புத்தாண்டில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 2000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு - அது நல்ல செய்தி
மும்பை: புத்தாண்டு கொண்டாங்களின் போது மது போதையில் வாகனம் இயக்கியதாக 2000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை (455), டெல்லி (509), கொல்கத்தா (182), சென்னை (263), பெங்களூரு (667) நகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஊடக தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. மும்பையில் கடந்தாண்டு 615 வழக்குகள் என்பதைவிட இது 26% குறைவு; டெல்லியில் 765 என்பதைவிட 33%, பெங்களூருவில் 1390 வழக்குகள் என்பதை விட 52% குறைவாகும்.
மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பிற இந்திய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்கும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்கவும், ஆயிரக்கணக்கான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
"பாதிக்கப்படக்கூடிய இடங்களைக் அடையாளம் கண்டதோடு, ஆண்டு முழுவதும் வன்முறைகள் நிகழ்ந்த பகுதிகளை கண்டறிந்து காவல்துறையினரை நிறுத்தியது, மும்பையில் மதுபோதையில் வாகனம் இயக்குவோர் எண்ணிக்கையை குறைக்க உதவியது" என்று, மும்பை போக்குவரத்து இணை ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதை, 2019 ஜனவரி 2-ல் தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
மும்பை, தானே, நவி மும்பை மற்றும் மீரா-பயந்தார் ஆகியவற்றை உள்ளடக்கிய மும்பை பெருநகரப்பகுதியில் புத்தாண்டின் போது மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளின் எண்ணிக்கை 22% அதாவது, 2017ஆம் ஆண்டில் 2,444 என்பது 2018ஆம் ஆண்டில் 2,985 என்று அதிகரித்துள்ளது.
மது அருந்தியோ அல்லது போதைப்பொருள் உட்கொண்டோ வாகனம் இயக்குவது தண்டைக்குரிய குற்றமாகும். இதில் முதல்முறைக்கு, அபராதமாக ரூ.2000 வரை/ அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை; மூன்று ஆண்டுகளில் மீண்டும் இதே குற்றம் புரிந்தால் ரூ.3000 அபராதம்/ அல்லது இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க, மோட்டார் வாகனச்சட்டம்-1988, பிரிவு 185 வழிவகை செய்கிறது.
ஒரு நபரின் 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 30 மில்லி கிராமிற்கு அதிகமாக ஆல்கஹால் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்.
“தேசிய நெடுஞ்சாலையோரம் மதுபானம் விற்க உரிமம் வழங்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன” என்று, தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா, 2018 டிச. 20-ல் மக்களவையில் பதில் அளித்தார். “மேலும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மது விற்பனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்தை பரிசீலனை செய்து சரியான நடவடிக்கையை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
மது அருந்தி வாகனம் ஓட்டி இறந்தவர்கள் எண்ணிக்கை 2017-ல் 22% குறைந்தது
கடந்த 2017-ல் 14,071 சாலை விபத்துகளில் 4,776 பேர் அல்லது நாளொன்றுக்கு 13 பேர், மது அல்லது போதையில் வாகனம் இயக்கி இறந்துள்ளதாக, சாலை போக்குவரத்து அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டில் இத்தகைய விபத்துகளில் இறந்த 6131 பேருடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை, 22% சரிவாகும். 2018-ல் இத்தகைய விபத்துகளில் 7,682 பேர் இறந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, 2017-ல் 38%; 2011-ல் 10,553 பேர் இறந்ததை விட-- இது கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்ச அளவு-- 55% குறைவாகும். அதே ஆண்டில் நாடு முழுவதும் 4,64,910 சாலை விபத்துகளில் 1,47,913 பேர் இறந்தனர்; அவர்களில் மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் 3.2% ஆகும்.
கடந்த 2008 முதல் 2017 வரை நாடு முழுவதும் மது, போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட 2,11,405 விபத்துகளில் 76,446 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Source: Ministry of road transport and highways; Road Accidents In India--2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017.
இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம்.சாலை விபத்துகளின் போது நிலையான செயல்பாட்டு நடைமுறை என்பது, பாதிக்கப்பட்டவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என்று, சாலை பாதுகாப்புகளுக்காக வாதிடும் சேவ் லைப் அறக்கட்டளை நிறுவனர் பியூஸ் திவாரி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “நீங்கள் அரசின் புள்ளி விவரங்களை பார்த்தால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது அழகாக சேதப்படுத்தப்பட்டது” என்கிறார் அவர்.
புள்ளி விவரங்கள் சேகரிப்பு நடைமுறை காரணமாக, இத்தகைய விபத்துக்களில் இறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என்றார் திவாரி. "தரவு சேகரிப்பில் அரசு பின்பற்றும் தற்போதைய நடைமுறை எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை - FIR) அடிப்படையிலானது. ஒரு விபத்து ஏற்பட்டால், எப்.ஐ.ஆரை பதிவு செய்யும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர் மரணம் அடைந்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் விபத்து நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால், குற்றச்சாட்டுக்களில் மட்டுமே மாற்றம் செய்யப்படுகிறது; எப்.ஐ.ஆரில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்த பிறகு அந்த விவரங்கள் இதில் இடம்பெறுவதில்லை” என்றார். தரவுகளின் ஆதாரம் என்பது காவல்துறையில் இருந்து சுகாதார துறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
மது அருந்தி வாகனம் ஓட்டி அதிக விபத்து ஏற்படும் உத்தரப்பிரதேசம்
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு மதுஅருந்தி வாகனம் இயக்கி 3336 விபத்துகள் அல்லது தேசிய எண்ணிக்கையில் 24% நேரிட்டன. அடுத்த இடங்களில் ஆந்திரா (2,064), தமிழ்நாடு (1,833) உள்ளன.
அதே ஆண்டில், இத்தகைய சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதும் உத்தரப்பிரதேசத்தில் தான். அங்கு 1687 பேர் அல்லது தேசிய எண்ணிக்கையில் 35%; அடுத்து ஒடிசா (735), ஜார்க்கண்ட் (430) உள்ளன.
Source: Ministry of road transport and highways
உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கான புள்ளி விவரங்களை ஒப்பிட முடியாது எனும் திவாரி, தரவுகளில் கூறப்பட்டுள்ளதைவிட உ.பி.யில் அதிக விபத்துகள் நடந்துள்ளன என்றார். "உ.பி.யில் சாலை விபத்துக்களுக்கு மிக மோசமான பதிவு முறையையும், விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதும் மோசமாக உள்ளது," என்றார் அவர். “மாறாக தமிழ்நாட்டில் சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு ( RADMS), மின்னணு முறையில் விபத்து குறித்த புள்ளி விவரங்களை பதிவு செய்கிறது” என்றார்.
மது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பின்தங்கியுள்ள இந்தியா
மது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்ட நடைமுறைப்படுத்துவதில் 0 முதல் 10 வரையிலான அளவீட்டில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது என, உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சாலை பாதுகாப்பு நிலை அறிக்கை 2018-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை பிரேசில் (6), ரஷ்யா (6), சீனா (9), தென்னாபிரிக்கா (5) ஆகியவற்றை ஒப்பிடும் போது இந்தியாவின் மதிப்பீடு பின்தங்கியுள்ளது.
அருகேயுள்ள தெற்காசிய நாடுகளுன் ஒப்பிடும் போது பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே இடத்தை (4) பகிர்ந்து கொண்டுள்ளன; வங்கதேசம் (2) விட சிறப்பாகவும், ஆப்கானிஸ்தான் (6), பூட்டான் (6), நேபாளம் (8) மற்றும் இலங்கை (9) ஆகியவற்றுடன் மோசமாகவும் உள்ளது.
ஏழு நாடுகள் - அயர்லாந்து, நார்வே, ஓமன், போலந்து, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் - குடிபோதையில் ஓட்டுநர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 10 மதிப்பீடுகளை கொண்டுள்ளன.
சீனா, இலங்கை போன்ற நாடுகள், மது அருந்தி ஓட்டுபவரை சோதிக்கும் பணிக்கு நிறைய மனித வளங்களை செலவிட்டு வருவதாக, திவாரி கூறினார். மது குடித்து ஓட்டுவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் மற்ற நடவடிக்கைகளை - அதாவது அடையாளம் காணுதல் மற்றும் விதிமீறலுக்காக தண்டனைக்கு உட்படுத்துவது - மின்னணு முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர், இந்தியா "மின்னணு நடைமுறைக்கு மாறவில்லை; நமது மனிதவள மேம்பாடு ஆற்றல் பரவலாக உள்ளது; தற்போது எந்தவித குடிபழக்கம் மற்றும் அதற்கு தூண்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திறன் மிகவும் குறைவு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.