பெங்களூரு மற்றும் புதுடெல்லி: டெல்லியின் மங்கோல்பூரியில் வசிக்கும் வீணா*, 42, தனது கணவரை கொலை செய்த வழக்கிற்காக விசாரணையில் உள்ளார், தற்போது திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 2018ம் ஆண்டில் தனது தாய் சிறையில் அடைக்கப்பட்டபோது ஒன்பது மாதக்குழந்தையாக இருந்த வீணா, தற்போது கார் உதிரி பாகங்கள் சந்தையில் பணிபுரிந்து தனக்கும் தனது மகளுக்கும் மாதம் ரூ.6,000 சம்பாதிக்கிறார். திரும்பி வர வேறு யாரும் இல்லாததால், குழந்தையை தன்னுடன் சிறையில் வைத்தாள். "திகார் சிறைக்குள் இருக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பானவை, ஆனால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு வழங்கப்பட வேண்டும்" என்று வீணா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஆஷா*, 34 வயதான ரேஷன் கடை தொழிலாளி, டெல்லியின் ரோஹினியில் தங்கியுள்ளார். தனது வளர்ப்புக் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், ஹரியானாவில் தேசிய தலைநகர் பிராந்தியத்திற்குள் (NCR - என்.சி.ஆர்) உள்ள குருகிராம் மாவட்ட சிறையில், ஒன்பது ஆண்டு சிறைத்தண்டனை 2018 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். ஆஷா தனது மகளை உத்தரபிரதேசத்தில் என்.சி.ஆருக்குள் இருக்கும் நொய்டாவில் உள்ள மிஷனரி பள்ளியில் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கிறார். அவரது மகள் 2009ல் சிறையில் பிறந்தபோது, ​​சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில், “குருகிராம் சிறைக்குள் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை” என்று ஆஷா கூறினார்.

அவர்களது அனுபவங்கள் இந்தியாவின் 1,543 பெண்கள் கைதிகளின் (நாடு முழுவதும் உள்ள 19,913 பெண் கைதிகளில் 8%) குழந்தைகளின் (மொத்தத்தில் 1,779) 2019 ஆம் ஆண்டில் அவர்களுடன் சிறையில் வாழ்ந்தவர்களை பிரதிபலிக்கின்றன என்று, தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் பெண்கள் 4% மட்டுமே உள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட தாய்மார்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான உணவைப் பெற போராடி வருகின்றனர். அக்குழந்தைகளுக்கு வெளியே ஒரு பொருத்தமான ஏற்பாட்டை செய்ய முடியாவிட்டால், அதன் ஆறு வயது வரை சிறையில் தனது தாயுடன் தங்கலாம். டெல்லியின் திஹார் போன்ற மத்திய சிறைச்சாலை ஒரு ‘மாதிரி’ சிறை என்று விவரிக்கப்பட்டு, பெண்களுக்கு தனி சிறைச்சாலையைக் கொண்டுள்ளது, இந்தியாவின் பெண் கைதிகள் பெரும்பாலும் ஆண் கைதிகள் உள்ள அதே சிறைக்குள் ஒரு தனி பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் பெரும்பாலும் "ஆண் கைதிகளின் பிரச்சினைகளை நிர்வகிக்கும் கண்ணோட்டத்தில்" வடிவமைக்கப்பட்டுள்ளனதாக, வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, மூடப்பட்ட சிறைச்சாலை சூழலில் வாழ்ந்த அவர்களின் குழந்தைகளுக்கு கற்றல் அணுகல் அரிதாகவே உள்ளது, பெரும்பாலும் சமூக திறன்கள் இல்லை. ஆறு வயதிற்கு பிறகு, குழந்தைகள் தங்கள் தாய்மார்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, தாய்மார்கள் விடுவிக்கப்படும் வரை அல்லது அவர்கள் வாழ்வாதாரத்திற்கு சம்பாதிக்கும் திறன் பெறும் வரை, அரசு இல்லங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

பெண்கள் கைதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காக 2006 ஆம் ஆண்டில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் (SC) தீர்ப்பளித்த விதிகள், இந்த குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறையாவது சிறையில் இருக்கும் தங்களது தாயை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன, ஆனால் இது அரிதாகவே செயல்படுத்தப்படுகிறது .

சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து நடைமுறைகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் மாதிரி சிறை கையேடு-2016 (MPM 2016) இல் வெளியிடப்பட்டது, மற்றும் 2011 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாங்காக் விதி நெறிமுறைகள், குழந்தைகளுடன் உள்ள பெண்கள் கைதிகளின் நலனுக்கான நடைமுறைகளை பரிந்துரைக்கிறது. இவை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்தும் அவர்களின் நலனில் "சாதகமான தாக்கத்தை" ஏற்படுத்தியுள்ளன, ஆனால் "செயல்படுத்தலுக்கும் கொள்கைக்கும் இடையில் ஒரு இடைவெளி" உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட அமைப்பில் குழந்தைகள்

உலகம் முழுவதும் சுமார் 19,000 குழந்தைகள் தங்களது முதன்மை பராமரிப்பாளருடன் (பொதுவாக தாய்மார்களுடன்) சிறையில் வாழ்வதாக, அரசுசாரா சர்வதேச குளோபல் பிரிசன் டிரெண்ட்ஸ் (INGO - ஐ.என்.ஜி.ஓ) 2020, பேனல் ரிபார்ம்ஸ் இண்டர்நேஷனல் என்ற அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில், 2019 வரையிலான ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பெண் கைதிகளில் சராசரியாக 1,586 - அல்லது 9% - தங்களது குழந்தையுடன் சிறையில் உள்ளனர், இந்த தாய்மார்களில் நான்கில் மூன்று பேர் என்.டி.ஆர்.பி தரவு பற்றிய எங்கள் பகுப்பாய்வின்படி (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்) விசாரணைக் கைதிகள் ஆவர். 2019 ஆம் ஆண்டில், 1,543 பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன் சிறையில் இருந்தனர். 15 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு 31 சிறைகள் உள்ளன, அதே நேரத்தில் 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கென தனி சிறைச்சாலைகள் இல்லை. 2019 ஆம் ஆண்டில் அனைத்து விசாரணை பெண் கைதிகளில் 10 பேரில் ஒருவர் குழந்தையுடன் இருந்தார். இந்திய சிறைகளில் உள்ள 4,78,600 பேரில் 10 பேரில் ஏழு பேர் விசாரணையில் உள்ளனர் என்று 2020 செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. (காவல் மற்றும் நீதி சீர்திருத்தங்கள் குறித்த எங்கள் கட்டுரைகளை இங்கே படியுங்கள்).

பெண்கள் கைதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் “சிறைச்சாலைகள் பாரம்பரியமாக ஆண்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதில் இருந்து உருவாகின்றன” என்று, ஐ.என்.ஜி.ஓ காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் (CHRI - சி.எச்.ஆர்.ஐ) டெல்லி அலுவலகத்தில் சிறை சீர்திருத்த திட்டத்தின் திட்ட அதிகாரி அஞ்சு அண்ணா ஜான், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

"[பெண்கள் கைதிகளின் நலனுக்காக] விதிகளை அமல்படுத்துவது பெரும்பாலும் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது மற்றும் சிறையில் வசிக்கும் போது பெண்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்" என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (WCD) அமைச்சகத்தின் 2018 இந்திய சிறைச்சாலைகளில் பெண்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறை நிர்வாகங்கள் "தங்களது பராமரிப்பில் வாழும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும், மேலும் இந்த குழந்தைகள் தங்களை குற்றவாளிகள் போல உணரக்கூடாது" என்றும் அது கூறியது.

பெண்கள் கைதிகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் குறைந்தளவே அதற்கான முதலீட்டை பெறுகிறார்கள், இது அவர்களுக்கு தனி உள்கட்டமைப்பை உருவாக்குவது பொருளாதார ரீதியாக இயலாத நிலைக்கு தள்ளுவதாக, மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் (TISS - டிஐஎஸ்எஸ்) குற்றவியல் மற்றும் நீதி மையத்தின் பேராசிரியரும், மகாராஷ்டிராவில் குற்றவியல் நீதி தொடர்பான ஒரு கள நடவடிக்கை அமைப்பான பிரயாஸ் திட்ட இயக்குநருமான விஜய் ராகவன் கூறுகிறார். "சிறையில் உள்ள குழந்தைகளிடமும் இதுவே உள்ளது, ஏனென்றால் அவர்களின் எண்ணிக்கை பொதுவாக குறைவாகவே உள்ளது" என்று ராகவன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பெண் கைதிகளால் சூழப்பட்ட காவலில் உள்ள வாழ்க்கை “ஆறு வயது மற்றும் அதற்குக் குறைவான எந்தவொரு குழந்தைக்கும் ஒருபோதும் இயல்பாக இருக்க முடியாது” என்று, பெங்களூருவை சேர்ந்த சிவில் சமூக அமைப்பான தக்‌ஷ் இணைந்து வெளியிடப்பட்ட ‘நீதி விரக்தி: இந்திய நீதிமன்றங்களில் தாமதங்களின் முறையான தாக்கம்’ என்ற இந்திய நீதி அமைப்பு குறித்த கட்டுரைகளின் தொகுப்பில் ராகவன் எழுதினார். "பல குழந்தைகள் சிறையில் பிறக்கிறார்கள், அவர்கள் சில நேரங்களில் அல்லது ஆறு வயது வரை சாதாரண குழந்தைப்பருவத்தை அனுபவிப்பதில்லை " என்று ராகவன் எழுதினார். பெரும்பாலும் அவர்கள் "எதிர்மறை மற்றும் காவலில் இருக்கும் சூழலில் நீண்ட காலம் தங்கியிருப்பதால், அவர்களின் சமூகமயமாக்கல் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது" என்று கட்டுரை மேலும் கூறியுள்ளது.

ஊட்டச்சத்து விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை

பெண்கள் கைதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டுதல்கள் (படம் 1 ஐ காண்க) பிறப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு மற்றும் பொருத்தமான உணவு முறைகளையும் உள்ளடக்கியது.

"குழந்தைகளுக்கு இரவு உணவாக சிறப்பு உணவு எதுவும் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு வழங்கப்படும் அதே உணவை நாங்கள் அவர்களுக்கு அளிக்கிறோம்,” என்று இந்தியா ஸ்பெண்டிடம் வீணா தெரிவித்தார். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்யேக உணவை வழங்க, மாதிரி சிறை கையேடு-2016 பரிந்துரைத்தாலும் (படம் 2 ஐ காண்க) குழந்தைகளுக்கும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கும், அனைத்து கைதிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான உணவே வழங்கப்படுகிறது.

சிறைப்பணிகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்த கருத்துப்பட்டறைகள் போன்ற பணிகளில் வீணா ஈடுபட்டிருந்தபோது, அவரது மகள் ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கான திகாரின் பகல் நேர (காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை) கூடத்தில் தங்க வைக்கப்படுவார். சிறு பிள்ளைகள், வேலை செய்யும் போதுகூட தாய்மார்களுடன் இருப்பார்கள்.

திஹார் கைதிகளுக்கு காலை உணவு குறிப்பிட்ட அளவிலேயே வழங்கப்படும். "மதிய மற்றும் இரவு உணவிற்கு, எவ்வளவு உணவையும் கேட்கலாம், ஆனால் ஒரேயொரு முறை மட்டுமே" என்று வீணா கூறினார். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் வழங்கப்பட்டது, ஆனால் காப்பகம் செல்பவர்களுக்கு அல்ல. தாய் போதுமான அளவு பாலூட்டவில்லை என்றால் அவர்களுக்கு, சிறப்பு கோரிக்கையின் பேரில் மட்டுமே கூடுதல் பால் வழங்கப்பட்டது என்று வீணா கூறினார். "நான் போதுமான அளவு பாலூட்டாததால் என் மகள் இரவில் பசியுடன் இருக்கும் சில சமயங்களில் எனக்கு கொஞ்சம் பால் கொடுக்குமாறு சிறை அதிகாரிகளிடம் நான் கோர வேண்டியிருக்கும். ஆனால் எனக்கு அரை கிளாஸ் பால் மட்டுமே வழங்கப்பட்டது, ”என்றார் வீணா.

டெல்லியின் சிறைகளில் தற்போது 21 குழந்தைகள் உள்ளனர் என்று டெல்லியின் சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் (டிஜி) சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார், குழந்தைகளுக்கு பால், பருப்பு மற்றும் கிச்சடி கொண்ட பொருத்தமான உணவு வழங்கப்படுவதாக அவர் என்றார். "பொதுவாக, மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் தனிப்பட்ட குழந்தையின் தேவைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள், அதன்படி குழந்தையின் ஆறுதலுக்காக ஒரு உணவு வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

குருகிராம் சிறையில் ஆஷாவின் அனுபவம் வேறுபட்டது. காலை 7 மணிக்கு காலை உணவும், காலை 8 முதல் 9 மணி வரை மதிய உணவும் இருந்தது, எனவே கைதிகள் பசியுடன் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவை, அந்த நேரத்திற்காக பாதுகாக்க வேண்டியிருந்தது. "கர்ப்ப காலத்தில், வழக்கமான உணவுடன் கூடுதலாக எனக்கு ஒரு வாழைப்பழம் வழங்கப்பட்டது," என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். பிரசவத்திற்குப் பிறகு, தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் தினமும் 1.25 லிட்டர் பால் கூடுதலாக வழங்கப்படுகிறது என்று ஆஷா கூறினார். "ஆனால் பால் கூட ஒழுங்காக காய்ச்சி வழங்கப்படவில்லை, பெரும்பாலும், அது மாலைக்குள் பிரிந்து கெட்டுவிடும்" என்றார்.

இது குறித்து அறிய, ஹரியானா சிறைத்துறை டி.ஜி.யை இந்தியா ஸ்பெண்ட் அணுகியுள்ளது. எங்களுக்கு பதில் கிடைத்தால், இக்கட்டுரையை புதிப்பிப்போம்.

"மாதிரி சிறை கையேடு சில நடைமுறைகளை அமைத்துள்ளது, ஆனால் கொள்கைக்கும் செயல்படுத்தலுக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது," என்று, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளின் குழந்தைகளுடன் பணிபுரியும், ஏழு சிறைகளில் குழுக்களை இயக்கும் இந்தியா விஷன் பவுண்டேஷன் (IVF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயக்குனர் மோனிகா தவான், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஹரியானா சிறைகளில் உள்ள குழந்தைகளின் சிறப்பு உணவுத் தேவைகள் பொதுவாகக் காணப்பட்டன என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் (CHRI) ஜான் கூறினார். "இருப்பினும், ஹரியானாவில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தில், கைதிகள் கேட்டால் முட்டை வழங்குவது உள்ளிட்ட சிறப்பு உணவு கிடைக்கும் என்று சிறை ஊழியர்கள் கூறியிருந்தாலும், பெண்கள் கைதிகள் இந்த வசதி பற்றி அறிந்திருக்கவில்லை" என்றார்.

குருக்ராம் சிறையில் இந்தியா விஷன் பவுண்டேஷன் (IVF) வேலை செய்யத் தொடங்கிய 2012ம் ஆண்டுதான் கைதிகளின் நிலைமை மேம்பட்டது என்று, இந்தியா ஸ்பெண்டிடம் ஆஷா தெரிவித்தார். "அதன் பிறகு, எங்கள் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவை சமைக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் எங்களுக்காக பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்தனர், இது எனக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் உதவியது” என்றார். ஆஷாவின் மகள் ஐந்து வயது வரை சிறையில் வசித்தாள், பின்னர் காப்பக பள்ளியில் அனுமதிக்கப்பட்டாள்.

கற்றல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை

மாதிரி சிறை கையேடு-2016 குழந்தைகளுடன் பெண் கைதிகளுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெறும் வகையில் ஒரு காப்பக வசதி வழங்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் கைதிகளுக்கு தினமும் குறைந்தது ஒரு மணிநேரம் கல்வி புகட்டும் நடவடிக்கையாக கட்டாயமாக்குகிறது, மேலும் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இருக்க வேண்டுமென்று, சி.ஆர்.ஐ.யின் ஜான் கூறினார். "இருப்பினும், இவை மிகக் குறைவானவையே ஆகும்," என்றார் அவர். பெரும்பாலான சிறைகளில் செயல்படும் குழு கூட இல்லை.

சிறையில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் வெளியில் உலகுக்குதெரிவதில்லை என்று இந்தியா விஷன் பவுண்டேஷனின் தவான் கூறினார். அவர்களின் சமூகமயமாக்கல் பெரும்பாலும் பெண்கள் கைதிகளுக்கு மட்டுமே இருந்ததால், அவர்கள் மோசமான சமூக திறன்களை வளர்த்துக் கொள்வார்கள். "அவர்கள் சிறையில் பிறந்தால் பெரும்பாலும் அவர்கள் ஆண்களுடன் அறிமுகம் கொள்ளவில்லை" என்று தவான் விளக்கினார்.

மகாராஷ்டிராவில், பிரயாஸின் முயற்சியால், எட்டு சிறைகளில் பால்வாடிகள் (அங்கன்வாடிகள் அல்லது காப்பகம் ) அமைக்கப்பட்டுள்ளன. "ஒரு பால்வாடியால் சேவை செய்யக்கூடிய குறைந்தபட்ச குழந்தைகளின் எண்ணிக்கையை எட்ட, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆனது" என்று ராகவன் கூறினார்.

சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு, இந்தியா விஷன் பவுண்டேஷன் கல்வி கற்பிக்கிறது. மேலும் டெல்லியைச் சேர்ந்த என்.ஜி.ஓ மொபைல் க்ரீச்ஸுடன் சேர்ந்து, 0-3 மற்றும் 3-6 வயதுடைய குழந்தைகளுக்கான கற்றல் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது, ஏனெனில் “வழக்கமானவை வளர்க்கப்படும் குழந்தைகளுக்கான பாடத்திட்டம் சிறையில் உள்ள குழந்தைகளுக்கு பொருந்தாது”, என்றார் தவான். இந்தியா விஷன் பவுண்டேஷனானது, கைதிகளுக்கு காப்பக தொழிலாளர்களாக மாறுவதற்கும் பாடத்திட்டங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பயிற்சி அளிக்கிறது.

குழந்தைகள் அரிதாகவே வெளியே வருகிறார்கள்

பராமரிப்பாளர்கள் இல்லாத நிலையில், வளரிளம் பருவ குழந்தைகள் 18 வயதாகும் வரை அரசினர் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வைக்கப்படுகிறார்கள், இந்த செயல்பாட்டினால் உடன்பிறப்புகள் பிரிந்து போகலாம் என்று, பிரியாஸ்-ன் Children of Women Prisoners: The Invisible Trial report என்ற 2018 அறிக்கை தெரிவிக்கிறது. சில குழந்தைகள் குடும்பம் சந்திக்கும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள், அல்லது இளைய உடன்பிறப்புகளை கவனித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் தாய்மார்களுடனான தொடர்பையும் இழக்கக்கூடும்.

மாநில குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளது. இதனால், பரிந்துரைக்கும் விதிகள் இருந்தபோதிலும் குழந்தைகள் தங்கள் தாயை தவறாமல் பார்க்க முடியாது என்று, ராகவன் எங்களிடம் கூறினார். "கைதிகளின் குழந்தைகளது தேவைகளைப் பார்ப்பதற்கு எந்தவொரு பிரத்யேக அமைப்பும் இல்லை என்பதுதான் பிரச்சினை" என்றார் ராகவன். “வழக்கமாக வருகைகளை ஏற்பாடு செய்வது தகுதிகாண் அதிகாரியின் கடமையாகும். அத்தகைய குழந்தைகள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது சிறையில் தங்கள் தாயை சந்திக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த ஒரு சுற்றறிக்கை வெளியிட, மகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (WCD) துறை எங்களுக்கு கிடைத்தது, ஆனால் அது நடக்காது” என்றார்.

ஆஷா சிறையில் இருந்தபோது தனது மகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ​​ஐவிஎஃப் ஏற்பாடு செய்த வருகைகளின் மூலம் சந்தித்தார்.

பொதுவாக, சிறை கண்காணிப்பாளரிடம் பெண்கள் நீண்ட காலமாக சந்திக்கவில்லை என்று புகார் கூறும்போதுதான் அத்தகைய சந்திப்புகளூக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று ராகவன் தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தை சிறையில் இருந்தால், தாய் பொதுவாக வெளியே குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார், ஆனால் தாய் சிறையில் இருந்தால் இது அப்படி நடக்காது என்று தவான் கூறினார். "அத்தகைய தாய்மார்கள் விண்ணப்பித்தால், தங்கியிருக்கும் குழந்தையை காண ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

களங்கம், குடும்ப ஆதரவு இல்லாமை

பெரும்பாலும், பெண்கள் கைதிகள் என்பது விசாரணை கைதிகள் அல்லது வீணா போன்ற கொடூரமான கொலை குற்றவாளிகள் அல்லது வரதட்சணை தொடர்பான வழக்கு குற்றவாளிகளாக உள்ளனர். கீழ்நிலை கைதிகள் "மன அழுத்தத்திற்கும் வேதனையையும்" சந்திக்கிறார்கள் ஏனென்றால், குடும்பங்கள் சிறையில் அவர்களைப் பார்க்க விரும்பாதது, அல்லது சிறை நிர்வாகம் தொடர்பு கொள்ள வசதி செய்யாதது போன்ற பல காரணங்களால், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நிலைமை அவர்களுக்குத் தெரியாது.

"சிறைக்குச் செல்வது பெண்களுக்கு மிகப்பெரிய களங்கமாக இருப்பதால் எனது தாய்வழி தரப்பிலும் ஆதரவு கிட்டவில்லை. என் குடும்ப உறுப்பினர்கள் என்னை ஒருமுறை மட்டுமே பார்த்தனர், என் மகளுக்காக சிலவற்றை எனக்குக் கொடுத்தார்கள்,” என்றார் ஆஷா. "ஒரு மனிதன் தனது தண்டனையை அனுபவித்தபின் வெளியே வரும்போது, தனது குடும்பத்தினராலும், சமூகத்தினாலும் அவன் ஏற்றுக்கொள்ளப்படுகிறான், ஆனால் அது பெண்களுக்கு பொருந்தாது" என்றார்.

வீணாவின் விஷயத்தில், அவருக்கு கைக்குழந்தை வயதில் மகளுடன் இரண்டு மகன்களும் உள்ளனர், அவரது கணவரின் குடும்பம் அந்த இரு சிறுவர்களைக் கவனித்து வருகிறது. எவ்வாறாயினும், தனது மாமியாருடனான பிரச்சினைகள் காரணமாக, மகன்களை சந்திக்க அவரால் இயலவில்லை.

ராகவன் கூற்றுப்படி, ஒரு பெண் சிறையில் அடைக்கப்பட்டு, தந்தைவழி குடும்பத்தால் குழந்தைகளை வளர்க்கும் சந்தர்ப்பங்களில், “அவர்கள் குழந்தைகளின் மனதை விஷமாக்குகின்றனர். பல குழந்தைகள் தங்கள் தாய்மார்களை வெறுக்கிறார்கள்” என்றார்.

இது பெண்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஐவிஎஃப் அடிப்படை ஆலோசனை ஆதரவை வழங்கினாலும், தவான் கருத்துப்படி, வீணாவுக்கு திகாரில் அத்தகைய ஆதரவு கிடைக்கவில்லை. "வேறு எந்த பெண்ணும் இத்தகைய எந்தவொரு ஆலோசனையையும் பெறுவதை நான் காணவில்லை," என்று வீணா கூறினார்.

முன்னோக்கிய பாதை

இந்தியா ஸ்பெண்ட்டிடம் பேசிய வல்லுநர்கள், வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது சிறை நிர்வாகத்தைப் பொறுத்தது என்றனர். மேலும், சிறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் வெவ்வேறு மாநிலங்களில் சூழ்நிலைகலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் சிறை என்பது ஒரு மாநிலப் பொருள் மற்றும் கொள்கைகள் அதற்கேற்ப வேறுபட வேண்டும். சிறைகளில் உள்ள பெண்களுக்கு அரசு தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும், இதை அடைவதற்கான ஒரு வழி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே வளாகத்தில் நரி நிகேட்டான்கள் [அதாவது பெண்கள் உதவி மையங்கள்], மீட்பு இல்லங்கள் மற்றும் பெண்கள் கைதிகளில் தங்கியுள்ளவை, பெண்களுக்கான ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று ராகவன் கூறினார். "அவர்கள் பொருளாதார நம்பகத்தன்மையை நிவர்த்தி செய்ய, தொழில் பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கான பொதுவான வசதிகளைக் கொண்டிருக்கலாம்" என்று ராகவன் கூறுகிறார்.

தற்போதுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பல துறைகளுக்கு பதிலாக, "சிறை நிர்வாகம் அனைத்து தொடர்புடைய பணிகளுக்கும் பொறுப்பான ஒரே அதிகாரமாக இருக்க வேண்டும் மற்றும் போதுமான ஊழியர்களையும் நிதிகளையும் வழங்க வேண்டும்," என்று தவான் கூறினார். சிறைகளில் பணியாளர் காலியிடங்கள் சராசரியாக 33% முதல் 38.5% வரை இருப்பதாக, டாடா டிரஸ்ட்ஸ்-2019 'இந்திய நீதித்துறை அறிக்கை’ அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பரில் கட்டுரையை வெளியிட்டது. பத்தொன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆண்டுக்கு ஒரு கைதிக்கு ரூ. 20,000 முதல் ரூ. 35,000 வரை செலவிடுகின்றன - அதாவது ஒரு கைதிக்கு ஒருநாளைக்கு ரூ. 100ஐ கூட செலவிடுவதில்லை என்று அறிக்கை கூறுகிறது.

தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள வீணா, சிறை வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு சமையல் பொருட்களை பெறும் வசதி தேவை என்று தெரிவித்தார். "பெண்கள் இப்போது சிறை வளாகத்திற்குள் சம்பாதிக்கிறார்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்க அவர்களால் முடியும்" என்றார்.

*நபர்களின் அடையாளப் பாதுகாப்பு கருதி அவர்களின் உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர். ஆச்சார்யா, டெல்லியைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.