நொய்டா: "இது ஒரு சவாலான திட்டம் தான்; கடினமானது என்பதற்காக அதை செய்யாமல் இருப்பதைவிட, முயற்சி செய்வது எவ்வளவோ மதிப்புக்குரியது," என்று, ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த முன்னாள் இயக்குநருமான எம்.கே.ரஞ்சித்சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பரவலாக வேட்டையாடப்பட்டதால், 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்நாட்டு சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 28, 2020இல், உச்சநீதிமன்றம் ஆப்பிரிக்க சிறுத்தைகளை "கவனமாக [ஒரு] வாழ்விடத்தை தேர்ந்தெடுத்து, சோதனை அடிப்படையில் அங்கு விடவும், இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றால் மாற முடியுமா என்பதை கண்காணித்து வளர்க்கவும்" உத்தரவு பிறப்பித்தது. "ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தைகளை இந்தியாவில் பொருத்தமான இடங்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்ய" அனுமதி கோரி, தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

"புலிகள் பாதுகாப்பை போலவே, புறக்கணிக்கப்பட்ட நம் புல்வெளிகள், திறந்தவெளி காடுகளை பாதுகாப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. சிறுத்தைகள் நமது காடுகள் நிறைந்த தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது" என என்.டி.சி.ஏ மனுவில் கூறப்பட்டு உள்ளது. "இது ஓநாய், பாலைவன பூனை, பாலைவன நரி மற்றும் பெரிய இந்திய புல்வெளி பகுதிகள், திறந்தவெளி காடுகளில் மட்டுமே காணும் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் பாதுகாப்பிற்கு உதவும்" என்கிறது.

இந்த பரிசோதனை முயற்சி, 1972ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் முதன்மை ஆசிரியரான ரஞ்சித்சின் தலைமையிலான நிபுணர்கள் குழுவால் வழிநடத்தப்படும்.

“நான் வனவிலங்கு [பாதுகாப்பு] சட்ட வரைவை உருவாக்கும் போது, அதைச் செய்ய முடியாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால், அது நிகழ்த்தப்பட்டது” என்று ரஞ்சித்சிங் கூறினார். "நாங்கள் முதலை திட்டத்தை தொடங்கியபோது, அது மிகவும் கடினம் என்றார்கள்; ஆனால் அதுவும் செய்து முடிக்கப்பட்டது. நாங்கள் புலி பற்றிய திட்டத்தை ஆரம்பித்த போது, அவநம்பிக்கை கொண்டிருந்தனர்; அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தோம். எனவே, இதில் சவால்கள் உள்ளன, ஆனால் அவை முக்கியமாக அரசியல் ஆதரவு - மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவோடு எதிர்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை அறிமுகம் செய்வதற்கான காரணங்கள், ஆப்பிரிக்காவில் அவை எங்கிருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட உள்ளன, இந்தியாவில் அவை வசிக்கக்கூடிய சாத்தியமான இடங்கள் உள்ளிட்டவை குறித்து, இந்தியா ஸ்பெண்ட் உடன் ரஞ்சித்சின் பேசினார். அவரது நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

இந்த திட்டம் மீதான மிகப்பெரிய உந்துதலாக, இந்திய புல்வெளிகள், அதில் வசிக்கும் பல்வேறு உயிரினங்களை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய இனமாக சிறுத்தைகள் செயல்படும் என்ற நம்பிக்கையாகத் தெரிகிறது. இதை விரிவாகக் கூற முடியுமா?

ஒரு உயிரினத்தை மீட்டெடுப்பது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதாகும். புலிகள், பனிச்சிறுத்தை மற்றும் முதலைகளின் விஷயத்திலும் இதே முறை பயன்படுத்தப்பட்டது. இந்த உயிரினங்களை பாதுகாக்கும் செயல்பாட்டில், மிகவும் மதிப்புமிக்க ஒன்று காப்பது என்பதாகும். இன்று, நாம் புலி மற்றும் காடுகளில் கவனம் செலுத்துகிறோம். மலைகள், புல்வெளிகள் மற்றும் ஈரப்பத நிலங்களின் நிலை என்ன? நம்மிடம் திமிங்கல சுறாக்கள் வாழும் கடலோரப்பகுதிகளின் நிலை என்ன? வெவ்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் தொகுதிகளின் மீது நாம் கவனம் செலுத்த, முதன்மை இனங்களை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்.ஏனெனில், இந்தியாவில், குறியீட்டுவாதம் மிகவும் முக்கியமானது.

இன்று, புலி வெறும் அடையாளமாகிவிட்டது. பிறவும் அடையாளங்களாக மட்டும் ஏன் இருக்கக்கூடாது? புலி நாட்டின் வெவ்வேறு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை மறைக்காது. நம்பமுடியாத இந்தியா மற்றும் அதன் பல்லுயிர் பற்றி பேசுகிறோம். இதன் பொருள் சிங்கம், புலிகள், யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் மட்டும் தானா?

புல்வெளிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளை மிகவும் உற்பத்தி செய்கின்றன; அது முக்கியமானது. ஏனெனில் இந்தியாவில் தான் உலகிலேயே அதிக கால்நடைகள் உள்ளன, இவை, இலவச மேய்ச்சலை நம்பியுள்ளவை. ஆனால் புல்வெளிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. நம்மிடம் வனக்கொள்கை உள்ளது; ஆனால், புல்வெளிக்கென கொள்கை எதுவுமில்லை. மிகவும் ஆபத்தான உயிரினங்களில் சில, புல்வெளிகளில் இருக்கும் காட்டுப்பூனை போன்றவை; இது சிறிய பூனை இனங்களில் மிகப்பெரியது. காட்டுப்பூனை குறித்து யாருக்கும் தெரியாது. இவை கட்ச் பகுதியிலும், ரணதம்போர் தேசிய பூங்காவின் வடக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன; அவை 100 க்கும் குறைவான எண்ணிக்கை என்றளவில் தான் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிரேட் இந்தியன் பஸ்டர்ட் போன்ற பிற புல்வெளி இனங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுத்தைகளை பெறுவதற்கான செயல்பாட்டில், நாம் புல்வெளிகளை மதிப்பிட்டு, அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்றவாறு பணி செய்தால், நாம் ஏற்கனவே நிறைய சாதித்திருப்போம். புல்வெளி-வனப்பகுதி தொகுதிகள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். புல்வெளிகள் மற்றும் புல்வெளி வனத்தொகுதிகள் இரண்டிலும் சிறுத்தைகள் வாழலாம்.

ஈரானில் இருந்தோ, பிற ஆசிய நாடுகளில் இருந்தோ சிறுத்தைகளை கொண்டு வராமல், ஆப்பிரிக்க சிறுத்தைகளை நாம் ஏன் கொண்டு வருகிறோம்?

ஆசியாவில் இப்போது சிறுத்தைகள் கிடைப்பதில்லை. ஈரானில் இருந்து சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான திட்டம் 1970களில் இருந்தது. பல அரசியல் மாற்றங்கள் அப்போது நிகழ்ந்தன. இந்திரா காந்தி ஆட்சியை இழந்தார் ; ஈரானின் ஷா நீக்கப்பட்டார்; அயதுல்லாக்கள் பொறுப்பேற்றனர். மற்றும் அரசியல் விருப்பமும் ஈடுபாடும் காட்டாததால், ஈரானும் மெல்ல மெல்ல அதன் சிறுத்தைகளை இழக்கத் தொடங்கியது. சிறுத்தைகளின் எண்ணிக்கை 1970களில் 250க்கு மேல் இருந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 26 அல்லது 28 ஆக குறைந்தது.

ஆப்பிரிக்க சிறுத்தைகள் ஒருபோதும் இந்திய நிலப்பரப்பில் வசிக்காத நிலையில், "மீண்டும் அறிமுகம்" என்ற சொல் தற்போதைய சூழலில் பொருத்தமானதல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதனால்தான் இது ஒரு "அறிமுகம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவை சிறுத்தைகள் பூர்வீகமாக கொண்டிருக்காத போது, ஆப்பிரிக்க சிறுத்தைகள் வாங்குவதில் பணம் தண்ணீராய் செலவழிப்பதாக, சிலர் வாதிடுகின்றனர். உங்கள் கருத்துகள்?

இல்லை. அனைத்து சிறுத்தைகளும் பல கிளை இனங்களைக் கொண்ட ஒரு இனம். எனவே, சிறுத்தைகளின் சூழலில், மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் உள்ளது. ஆப்பிரிக்க கிளை இனங்களை பொறுத்தவரை, நீங்கள் இதை ஒரு அறிமுகம் என்றே அழைக்கலாம்.

[ஆசிய சிறுத்தைகள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை, ஆனால் 1950களின் முற்பகுதியில் அவை வேட்டையாடப்பட்டன ].

சிறுத்தைகள், ஆப்பிரிக்காவின் எந்த பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன?

வடகிழக்கு பகுதியில், ஆப்பிரிக்க சிறுத்தைகளை நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அவை ஆசிய சிறுத்தைகளுக்கு மரபணு ரீதியாக மிக ஒத்துப்போகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உண்மையா என்று ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம். அது வேலைக்கு ஆகாது என்றால், அடுத்த தேர்வு, தென்னாப்பிரிக்கா தான்.

இந்தியாவுக்கு எத்தனை சிறுத்தைகள் கொண்டு வரப்படும்?

தொடக்கத்தில், 10 சிறுத்தைகள் என்ற எண்ணிக்கையில் தொடங்குவோம், அவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். மொத்தம் எத்தனை கொண்டு வரப்படும் என்பது எங்களுக்கு இதுவரை தெரியாது. இதில் முக்கியமானது என்னவென்றால், எதிர்காலத்திலும் இதுபோல் வழங்க வேண்டுமென்று உத்திரவாதம் ஆகும்.

இந்த திட்டத்திற்கான நிதி திட்டம் என்ன, அதற்கு யார் பணம் செலுத்துகிறார்கள்

ஆரம்ப கணக்கெடுப்பு போன்றவற்றுக்கான குறுகிய கால பட்ஜெட்டையும், தனியொரு நீண்ட கால பட்ஜெட்டையும் நாங்கள் தற்போது உருவாக்கி வருகிறோம். இந்த புள்ளி விவரங்களின் மதிப்பீட்டை என்னால் இப்போது கொடுக்க முடியாது; ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது அல்ல என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசு (கள்) நிதியளிக்கும்.

கொண்டு வரப்படும் சிறுத்தைகள் இந்தியாவில் உள்ள எந்த பூங்காக்கள் அல்லது சரணாலயங்களில் அறிமுகப்படுத்தப்படும்?

மத்தியப்பிரதேசத்தில் குனோ தேசிய பூங்கா மற்றும் நவுர தேஹி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை சாத்தியமான இடங்கள். ராஜஸ்தானில், இது ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஷாகர் பகுதி. நாம் வேறு இடங்களையும் பார்க்கலாம். குறிப்பாக மாநில அரசுகள் பரிந்துரைகளை வழங்கினால், அதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவோம்.

இன்றைய நிலவரப்படி, நமது பகுதிகளில் இருக்கும் மற்ற புலிகளின் இனங்கள் யாவை? மத்திய பிரதேசத்தில் சிறுத்தைகள் இருப்பதை நான் அறிவேன்.

ஷாகரில் புலிகள் இல்லை. சிறுத்தைகளை ஒரு பிரச்சினையாக நான் பார்க்கவில்லை, ஆனால் புலிகள் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மத்திய பிரதேசத்தில் விடுபட்ட ஒரு சில புலிகள் இருக்கலாம், நாங்கள் அபாயங்களை மதிப்பிட்டு மோதல் குறைக்கப்படுவதை உறுதி செய்ய முயற்சிப்போம்.

சரியான மதிப்பீட்டு திட்டம் என்ன, பல்வேறு நிலைகள் யாவை?

இது நீண்ட காலமாக வரையப்பட்ட செயல். நாம் முதலில் இந்தியாவில் சாத்தியமான தளங்களை மதிப்பீடு செய்ய வேண்டும், அதே நேரத்தில், ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தைகளை கொண்டு வரக்கூடிய இடங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அத்தகைய திட்டத்திற்காக இந்தியாவில் சில இடங்களை மதிப்பீடு செய்தோம். இப்போது, அந்த இடங்கள் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், நாங்கள் ஒரு முன்னுரிமை பட்டியலை உருவாக்குவோம். மேலும் சிறுத்தை அறிமுகம் செய்வதற்கான ஏற்ற நிலைமைகளை உருவாக்க களத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதையும், பூங்காக்கள் எப்போது தயாராக இருக்கும் என்பதையும் சரிபார்க்கிறோம்.

எப்போதும் ஆபத்து இருக்கும். முடிந்தவரை ஆபத்தை குறைக்க விரும்புகிறோம். இது ஒரு சவாலான திட்டம்; ஆனால் கடினமானது என்று சொல்லி அதை செய்யாமல் இருப்பதைவிட முயற்சி செய்வது மேலானது. நான் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, அதை செய்ய முடியாது என்று சிலர் சொன்னார்கள். அது செய்யப்பட்டது. நாங்கள் முதலை குறித்த திட்டத்தை தொடங்கியபோது, அது மிகவும் கடினம் என்றனர்…. மீண்டும் அது முடிந்தது. நாங்கள் புலிகள் குறித்த திட்டத்தை தொடங்கியபோது, அவநம்பிக்கை கொண்டவர்கள் இருந்தனர், ஆனால் அது செய்யப்பட்டது. எனவே, சவால்கள் உள்ளன, ஆனால் அவை முக்கியமாக அரசியல் ஆதரவுடன் அதாவது, மத்திய மற்றும் மாநில அளவில், எதிர்கொள்ளப்பட வேண்டும்.

இதுபோன்ற சிறுத்தை அறிமுகம் / மறு அறிமுக திட்டங்கள் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்டதா?

தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இதுபோன்ற பல மறு அறிமுகங்கள் இருந்தன; ஆனால் இதற்கு முன்னர் ஆசியாவில் செய்யப்படவில்லை. இதற்கு முன்னர் இதுபோன்ற செயல்முறைகளுக்கு ஏற்பாடு செய்து தந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த நிபுணர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

குஜராத்தின் சிங்கங்களுக்கு மத்தியப்பிரதேசத்தில் இரண்டாவது வீட்டைக் கண்டுபிடிப்பதற்கான திட்டங்கள், 2013 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விலங்குகளை தாக்கும் கோரைன் டிஸ்டெம்பர் போன்ற நோய்களால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றம் அவசரமானது - 2018 ஆம் ஆண்டில், இந்த வைரஸ் காரணமாக ஒரு மாதத்திற்குள் 24 சிங்கங்கள் இறந்தன. சிறுத்தையை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் சிங்கங்களை ஒரே நிலப்பரப்பில் இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகளைத் தடுக்கும் என்று நினைக்கிறீர்களா? சிங்கம்-சிறுத்தை இடையே மோதல் உருவாகும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இல்லை, இல்லை. சிறுத்தையை முதலில் அறிமுகப்படுத்தி அதன் பிரதேசத்தை நிறுவினால், புலிகள் பின்னர் வரலாம். ஆப்பிரிக்காவில், சிறிய வேட்டையாடுபவை முதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன. பின்னர் பெரியன அதன் வேலையை செய்கிறது. ஒரு பிராந்தியமானது எந்தவொரு இனங்களில் ஒன்றிற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த சிங்கம் மற்றும் சிறுத்தை திட்டங்களில் அரசியல் இருக்கிறது. நாங்கள் இரண்டு திட்டங்களையும் தனித்தனியாக செயல்படுத்த முயற்சிக்கிறோம். சிங்க இடமாற்றத் திட்டங்கள் குறித்த குறிப்பிட்ட கேள்விகள் இந்திய அரசுக்கு சிறப்பாக முன்வைக்கப்படுகின்றன.

(பர்திகர், பெங்களூரை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.