண்கள் நிதியை எப்போது, எப்படி அணுகலாம் என்பது பற்றிய தகவல்களை அறிந்திருக்கவில்லை," என்று, அமைப்புசாரா துறையில் உள்ள பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான சுயதொழில் மகளிர் சங்க கூட்டுறவு கூட்டமைப்பின் (SEWA) தலைவர் மிராய் சாட்டர்ஜி கூறினார். "எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அதில் நிறைய வசதிகள் மற்றும் வாய்ப்புகள் தேவை" என்று அவர் மேலும் கூறினார்.
.பெண்களுக்கு கோவிட் -19ன் விளைவுகள்
இந்த பாதுகாப்பு இடைவெளிகள் இந்தியாவின் ஏழ்மையான குடிமக்களுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பற்ற பணிகளை செய்யும் பெண்களை கோவிட்-19 இன்னும் ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறது. 2020 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின்படி, பெண்கள் மீதான கோவிட்-19 இன் தாக்கம், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் பொருளாதார மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை பாதிக்கும், வறுமை விகிதங்களை அதிகரிக்கும் மற்றும் உணவு பாதுகாப்பின்மையை மோசமாக்கும் என்று எபோலா தொற்றுநோய் கால நடவடிக்கைகளை அது சுட்டிக்காட்டியது.
நாடு தழுவிய ஊரடங்கால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பாதிக்கப்பட்டாலும், பெண்கள் மீதான தாக்கத்திய மாற்றுவது கடினம். கோவிட்-19, இது எபோலாவை விட மிக வேகமாக பரவுகிறது; அத்துடன், பெண்களின் வருமானம் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகால சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வறுமையில் வாடும் பெண்களுக்கு இந்த விளைவுகள் அதிகரிக்குமென, அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பெண்கள் ஏற்கனவே கவனிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் சமமற்றவகையில் சுமையை எதிர்கொள்கின்றனர். தற்போது வீட்டு வருமானம் குறையும் நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறைவான வளங்களைப் பெறவே வாய்ப்புள்ளது; இது உடல்நலம் மற்றும் கல்விக்கான அணுகலில் இருக்கும் பாலின ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் என்று, ஜூன் 2020 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
ஜன் தன் மூலம் பணம் மற்றும் கடன் பயன்பாடு
ஜன் தன் திட்ட பரிமாற்றம் மூலம் தொகையை பெறும் பெண்களுக்கு, பொதுவாக நிதி ரீதியாக தங்களது கணவரை பெண்களுக்கு, வீட்டு உபயோகம் மற்றும் சேமிப்பு விஷயங்களில் இத்தகைய பண ஆதரவு செயலாண்மையை வழங்கியுள்ளது. “ஒவ்வொரு முறையும் பணம் டெபாசிட் செய்யப்படும் போதும் எனக்கு குறுஞ்செய்தி வந்தது” என்று பெங்களூரைச் சேர்ந்த ராமு கூறினார். ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட ரூ.500 உணவு வாங்குவதற்கு பயன்படுத்திய அவர், மே மற்றும் ஜூன் மாதங்களில் கிடைத்த ரூ.1,000-ஐ சேமித்தார்.வீட்டு நுகர்வு அதிகரிப்பதில் இத்தகைய பணப்பரிமாற்றங்களின் பயன்பாடு கூடுதலாக, ஜன் தன் கணக்குகள் கடன்களுக்கான முறையான வழிகளை அணுகுவதற்கான திறனைக் குறிக்கிறது. கடனளிப்பதன் மூலம் முதல் 50 இந்திய மாவட்டங்களில், கடன் வழங்குபவர்களிடம் இருந்து கடன் 37% அல்லது கடன்களின் மிகப்பெரிய சந்தைப்பங்கை கொண்டுள்ளதாக, நிதி சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துவாரா ரிசர்ச் என்ற அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. கோவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளை குடிமக்கள் கையாள்வதால், முறைசாரா கடனுதவியைச் சார்ந்திருத்தல் அதிகரித்துள்ளது மற்றும் நிறுவன கடன்களுக்கான ஓவர் டிராஃப்ட் வசதிகள் போன்ற வழிகள் கடனுக்கு எதிராக ஒரு முக்கியமான தணிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் முறையான கடன் மற்றும் வீட்டு நுகர்வுக்கான அணுகலில் ஜன் தன் பாதிப்புக்கு, வரம்புகள் உள்ளன.
. ரிசர்வ் வங்கியின் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில், முறையான கடனை அணுகுவதற் கூட ஜன் தன் திட்டம் மக்களுக்கு உதவவில்லை என்பது தெரியவந்தது. கிரெடிட்-டெபாசிட் விகிதம், ஒரு கிராமப்புற வங்கி வங்கிகளில் ரூ.100 க்கு எவ்வளவு கடன் பெற முடியும் என்பதைக் குறிக்கிறது, பிராந்திய கிராமப்புற வங்கிகளில் 1998ம் ஆண்டில் 46.2 சதவீதம் என்பது, 2014ம் ஆண்டில் 68.1 சதவீதமாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, இந்த விகிதம் 2017ம் ஆண்டில் 62.8% ஆகக் குறைந்தது; சமீபத்திய தரவு கிடைத்த ஆண்டான 2018 இல் 65.2% ஆக உயர்ந்தது.
முறையான கடன்களுக்கான அணுகல் இல்லாததால், அதிக வட்டி கேட்டு சுரண்டும் நபர்களை கடன்களுக்கு மக்கள் சார்த்திருக்க வேண்டியுள்ளது; அது அவர்களை கடன் சுழற்சியில் சிக்க வைக்கலாம் என்று இந்தியா ஸ்பெண்ட் 2020 மே மாதம் கட்டுரை தெரிவித்தது. அரசின் கோவிட் நிவாரணத் தொகுப்பின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு, அவர்களின் ஜன் தன் கணக்கில் ரூ. 10,000 ஓவர் டிராஃப்ட் வசதி கிடைத்தாலும், பலர் அதுபற்றி அறிந்திருக்கவில்லை.
பெங்களூரை சேர்ந்த வந்தனா, ஓவர் டிராஃப்ட் (மிகைப்பற்று) வசதி குறித்து தனக்குத் தெரியாது என்றார். "இந்த [ஓவர் டிராஃப்ட் வசதி] பெண்கள் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க அனுமதித்திருக்கும்," என்று அவர் கூறினார்.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இல்லத்தரசி சுமன் சர்மா போன்றவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்தினர்: “நாங்கள் பல முறை கடன் பெற்றிருக்கிறோம். சிறிய கடன் அளிப்பவர்களிடம் இருந்து கடன் வாங்குவதை விட, இது வசதியானது மற்றும் எளிதானது என்பதால் இதை விரும்புகிறோம்” என்றார்.
ஜாம் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பரிந்துரைகள்ஜாம் உள்கட்டமைப்பில் முதலீடுகள் என்பது, இலக்கு அல்லது உலகளாவிய ஆதரவு திட்டங்களை செயல்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் வாதிட்டனர். ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1% என நிர்ணயிக்கப்பட்ட ‘உள்ளடக்கிய வளர்ச்சி லாபப்பங்கு’மூலம் வழக்கமான நிதியை பெற முடியும் என்று ஜன் தன் திட்டம் குறித்து ஆராய்ச்சி நடத்திய பொருளாதார வல்லுனர்களான மைத்ரேஷ் கட்டக் மற்றும் கார்த்திக் முரளிதரன் தெரிவித்துள்ளனர். தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உள்ளடக்கிய வளர்ச்சி லாபபங்கு மாதந்தோறும் செலுத்தப்படும் ஒருவருக்கு ரூ. 120 ஆகும்.பணப்பரிமாற்றத்தின் பங்கை மறுவடிவமைப்பது குறித்த விவரங்களை ஒரு அறிக்கை வடிவில் கட்டக் மற்றும் முரளிதரன் எவ்வாறு எதிர்பார்க்கிறார்கள் என்பது இங்கே: வங்கி கணக்கு பரிமாற்றத் தொகை வாழ்வதற்கு போதுமானது என்பதைக் குறிக்கும் உலகளாவிய அடிப்படை வருமானத்தைப் போலல்லாமல், உள்ளடக்கிய வளர்ச்சி லாபப்பங்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரு சாதாரண பணப் பரிமாற்றத்தை வழங்கும், அது நாட்டின் பொருளாதாரத்துடன் சமமாக வளரும். இது ஒவ்வொரு மாதமும் மாற்றப்படும் என்பதால், இது கணக்கு பயன்பாட்டினை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் மூலம் செயலற்ற கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதில் உள்ள சவால்களை இது குறைக்கும்.
உள்ளடக்கிய வளர்ச்சியில் லாபப்பங்கு பெண்களுக்கு பங்களிக்கக்கூடும்: "ஜன் தன் திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்களை முறையான வங்கி முறைக்கு கொண்டு வந்துள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சி லாபப்பங்கை அமல்படுத்துவது, ஜன் தன் கணக்குகளை சேமிப்பிற்காகப் பயன்படுத்துவதன் மூலமும், தொலைதூர நிதி அணுகலுக்கான விநியோக சலுகைகளை உருவாக்குவதன் மூலமும் நிதி சேர்க்கும் செயல்முறையை துரிதப்படுத்தக்கூடும்".
தாய்மார்கள் தங்களது குழந்தைகள் சார்பாக மாதாந்திர பரிமாற்றங்களை பெறுவார்கள் என்பதால், உள்ளடக்கிய வளர்ச்சி லாபப்பங்கு வீட்டு நிதி முடிவுகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கும் என்று கட்டக் மற்றும் முரளிதரன் கூறினார். கர்ப்பிணிகளுக்கான நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றத் திட்டமான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மூலம் தாய்மார்கள், முதலாவது கர்ப்ப காலத்தில் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூ .5,000 பெறுகிறார்கள்; கட்டக் மற்றும் முரளிதரன் முன்மொழிகின்ற ஒரு வளர்ச்சி லாபப்பங்கு, ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.4,000 க்கும் அதிகமான தொகையை பல ஆண்டுகளாக வழங்க முடியும்.
பொருளாதாரம் சரிவை சந்தித்து, அதன் பலனை இந்தியா தற்போது அனுபவித்து வருவதால், லாபப்பங்கு தேவையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பலதரப்பட்ட விளைவை ஏற்படுத்தும். பண பரிமாற்றம் குடிமக்களின் வேலையைத் தொடர ஊக்கமளிப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அது வறுமையைத் தணிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்."பெண்களின் கைகளில் பணத்தை தரும் எந்தவொரு திட்டமும் நிச்சயமாக அவர்களின் செயல்பாட்டை பலப்படுத்துகிறது" என்று சுயதொழில் மகளிர் சங்க கூட்டுறவு கூட்டமைப்பின் (SEWA) சாட்டர்ஜி கூறினார். அடிப்படையில், நிதி சேர்க்கை மற்றும் சேவைகளுக்கு அப்பால், "பெண்களை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒற்றுமை, சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, குழந்தை பராமரிப்பு மற்றும் முழு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் இருந்து அதிகாரமளித்தல் வருகிறது" என்றார் அவர்.
கடைக்கோடி வரை அணுகல் மற்றும் விநியோக சிக்கல்களில் சிலவற்றைத் தீர்ப்பதற்காக, கடன் மற்றும் காப்பீட்டுப் பொருட்கள் கிடைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்களுக்கான பயிற்சி பட்டறைகளை எளிதாக்குவதில் அரசு கவனம் செலுத்த முடியும். டெல்லியை சேர்ந்த பொது கொள்கை சிந்தனைக் குழுவான கொள்கை ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, மக்கள் தொகை குறைவாகவும், செயலற்ற கணக்குகளின் பெரும்பகுதியைக் கொண்ட பகுதிகளிலும், ஊராட்சி அல்லது வங்கிகள் வழியாக மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்குவதற்கான வழிகளை மாநிலங்கள் தீர்மானிக்க வேண்டும்.தேவைப்படும் ஆவணங்களை அரசு தற்காலிகமாக தளர்த்தலாம், அதிக முன்னுரிமை உள்ள பகுதிகளில் அணுகல் புள்ளி அடர்த்தியை அதிகரிக்கலாம் மற்றும் பயோமெட்ரிக் தோல்விக்கான அடிப்படை காரணங்களைக் கண்காணிக்கும் ஒரு வெளிப்படையான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று, த்வாரா ரிசர்ச் பரிந்துரை செய்துள்ளது. "அமைப்புரீதியாக தோல்வியுற்ற அனைத்து வெவ்வேறு வழிகளையும் ஆவணப்படுத்துவதே உடனடி கட்டாயமாகும், மேலும் இதன் ஒரு முக்கியமான பகுதியாக இந்தியாவின் கடைக்கோடி வரை விநியோக முறையின் நிரந்தர அம்சமாக மாறக்கூடிய, ஒரு பயனாளிகளின் குறை தீர்க்கும் முறையை உருவாக்குவது ஆகும்" என்று, துவாரா ரிசர்ச்சின் நிர்வாக இயக்குனர் இந்திரதீப் கோஷ் கூறினார்.
(படேல், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் எம்.பி.பி மாணவர்; திவாகர், அசோகா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் இருவரும் இந்துஸ் ஆக்ஸன் அமைப்பின் பயிற்சியாளர்கள்; பிரபாகர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு இந்துஸ் ஆக்ஸன் அமைப்பின் மாநில தலைமைப்பொறுப்பில் உள்ளார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.