புதுடெல்லி:அண்மை வானிலை நிகழ்வுகள், அதாவது கேரளாவில் பெரும் வெள்ளம், உத்தரகாண்டில் பெரும் வனத்தீ, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடும் அனல் காற்று போன்றவை, காலநிலை மாற்றத்தால் இந்தியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது. பரவலாக அழிவை ஏற்படுத்துவது, உணவு, தண்ணீர் கிடைப்பதில் பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய நிகழ்வுகள், சராசரி வெப்பநிலை அதிகரித்து வரும் இந்தியாவில் அடிக்கடி தீவிரமாக ஏற்படும் ஒன்றாக மாறிவிடக்கூடும்.

காலநிலை மாற்ற விஞ்ஞானிகளின் உலகளாவிய அமைப்பான காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுக்குழுவின் (IPCC) புதிய அறிக்கை, 2018 அக்.8ஆம் தேதி வெளியாகிறது. வெப்பநிலை அதிகரிப்பை குறைக்க, இந்தியா உள்பட உலக நாடுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை மதிப்பிடுவதாக இந்த அறிக்கை இருக்கக்கூடும்.

இந்த அறிக்கை குறித்த ஆரம்ப கட்ட கசிவு (இங்கு, மற்றும் இங்கு) சுட்டிக் காட்டுவது, அதன் கண்டுபிடிப்பு சலசலப்பை உண்டாக்கும் என்பது தான். “பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள் மிக மோசமான தகவலுக்கான சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தலைப்பிட்டு, 2018 அக்.3ஆம் தேதி வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலகம் தனது கார்பன் வாயு அதன் மாசுபாடு அளவை தாண்டிவிடும்; உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி அதிகரிக்கும் முன், கார்பன் வாயு வளிமண்டலத்தில் வெளிப்படலாம் என்று, வாஷிங்டன் போஸ்ட் இதழ் தெரிவிக்கிறது. உலகளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக அதிக கார்பன் வாயுக்களை வெளியேற்றும் மூன்றாவது பெரிய நாடான இந்தியாவுக்கு இது, நிம்மதியை இழக்கச் செய்யும் செய்தி.

அரசுகள் “கடுமையான” பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலக்கரியில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே, 2030 ஆம் ஆண்டில் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்பதை, ஐ.பி.சி.சி.யின் கசிந்த அரிக்கையை மேற்கோள் காட்டி, 2018 செப். 30ல் பூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைக்க வேண்டும் என்ற நோக்கம், 1800களில் தொழிற்சாலை சகாப்தம் தொடங்கியது முதலே ஏற்பட்டது.

இந்தியாவின் பிரச்சனை இங்கு தான்: சீனாவுக்கு அடுத்ததாக, அதிக நிலக்கரியை பயன்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு, 600 மில்லியன் இந்தியர்களின் வாழ்வை ஆபத்துக்குரியதாக்கும்.

தற்போது நிலக்கரி உலகின் 27% தேவை மற்றும் இந்தியாவின் 60% ஆற்றல் தேவையை பூர்த்தி செய்கிறது. "வளிமண்டலத்தை பாதுகாப்பதற்காக விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் துல்லியமான ஒரு கண்ணோட்டத்தில்,2040 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி சந்தையில் நிலக்கரி பயன்பாடு 13%க்கு சரிந்துவிடும்” என்று ஐ.பி.சி.சி.யின் வரைவு அறிக்கையை மேற்கோள்காட்டி 2018 செப்.30ல் பூம்பெர்க் தெரிவித்திருந்தது.

உலகளாவிய வெப்பநிலையை 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும் என்ற 2015 பாரீஸ் உடன்படிக்கையின்படி கார்பன் வெளியேற்ற அளவை இந்தியா குறைத்துக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 2030ஆம் ஆண்டுக்குள் 40%, அதாவது 2018ல் உள்ள 20% என்பதில் இருந்து அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கென பருவநிலை நெகிழ்வுதிறன் கொண்ட நகரங்களை கட்டமைக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் உள்ளது.

இத்தகு வாக்குறுதிகளில் தான் இன்று இந்தியா உள்ளது:

  • தற்போது இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 20% ஆகும்.
  • நாட்டின் வனப்பகுதி, 2017 உடனான இரு ஆண்டுகளில் 1% அதிகரித்து, இந்தியாவின் 24%ஐ கொண்டிருக்கிறது. ஆனால், அடர்ந்த காடுகள், தோட்டங்களை உள்ளடக்கி, இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டு இருப்பதாக, 2018 ஜூலை 4-ல் பேக்ட்செக்கர் செய்தி வெளியிட்டிருந்தது.
  • நாட்டில் நகராட்சிகள் மூலம் ஆண்டுதோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் 24% மட்டுமே செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் தேசிய முடிவெடுக்கப்பட்ட பங்களிப்பாளர்கள் (NDCs) பசுமை இல்லங்கள் வெளியேற்றுவதை குறைப்பது, உலக வெப்பமாவதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைப்பது என்ற லட்சியம் எட்ட உதவுமா? இல்லை. நாடுகளின் பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும் சுயேச்சை அறிவியல் குழுவான, கிளைமெட் ஆக்‌ஷன் டிராக்கர் கூறுகிறது.

பாரீஸ் உடன்படிக்கையுடன் இந்தியாவின் கடமைகள் “முழுமையானதாக இல்லை” என்று அறிக்கை கூறுகிறது. இந்தியா தனது அனைத்து இலக்குகளை எட்டினால், வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியல் குறையலாம். ஆனால், 1.5 டிகிரி செல்ஷியஸ் என்ற வரம்புடன் ”இன்னும் அதிகமாக” இருக்கும்.

இந்தியாவை அச்சுறுத்தும் நான்கு தட்பவெப்ப நிலை மாற்றங்கள்

அதிகரிக்கும் வெப்ப அலை நிகழ்வுகள்: தற்போதைய கார்பன் வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளில் மாற்றம் இல்லையெனில், 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி ஆண்டு வெப்பநிலை 1.5 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரீஸ் உடன்படிக்கையின்படி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, 1டிகிரி செல்ஷியஸ் முதல், 2 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று, உலக வங்கியின் 2018 ஜூன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டுடனான 4 ஆண்டுகளில், நாடு முழுவதும் அதிக வெப்பம் காரணமாக 4800 இந்தியர்கள் இறந்துள்ளனர்; அதிகபட்ச இறப்பு 2015ல் நிகழ்ந்துள்ளது. இந்த அனல் காற்று மேலும் மோசமடையக்கூடும்.தற்போதைய கார்பன் வெளியேற்ற அளவை கணக்கில் கொண்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில், வடக்கில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தென் தீபகற்பம் வரை வெப்பம் அதிகரித்து, இறப்பு எண்ணிக்கை 75 மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது, 30 ஆண்டுகளில் 3-9 சம்பவங்களாகவும், கடைசி காலாண்டில் 18- 30 நிகழ்வுகளாகவும் இருக்கும்.

இந்தியாவில் கடும் அனல் காற்று வீசுவது, இந்நூற்றாண்டின் இறுதியில் 30 மடங்கு அதிகரிக்கும். பாரீஸ் உடன்படிக்கையை இந்தியா கடைபிடித்தால் உலகளாவிய வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்ஷியசுக்குள் இருக்கும். இல்லாவிட்டால் கொல்கத்தா போன்ற ஈரப்பதம் கொண்ட கடலோரப்பகுதிகளில் கூட, 2015க்கு இணையான கடும் அனல் காற்றை அனுபவிக்க நேரிடும்.

தண்ணீர் பிரச்சனை: உலகளாவிய வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிப்பது தண்ணீர் கிடைப்பதில்இந்தியாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கங்கை நதியின் பாயும் நீரோட்டம் 20% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தண்ணீர் பிரச்சனையை இது மேலும் மோசமானதாக்கும்.

ஏறத்தாழ 600 மில்லியன் இந்தியர்கள் தீவிரமான தண்ணீர் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். ஏனென்றால் ஆண்டுக்கு நிலப்பரப்பில் கிடைக்கும் தண்ணீரில் 40% அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான குடிநீரை பெற முடியாத காரணத்தால் ஆண்டுக்கு 2,00,000 பேர் இறக்கின்றனர்;2050ஆம் ஆண்டில் நிலைமை இன்னும் மோசமாகும்.

குறைந்த வாழ்க்கைத்தரம் கொண்ட 600 மில்லியன் இந்தியர்கள்:2050ஆம் ஆண்டில் அதிகரிக்கும் வெப்பநிலை, பருவம் தவறிய மழை போன்றவை, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8% அளவுக்கு பாதிக்கும். வெப்பம் மற்றும் மாறுபட்ட மழைப்பொழிவுக்குள்ளாகும் பகுதிகளை சேர்ந்த 600 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று, 2018 ஜூனில் வெளியான உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகியன, 2050 ஆம் ஆண்டில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும்; அதை தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. ஜார்கண்ட், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட 10 மாநிலங்கள் மோசமாக பாதிக்கும் மாநிலங்கள்.

இந்த 10 மாநிலங்களில் அளவுக்கதிகமான வெயில், பருவம் தவறிய மழை போன்றவை விவசாயிகளுக்கு கடும் நெருக்கடியை தரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மகாராஷ்டிராவில், மோசமாக பாதிப்புக்குள்ளாகும் 10 மாவட்டங்களில் ஏழு, விதர்ப்பா பகுதியில் இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிக வெப்பம் காரணமாக மட்டும் இவை, வெப்பப்பகுதிகளாக கருதப்படவில்லை. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான சமூக, பொருளாதார திறனால் வரையறுக்கப்படுகின்றனர் என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து பிரச்சனை: அதிகளவில் கார்ப்பன்டை ஆக்சைடு (CO2) வாயு வெளிப்படுவது, நமது உணவை ஊட்டச்சத்து அற்றதாக்கிவிடுகிறது என, ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறையின் டி.எச்.சான் 2018 செப்டம்பர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரிசி, கோதுமை போன்ற பயிர்களை குறைவான ஊட்டச்சத்து உள்ளதாக்கி, 175 மில்லியன் மக்களின், அதாவது உலக மக்கள் தொகையில் 1.9% பேரிடையே துத்தநாக குறைபாட்டை உண்டாக்கும்; 2050 ஆண்டு வாக்கில், 122 மில்லியன் மக்களிடையே புரதச்சத்து பற்றாக்குறையை உண்டாக்கும்.

உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் உலகின் பெரிய நாடாக இந்தியா மாறக்கூடும். இங்கு 50 மில்லியன் மக்கள், அதாவது ஆந்திரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை அளவில் துத்தநாக குறைபாட்டையும்; 38 மில்லியன் மக்கள், அதாவது ஹரியானா, உத்தரகாண்டின் மக்கள் தொகை எண்ணிக்கையினர் புரதச்சத்துகுறைவாலும் பாதிக்கப்படுவர்.

இந்தியாவில் 500 மில்லியனுக்கும் மேலான பெண்கள், குழந்தைகள் இரும்புச்சத்து குறைபாடு நோயுக்கு ஆளாகி வருவதை காணலாம். போதிய ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு காரணம் என்று, ஹார்டுவேர்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.