மும்பை: கடந்த ஜூன், 2018 உடன் முடிந்த 18 மாதங்களில், 1,662 இணையதள முகவரிகள் (uniform Resource Locators -URLs) அல்லது, சமூக வலைதள பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன. போலி செய்திகளை எதிர்த்து போராடுவது குறித்து பேசியபோது மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி, மாநிலங்களவையில், இதை தெரிவித்தார்.

“சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி தகவல்கள், தொந்தரவுகளால் அப்பாவி உயிர்கள் பலியாவது அரசின் கவனத்துக்கு வந்தது. இது ஆழ்ந்த வருந்தத்திற்குரியது; கவலை அளிக்கக்கூடியது. இவ்விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தும்,” என்று தனது பதிலில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மேலும் கூறினார்.

இதை தொடர்ந்து, இந்திய தகவல் தொழில் நுட்பச்சட்டம் (ஐ.டி.) 2000, பிரிவு 69-ஏ கீழ், பேஸ்புக் நிறுவனம் 956 (56%) இணையதள முகவரிகளையும், ட்விட்டர் 25%, யூ டியூப் போலி கணக்குகளை முடக்கின.

இந்திய தகவல் தொழில் நுட்பச்சட்டம் (ஐ.டி.) 2000, பிரிவு 69ஏ-வில், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது அமைதியை பாதிக்கக்கூடிய கருத்துகளை பரப்புதல், குற்றச்செயல்களில் ஈடுபடும் இணையதளங்கள்/ பக்கங்கள், இந்திய பாதுகாப்பு கருதி, முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பிரசாத் கூறினார்.

இச்சட்டத்திற்கு இணங்கி செயல்படாத இணையதளங்கள், நிறுவனத்தினருக்கு அபராதத்துடன், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க, சட்டம் வழிவகை செய்கிறது.

கடந்த மார்ச் 2018 கணக்கின்படி, உலகம் முழுவதும் உள்ள 2,190 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களில், 9% பேர் இந்தியர்கள். ட்விட்டர் 8%; யூ டியூப் 4%; அதேபோல், 2017 பிப்ரவரி கணக்கின்படி, வாட்ஸ் அப் நிறுவனத்தின் மொத்த பயனாளர்களில், 13% (200 மில்லியன்) பேர் இந்தியர்கள் உள்ளனர்.

கடந்த ஜூலை, 2018-ல், 5 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட, ”போஸ்ட் கார்ட் நியூஸ்” பக்கத்தை, பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக நீக்கியது. பதிப்புரிமை, அறிவுசார் சொத்து, வணிக சின்னங்களை மீறிய புகாரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, 2018, ஜூலை 16-ல் பூம் செய்தி வெளியிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய வகையில், மதம் தொடர்பான போலி தகவல்களை பரப்பிய புகாரில், போஸ்ட் கார்ட் இணையதளத்தின் இணை நிறுவனர் மகேஷ் ஹெக்டே, 2018 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதாக, 2018 மார்ச் 30-ல் தி இந்து செய்தி வெளியிட்டது.

போலிகளை சுமக்கும் அனுபவமில்லா ஸ்மார்ட்போன் புதிய பயனாளர்கள்

அனுபவமற்ற ஸ்மார்ட்போன் புதிய பயனாளர்கள், வாட்ஸ் அப் வாயிலாக, தினமும் பல லட்சம் போலி தகவல்களை பரப்புகின்றனர். இது, இந்தியாவுக்கு பெரும் தீமையாக போய் முடியும் என்று, 2018, ஜூலை 2-ல் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தெரிவித்திருந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டுடன் முடிந்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 324% அதிகரித்துள்ளது; அதாவது, 92 மில்லியனில் இருந்து 390 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவில் 60% உயர்ந்து, 750 மில்லியன், ஜப்பானில் 20% அதிகரித்து, 120 மில்லியன்; அமெரிக்காவில், 14% உயர்ந்து, 250 மில்லியன்; பிரேசிலில், 63% அதிகரித்து, 130 மில்லியன் ஆக இருந்ததாக, ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமாக, சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில், 2018 மார்ச் கணக்கின்படி, கம்பிவழியில்லா இணையதள பயனாளர்கள் 473 மில்லியன் உள்ளனர்; இதில், 30% (144 மில்லியன்) கிராமப்புறத்திலும்; எஞ்சிய 329 மில்லியன் பயனாளர்கள், நகர்ப்புறங்களில் உள்ளனர்.

கடந்த 2017 ஜனவரி மாதத்தில் இருந்து நிகழ்ந்த 69 குழு தாக்குதல்களில், 33 பேர் கொல்லப்பட்டதாக, இந்தியா ஸ்பெண்ட் 2018 ஜூலை 9-ல் தெரிவித்திருந்தது. இதற்கு, 77% சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிய போலி தகவல்களே காரணம். இதில், வாட்ஸ் அப் வாயிலாக பரவிய தகவல் என்று, 28% அல்லது 19 வழக்குகள் உள்ளன.

போலி தகவல்கள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சமூக வலைதளங்களுக்கு, அரசு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

(மல்லபுர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர் ஆவார்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.