ஹிங்கோலி: 45 வயது விதவையான கலாவதி சாவந்த்கரின் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில், இயற்கை விவசாய முறைகளை கடைப்பிடித்து சாகுபடியில் இறங்கியதில் இருந்து அவரது வாழ்க்கை சிறப்பாக மாறியுள்ளது. பல வருடங்களில் முதன்முறையாக, அவர் விளைச்சலில் லாபம் ஈட்டினார். போனஸாக, ஆர்கானிக் முறையில் விளைந்த உணவை உட்கொள்வதால் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதை குறைக்க வழிவகுத்தது என்கிறார்.

கலாவதியும், தன் விவசாயப் பண்ணையில் தான் வளர்வதையும் காண்கிறார். சோலாபூருக்கு மேற்கே 90 கிமீ தொலைவில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள வசமாத் பிளாக்கின் தெம்புர்னி கிராமத்தில் உள்ள தனது விவசாயப் பண்ணையில் காயவைத்த மூன்று குவிண்டால் மஞ்சளை, அவர் சமீபத்தில் அறுவடை செய்துள்ளார். மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு 4,000-6,000 ரூபாய் கிடைக்கும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கலாவதியின் கணவர் துளசிராம், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த 2016ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரு புள்ளி விவரத்தின் ஒரு பகுதியாக ஆனார் - 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அதிக விவசாயிகள் தற்கொலைகளை மகாராஷ்டிரா பதிவு செய்துள்ளது.

கலாவதி, இப்பகுதியில் உள்ள 182 பெண் விவசாயிகளுடன் சேர்ந்து, 2020-21ல் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டார், மேலும் உள்ளூர் வகை பயறு வகைகள், சோயாபீன், பருத்தி மற்றும் தினை, கீரை, தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகிறார்.

மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளைச் சேர்ந்த பெண் விவசாயிகள், பெரும்பாலும் தற்கொலையால் இறந்த விவசாயிகளின் விதவைகள், கரும்பு வெட்டுபவர்கள் மற்றும் குறு விவசாயிகளுக்காக மஹிளா கிசான் அதிகார் மஞ்ச் (Makaam -மகாம்) இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.

"இரு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் சோயாபீன் மற்றும் பருத்தி போன்ற பணப்பயிர்களை பயிரிடுவார்கள்," என்கிறார் மகாமில் உள்ள தேசிய வசதிக்குழு உறுப்பினர் சீமா குல்கர்னி. “பெண் விவசாயிகளுக்கு வீட்டில் சாப்பிட உணவு இல்லை. சமூக அமைப்புகளால் வழங்கப்படும் ரேஷனை நம்பியிருக்க வேண்டியிருந்ததால், தொற்றுநோய் பெண்களுக்கு இந்த சிக்கலை உணர்த்தியது. எனவே, பெரும்பாலான பெண் விவசாயிகள் பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள் பணப்பயிர் சாகுபடியை முற்றிலுமாக நிறுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் இப்போது 15-25 பயிர்களை பயிரிடுகிறார்கள் - பருப்பு வகைகள், தினைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக ஒரு முக்கிய பயிர் (சோயாபீன் அல்லது பருத்தி)” என்றார்.

இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தபோது, பல பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்தே ஆரம்பத்தில் எதிர்ப்பை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, மகாம் பெண்களை அரை ஏக்கரில் பரிசோதனை செய்யச் சொன்னார்.

விவசாயப் பண்ணை மற்றும் கால்நடை கழிவுகள், மண்புழு உரம் ஆகியவற்றில் இருந்து உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து இந்த அமைப்பு பெண்களுக்கு பயிற்சி அளித்தது. தாஷ்பர்ணி பேழை (பல்வேறு மரங்களின் இலைகள், மாட்டு மூத்திரம் மற்றும் பசுவின் சாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்) தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கினர்.

பரிச்சார்த்தமாக அரை ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையானது, வெற்றியின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியதும், பல பெண்கள் தங்கள் குடும்பத்தின் ஆரம்ப எதிர்ப்புகளைத் தாண்டி, பெரிய அளவில் ஆர்கானிக் விவசாயத்திற்குச் செல்ல முடிந்தது.

மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை

கடந்த 1995-ம் ஆண்டு முதல், 2021 வரை இந்தியாவில் சுமார் 382,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் குறித்து, மகாம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இவர்களில் 87% ஆண்கள் என்ற நிலையில், 320,000 க்கும் அதிகமான பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளி விடப்பட்டிருப்பார்கள். மகாராஷ்டிராவில், 1995 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில், 91,998 விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு காட்டுகிறது.

2021ல் மட்டும் 5,318 விவசாயிகள்/விவசாயிகளும், 5,563 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2013 மற்றும் 2018 க்கு இடையில் தற்கொலையால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த ஆய்வின்படி, மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2013 முதல் 2015 வரையிலான தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, திவால் அல்லது கடன்சுமை, விவசாயம் தொடர்பான பிரச்சினைகள், குடும்பப் பிரச்சனைகள், நோய் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவை விவசாயிகள் தற்கொலைக்கான முக்கியக் காரணங்களாகும்.

"விவசாயிகளின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது விதவைகள் நில உரிமை இல்லாமை, கடன், களங்கம், மோசமான சமூகப் பாதுகாப்பு, வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற சவால்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்" என்று குல்கர்னி கூறினார். 2015-16 ஆம் ஆண்டுக்கான சமீபத்திய விவசாயக் கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிராவில் மொத்தம் 15.29 மில்லியன் பயன்பாட்டு நிலத்தில் 2.36 மில்லியன் பெண்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.


ஆஷா ஷிண்டேவின் கணவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட அவர், தனது மஞ்சள் பயிர் காய்ந்துவிட்டதா என்று பரிசோதிக்கிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட கணவர் ஆஷா ஷிண்டே பெயரில் அரை ஏக்கர் நிலம் உள்ளது. சோயாபீன் போன்ற பணப்பயிர்களை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற, அவரது இரண்டு மகன்களும் தயாராக இல்லை. அவர்களை சமாதானப்படுத்த ஷிண்டே மிகவும் சிரமப்பட்டார். “நான் துவரையை பிரதான பயிராகவும், பச்சைப்பயறு மற்றும் உளுந்து ஊடுபயிராகவும் பயிரிட்டேன். பூச்சிக் கட்டுப்பாட்டாகச் செயல்பட மற்ற பயிர்களுடன் கவ்வி, தினை, சோளம் மற்றும் எள் விதைகள் கலக்கப்பட்டன. ரோசெல்லே செடியும், போருவும் ஒரு இடையக மண்டலமாக எல்லையில் நடப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

"ஊடுபயிர் என்பது மண்ணின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள பயிர்களை அறிவியல் பூர்வமாக விதைப்பதாகும்" என்று மகாமில் உள்ள மாநில வசதிக்குழு உறுப்பினர் ஸ்வாதி சத்புட் விளக்குகிறார். "பயிர்களை கலப்பதன் மூலம், பூச்சிகள், மேக்ரோ மற்றும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பயிர்களை வலுப்படுத்த கட்டமைக்கப்படுகிறது, மேலும் அவை பூச்சிகள் மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன" என்றார்.

மகாராஷ்டிராவில் இயற்கை விவசாயம்

"இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, மகாராஷ்டிரா அரசு 2016-17 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதியுதவி திட்டமான பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKKY - பி.கே.கே.ஒய்) திட்டத்தை ஏற்றுக்கொண்டது என்று மகாராஷ்டிர விவசாயத் துறை அதிகாரி ஸ்ரீபாத் குல்கர்னி தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 41,012 ஹெக்டேர் நிலத்தில் 60,985 விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டனர். விவசாயிகளின் 1,628 குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் மாற்றத்தை எளிதாக்குகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் தற்கொலைக்கு வாய்ப்புள்ள விதர்பாவின் ஆறு மாவட்டங்களில் இந்த நடைமுறையை ஊக்குவிக்க, டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் ஆர்கானிக் ஃபார்மிங் மிஷனை (PDOFM) மாநிலம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவில் இருந்து வேறுபட்டது. அகோலா, வாஷிம், அமராவதி, புல்தானா, யவத்மால் மற்றும் வார்தா ஆகிய ஆறு மாவட்டங்களில் 13,548 ஹெக்டேர் நிலத்தில், PDOFM-ன் கீழ் சுமார் 8,337 பயனாளிகள் இயற்கை விவசாயம் செய்கிறார்கள் என்று வேளாண்மைத் துறை அதிகாரி குல்கர்னி தெரிவித்தார்.

இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான செயல்முறையை மாநிலம் தொடங்கியுள்ள நிலையில், இயற்கை வேளாண்மை மற்றும் அது பற்றிய ஆராய்ச்சி மற்றும் விதைகளை அணுகுதல் பற்றிய அறிவியல் தகவல்களைப் பெறுவதற்கு வேளாண் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து மகாம் இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.


லதாபாய் நர்வாடே, தான் சாகுபடி செய்த மிளகாய் மற்றும் கத்தரிக்காய் பயிரின் நடுவே நிற்கிறார், அவர் இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி இவற்றை வளர்த்தார்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) அறிக்கையின்படி, இயற்கை விவசாயம் லாபகரமானது, நிலையானது மற்றும் உற்பத்தித் திறன் கொண்டது. மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மண் வளத்தை அதிகரிக்கவும், மண்ணில் நுண்ணுயிரிகளை அதிகரிக்கவும் கரிம உரத்தைப் பயன்படுத்துவதை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் போரோசிட்டி அதிகரிக்கிறது என்றும் கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன. தவிர, மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர மற்றும் விலங்குகளின் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகின்றன.

ஹிங்கோலி மாவட்டத்தின் கோத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விதவையான லதாபாய் நர்வாடே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியதில் இருந்து மண்ணின் ஆரோக்கியத்தில் மாற்றங்களைக் கண்டதாக கூறுகிறார். "முன்ப், கோடையில் மண்ணானது பாறைபோல் கடினமாகிவிடும், மேலும் உழவுக்காக நாங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்போது, மண் காற்றோட்டமாகவும் மெல்லியதாகவும் உள்ளது, மேலும் உழுவதற்கு நாம் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. மண் முன்பு போலல்லாமல், அதிக தண்ணீரை உறிஞ்சுகிறது. இந்த ஆண்டு பலத்த மழை பெய்தாலும் எனது விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கவில்லை” என்றார்.

“இயற்கை விவசாயம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் போன்ற கரிமப் பொருட்கள் / நுண்ணுயிரிகளை அதிகரிக்கிறது மற்றும் அது மண்ணில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, மண்புழுக்கள் மண்ணில் மேலும் கீழும் சென்று அதிக நுண்துளைகளை உருவாக்குகின்றன” என்று, ஹைதராபாத்தில் உள்ள நிலையான வேளாண்மை மையத்தின் வேளாண் விஞ்ஞானி ஜி.வி. ராமஞ்சநேயுலு கூறுகிறார். மறுபுறம், பூச்சிக்கொல்லிகளில் உள்ள இரசாயனங்கள், நுண்ணுயிரிகளைக் கொன்று, மண்ணில் உள்ள இயற்கையான கரிமப் பொருட்களைக் குறைக்கின்றன என்றார் அவர்.

லதாபாய் தனது அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மூன்றாவது ஆண்டில், 20 கிலோ மஞ்சள், 25 கிலோ உளுந்து, இரண்டு குவிண்டால் பருத்தி மற்றும் இரண்டு குவிண்டால் மஞ்சள் ஆகியவற்றை அறுவடை செய்தார். "முன்பு, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி 3-4 குவிண்டால் பருத்தி மற்றும் 10-12 குவிண்டால் மஞ்சள் கிடைக்கும். இந்த மூன்று வருடங்களில் எனது வருமானம் குறைவாக இருந்தாலும், நான் லாபத்தில் உள்ளேன், ஏனெனில் இதற்கு முன்பு பூச்சிக்கொல்லி, உரம், விதைகள் மற்றும் கூலிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 செலவழித்தேன். இப்போது நானே உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளை உற்பத்தி செய்கிறேன். உழவு மற்றும் களை எடுக்க ரூ.10,000 மட்டுமே செலவிட வேண்டியுள்ளது” என்றார்.

மூன்று வருட இயற்கை விவசாயத்தை முடித்த பின்னரே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ‘ஆர்கானிக் முறையில் விளைவித்தவை’ என்று முத்திரை குத்த முடியும், இது சந்தையில் அதிக விலையைப் பெறும். தற்போது, லதாபாய் தனது கூடுதல் விளைபொருட்களை வழக்கமான விளைபொருட்களுக்கு சந்தை விலையில் விற்பனை செய்கிறார், மேலும் தனது விளைபொருட்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்.

மேம்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு

இயற்கை விவசாயத்திற்கு மாறிய பெண் விவசாயிகள் தங்கள் பண்ணையில் விளைந்த காட்டுக் காய்கறிகளைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ‘காட்டுக் காய்கறிகள்’ என்பது விவசாயிக்கு விதை விதைக்கத் தேவையில்லாமல் தானாகவே வளரும். "முன்னதாக, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் காட்டு காய்கறிகள் கொல்லப்பட்டன," என்கிறார் மக்காமின் சத்புட். "இப்போது, கரிம உரம் மூலம், அவை புத்துயிர் பெறுகின்றன. முன்னர் அரிதாகிவிட்ட இதுபோன்ற 19 காய்கறிகள் விதர்பா மற்றும் மராத்வாடாவில் உள்ள பண்ணைகளில் விளைவதை நாங்கள் கவனித்தோம்” என்றார்.

இந்த காய்கறிகளில் சில, போர்ட்லகா ஓலேரேசியா, உள்நாட்டில் கோல் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, செம்பருத்தி சப்டாரிஃபா அல்லது சணல் மாற்றாக இருக்கும் அம்பாடி மற்றும் உள்ளூர் மொழியில் குர்து என்று அழைக்கப்படும் செலோசியா அர்ஜெண்டியா. இதில் வைட்டமின்-இ அதிகம்.

இயற்கையாக விளையும் காய்கறிகள், பயறு வகைகள் மற்றும் தினைகள் போன்ற இயற்கை முறையில் விளைந்த உணவுகள், குடும்பங்களின் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரித்துள்ளன, இதன் விளைவாக மருத்துவமனை வருகைகள் குறைவு. “இப்போது பலவகையான காய்கறிகள், பருப்பு வகைகள், தினைகளை உண்ண முடிந்ததால், எனது குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாகிவிட்டனர். தொற்றுநோய்களின் போது கோவிட் -19 உடன் கூட யாரும் பாதிக்கப்படவில்லை. முன்பெல்லாம் என் உடம்பு தொடர்ந்து வலிக்கும், ஆனால் இப்போது உடல் வலி இல்லாமல் பண்ணையில் நீண்ட நேரம் வேலை செய்ய முடிகிறது” என்கிறார் கலாவதி.

இந்தியாவின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) விஞ்ஞானி சுப்பா ராவ், “உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள இரசாயனங்கள் குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ வெளிப்படுவதிலிருந்து ஆர்கானிக் உணவின் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இருப்பினும், ஆர்கானிக் உணவின் ஊட்டச்சத்து மதிப்பு தொடர்ந்து வளர்க்கப்படும் உணவை விட சிறந்ததா என்பதை இதுவரை எந்த ஆய்வும் நிறுவவில்லை” என்றார்.

முன்னால் இருக்கும் சவால்கள்


மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் உள்ள பெண் விவசாயிகள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயிரிட முடியாத மஞ்சளை வளர்ப்பதால் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். படத்தில், ஆஷா ஷிண்டேவின் பண்ணையில் இயற்கை முறையில் விளைந்த மஞ்சள் வெயிலில் உலர்த்தப்படுவதை காணலாம்.

“பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன,” என்கிறார் மகாம் குல்கர்னி. “உள்ளூர் வகை விதைகள் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினை. உள்ளூர் வகை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தினைகள் அழிந்துவிட்டன. விதைகளைப் பெற்று விவசாயிகளுக்கு விநியோகம் செய்கிறோம். தற்போது விவசாயிகள் தாங்களாகவே விதைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

"ஆர்கானிக் பண்ணைகளில் நல்ல உணவு கிடைப்பதால் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மற்றொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், சில பெண் விவசாயிகளின் குடும்பங்கள் பெண்களைக் கலந்தாலோசிக்காமல் விளைபொருட்களை விற்றது, மேலும் ரசாயன உரங்கள் மூலம் மற்றொரு பயிரை விதைத்தது. குடும்பங்களை நம்ப வைப்பது இன்னும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது”.

பின்னர் மூடநம்பிக்கை உள்ளது. உதாரணமாக, யவத்மால் மாவட்டத்தில் உள்ள இளம் பெண் விவசாயிகள் மஞ்சள் பயிரிட மாட்டார்கள். "மஞ்சள் மங்களகரமானது என்றும், நமது மாதவிடாய் சுழற்சியின் போது தாவரங்களைத் தொட்டால், செடிகள் இறந்துவிடும் என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி செய்து, நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது,'' என்றார் வைஷாலி கோடம்.

இயற்கை விவசாயம் இந்த பெண் விவசாயிகளின் நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளது. "எனது கணவர் இறந்ததிலிருந்து நான் பண்ணை மற்றும் எனது வீட்டை நிர்வகித்து வருகிறேன்" என்று, தெம்புர்னி கிராமத்தில் அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை தொடங்கிய விதவையான ஷிண்டே, தனது விளைபொருட்களை காட்சிப்படுத்தியபோது கூறினார். “கடன் கொடுப்பவர்களோ அல்லது உறவினர்களோ கடனையோ உதவியோ கொடுக்க மாட்டார்கள். இப்போது மக்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். பல ஆர்வலர்கள் மற்றும் நிருபர்கள் எங்களை சந்திக்க வருவதால், உள்ளூர்வாசிகள் எங்கள் பரிசோதனையை மரியாதையுடனும் ஆர்வத்துடனும் பார்க்க ஆரம்பித்துள்ளனர். சில விவசாயிகள் எங்களின் ஆலோசனைகளைப் பெற்று இயற்கை விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர்”.

(இந்தியா ஸ்பெண்டில் பயிற்சி பெற்ற ரித்திகா சத்தா இந்தக் கதைக்கு பங்களித்துள்ளார்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.