மும்பை: ஆகஸ்ட் 31, 2019 அன்று வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு - என்.ஆர்.சி (NRC), அசாமில் வசிக்கும் 19 லட்சம் பேர் இந்திய குடிமக்கள் அல்ல என்று கூறியுள்ளது. என்.ஆர்.சி தரவுகளின்படி, அசாமில் 3.3 கோடி மக்கள் உள்ளனர்.

2004 ஆம் ஆண்டில், அசாமின் புலம்பெயர்ந்த மக்கள்தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டில் மேற்கோள் காட்டப்பட்ட 5 கோடி என்பதை விட இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைவு; பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

இந்தியாவில் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறித்த தெளிவு இல்லாததால், இந்திய குடிமக்களை சட்டவிரோத குடியேறியவர்களிடம் இருந்து பிரித்தறிவதற்காக, சிக்கலான செயல்முறையான தேசிய குடிமக்கள் பதிவேடு - என்.ஆர்.சி ஏற்படுத்தப்பட்டது. ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட என்.ஆர்.சி. வரைவு அறிக்கையில், 41 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், விலக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க, 2018 டிசம்பர் 31 வரை அரசு அவகாசம் தந்தது.

இப்போது விலக்கப்பட்ட 19 லட்சம் மக்களும், இந்த முடிவுக்கு எதிராக வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்யலாம்.

குடியுரிமை தகுதி பெறுவதற்கான செயல்முறை, பலரால் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது, மேலும் இது பலருக்கு சிரமத்தை தருகிறது என்று, அக்டோபர் 2017 இல் எங்கள் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

சட்டவிரோதமாக அல்லது வேறுவழியில்லாமல் குடியேறியவர்களின் சரியான எண்ணிக்கை, மேலும் போட்டி போடக்கூடியது. இது கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, அரசு மதிப்பீடுகளில் 23 லட்சம் மற்றும் 20 லட்சம் என்று மாறுபடுகிறது.

என்.ஆர்.சி கண்டுபிடிப்புகள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்க, 6,837,660 விண்ணப்பங்கள் மூலம் 33,027,661 பேர் விண்ணப்பித்ததாக, ஆகஸ்ட் 31 அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. முறையீடுகள் மற்றும் உரிமைகோரல்களை மதிப்பாய்வு செய்த பின்னர், 31,121,004 பேர், பதிவேட்டில் சேர்க்க தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டது. உரிமைகோரல்களை சமர்ப்பிக்காதவர்கள் உட்பட 1,906,657 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர் யார்

அசாம் உடன்படிக்கையின்படி, டிசம்பர் 24, 1971-க்கு பிறகு இந்தியாவுக்கு வந்த எந்தவொரு வெளிநாட்டவரும் சட்டவிரோதமாக குடியேறியவராக கருதப்படுவார்கள்; நாடு கடத்தப்படுவார்கள். ஜனவரி 1966 முதல், டிசம்பர் 1971 வரை இந்தியாவில் நுழைந்தவர்களுக்கு, இந்தியாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். 1966ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள், பெரும்பாலும் 1947 இல் பிரிவினையின் விளைவாக, தானாகவே குடியுரிமை பெறுவார்கள்.

மதிப்பீடுகள் 23 லட்சம் முதல் 2 கோடி வரை வேறுபடுகிறது

நவம்பர் 16, 2016 அன்று மாநிலங்களவையில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த கீரன் ரிஜிஜு வழங்கிய, மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடி எண்ணிக்கையை விட 90% குறைவாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை உள்ளது. அவர், எண்ணிக்கைக்கான ஆதாரத்தை விளக்கவில்லை.

கடந்த 2011இல், இந்தியா 5.4 மில்லியன் புலம்பெயர்ந்தோரைப் பெற்றது, அவர்களில் பங்களாதேஷ் குடியேறியவர்கள் மிகப்பெரிய குழுவாக உள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010 ஆம் ஆண்டில், இந்தியாவில் வசிக்கும் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் உலகளாவிய தெற்கில் சர்வதேச அளவில் குடியேறியவர்களில் மிகப் பெரிய குழுவாக (3.3 மில்லியன்) இருந்தனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

நவம்பர் 11, 2016 அன்று, மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் அளித்த பதிலில், “1971 க்கு முந்தைய மற்றும் 1971ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலங்களில் பங்களாதேஷில் இருந்து அசாமிற்கு ஊடுருவியவர்களின் சரியான ஊடுருவல் மற்றும் மத அமைப்புக்கு உண்மையான எண்ணிக்கை கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 27, 2016 அன்று, உள்துறை இணை அமைச்சர் அளித்த பதிலில், அசாமில் ஊடுருவியவர்களின் எண்ணிக்கையை "கண்டுபிடிக்க முடியாது" என்று கூறினார். ஏனெனில் ஊடுருவல் "ரகசியமானது மற்றும் வெளியே தெரியாமல்" உள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

எங்கள் பகுப்பாய்வு பரந்த முரண்பாடுகளைக் காட்டுகிறது, மதிப்பீடுகள் 23 லட்சத்தில் இருந்து 2 கோடி என வேறுபடுகின்றன; அரசும் மற்றவர்களும் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களில், இந்தியாவில் வாழும் சட்டவிரோத குடியேறியவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை.

புலம்பெயர்ந்தோர் பற்றிய 2011 தரவு இனி மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் கிடைக்காது, அங்கு ஒரு தரவு தரவு “ஆய்வுக்கு உட்பட்டது” என்றும் “விரைவில் வெளியிடப்படும்” என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாஸ்பெண்ட், இந்த தரவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு வலைத்தளத்தில் இருந்து அகற்றுவதற்கு முன்பு பதிவிறக்கம் செய்த நியூஸ் கிளிக்.இன் நிருபரிடம் இருந்து தரவை அணுகியது.

பிரிவினையின் போதும், பங்களாதேஷ் சுதந்திரப் போரின் போதும் மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதார காரணங்களுக்காக பங்களாதேஷ் குடியேற்றத்தவர்கள் இந்தியாவுக்கு வந்தனர்.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மற்றும் பல்வேறு மக்கள்தொகை ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டவிரோத குடியேற்றத்தின் மதிப்பீடுகள் பரவலாக வேறுபடுகின்றன என்று, அமெரிக்காவின் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தின் சந்தன் நந்தியின் 2005 அறிக்கை தெரிவிக்கிறது.

1991 ஆம் ஆண்டு வரை, பங்களாதேஷின் எல்லையிலுள்ள இந்திய மாநிலங்களில் 700,000 க்கும் மேற்பட்ட பங்களாதேஷியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர் என்று, 1992 மார்ச்சில் இந்திய உள்துறை அமைச்சர் வழங்கிய எண்ணிக்கையை மேற்கோள்காட்டி, இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைப்பான பாதுகாப்பு அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனம் - ஐ.எஸ்.டி.ஏ (ISDA) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பங்களாதேஷ் நாட்டவர்கள் சட்டப்பூர்வமாக வருகிறார்கள்; ஆனால் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட விசா காலத்தை கடந்து இங்கு இருக்கிறார்கள் என ஐ.எஸ்.டி.ஏ அறிக்கை தெரிவித்துள்ளது. 1972 மற்றும் 1997 க்கு இடையில் 9,00,000-க்கும் மேற்பட்ட பங்களாதேஷியர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்பவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 1997 இல், அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த இந்தர்ஜித் குப்தா, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஒரு கோடி பேர் இருப்பதாக கூறினார் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

முன்னதாக, ஜூலை 2004 இல், அப்போதைய உள்துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மாநிலங்களவையில் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி இருந்ததாகக் கூறியிருந்தார்; ஆனால் பின்னர் இந்த எண்ணிக்கை பக்கச்சார்பான கட்சிகளின் "காதில் கேட்டது" அடிப்படையில் அமைந்ததாகக் கூறி பின்வாங்கினார்.

கடந்த 2009இல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில், சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் கமல் சாதிக், இந்தியாவில் 1.5 கோடி முதல் 2 கோடி வரை பங்களாதேஷ் குடியேற்றத்தினர் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இது முஸ்லிம் சமூகங்களின் ஆவணப்படுத்தப்பட்ட வளர்ச்சி மற்றும் வெளியிடப்படாத அரசு அறிக்கைகளின் அடிப்படையிலானது என, வாஷிங்டன் டி.சி. அடிப்படையிலான சிந்தனைக் குழுவான இடம்பெயர்வு கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஏன் சரியாக இருக்காது எனமக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு கூறுகிறது

கடந்த 1951 மற்றும் 1991-க்கு இடையில் பங்களாதேஷில் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் வளர்ச்சி விகிதம் குறித்த 2005 ஆய்வில், பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு இந்துக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதை கண்டறிந்தது.

கடந்த 1951 மற்றும் 1991ஆம் ஆண்டுக்கு இடையில், பங்களாதேஷில் முஸ்லீம் மக்கள் தொகை கிட்டத்தட்ட 300% வளர்ச்சியடைந்தது; அதே நெறம், இந்துக்களின் எண்ணிக்கை, 20% மட்டுமே அதிகரித்துள்ளதாக, அமெரிக்காவின் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தின் நந்தி மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. "1947 ஆம் ஆண்டில் இருந்து பல லட்சம் இந்துக்கள் இந்தியாவுக்கு சென்றார்கள் என்று கருதுவது பாதுகாப்பானது; 1974க்கு பிறகு பங்களாதேஷ் அதன் வரலாற்றில் மிக மோசமான வறட்சி மற்றும் பஞ்சங்களால் தாக்கப்பட்டு, அதே ஆண்டில் முஸ்லிம்களையும் அதிக எண்ணிக்கையில் விரட்டியடித்தது ," என்று அவர் எழுதியுள்ளார்.

கடந்த 1981 மற்றும் 1991 க்கு இடையில், பங்களாதேஷின் மக்கள் தொகை அந்த தசாப்தத்தில் கணிக்கப்பட்ட 3.13% க்கு எதிராக 2.2% அதிகரித்துள்ளது, இது 70 லட்சத்தில் இருந்து முதல் 1.4 கோடி வரை மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையில் ஒரு பகுதி, நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறுகிறது. இதன் விளைவாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. "காணாமல்போன லட்சக்கணக்கானவர்கள் 1981-1991 தசாப்தத்தில் பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த அளவைக் குறிக்கின்றனர்" என்று நந்தி எழுதினார்.

"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இத்தகைய பங்களாதேஷ் பிரஜைகளின் துல்லியமான தரவுகளை வைத்திருப்பது சாத்தியமில்லை" என்று தரவின் ஆதார மூலத்தை விளக்காமல் கிரேன் ரிஜிஜு, நவம்பர் 16, 2016 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். "கிடைக்கக்கூடிய உள்ளீடுகளின்படி, சுமார் 2 கோடி பேர் சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறியவர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர்" என்றார் அவர்.

இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், பங்களாதேஷை சேர்ந்த குடியேற்றக்காரர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட சமமாக குடியேறியதாக கூறப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு வங்கம் (18 லட்சம்), திரிபுரா (215,353 மில்லியன்) மற்றும் அசாம் (64,116) ஆகியவற்றில் அதிக குடியேறியவர்கள் உள்ளனர்.

இந்த எண்கள், பதிலளித்தவர்கள் தாங்கள் கடைசியாக இந்தியா உருவாகும் முன்பு வாழ்ந்ததாகக் கூறியதை அடிப்படையாகக் கொண்டவை; சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பொய் சொல்ல ஒரு ஊக்கம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பங்களாதேஷ் முன்னேறும் போது இந்தியாவில் குடியேற்றம் குறையலாம்

பதிலளித்தவர்களில் 56% பேர் தொழில்மயமாக்கல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை தான் குடியேற காரணம் என்று கூறியுள்ளனர்; அதே நேரம், சுமார் 35% பேர் பங்களாதேஷின் வறுமை ஒரு காரணம் என்று கூறியுள்ளதாக, இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் பிரணாட்டி தத்தாவின் 2004 ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்களாதேஷை தங்களின் கடைசி வசிப்பிடமாக அறிவித்தவர்களில் மூன்றில் நான்கில் ஒரு பங்கு (77.4%) பேர் 1991-க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்ததாக தரவு காட்டுகிறது.

எனவே, பங்களாதேஷ் வளர்ந்ததால், அது இந்தியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைய வழிவகுத்திருக்கும்.

உலக வங்கியின் தரவுகளின் அடிப்படையில் பங்களாதேஷின் தனிநபர் வருமானம் 1970ஆம் ஆண்டில், 393.4 டாலரில் இருந்து, 2017 இல் 1,053 டாலராக 169% அதிகரித்துள்ளது. மேல்நிலைப் பள்ளியில் சேரும் குழந்தைகளின் விகிதம் 1980ஆம் ஆண்டில் 18.5% ஆக இருந்து 2017 இல் 67.3% ஆகவும்; குழந்தை இறப்பு 1970 இல் 1,000 பிரசவங்களுக்கு 148.3 இறப்புகள் என்றிருந்தது, 81% குறைந்து 2017 ஆம் ஆண்டில் 26.9 ஆக அதிகரித்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

மேலும், அதிகமான பங்களாதேஷியர்கள் இப்போது பாரசீக வளைகுடா பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பொருளாதார பேராசிரியரான சின்மே தும்பே, ஜூலை 2019 இல் லைவ்மிண்ட் இதழ் பகுதியில் எழுதினார்.

(கைதன், இந்தியா ஸ்பெண்ட் எழுத்தாளர் / ஆசிரியர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.