சங்ரூர், பஞ்சாப்: "எங்கள் போராட்டம் பணத்திற்கானது மட்டுமல்ல. நாங்கள் பயமின்றி செல்லக்கூடிய ஒரு விவசாய நிலம் சொந்தமாக வைத்திருப்பதை பற்றியது, ”என்று, தனது சமையலறை வாசலில் நின்றபடி, சப்பாத்தி தயாரிக்க மாவை உருட்டியவாறே பரம்ஜித் கவுர் கூறுகிறார். "இப்போது, எங்களது மகள்கள் எந்த நேரத்திலும் பயிர் அறுவடைக்கு தனியாக செல்லலாம்" என்றார்.

பரம்ஜித் கவுர், 2.5 குவிண்டால் கோதுமை மற்றும் ஒரு வீட்டுக்கு ரூ .1,200 ஆண்டு லாபம் ஈட்டித்தந்த, கிராமத்தின் 200 தலித் குடும்பங்கள் கூட்டாக பராமரிக்கும் 15.5 ஏக்கர் பொது நிலம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் பட்டிவால்கலன் கிராமத்தில் உள்ள அவரது வீட்டு முற்றத்தில் இருந்த பசுங்கூரை, கடும் கோடை வெயிலைத் தடுத்தவாறு இருந்தது. சுமார் 50 மீ. தொலைவில், குடும்பத்தின் ஒரே நம்பகமான வருவாய் ஆதாரமான - அழகுசாதனப் பொருள், சிறிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகள் நிறைந்த ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. பரம்ஜித் கவுரின் கணவர் மேஜர் சிங், இந்த தள்ளுவண்டி கடையை பக்கத்து கிராமங்களுக்கு கொண்டு சென்று, தினசரி வியாபாரம் மூலம் சுமார் ரூ. 500 சம்பாதிக்கிறார். அவரது மகன், விவசாயத் தொழிலாளி என்ற நிலையில் இருந்து விடுவித்து, சமீபத்தில் சங்ரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

தெற்கு பஞ்சாபின் 70 கிராமங்களில் இருந்து, நில உரிமை பிரசார இயக்கத்தில் பங்கேற்கும் பல ஆயிரம் தலித்துகளில், இந்த குடும்பமும் அடங்கும்; உயர் சாதி விவசாயிகள் மற்றும் பட்டியலின சாதி (எஸ்சி) தொழிலாளர்கள் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள இத்தகு அதிகார சமன்பாடுகள் வருத்தமடைய செய்கிறது.

கிராம பொது மக்களை அத்துமீறலில் இருந்து பாதுகாப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பெண்களின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதையும், இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதனால் தான் இந்த இயக்கத்தில் பரம்ஜித் கவுர் போன்றவர்கள் முன்னணியில் உள்ளனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது நிலத்தின் உரிமைகளுக்காக போராடிய, பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம் நியாமத்பூரை சேர்ந்த தலித் பெண்கள். தலித் நில உரிமை மீட்பு இயக்கம், பாரம்பரிய அதிகார சமன்பாடு சவாலை தருகிறது. ஏனெனில் இது உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெண்களின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கும் போராடுகிறது.

நிலஉரிமை மற்றும் உரிமைகள்

பஞ்சாபில் உயர் சாதியினர், பெரும்பாலும் ஜாட் சீக்கியர்கள், விவசாய நிலப்பரப்பின் மீது தங்களது ஆதிக்கத்திய செலுத்துகின்றனர். 2015-16 விவசாய மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, தனியார் விளை நிலத்தில் 3.5% மட்டுமே, 32% மக்கள் தொகை கொண்ட தலித்துகளுக்கு சொந்தமாக இருந்தது. தேசிய சராசரியாக 16.6% உள்ள தலித்துகள், 8.6% விளை நிலம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dalit Farm Holdings, 2015-16
Indicator Punjab All India
Dalit farm holdings (As % of all operational holdings) 5.76 11.9
Area of Dalit farm holdings (As % of all total farm area) 3.59 8.6

Source: Agriculture Census 2015-16

இந்தியாவின் அனைத்து மலை அல்லாத மாநிலங்கள் மத்தியில் 10 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகள் இருக்கும் அதிகபட்ச விகிதம் (5.28%) பஞ்சாபில் உள்ளது. இதில், வேளாண் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2015-16 படி தேசிய சராசரி 0.57% ஆகும்.

வீண், மூலதன-தீவிர வேளாண்மையால், மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரிய விவசாயிகளுக்கு பயனளிப்பதால், நில ஒருங்கிணைப்பு மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலத்தில், பஞ்சாபில் ஒரே பெரிய நில உரிமை மீட்பு இயக்கமாக முசாரா இயக்கம் (1930-53) இருந்தது. இதில், பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில ஒன்றிய (PEPSU) சுதேச மாநிலத்தில், குத்தகை விவசாயிகள், பிஸ்வேதரியை - அதாவது நில உரிமையாளர்கள் அதிக நிலம் வைத்திருந்த ஒரு அமைப்பு- ஒழிக்க கோரினர். இந்த போராட்டமானது, எதிர்ப்பு தெரிவித்த குத்தகை விவசாயிகளுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்தது.

இருப்பினும், முசாரா இயக்கம் தலித்துகளை சேர்க்கவில்லை.

கடந்த 1961 ஆம் ஆண்டில், பஞ்சாப் கிராம பொது நிலங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தை, அரசு நிறைவேற்றியது. இது, விவசாய கிராம பொது நிலத்தில் 33% ஐ, எஸ்.சி.க்களுக்கு ஒதுக்கியது. அவர்கள் ஏலத்தின் மூலம் ஆண்டு குத்தகைக்கு அதை பெறலாம் (சட்டத்தின் கீழ் விதிகள் 1964 இல் வடிவமைக்கப்பட்டன). இருப்பினும், இதை செயல்படுத்தல் அலட்சியம் இருந்து வந்தது.

"உயர் சாதி விவசாயிகள், ஒதுக்கீடு பெற்ற பிரிவை சேர்ந்த பினாமி பெயருக்கு நிதியுதவி செய்வதன் மூலம், இந்த நிலத்தை தொடர்ந்து தங்கள் வசம் வைத்து பயிரிட்டனர். சமூகத்திற்கான இந்த உரிமையை பறித்தனர்," என்று சண்டிகரின் ஊரக மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் - சிஆர்ஆர்ஐடி (CRRID) சுச்சா சிங் கில் கூறினார். "இந்த ஏற்பாட்டிற்கு சவால் விடும் வகையில் தலித்துகளும் குரல் கொடுக்கவில்லை" என்றார் அவர்.

"நிலம் எங்களுடையது என்று எங்களுக்கு தெரிந்திருந்தாலும், அதை நாங்கள் கோர முடியவில்லை" என்று சங்ரூர் மாவட்டத்தின் நியாமத்பூர் கிராமத்தில் வசிக்கும் அவ்தார் சிங், 65, தெரிவித்தார். இவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை பெரிய விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்தே கழிக்கிறார். "எங்களில் பலர் கல்வியறிவு இல்லாதவர்கள்; ஒழுங்கமைக்கப்படாதவர்கள். எங்களின் ஒரே வருவாய் ஆதாரம், உணவு, பயிர்களை தரும் நில உரிமையாளர்களுக்கு எதிராக செயல்பட அஞ்சி வந்தோம்" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம் நியாமத்பூரை சேர்ந்த அவ்தார் சிங், கிராம பொதுநிலத்தில் இருந்து பசும் தீவனம் எடுத்து வந்த வண்டியுடன் நிற்கிறார். அவ்தார் சிங் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெரிய விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்தே கழித்துவிட்டார். இன்று அவர் நிலமற்ற பிற கிராமத்தவர்களுடன் இணைந்து, பொதுவான நிலத்தை கூட்டாக உழவு செய்கிறார்.

கடந்த 2009இல், அமைப்புசாரா இடதுசாரி இயக்கமான ஜமீன் பிரப்தி சங்கர்ஷ் குழு- இசட்.பி.எஸ்.சி. (ZPSC அல்லது ‘நில உரிமை போராட்டக்குழு’) கிராம அளவிலான குழுக்கள் மூலம் தலித்துகளை அணிதிரட்ட முடிவு செய்தது. ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து தலித்துகளும் ஒதுக்கப்பட்ட பொதுவான நிலங்களை கூட்டு ஏலம் மற்றும் சாகுபடி செய்வதற்கு இசட்.பி.எஸ்.சி. விரும்புகிறது.

"படித்த இளைஞர்களும் பெண்களும் தற்போதைய நிலை தொடரும் சவாலை எதிர்கொள்ள மிகவும் தயாராக இருந்தனர்" என்று இசட்.பி.எஸ்.சி. சங்ரூர் மாவட்ட செயலாளர் குர்முக் சிங் கூறினார். "ஒரு நிலத்தை சொந்தமாக வைத்திருப்பது கவு ரவத்தை தரும் மற்றும் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்" என்றார்.

எவ்வாறாயினும், தலித் உறுதிப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நிகழ, பல தசாப்தங்களாக பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ரோங்கி ராம் கூறினார். சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கின;பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் பிறந்த பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் ஆகியோரின் பணிகள் மூலமாகவும், ஆத் தர்ம் (ரவிதாசியா) வாயிலாக மத ஒருங்கிணைப்பு மூலமாகவும், இந்த அரசியல் உணர்வு வெளிப்பட்டது. மிக சமீப காலத்தில், தலித்துகள் கூடிவந்த இந்த அரசியல்-மத பிரிவுகளில், தேரா சச்சா சவுதாவும், மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் சக்திவாய்ந்ததாக இருந்தது. இத்தகைய தேராக்கள், தலித் நில உரிமைகளுக்கான ஒரு இயக்கத்தை ஏற்பாடு செய்யும் நம்பிக்கையை அளித்துள்ளன என்று, ரோங்கி ராம் கூறினார்.

"பசுமைப் புரட்சி, விவசாய இயந்திரமயமாக்கல் போன்றவை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. இதனால், தலித்துகள் வேலைக்காக அருகேயுள்ள நகரங்களுக்குச் செல்லத் தொடங்கினர்,” என்று பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழக முன்னாள் பொருளாதார பேராசிரியர் கியான் சிங் கூறினார். இருப்பினும், விவசாய வேலையில் ஈடுபடுவோர், அதை சார்ந்திருப்பது நீடிக்கிறது. விவசாயத் தொழிலாளர்களில் சுமார் 68% பேர், பெரிய விவசாயிகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுகிறார்கள் என்று, 'கிராமப்புற பஞ்சாபில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் கடன்' என்ற 2017 ஆய்வு தெரிவிக்கிறது.

நிலத்தில் இரத்தம்

இந்தியா முழுவதும் வாக்குறுதி தரப்பட்ட நிலங்களுக்கான உரிமை கோர, தலித்துகள் இதேபோன்ற போர்களை நடத்தி வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 7, 2019 கட்டுரை தெரிவித்தது. 13 இந்திய மாநிலங்களில், 92,000 தலித்துகள் தொடர்புடைய, நிலம் கோருவது தொடர்பான 31 மோதல்கள் நடந்ததாக, இந்தியாவில் நிலமோதல் குறித்த தரவுகள், வரைபடம் சேகரிக்கும் ஆராய்ச்சியாளர்களின் வலைப்பின்னல் அமைப்பான, லேண்ட் கான்ஃப்ளிக் வாட்ச் கூறுகிறது.

நில உரிமைகளை வலியுறுத்துவது பெரும்பாலும் பஞ்சாபில் கடுமையான வன்முறைக்கு வழிவகுக்கிறது, அங்கு பிரபலமான கலாச்சாரம் நிலத்தை கையகப்படுத்த துப்பாக்கி குண்டுகளை கவர்ந்திழுக்கிறது.

ஜாட் சீக்கிய விவசாயிகள் பெரும்பாலும் பினாமிகளை பயன்படுத்துவதால், கடந்த 10 ஆண்டுகளில் பல கிராமங்களில் நில குத்தகை ஏலத்தில் தலித்துகள் பயன் அடையாத அளவுக்கு பினாமிகள் சீர்குலைத்து, அச்சுறுத்துகின்றனர். செல்வாக்குள்ள விவசாயிகளை ஒதுக்கப்பட்ட நிலங்களை அறுவடை செய்வதைத் தடுக்கின்றனர்.

கடந்த 2016 அக்டோபர் 5இல், ஜலூர் கிராமத்தில் பெரிய விவசாயிகள், அவர்களது ஆதரவாளர்கள் குழு நடத்திய மிருகத்தனமான தாக்குதலில், 72 வயது குர்தேவ் கவுர் இறந்தார்; பல எதிர்ப்பாளர்கள் படுகாயமடைந்தனர். இதுபோன்ற செயல்கள் பெரும்பாலும் வன்முறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவில் மிக அதிகளவில் பொதுநிலம் கொண்ட கிராமமான பல்லத் கலான் - இந்தியா ஸ்பெண்ட் மதிப்பாய்வு செய்த நிலப்பதிவுகளின்படி 121 ஏக்கர் - கிராமத்திய மோதல்களின் சுழற்சி தாங்கியது. ஒரு சில உயர் சாதி விவசாயிகள் நீண்ட காலமாக பொதுவான நிலத்தை பயிரிட்டு வந்தனர். “2014இல் நில உரிமையாளர்களின் பினாமிகள் மீண்டும், தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திய அதிக விலைக்கு ஏலம் எடுத்தனர். நாங்கள் ஏலத்தை நிறுத்த முயன்றோம்; ஆனால் காவல் துறையினர் எங்களை லத்தி சார்ஜ் செய்து, அடித்து வேன்களில் எங்களை ஏற்றினர், ”என்று 63 வயதான ஹார்மர் கவுர், தனது நினைவுகளை பகிர்ந்தார். "பெண்கள் உடனே விடுவிக்கப்பட்ட போதிலும், ஆண்களில் 41 பேர்,59 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டோம்" என்றார்.

பெண்களும் கோழைகளாக இருக்கவில்லை. ஜாட் விவசாயி ஒருவரின் பினாமிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை பிடுங்கி வீசினர். ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தை மீண்டும் குத்தகை ஏலம் விட வேண்டுமென, மாநில நிர்வாகத்தையும் கிராம பஞ்சாயத்திற்கும் நெருக்கடி தந்தனர். பல்லத கலானில் கூட்டாக தலித்துகள் குத்தகைக்கு வென்றது இதுவே முதல் முறை. தற்போதைய அமைதிக்கு முன்பு, இரண்டு ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்கள், கைதுகள் அப்பகுதியை சுழன்றடித்து கொண்டிருந்தன.

"இது, புயலும் வேதனையும் நிறைந்த பயணம் தான். ஆனால் மிகவும் பலனளிக்கும். ஆதரவை பெறுவதற்கும் இயக்கத்தை பரப்புவதற்கும் நாங்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்வோம்,” என்று 48 வயதான மன்பிரீத் கவுர் கூறினார். போராட்டத்தின் போது, இசட்.பி.எஸ்.சி. இன் போர்களமாகவே மன்பிரீத்தின் குறுகிய அறை கொண்ட வீடு மாறியிருந்தது. "எங்கள் கிராமத்தில் பல சிறு விவசாயிகளிடமிருந்து எங்களுக்கு கணிசமான ஆதரவு கிடைத்தது. பொதுநிலத்தை கவனிக்கும் ஒருசில பெரிய நில உரிமையாளர்கள் மட்டுமே எங்களுக்கு எதிராக இருந்தனர்” என்றார் அவர்.

சங்ரூரின் அப்போதைய மாவட்ட மேம்பாட்டு ஊராட்சி அதிகாரி ஜோகிந்தர் குமார், இச்சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, தனது பணிக் காலத்தில் இந்த விவகாரம் இணக்கமாக தீர்க்கப்பட்டதாக, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். இருப்பினும், பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு மூத்த அதிகாரி, இசட்.பி.எஸ்.சி. வழிமுறைகள் கட்டாயப்படுத்தியது என்றார். "முன்னர் நடைபெற்ற திறந்தமுறை ஏலம், வெளிப்படையானது. ஆனால் சில தலைவர்கள் இந்த முறையை எதிர்த்து போராட மக்களைத் தூண்டினர்," என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். "ஒரு சிலரே புதிய முறையால் பயன் அடைந்துள்ளனர்" என்றார் அவர்.

சி.ஆர்.ஆர்.ஐ.டி-யின் கில், இதை ஏற்கவில்லை: "இந்த இயக்கம் நிச்சயமாக தலித் குடும்பங்களுக்கான உணவு மற்றும் பயிர் அணுகலை மேம்படுத்தியுள்ளதுடன், பெண்களின் சுயமரியாதையை மேம்படுத்துகிறது" என்றார்.

இசட்.பி.எஸ்.சி. அமைப்பானது விவசாயிகள் - விவசாய தொழிலாளர்கள் இடையே பகைமையை உருவாக்கியுள்ளது என்று பஞ்சாபில் ஒரு முக்கிய விவசாய தொழிற்சங்கத் தலைவர் கூறினார். "இந்த இயக்கம், முன்னாள் நக்சலைட்டுகள் சிலரால் வழிநடத்தப்படுகிறது; அவர்கள் சமுதாயத்தை பிளவுபடுத்துவதன் மூலம், ஒருவித புரட்சியை இன்னும் எதிர்பார்க்கிறார்கள்," என்று அவர் கூறினார். "தலித்துகளுக்கு நிபுணத்துவம் இல்லாததால் நிலம் பெறும் வரை போராட முடியாது என்பதை வரலாறு காட்டுகிறது" என்றார்.

இதுபோன்ற கருத்துக்கள், 1961ஆம் ஆண்டின் பஞ்சாப் கிராம பொது நிலங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தை விட பழமையானவை; மேலும், 33% பொதுவான நிலங்களை தலித்துகளுக்கு ஒதுக்குவது குறித்து மாநில சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களின் போது குரல் கொடுத்ததாக, பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் உதவி பேராசிரியர் ஜதிந்தர் சிங் தெரிவித்தார்.

"தலித்துகள் விவசாயத்திற்கு ஏற்றவர்களில்லை; இது மாநிலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்கும் என்று கூறி, பல சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டத்தை எதிர்த்தனர்" என்று சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்த சிந்தனை அவர்கள் பல தலைமுறைகளாக விவசாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த கால ஒடுக்குமுறைகளின் காரணமாக நம்பிக்கை இழந்தனர்.இப்போது, அவர்கள் அதைப் பெற்றுள்ளனர்" என்றார்.

அவர்கள் அறுவடை செய்வர்

கடந்த 2014 ஆம் ஆண்டில், பல்லத் கலானின் ஒவ்வொரு தலித் குடும்பமும், குத்தகை பணத்திற்காக ரூ.11,000 அளித்திருக்கிறது. இன்று, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ .30,000 சம்பாதிக்கின்றன, இதில் ஐந்து குவிண்டால் கோதுமை தானியங்கள் உட்பட, கிராமவாசிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் ஏழு குவிண்டால் உலர் தீவனம் ஒதுக்கப்படுகிறது. 121 ஏக்கர் சமுதாய நிலத்தில் இருந்து மீதமுள்ள பணம் உழைப்பு மற்றும் பிற உள்ளீட்டு செலவுகளைத் தவிர ஏக்கருக்கு ரூ. 21,500 குத்தகைக்கு செலுத்த செலவிடப்படுகிறது.

ஜாட் இனத்தவருக்கு சொந்தமான விளை நிலங்களில் பசும் தீவனத்தை எடுக்க, பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நேரத்தை நினைவு கூறும் ஹார்மர் கவுர், பொதுநிலம் இப்போது தலித்துகளிடம் இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார். "சில நேரங்களில் நில உரிமையாளர் எங்களை துரத்துவார் அல்லது அநாகரீகமான கருத்துக்களை கூறுவார்," என்று அவர் தெரிவித்தார்.

பாலியல் சுரண்டல் என்பது பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். இந்த பெண்களில் பெரும்பாலோர் தலித்துகள் என்று, 'சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் பஞ்சாபில் கிராமப்புற பெண்கள் தொழிலாளர்களின் அரசியல் பங்கேற்பு’ என்ற சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. "70% க்கும் அதிகமானோர், பாலியல் சுரண்டல் தொடர்பான அனுபவங்களை கேட்டபோது அமைதியாகவே இருந்தனர். இதிலிருந்து யதார்த்தத்தை ஊகிக்க முடியும் ”என்று பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியரும், முன்னணி ஆராய்ச்சியாளர் கியான் சிங் கூறினார். "பிரச்சினை தொடர்பாக பேசினால் களங்கம் ஏற்படலாம் என்று கருதி, பலரும் அமைதியாக இருக்கின்றனர்" என்றார் அவர்.

இயக்கத்திற்குப் பிறகு விஷயங்கள் மாறிவிட்டன, ஹார்மர் கவுர் கூறினார்: “இப்போது, பாதுகாப்பைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் எங்கள் சொந்த சமுதாய நிலத்தில் தினசரி கூலிக்கு வேலை செய்யலாம், மேலும் அங்கிருந்து பச்சை தீவனத்தையும் வாங்கலாம்” என்றார்.

நில உரிமைகளின் எதிர்காலம்

அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், நிலமற்றவர்கள் இப்போது அரசியல் அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றனர். இசட்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 30 பேர், 2018 டிசம்பரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர். டோல்வால் கிராமத்தில், அவர்கள் பஞ்சாயத்து தலைவர் (சர்பஞ்ச்) மற்றும் இரண்டு உறுப்பினர்களின் இடத்தை வென்றனர்; இதன் மூலம், இந்த இயக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

கடந்த 2019 ஜூன் 6இல், டோல்வால் கிராம சபையானது, தலித் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம பொது நிலங்களுக்கு 33 ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், நிலம் குத்தகை ஏல முயற்சிகளை ஒரு தரப்பினர் அடுத்தடுத்து சீர்குலைத்தனர்; இதன் விளைவான மோதலில் ஜூலை 1 ம் தேதி15 பேர் காயமடைந்தனர்.

"இத்தகைய 33 ஆண்டு குத்தகையின் நோக்கம், ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தவிர்ப்பதுதான். இது, எங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று கிராமத்தின் பெண் தலைவர்களில் ஒருவரான ஹர்வந்த் கவுர் கூறினார். "நீண்ட கால குத்தகை நிலத்தை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும்" என்றார் அவர்.

இந்த 33 ஆண்டு குத்தகை என்பது சர்ச்சைக்குரியது.

"பொது நிலங்களை நீண்டகால குத்தகைக்கு என்பது அரசு அல்லது தனியார் நிறுவனங்களால், மேம்பாட்டு திட்டங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது," என்று மலேர்கோட்லா தொகுதி மேம்பாட்டு அதிகாரி அமன்தீப் கவுர் கூறினார்; விவசாயத்திற்கு 33 ஆண்டு குத்தகை வழங்க முடியாது என்றார் அவர்.

"இசட்.பி.எஸ்.சி. அமைப்புடன் இணைந்த தலித்துகள் குறைந்த கட்டணத்தில் நீண்ட கால குத்தகை பெற முயல்கின்றனர்; இதனால் கிராம பஞ்சாயத்துகள் வருவாய் இழப்பை சந்திக்கும்" என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பிர்சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "33 ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கான ஏற்பாடு இல்லாதபோது, இதை எவ்வாறு செய்ய முடியும்? மறுக்கும்போது, அவர்கள் வன்முறையை நாடுகிறார்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்த இசட்.பி.எஸ்.சி. மாவட்ட செயலாளர் குர்முக் சிங் கேட்டார்: “நீண்ட கால குத்தகைக்கு மாட்டு கொட்டகைகளை வழங்க முடியும் எனில், தலித்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை 33 ஆண்டுகளாக பெறமுடியாது என்பதற்கான காரணம் எதுவும் இல்லை. மாடுகளை விட அவர்கள் மோசமானவர்களா?” என்றார்.

பலத் கலானின் பொது நிலத்தில், 33 வருட குத்தகை என்ற இலக்கை தலித்துகள் வைத்துள்ளனர்; ஆனால், இப்பகுதியில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தொழில்துறை பூங்கா, தங்களது பொது நிலங்களை கைப்பற்றும் என்று, அவர்கள் அஞ்சுகின்றனர். "இந்த திட்டத்திற்காக, கிராம பொது நிலத்தில் 40 ஹெக்டேர் கோர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு நாங்கள் ஒருபோதும் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். இதற்கு பஞ்சாயத்தின் ஒப்புதல் தேவை" என்று மன்பிரீத் கவுர் கூறினார்.

இந்த இயக்கம் அடைய நிறைய இலக்குகள் உள்ளன என இசட்.பி.எஸ்.சி குர்முக் சிங் கூறினார். "பொதுநிலத்தை வைத்திருப்பது தலித்துகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது; ஆனால் அதுவே அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்க முடியாது," என்று அவர் கூறினார். "நில மாற்றம் உச்சவரம்பு சட்டத்தை முறையாக அமல்படுத்துதல் மற்றும் தனியார் நிலங்களை மறுபகிர்வு செய்வதன் மூலமே, உண்மையான மாற்றம் வரும். அப்போதுதான் நிலமற்றவர்கள் சம அந்தஸ்து பெறுவார்கள்” என்றார் அவர்.

பஞ்சாப் நில சீர்திருத்தச் சட்டம் -1972இன் கீழ், ஒரு குடும்பமானது (கணவன், மனைவி மற்றும் குழந்தைகள்) நல்ல நீர்ப்பாசன வசதிகளைக் கொண்ட 17.5 ஏக்கருக்கும் அதிகமான வளமான விவசாய நிலங்களை சொந்தமாக வைத்திருக்க முடியாது. இருப்பினும், நிலம் தரிசாகவும், நீர்ப்பாசன வசதி இல்லாமலும் இருந்தால் ஒரு குடும்பம் 32 ஏக்கர் வரை வைத்திருக்க முடியும்.

பரம்ஜித் கவுர் போன்றோருக்கு, போராட்டம் என்பது கண்ணியத்துக்கானது, தங்களது லாபத்திற்கானது அல்ல.

(மோத்கில், சண்டிகரை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

இந்த கட்டுரையானது, NCore Impact Journalism Grant 2019 ஆதரவுடன் எழுதப்பட்டது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.