கன்வர் யாத்திரை போன்ற மக்கள் கூடுமிடம் ஏன் இயற்கைக்கு மாறான மாசுபாட்டை ஏற்படுத்தும்

போதுமான கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பு இல்லாமல் மக்கள் கூடுவது, நீர், நிலம் அல்லது காற்றை மாசுபடுத்தும் மற்றும் மனித ஆரோக்கியம், சூழலியல் ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும்;

Update: 2022-08-31 00:30 GMT

ஜூலை 20- அன்று ஹரித்வாரில் பிளாஸ்டிக் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட கன்வாருடன் ஹர் கி பவுரி காட் பகுதியில்  காணப்பட்ட பக்தர்கள்.

ஹரித்வார்: "எனது மகளுக்கும், கணவருக்கும் வயிற்று உபாடை ஏற்பட்டது, அவர்கள் பயன்படுத்த ஒரு கழிவறை கிடைக்கவில்லை," என்று, ஜூலை மாதம் ஹரித்வாருக்கு வந்த 40 மில்லியன் கன்வார் யாத்ரீகர்களில் ஒருவரான, மீரட்டில் வசிக்கும் அன்னு தேவி கூறினார். "எங்கள் அனைவருக்கும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.

12 நாள் நீண்ட கன்வார் யாத்திரையுடன் (பயணம்), நாடு முழுவதும் இருந்து, குறிப்பாக வட இந்தியாவிலிருந்து, சிவபெருமானின் பக்தர்கள் கங்கைக்குச் செல்லும்போது, ஹரித்வார் நகரானது பல மில்லியன் கன்வாரியாக்களின் தாயகமாக மாறுகிறது. சிவ பக்தர்களால் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படும் திங்கட்கிழமைகளில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். கன்வார் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல், ஜூலை 26 வரை நடைபெற்றது.

பார்வையாளர்களால் உருவாகும் அதிகப்படியான கழிவுகளைக் கையாளுவதற்கான உள்கட்டமைப்பு இல்லாததால், இது போன்ற திருவிழாக்கள் 'இயற்கைக்கு மாறான மாசுபாடு' என்று அழைக்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்படாத கழிவுகளை உருவாக்கி, நிலம், காற்று அல்லது நீர் ஆகியவற்றை மாசுபடுத்துகிறது மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பகுதியின் சூழலியல் ஆகியவற்றைப் பாதிக்கும் வெகுஜனக் கூட்டங்களால் இது பொதுவாக நிகழ்கிறது.

கடந்த 2003-ல் பிரயாக்ராஜ் மற்றும் நாசிக்கில் நடந்த கும்பமேளா போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகள், நதி மற்றும் நிலத்தை மாசுபடுத்துகின்றன மற்றும் தீபாவளியின் போது அதிகளவில் பட்டாசு வெடிப்பது காற்றை மாசுபடுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

சிறந்த திட்டமிடல், மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான நகரத்தின் வசதிகள், இயற்கைக்கு மாறான மாசுபாட்டை சமாளிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 மில்லியன் யாத்ரீகர்களுக்கு 4,200 கழிப்பறைகள்

மொத்தம் 2,525 கி.மீ நீளமுள்ள கங்கை, உத்தரகாண்டில் மேற்கு இமயமலையில் உதித்து, தென்கிழக்கே வட இந்தியாவின் கங்கை சமவெளி வழியாக வங்காளதேசத்தில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அமேசான் மற்றும் காங்கோவைத் தொடர்ந்து, கங்கை உலகின் மூன்றாவது பெரிய நதியாகும்.

கங்கை நதிப்படுகையில் 450 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், மேலும் மனிதக்கழிவுகளே ஆற்றின் பெரும்பாலான மாசுபாட்டிற்குக் காரணம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரூர்க்கி உட்பட ஹர்திவார் மாவட்டத்தில் இருந்து ஒருநாளைக்கு 122 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தி செய்யப்பட்டது. மற்றும் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் வேலை செய்தன, G.B பந்த் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் சுற்றுச்சூழல் அறிக்கை தெரிவித்தது.

கன்வார் யாத்திரையின் போது, ​​கங்கை நதியை மையமாகக் கொண்டு, முக்கியமாக வட இந்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள், ஹரித்வாருக்கு ஆற்றில் குளிப்பதற்காகச் செல்கிறார்கள். அவர்கள் 250 மில்லி முதல் 5 லிட்டர் வரை அனைத்து அளவுகளிலும் வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்ட கங்கா ஜல் - புனிதமாகக் கருதப்படும் நதியின் நீரை - தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இது இந்தி மாதமான சாவான் மூலம் நிகழ்கிறது, இது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவமழையைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

ஹரித்வார் கன்வார் யாத்திரையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இயற்கைக்கு புறமான மாசுபாட்டைக் காண்கிறது, சுமார் 20-30 மில்லியன் யாத்ரீகர்கள் குறைந்தது 24 மணிநேரம் நகரத்தில் தங்குகின்றனர் என்று, ஆயுர்வேதம், அலோபதி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஹரித்வாரைச் சேர்ந்த ஜேபி ஹெல்த் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இயக்குநர் விஜய் வர்மா கூறினார்.

"1,360 நிரந்தர (நகர் நிகம் மற்றும் சுலப்) கழிப்பறைகளைத் தவிர, இந்த ஆண்டு 2,840 நடமாடும் கழிப்பறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம், அவை கழிவுநீர்த் துறையில் இருந்து தலா இரண்டு டேங்கர்களுடன் வந்துள்ளன, இதனால் கழிவுகள் தொடர்ந்து உறிஞ்சப்படும்" என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி வினய் சங்கர் பாண்டே கூறினார்.

பாண்டே யாத்ரீகர்களின் எண்ணிக்கையை 40 மில்லியன் அல்லது சராசரியாக ஒரு நாளைக்கு, 3 மில்லியன் எனக் கூறினார். அதாவது 3 மில்லியன் யாத்ரீகர்களுக்கு இடையே வெறும் 4,200 கழிப்பறைகள் மட்டுமே இருந்தன.

இதன் விளைவாக, கழிவறை எதுவும் கிடைக்காததால், திறந்த வெளியில் மலம் கழிக்க நேரிட்டதாக, இந்தியா ஸ்பெண்ட்டிடம் பேசிய 10 யாத்ரீகர்கள் கூறினர்.

"2019 ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின் போது 3 கோடி (30 மில்லியன்) யாத்ரீகர்கள் நகரின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் மிகவும் சிறிய பகுதியில் தங்கியிருந்தனர்" என்று வர்மா கூறினார். "முழு பகுதியும் வாழ்வதற்கு மட்டுமல்ல, கங்கையைச் சுற்றி மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

கங்கை நதி நீரில் இரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் இருப்பு வெவ்வேறு மாதிரி தளங்களில் வேறுபட்டது. 2018 இல் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 2017 இல் கன்வர் மேளா கொண்டாட்டத்திற்குப் பிறகு, ஹர் கி பவுரி, விஷ்ணு காட், தக்ஷ் மந்திர், புல் ஜட்வாரா மற்றும் பீம்கோடா பர்ரா ஆகியவற்றின் மாதிரிகளைப் பார்த்தது. அது கண்டறிந்தது என்னவென்றால்: "கங்கை நதியின் நீரின் தரத்தை வெகுஜன குளியல் மற்றும் மத நடவடிக்கைகள் பெரிதும் பாதித்தன" என்பதாகும்.

குளியலறைகள் பொதுவாக அணுக முடியாததால், ஆற்றில் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் பக்தர்கள் டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்துவதால், நதி நீரின் pH அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. கன்வார் யாத்திரையின் போது நீரில், மனித மலத்தில் மலம் கோலிஃபார்ம் அல்லது பாக்டீரியா அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்மா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நகரில் கன்வர் யாத்திரையை கவனித்து வருகிறார். அவர் கூறுகிறார், "பெரும்பாலான பார்வையாளர்கள் 20 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள், அவர்கள் கோமுக் [கங்கையின் முக்கிய நீரோடைகளில் ஒன்றான பாகீரதியின் ஆதாரம்] வரை சென்று அங்கு மாசுபாட்டையும் ஏற்படுத்துகின்றனர்" என்றார். ஹரித்வாரில் உள்ள பத்ரி பவர் ஹவுஸ் [கழிவுகளை வடிகட்டி சுத்திகரிக்கப்படும் இடம்] கன்வார் யாத்திரைக்குப் பின், ஆற்றில் டன் கணக்கில் கழிவுகள் கண்டது, இதில் நீரில் மூழ்கிய பிளாஸ்டிக் மற்றும் மதக் கழிவுகள் அடங்கும். இது நீர்வாழ் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அழிந்து வரும் பல பறவைகளின் தாயகமான ராஜாஜி தேசிய பூங்காவையும் பாதிக்கிறது என்று வர்மா கூறினார்.

கழிவுகள் காரணமாக, நீரின் Ph அளவு ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதன் வெப்பநிலை மாற்றங்கள், நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது.


ஹரித்வாரில் உள்ள காட் பகுதியில், கங்கை நீரை பக்தர்கள் எடுத்துச் செல்வதற்காக, அனைத்து வடிவங்கள் மற்றும் அளவிலான பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன; இது ஜூலை 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.

வெகுஜனக் கூட்டங்களுக்குப் பிறகு மாசுபடுத்திகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காஃபின் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை அடங்கும். மருந்து எச்சங்கள் நீர் மற்றும் மண்ணில் நுழைந்தவுடன், அவை இந்த மண்ணில் அல்லது நீரில் வளர்க்கப்படும் தாவரங்களிலும் இணைக்கப்படுகின்றன. இது முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், சோளம், கேரட், கீரை மற்றும் பச்சை வெங்காயத்தில் சோதனை ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாசுபடுத்திகளில், பாலிப்ரொப்பிலீன் கோபாலிமர் (PPCP) என்ற பிளாஸ்டிக்கின் ஒட்டுமொத்த செறிவும் அதிகரித்தது. இது வெகுஜன கூட்டத்தினரின் குளியல், நகர்ப்புற கழிவுகள், வீட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகிலுள்ள தொழில்துறை பகுதியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதினர்.

இயற்கைக்கு மாறான மாசுபாடு, நிலைமையை மோசமாக்குகிறது. உதாரணமாக, 2019 இல் பிரயாக்ராஜ் கும்பமேளாவில், 1,22,000 சுற்றுச்சூழல் கழிப்பறைகளைக் கொண்டிருந்தது என்று, ஏப்ரல் 2020 இல் வெளியிடப்பட்ட டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறியது. 2019 ஆம் ஆண்டில், 55 நாட்கள் நீடித்த கும்பத்தின் போது உருவாகும் கழிவுகள் மாவட்டம் தினசரி உற்பத்தி செய்வதை விட 18 மடங்கு அதிகம். மாவட்டத்தில் தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் நாளொன்றுக்கு சுமார் 254 மில்லியன் லிட்டர் ஆகும், அப்போது உருவாகும் கழிவுகளில் பாதியைக் கூட சுத்திகரிக்க முடியவில்லை என்று, டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே போதியளவு இல்லாத கழிவு மேலாண்மை அமைப்பில் அதிக சுமை

ஒரு திங்கட்கிழமை காலை, கதவைத் தட்டும் சத்தம் கேட்டது/ நான் அதைத் திறக்கச் சென்றபோது, ​​​​நான்கு பேர் கொண்ட குழு, அவர்கள் எங்களது கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு நான் அவர்களை உள்ளே விடுமாறு வற்புறுத்தியது என்கிறார் ஹரித்வாரின் பவுடி பகுதியில் வசிக்கும் அனில் சவுகான். "நான் முதலில் பயந்தேன், பின்னர் எந்தவிதமான வன்முறை அல்லது சலசலப்புகளைத் தவிர்க்க அவர்களை உள்ளே அனுமதித்தேன்" என்றார்.

பொதுக் கழிப்பறைகள் இல்லாததால், பக்தர்கள் கதவைத் தட்டவோ அல்லது திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ வேண்டியுள்ளது. நகரின் வழக்கமான மக்களுக்குக் கூட போதுமானதாக இல்லாத கழிவுநீர் சுத்திகரிப்பு முறையின் பின்னணியில் இது உள்ளது.

ஒரு வழக்கமான நாளில் கூட, யாத்ரீகர்களின் வருகையின்றி, ஹரித்வாரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் கிட்டத்தட்ட 19% தவறாக நிர்வகிக்கப்படுகிறது, அதாவது நிலம், நீர் அல்லது எரிக்கப்படுகிறது என்று, சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றத்தின் (iFOREST) ​​2020 அறிக்கை தெரிவிக்கிறது.

"நகரத்திற்கு பக்தர்கள் தினசரி வருகையை கட்டுப்படுத்துவதன் மூலமும், அவர்கள் விட்டுச்செல்லும் கழிவுகளுக்கு சரியான ஏற்பாடு மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்வதன் மூலமும் மட்டுமே இயற்கைக்கு புறம்பான மாசுபாட்டை நிர்வகிக்க முடியும்" என்று, டெஹ்ராடூனில் உள்ள மக்கள் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரவி சோப்டா தெரிவித்தார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News